அஃஉ
ஓரையான் உடுக்கணம்…..
இந்தக் கட்டுரையில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் உயர்திரு பாலாபாரதி அவர்களிடமிருந்து பேசியதிலிருந்தும்,அவருடைய கட்டுரையிலிருந்தும், அவருடைய காணொளியிலிருந்தும் எடுக்கப்பட்டவை.
அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
‘உடுக்கணம்’ என்றால் நட்சத்திரக் கூட்டம் அல்லது நட்சத்திரத் தொகுப்பு என்று அர்த்தம். ஆங்கிலத்தில் Constellation.
அவை ஒவ்வொன்றையும் நமது கற்பனையால், அதில் உள்ள நட்சத்திரங்களை இணைத்து கோடுகள் வரைந்தால் அவை அனைத்துமே தேள், பாம்பு, குதிரை, சிங்கம், கரடி, வேட்டையாடும் மனிதன், காளை, நாய் என்று வெவ்வேறு உருவங்களாகத் தோற்றமளிக்கின்றன.
அப்படி வானத்திலிக்கும் நட்சத்திரங்களை வைத்து வரைந்த உருவங்களே நமது இந்து (சைவ) மதத்திலுள்ள நடராஜர்,உடுக்கையுடன் ஆடும் சிவபெருமான், கங்காதரர் மற்றும் கால பைரவர் உருவங்கள்.
சிவபெருமானுக்கு நெற்றிக் கண் வந்தது கூட இது போன்ற ஒரு நட்சத்திரத் தொகுப்பைப் பார்த்துத்தான்.
இது போன்று 88 உடுக்கணங்கள் இருப்பதாகத் தெரிகிறது. இது தொடர்பான வீடியோக்கள் யூ ட்யூபில் கொட்டிக் கிடக்கின்றன.
இந்த உடுக்கணக்களில் “ஓரையான் உடுக்கணம்” ரொம்பவே ஸ்பெஷல்.
இதற்கு மூன்று காரணங்கள்:
- வானம் தெளிவாக இருக்கும் நாட்களில் இந்த “ஓரையான் உடுக்கணத்தை” காண்பது மிகவும் எளிது. ஒரு வேட்டைக்கார மனிதன் வலது கையை உயர்த்தி, இடது கையில் வில்லைப் பிடித்திருப்பது போன்ற ஒரு உருவம் தெரிந்தால் அதுதான் ஓரையான். கீழே அதன் சில படங்களைப் பகிர்ந்திருக்கிறேன்.
இந்த உடுக்கணத்தில்தான் மிகவும் பிரகாசமாகத் தெரியும் பீட்டல்ஜீயஸ் (Betelgeuse ) எனப்படும் திருவாதிரை நட்சத்திரமும், ரைஜல் என்னும் சிறு நட்சத்திரக் குடும்பமும் உள்ளன.
- இந்த ஓரையான் உடுக்கணத்தை இன்று அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து அலசிக் கொண்டிருகின்றனர். சமீப காலத்தில் இதன் ஆராய்ச்சி ஆங்கிலேயர்களால் தென் ஆப்பிரிக்காவில் தொடங்கப்பட்டது. குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால் 1834 இல். 200 வருடங்களுக்கு முன்னால். அப்போது இது பற்றி விரிவான ஒரு கட்டுரைத் தொகுப்பை சர் ஜான் ஹெர்ஷல் என்பவர் வெளியிட்டர். அவர் இந்த பீட்டல்ஜீயஸ் என்னும் திருவாதிரை நட்சத்திரத்தை “ஓரைனிஸ்” என்று அதிகாரபூர்வமாக ஆவணப்படுத்தியுள்ளார்.
பின்னாளில், அதாவது 20ம் நூற்றாண்டுகளின் தொடக்கத்தில் இதை ஆராய்ச்சி செய்த மைக்கெல்சன் என்னும் அமெரிக்கர், இந்த திருவாதிரை நட்சத்திரம் சூரியனை விட 300 மடங்கு என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், 1960 களில் நடந்த ஆராய்ச்சி இந்தத் திருவாதிரை நட்சத்திரம் சூரியனை விட 900 மடங்கு பெரியது என்று கண்டுபிடித்துள்ளனர்.
சரி…இதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா ?
இந்த ஓரையான் உடுக்கணத்தை சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நம் தமிழ் மண்ணில் வாழ்ந்த ஆசீவகச் சித்தர்கள் பாறை ஓவியங்களாக வரைந்துள்ளனர்.
