மகிபாலன் பட்டி…….

மகிபாலன்பட்டி என்றால் நிறைய பேருக்குத் தெரியாது.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று பாடிய கணியன் பூங்குன்றனார் பிறந்த ஊர் என்று சொன்னால், உங்களில் நிறைய பேர் நிமிர்ந்து உட்காரக் கூடும்.

மகிபாலன் பட்டி – (காரைக்குடிக்கு அருகில் உள்ள ) திருப்பத்தூரிலிருந்து பொன்னமராவதி செல்லும் வழியில் ஒரு 10 கி.மீ. தொலைவில் உள்ள சிறு கிராமம். 

ஊருக்குள் நுழையும்போது “ யாதும் ஊரே யாவரும் கேளிர் – மகிபாலன்பட்டி” என்ற பெயர்ப் பதாகை நம்மை வரவேற்கிறது.

இங்கு கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டில் குடையப்பட்ட இரண்டு சிறிய குடைவரைக் கோயில்கள் உள்ளன. இரண்டிலுமே கருவறை மட்டும்தான். 

ஒன்றில் பிள்ளையாரும், இன்னொன்றில் சிவபெருமானும் ஜம்மென்று இருக்கின்றனர்.

கி.பி. 13ம் நூற்றாண்டில் சுந்தரபாண்டியன் காலத்தில் இந்தக் கோயிலுக்கு திருப்பணி செய்த சேதியைத் தாங்கி ஒரு நீண்ட கல்வெட்டு சிவன் சந்நிதியின் நுழைவாயிலிலும் வலது கைப்பக்க சுவர்களிலும் உள்ளன.

இதில்தான், “பூங்குன்ற நாட்டு பூங்குன்றத்தூர் “ என்ற சொல்லாடல் இரண்டு மூன்று முறை வருகின்றது.

இதிலிருந்து கி.பி.13 ம் நூற்றாண்டு வரை கூட இந்த ஊர் பூங்குன்றத்தூர் என்றே அழைக்கப்பட்டிருக்கிறது.

அதன் பின்னர் (கால கட்டம் தெரியவில்லை) வந்த மகிபாலன் என்ற சிற்றரசரின் பெயரால் இந்த ஊர் மகிபாலன்பட்டி என்று மாற்றம் அடைந்துள்ளது.

தமிழகத்தில் பூங்குன்றம் என்ற ஊர் வேறெங்கிலும் இருப்பது போல் தெரியவில்லை. எனவே, இதுதான், கணியன் பூங்குன்றனார் பிறந்த ஊராக இருக்க வேண்டும் என்பது பொதுவான கருத்து.

கணியன் என்றால் வானவியல் ஆராய்ச்சியாளர் என்று அர்த்தம். பூங்குன்றம் என்ற ஊரைச் சேர்ந்தவர் என்பதால் பூங்குன்றனார்.

அப்படியென்றால் அவருடைய ஒரிஜினல் பெயர் என்னவாயிருக்கும் ?

வெ.பாலமுரளி.