அய்யனாரைத் தேடி – 2 “ இதற்குத்தான் ஆசைப்பட்டீரா அய்யனாரே ?” 

கி.மு.ஆறாம் நூற்றாண்டு இந்திய வரலாற்றில் மறக்க முடியாத ஒரு முக்கியமான நூற்றாண்டு. நம் இந்திய வரலாற்றின் பொற்காலம் என்று சொன்னாலும் மிகையில்லை.

அப்போதுதான் கௌதமபுதர், வர்த்தமான மகாவீரர் மற்றும் மற்கலி கோசாலர் பிறந்தனர்.

அப்போது, வைதீக (இன்றைய இந்து) மதம் என்னும் பிராமணிய மதம் வேறொரு பாதையில் பயணித்துக் கொண்டிருந்தது.

ஏன் “பிராமணிய” மதம் என்ற பெயர் ? அப்போதெல்லாம் வைதீக மதம் அல்லது வேத மதத்தில் பிராமணர்கள் மட்டுமே இருந்தனர். மற்றவர்கள் Not Allowed. Sorry.

அவர்களின் பிரதான தொழில் மன்னர்களுக்கும், பணம் இருக்கும் வணிகர்களுக்கும் யாகம், வேள்வி வளர்ப்பது. யாகம், வேள்வி என்றவுடன் இன்று நாம் செய்யும் கணபதி ஹோமத்தை நினைத்துக் கொள்ளாதீர்கள். 

அன்று வேற லெவல்…அது பற்றி விரிவாக “பல்யாக சாலை” தொடரில் பார்ப்போம். 

ஆடு, மாடு, குதிரை எல்லாம் உயிருடன் Grill  செய்யப்படும்.

அதில் “ அஸ்வமேத யாகம்” ரொம்பவே கொடுமையானது. யாகம் நடத்தும் ராஜாவின், பட்டத்து ராணியை, யாகம் நடத்தும் வேள்வியர்களுடன், குதிரையுடன் என்று வித விதமாக புணர வைப்பார்கள். 

புத்தர், மகாவீரர் மற்றும் மற்கலி கோசாலர் இந்தக் கொடுமைகளை, மூட நம்பிக்கைகள் என்றும் மக்களை ஏமாற்றும் வேலைகள் என்றும் கடுமையாக எதிர்த்தனர். அதை எதிர்த்து பிரச்சாரம் செய்தனர்.

வேள்வியில் உயிருடன் கொளுத்தப்படும் உயிரினங்களை மனதில் வைத்தே அவர்கள் “ உயிர் கொல்லாமை” கொள்கையை முதன்மை கொள்கையாகப் பரப்பியிருக்க வேண்டும்.

இன்று அம்பானியின் வியாபரத்திற்கு எதிராக நீங்கள் எதேனும் செய்ய நினைத்தால், உங்களை சும்மா விடுவாரா மிஸ்டர்.அம்பானி ?

அதேதான் நடந்தது மேலே சொன்ன புத்த, ஜெயின மற்றும் ஆசீவக மதங்களுக்கு.

இந்த “மூட நம்பிக்கை” பிரச்சாரம் கொஞ்ச நாள் நான்றாகவே வேலை செய்தது போல்தான் தெரிகிறது – இந்த மூன்று சமயங்களும் முற்றிலுமாக அழியும்வரை அல்லது வைதீக மதம் என்ற ஜீவஜோதியுடன் கலந்து ஒன்றாகும்வரை. 

தமிழகத்தில், ஆசீவகம்தான் இந்த மூட நம்பிக்கை பிரச்சாரத்தை வெற்றிகரமாக எடுத்துச் சென்றது என்கிறார்கள் குணா மற்றும் க.நெடுஞ்செழியன் போன்ற அறிஞர்கள்.

இந்த ஆசீவகத்தின் வழித்தோன்றலே அய்யனார் வழிபாடு என்பது முனைவர்.க.நெடுஞ்செழியன் அவர்களின் கருத்து. 

ஆசீவகத்தில் மூன்று பேர்கள் மட்டுமே ‘பரமசுக்க’ என்னும் வீடு பேறு நிலையை அடைந்தவர்கள்.

