யானை மலை அதிசயங்கள்….

யானை மலை (அ) ஆனை மலை என்ற பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்கள் இருந்தாலும்கூட, அனைவருக்கும் சட்டென்று நினைவிற்கு வருவது, மதுரை ஒத்தக்கடையில் உள்ள யானைமலைதான்.

இந்த யானைமலை முழுவதும் வரலாறு கொட்டிக்கிடக்கின்ற விஷயம் நிறையப் பேருக்குத் தெரியாது.

மிகப் பழைமையிலிருந்து வருவோம்.

  1. மலையில் யானையின் கண்ணுக்கு நேர் கீழே முகத்திற்கு வலது பக்கம் ஒரு ஆசீவகர்களின் குகையும், அதில் ஏறத்தாழ 2000 வருடங்கள் பழைமையான ஒரு தமிழிக் கல்வெட்டும் உள்ளன. அந்தக் கல்வெட்டின் வாசகம் : ” இவகுன்றத்து உறையுள் பாதந்தான் ஏரி ஆரிதன் அத்துவாயி அரட்ட காயிபன்” . இதன் அர்த்தம் ஏரி ஆரிதன் என்பவர் அத்துவாயி, அரட்ட காயிபன் என்ற இரண்டு துறவிகளுக்குச் செய்து கொடுத்த படுக்கை.

சமீபத்தில் இந்தக் குகைக்குள்ளும், குகைக்கு எதிர்ப்புறமும் இந்து முன்னணியினர் இரண்டு சிவ லிங்கங்களை வைத்து வழிபட ஆரம்பிக்க போலீசும், கோர்ட்டும் தலையிட்டு அவற்றை அகற்றினர் ( அதற்கு முன் எடுத்த படங்களை இத்துடன் இணைத்துள்ளேன்). 

  • வலது கண் இருக்கும் இடத்தில் ஒரு சுனை இருக்கிறது. அதில் வரும் தண்ணீர் சூப்பர் டேஸ்ட். இந்த இடத்திற்கும், இதற்கு மேல் மலையின் உச்சிக்கு செல்வதும் ரொம்பவே ரிஸ்க். கண்டிப்பாக போயே ஆக வேண்டும் என்றால் உள்ளூர் மக்களின் துணையில்லாமல் செல்ல வேண்டாம். 
  • கீழே, ஒத்தக்கடையில் இருந்து கடச்சனேந்தல் செல்லும் வழியில் ஒரு இருநூறு மீட்டர் தூரம் சென்று, அங்குள்ள ஆர்ச்சுக்குள் வலது கைப்பக்கம் திரும்பினால் வரும் ஊர் நரசிங்கம். அதில் திரும்பி ஒரு நூறு மீட்டர் தூரத்தில் யானையின் நெஞ்சுக்கு நேர் கீழே ஜெயினர்களின் சிற்பங்களும் சில வட்டெழுத்துக் கல்வெட்டுக்களும் உள்ளன. காலம் : கி.பி. 9 அல்லது 10 ம் நூற்றாண்டு. செய்வித்தவர் ஜெயினத் துறவி அச்சனந்தி. இதில் உள்ள மகாவீரரின் சிற்பத்தைச் சுற்றி வரைந்த வண்ண ஓவியங்களின் மிச்சத்தை இன்றும் காண முடியும் ( 1000 வருடப் பழைமையான ஓவியங்கள்).
  • அங்கிருந்து ஒரு முந்நூறு மீட்டர் தொலைவில், ரோட்டின் இடது கைப்பக்கம் ஒரு பழைமையான முருகன் கோயில் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காலம் தெரியவில்லை.
  • அந்த இடத்தில் இருந்து ஒரு ஒரு நூறு மீட்டர் தொலைவில் அதே ரோட்டில் சென்றால், யானையின் வயிற்றிற்கு நேர் கீழே இரண்டு குடை வரைக் கோயில்கள் உள்ளன. அவையிரண்டும் பராந்தகன் நெடுஞ்சடையன் என்னும் பாண்டிய மன்னன் காலத்தில் , அதாவது கி.பி. 8ம் நூற்றாண்டில் ( கி.பி.770 ம் ஆண்டு வாக்கில்) கட்டப்பட்டவை. அதில் முதல் கோயில் யோக நரசிம்மர் கோயில். அதில் தமிழ், வட்டெழுத்து மற்றுக் கிரந்தக் கல்வெட்டுக்கள் உள்ளன. கி.பி.770 இல் பராந்தகன் நெடுஞ்சடையன் என்னும் பாண்டிய மன்னனின் மந்திரி மாறன் காரி என்பவர் இந்தக் கோயிலைக் கட்டத் தொடங்கியதாகவும், கட்டுமானம் முடிவதற்கும் அவர் இறந்து விட்டதால் அவர் தம்பி மாறன் எயினன் என்பவர் கட்டுமான வேலைகளை முடித்து கோயில் கும்பாபிஷேகம் நடத்தியதாகவும் இங்குள்ள வட்டெழுத்து மற்றும் கிரந்தக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன ( கல்வெட்டுக்களின் சுருக்கமே இவை).
  • யோக நரசிம்மர் கோயிலில் ஒரு நூறு அடி தூரத்திற்கு முன்னால் இருப்பது லாடன் முருகன் கோயில். இது இங்குள்ள இரண்டாவது குடைவரைக் கோயில். இதில் முருகன், வள்ளி சிலைகள் சேதமடைந்திருப்பதால், இந்தக் கோயில் வழிபாட்டில் இல்லை. இங்கும் ஒரு வட்டெழுத்துக் கல்வெட்டு உள்ளது. இங்கு லாட முனி என்னும் குஜராத் துறவி வந்து வழிபட்டது போல் தெரிகிறது.
  • அங்கிருந்து அதே ரோட்டில், யானையில் வால் இருக்கும் திசை நோக்கி நடந்தால் ஒரு அய்யனார் கோயில் இருக்கிறது. ஆசீவகத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவராகக் கருதப்படும் பூரண காயபர் ஜீவ சமாதி அடைந்தது இந்த இடத்தில்தான் என்று நம்பப் படுகிறது. ஆனால், அதற்கு தகுந்த ஆதாரங்கள் இல்லை. (மலையின் மேலே உள்ள தமிழிக் கல்வெட்டு சொல்லும் “அரட்ட காயபன்” இந்த பூரண காயபர்தான் என்கிறார் முனைவர் க.நெடுஞ்செழியன் அவர்கள்) .
  • அங்கிருந்து ஒரு கி.மீ. நடந்து அ.புதூர் என்னும் கிராமத்தில் வலது கைப்பக்கம் திரும்பி ஒரு நூறு மீட்டர் தாண்டி மறுபடியும் வலது கைப்பக்கம் திரும்பினால், யானையின் வால் பகுதியை அடைந்து விடலாம். அந்த இடத்திற்குப் பெயர் கொடிகுளம். 

