மௌன்ட் பேட்டன் பிரபு என்னவோ இந்தியாவை ரட்சிக்க வானத்தில் இருந்து வந்த தூதர் போல நம் வரலாற்றில் சித்தரிப்பது மிகவும் தவறான ஒரு பதிவு….
1947 – இன் தொடக்கத்தில்தான் மௌண்ட் பேட்டன் ( Mount Batten ) இந்தியா வந்தது. அவன் லண்டனில் இருந்து கிளம்பு முன் அவனுக்கு இரண்டு உத்தரவுகள் வந்தன.
ஒன்று எழுத்துபூர்வமான உத்தரவு. ” போ ராசா. போய் இந்தியர்களுக்கு சுதந்திரத்தைக் கொடு. சனியன்கள் போய்த் தொலையட்டும்” .
என்ன நினைத்தார்களோ , உடனே வாய் மொழி உத்தரவு ஒன்றும் கொடுத்தார்கள். ” நீ என்ன செய்வியோ ஏது செய்வியோ தெரியாது. ஏதாவது ஒரு பெரிய கலவரத்தை உண்டு பண்ணு. மவனே….இப்போ கீழே விழும் இந்தியர்கள்தான்…. இனிமேல் ஜென்மத்துக்கும் எழுந்திரிக்கவே கூடாது”.
இந்த இரண்டு உத்தரவுகளையும் சிரமேற்று செயல்படுத்த வந்த வெற்றி நாயகனே மௌன்ட் பேட்டன் ( இனி என்னத்துக்கு அவனை பிரபு பட்டம் சொல்லிக் கூப்பிடணும் ????? ).
அவன் இங்கு வருவதற்கு முன்னரே , அவனுக்கு முன்னால் இருந்தவர்கள் கொஞ்சம் Ground Work பண்ணியிருந்தார்கள்- முகமது அலி ஜின்னாவை தூண்டி விட்டதன் மூலம் . எனவே, பேட்டனுக்கு எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்ற பிரச்சினை இல்லை.வந்த சில நாட்களிலேயே, ஆகஸ்ட் 15 ம் தேதி சுதந்திரம், அன்றே, இந்தியா …. பாகிஸ்தான்- இந்தியா என்று இரண்டு நாடுகளாகப் பிரியும் என்றும் அறிவித்து விட்டான்.
அப்போதே பிரச்சினை ஆரம்பித்து விட்டது. அடுத்து எல்லோருக்கும் எழுந்த கேள்வி, எப்படி எல்லைகளைப் பிரிப்பார்கள்? ஆயிரக்கணக்கான வருஷங்களாக ஒன்றாகவே இருந்த நாடுகள். எப்படிப் பிரிக்க முடியும் ?
மௌண்ட் பேட்டன், இந்த விஷயத்தை டிப்ளமேட்டிக்காக ஹேண்டில் பண்ணுகிறேன் பேர்வழி என்று சிரில் ஜான் ரெட்கிளிஃப் என்னும் வழக்கறிஞர் ஒருவரை இங்கிலாந்தில் வரவழைத்தான் .ரெட் கிளிஃபுக்கு இதில் அனுபவம் ஏதும் இல்லை என்பது ஒரு புறமிருக்க, அவனுக்கு இந்தியாவைப் பற்றி ஒண்ணுமே தெரியாது என்பதுதான் பெரிய அவலம்.
அவன் முதன் முதலில் இந்தியா வந்து இறங்கியதே 1947 ம் வருடம் ஜூலை 8 ம் தேதிதான். அவனுக்குக் கொடுத்தது ஐந்தே ஐந்து வாரங்கள்தான். அவன் அப்போதுதான் முதன் முதலாக இந்தியாவின் வரைபடத்தையே பார்த்தான். ஏராளமான நதிகள், மலைகள் , காடுகள் என இந்தியா பாகிஸ்தான் என்று இரண்டு நாட்டுக்குமே நிறைய விஷயங்கள் பொதுவாக இருந்தன. பற்றாக்குறைக்கு, சிக்கிம், பூட்டான், திபெத், லடாக் போன்ற மலைப் பிரதேசங்கள் வேறு மற்றொரு எல்லையில் சீனாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொண்டிருந்தன.
அவனுக்கு மண்டை காய்ந்திருக்க வேண்டும். அவனுக்கு மௌண்ட் பேட்டனிடமிருந்து ஏகத்துக்கும் பிரஷர் என்பதால் , ஏதோ கெக்கரே பிக்கரே என்று எல்லைக் கோடுகளை வகுத்து ஆகஸ்ட் மாதம் 13 ம் தேதி தன்னுடைய ப்ராஜக்ட் ரிப்போர்ட்டைக் கொடுத்து தன் வேலையை முடித்து விட்டான்.அதைப் பார்த்த மௌண்ட் பேட்டனுக்கே தலை சுற்றியிருக்க வேண்டும். அதை உடனே ரிலீஸ் பண்ணாமல், சுதந்திரம் கொடுத்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளி வைத்து விட்டான்.
ஆகஸ்ட் 15 சுதந்திரம் கொடுக்கும் போது எல்லையோரத்தில் வசித்த பெரும்பாண்மையான மக்களுக்கு தாங்கள் எந்த நாட்டோடு சேரப் போகிறோம் என்றே தெரியாமல் சுதந்திர தினத்தைக் கொண்டாடினார்கள். ஆகஸ்ட் 16 – எல்லைக் கோடுகளை ரிலீஸ் பண்ணிய கையோடு ரெட் கிளிஃபை விமானத்தில் ஏற்றி லண்டனுக்கு அனுப்பி வைத்து விட்டார்கள் ( பின்ன……யாராவது அவரைப் போட்டுத் தள்ளி விட்டால் ???) .
இந்தக் குழப்பம் காந்திக்கும் , நேருவுக்கும் நன்றாகவே தெரிந்திருந்தது. இருந்தாலும், இருவருமே, என்ன பிரச்சினை வந்தாலும் பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று மெத்தனத்தில் விட்டு விட்டார்கள். “We shall cross the bridge when we get there” attitude.
Unfortunately, we are now crossing the bridge. ஆனால், நம் தேசப்பிதாவும், அங்க்கிள் நேருவும் இப்போது நம்முடன் இல்லை, பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்கு. 1962 இல் நடந்த சீனோ – இந்திய யுத்தம் இன்னும் கொஞ்சம் குழப்பத்தைக் கொண்டு வந்தது. நம்மிடமிருந்து ஓரிரு பிரதேசங்களை அடித்துப் பிடுங்கிக் கொண்டார்கள் . நாம் அந்த இடங்களை தாரை வார்த்துக் கொடுத்து விட்டு, நமது வரை படங்களில் இருந்து அந்த இடங்களை நீக்க மாட்டோம் என்று அடம் பிடித்துக் கொண்டிருக்கிறோம். (ரொம்பச் சின்னப் பிள்ளைத்தனமான போக்கு).
ஆம்….நம் இந்தியாவைத் தவிர அனைத்து நாடுகளிலும் உள்ள வரைபடங்களிலும் நாம் இப்போது வரைபடத்தில் பார்க்கும் பாரத மாதாவின் தலையைக் கொய்து ரொம்ப நாளாகிறது. மனசு லேசாக வலிக்கிறதோ ? எனக்கும்தான்.
வெ.பாலமுரளி
ஆதாரம் : எஸ் ராமகிருஷ்ணன் எழுதிய எனது இந்தியா, விக்கிப்பீடியா, மதனின் ” ஹாய் மதன்” கேள்வி பதில்கள் . அனைவருக்கும் நன்றி.