  1. மற்கலி கோசாலர்
  2. பூரண காயபர் 
  3. கணி நந்தாசிரிய இயக்கன்

எனவே, இந்த மூவர்தான் வெவ்வேறு பெயர்களில் அய்யனார்களாக மாறி நமது வழிப்பாட்டில் இருப்பது என்பது அவர் கருத்து. 

மற்கலிக்கு மனைவி கிடையாது. “ஹாலஹலா” என்னும் குயவர் இனத்தைச் சேர்ந்த  பெண் தோழி இருந்ததாக ஆசீவகத்தை எதிர்க்கும் மற்ற இலக்கியங்கள் கூறுகின்றன. ஆனால், ‘ஹாலஹலா’ மற்கலியின் முறையான மனைவி கிடையாது. எனவே, நீங்கள் பார்க்கும் அய்யனார் பெண் தெய்வமின்றி தனியாக இருந்தால், அவர்தான் மற்கலி கோசாலர்.

பூரண காயபருக்கு – பூரணம், பொற்கலை என்று இரு மனைவியர். எனவே, இரு பெண் தெய்வங்களுடன் நீங்கள் பார்க்கும் ஐயனாரின் உண்மைப் பெயர் பூரண காயபர். யானைமலைக் கல்வெட்டில் வரும் “அரட்ட காயபனும்”,  மறுகால்தலைக் கல்வெட்டில் குறிப்பிடப்படும் “வெண்காஸிபனும்” இந்தப் பூரண காயபர்தான் என்கிறார் ஐயா நெடுஞ்செழியன். இந்த பூரணர் மதுரை யானை மலை அடிவாரத்தில் ஜீவ சமாதி அடைந்திருக்கலாம் என்கிறார் தம்பி ஹாருண் பாஷா. 

மூன்றாவது, கணி நந்தாசிரிய இயக்கன். புற நானூற்றில் பூதப்பாண்டியன் பாடும் வெஞ்சினத்தில் வரும், இயக்கனும், பிராகிருத இலக்கியங்கள் சொல்லும் “நந்தவாச்சா”வும், மதுரை மீனாட்சிபுரக் (மாங்குளம்) கல்வெட்டில் வரும் “கணி நந்த அஸிரிய்இ குவனும்” ஒருவரே என்கிறார் ஐயா நெடுஞ்செழியன் அவர்கள். இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், இவரே பூதப்பாண்டியனின் படைதளபதி. இவருக்கு ஒரே ஒரு மனைவி. 

எனவே, நீங்கள் பார்க்கும் அய்யனார், ஒரே ஒரு பெண் தெய்வத்துடன் இருந்தாலோ, அல்லது கையில் வாளும் கேடயமும் ஏந்தி இருந்தாலோ, அவர்தான் “ கணி நந்தாசிரிய இயக்கன்”.

இப்படி, மூட நம்பிக்கைகளையும், வைதீக மதத்தையும் எதிர்த்து வீடு பேறு நிலையை அடைந்த அய்யனார்களின் இன்றைய நிலை என்ன ?

திருப்பட்டூர்…..

திருச்சியிலிருந்து 32 கி.மீ. தொலைவில் சென்னை நெடுஞ்சாலையிலிருந்து ஒரிரு கிமீ தூரத்தில் இருக்கும் ஒரு சிற்றூர்தான் “திருப்பட்டூர்”.

இதுவே, ஆசீவகத்தைத் தோற்றுவித்த “மற்கலி கோசாலர்” பிறந்த ஊர் என்பது ஐயா நெடுஞ்செழியன் அவர்களின் கருத்து. ஆனால், இது சம்பந்தமாக இன்னும் நிறைய ஆய்வுகள் தேவை.

ஆனால், பழைய காலத்தில் இங்கு சித்தர்கள் எனப்படும் அறிவர்களின் நடமாட்டம் இருந்துள்ளது என்பது உண்மை. அதை நிரூபிக்கும் விதத்தில் “வியாக்ர பாதர்” என்னும் சித்தர் ஜீவ சமாதி அடைந்த ஒரு சிவன் கோயிலும், பதஞ்சலி தவம் செய்த ஒரு பிரம்மா கோயிலும், பூரண காயபருக்கான ஒரு பழைமையான அய்யனார் கோயிலும் இங்கு உள்ளன.

இதில், அய்யனார் கோயில் பற்றித்தான் இந்தக் கட்டுரை. 