அந்த கொடிகுளத்தில் ஒரு பெருமாள் கோயிலும், பிரம்ம தீர்த்தம் என்றழைக்கப்படும் குளம் ஒன்றும் உள்ளது. இந்தக் குளம் தொடர்பாக சில புராணக் கதைகள் சொல்லப்படுகின்றன.

இந்தப் பெருமாள் கோயிலின் காலம் தெரியவில்லை. ஆனால், மிகப் பழைமையானதாக உள்ளது. 

கி.பி. 12ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மாலிக் கபூர் தமிழகம் நோக்கி படையெடுத்து வந்தபோது, திருவரங்கத்தில், பிள்ளை லோகாச்சாரியார் என்னும் வைணவப் பெரியவர் ஒருவர் திருவரங்கப் பெருமாள் கோயிலில் உள்ள உற்சவரைக் காப்பாற்ற அந்தச் சிலையை எடுத்து வந்து, இங்குள்ள பாறைகளுக்கு நடுவில் வைத்து ஒரு மூன்றாண்டு காலம் பூஜை செய்ததாக வரலாறு. அது தொடர்பான ஒரு தமிழ்க் கல்வெட்டு இங்கிருக்கிறது. அந்த பிள்ளை லோகாச்சாரியார் இந்த இடத்திலேயே இறந்தும் போய் விட்டதால், அவருடைய சமாதியும் , அதற்காக எழுப்பப்பட்ட ஒரு சிறு கோயிலும் இங்குள்ளது.

  • இந்தப் பெருமாள் கோயிலின் பின்புறம் மலையாண்டி 

என்ற பெயரில் ஒரு நாட்டார் கோயிலும் உள்ளது. இதற்கு சிலைகள்  ஏதும் கிடையாது. இந்த யானை மலையையே தெய்வமாக கும்பிடுவதன் அடையாளமாக இது உள்ளது. இங்கு இரு தூண்கள் நடப்பட்டு, அவற்றில் ஏராளமான மணிகள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. இங்கு வந்து வேண்டிக் கொண்டால் நினைத்தது நடக்கும் என்பது இந்த ஊர் மக்களின் நம்பிக்கை.

  1. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தர் மதுரை வந்து நின்றசீர் நெடுமாறனை மதம் மாற்ற முயற்சிக்கும்போது, மன்னனிடம் சமணர்களைப் பற்றி பொல்லாது கூறும்போது, “சமணர்கள் “இந்த” யானை மலையின் மீதுதான் மந்திரத்தை ஏவி இதை உயிர்ப்பித்து உன்னையும் (பாண்டிய மன்னனையும்), மதுரையையும் அழிக்கத் திட்டமிட்டுள்ளனர்” என்று சொன்ன செய்தி பெரிய புராணத்தில் வருகிறது. ஆனால், இந்த செய்தி இந்த மலைக்குத் தெரியுமா என்ற தகவல் பற்றி குறிப்பேதும் இல்லை.

வெ.பாலமுரளி