இந்தக் கோயில் சமீபத்தில் புணரமைக்கப்பட்டிருக்கிறது. அப்போது,

ஏறத்தாழ 1000 வருடப் பழைமையான, இரு பெண் தெய்வங்களுடன் உள்ள அய்யனார் சிலை, கோயிலுக்கு வெளியில், மதில் சுவரில் எவ்வித முறையான பராமரிப்பும் இல்லாமல் பதிக்கப்பட்டு விட்டது. ஆடு, மாடு தங்கி சிறு நீர் கழிக்கும் இடமாகவும், டீ வீலர் நிறுத்தப்படும் இடமாகவும் இது இருப்பது வேதனையின் உச்சம்.

கோயிலின் உள்ளே (புது) அய்யனார் கையில் ஒரு ஓலைச் சுவடியைக் கொடுத்து அவரை ஓலைச் சுவடி அய்யனாராக்கி விட்டனர். இவரை வணங்கினால் படிப்பு நன்றாக வருமாம். அருகில் இரு பெண் தெய்வங்களும் உள்ளன.

இந்து அறநிலையத் துறை, ஒரு ஐயரை பூஜை செய்ய அமர்த்தியுள்ளனர். அந்த ஐயர்வாள் ரொம்பவெல்லாம் அலட்டிக் கொண்டு தீபாராதனையெல்லாம் காட்டுவதில்லை. எப்போதும் உட்கார்ந்து கொண்டே இருக்கிறார்.

அவரும், வாசலில் உள்ள ஒரு தேங்காய்கடைக் காரரும் பிஸினஸ் பார்ட்னர்ஸ் போலிருக்கு. இருவரும் அக்ரிமெண்ட் போட்டுக் கொண்டு தேங்காய் வியாபாரத்தை கன்னா பின்னாவென்று ப்ரமோட் செய்கிறார்கள்.

திருமணம் முடிக்க இத்தனை தேங்காய்கள், உயர்கல்விக்கு இத்தனை தேங்காய்கள், குழந்தை பாக்கியத்திற்கு இத்தனை தேங்காய்கள் என்று கோயிலில் மூன்று நான்கு இடங்களில் பெரிய பெரிய போர்டுகள் வைத்துள்ளனர் ( படங்கள் இணைத்துள்ளேன்).

அது பத்தாதென்று, அந்த ஐயர், வருவோர் போவோரையெல்லாம் கண்டிப்பாக தேங்காய் வாங்கி உடைக்குமாறு நிர்பந்திக்கிறார் (சாமி கும்பிடுவதெல்லாம் அப்புறம் இருக்கட்டும் ).

வெளியில், அய்யனாரின் வாகனமான யானைக்கு ஒரு மண்டபம் எழுப்பப்பட்டுள்ளது.  அதற்கு முன்னால்தான் தேங்காயை உடைக்கச் சொல்கிறார் அந்த ஐயர்வாள். ஒவ்வொரு நாள் மாலையும் திருச்சியிலிருந்து ஒரு ஹோட்டல் உரிமையாளர் வந்து உடைந்த தேங்காய்களை மலிவான விலைக்கு வாங்கிக் கொண்டு போய் விடுவதாக உள்ளூர் வாசி ஒருவர் கூறுகிறார்.

ஐயர்வாளுக்கும், தேங்காய்வாளுக்கும் செம பிஸினஸ்.

இந்த வேண்டுதல் பிஸினஸை நிஜமென்று நம்பி மக்களும் நிறைய தேங்காய்கள் வாங்கி உடைப்பது கண்டு வேதனையாய் இருந்தது. 

தங்கள் வாழ் நாள் முழுவதும் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்த மற்கலியோ, பூரணரோ மட்டும் இதைப் பார்க்க நேர்ந்தால் என்ன நினைத்திருப்பர் ? ( “ இதற்குத்தான் ஆசைப்பட்டீரா அய்யனாரே ?”)

நல்ல வேளை பெரியாருக்கு கோயில் எதுவும் கட்டவில்லை.

வெ.பாலமுரளி.

நன்றிகள் : 

முனைவர்.க.நெடுஞ்செழியன் அவர்கள்

குணா அவர்கள்

தம்பி. ஹாருண் பாஷா அவர்கள்

நண்பர் கண்ணன் அவர்கள், காவல்துறை சென்னை

நண்பர் பாலபாரதி அவர்கள்