அதில் முக்கியமான இடங்கள் கொணவக்கரை (நீலகிரி மாவட்டம்), ஆளுருட்டி மலை (நார்த்தா மலை, புதுக்கோட்டை மாவட்டம்) மற்றும் புலிப்பொடவு ( தேனி மாவட்டம்).
இதில் நான் ஆளுருட்டி மலையிலும், புலிப்பொடவிலும் எடுத்த சில படங்களை இங்கு பதிவிட்டுள்ளேன்.
நீங்கள் பார்ப்பது போல், ஆளுருட்டி மலையில் உள்ள ஓவியம் மிகவும் சிதைந்த நிலையிலேயே உள்ளது.
ஆனால், புலிப்பொடவில் உள்ள ஓவியம் மிகவும் சிறிதாக இருந்தாலும் கூட, தெளிவாக உள்ளது.
இந்த இரண்டு ஓவியங்களையும், நமது ஊர் ஆய்வாளர்கள் மட்டுமன்றி, வெளி நாட்டு ஆய்வாளர்களும் ஓரையான் உடுக்கணம்தான் வரையப்பட்டுள்ளன என்பதை உறுதி செய்துள்ளனர். மகிழ்ச்சியான விஷயம்.
- அது என்னங்க ஓரை ? இணைய தளத்தில் தேடினால், இது கிரேக்க புராணத்தில் வரும் கதை என்று போட்டிருக்கிறது. வட இந்தியாவில் உள்ள ஒரு பிரகஸ்பதி, இது சமஸ்கிருத வார்த்தை என்று வாய் கூசாமல் சொல்லியிருக்கிறது – வழக்கம் போல் எந்தவொரு ஆதாரமும் கொடுக்காமல்.
ஆனால், இது ஒரு தமிழ் வார்த்தை. தொல்காப்பியத்திலும், நிறைய சங்க இலக்கியப் பாடல்களிலும் “ஓரை” என்னும் சொல் காலத்தையும், ஒரு வித விளையாட்டையும் குறிக்கும் சொல்லாக பயன்படுத்தப்பட்டுள்ளன.
வழக்கம்போல், “ ஒரை” என்னும் தமிழ்ச்சொல் “ஹோரை” யாக சமஸ்கிருதத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டது.
இதே ஓரை, கிரேக்கத்தில் “ஓரா” வாக ஏற்றுமதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
ஆமா, “ஓரை” என்றால் என்ன ?
இரு கண்ணிமைகள் சேர்ந்தது ஒரு நொடி.
60 நொடிகள் சேர்ந்தது ஒரு நிமிடம்.
24 நிமிடங்கள் ஒரு நாழிகை
இரண்டரை நாழிகை ஒரு ஓரை. அதாவது ஒரு மணி நேரம்
என்பது ஒரு ஓரை.
இதுவே One Hora என்று கிரேக்கத்துக்குப் போய், பின்னர் One
Hour ஆக ஆங்கிலத்தில் மாறியுள்ளது.
சூப்பர்ல ?
“ மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும் துறந்த ஒழுக்கம்
கிழவோற்கில்லை” என்று தொல்காப்பியத்திலும்,
“தாதின் செய்த தண்பனிப் பாவை
காலை வருந்தும் கையாறு ஓம்பும் என
ஓரை ஆயம் கூறக் கேட்டும்” என்று குறுந்தொகையிலும் -48:1-3
“ஓரையமும் ஆயமும் நொச்சியும் காண்தொறும்
நீர்வார் கண்ணேன் கழலும் என்னினும்” என்று
நற்றிணையிலும் ( 143:2-3)
“கோதை ஆயமொடு வண்டல் தைஇ
ஓரை ஆடினும் உயங்கும்நின் ஒளி எனக்
கொன்னும் சிவப்போள் காணின்” என்று அக
நானூற்றிலும் (60:10-12)
“ஓரை ஆயத்து ஒண்தொடி மகளிர்
கேழல் உழுத இருஞ்சேறு கிளப்பின்” என்று
புறநானூற்றிலும் ( 176:1-2), ஓரை என்னும் சொல் காலம், விளையாட்டு என்னும் பொருட்களில் சொல்லாடப்பட்டுள்ளது.
இதில் தொல்காப்பியத்தின் காலமே மூத்தது, அதாவது ஏறத்தாழ கி.மு.900 என்பதால், ஓரை என்னும் சொல்லின் பழமையை நாம் ஊகித்துக் கொள்ளலாம் ( தொல்காப்பியத்தின் சரியான காலத்தை இன்னும் நம்மால் வரையறுக்க முடியவில்லை. அது, கி.மு.ஆயிரத்துக்கும் பின் நோக்கி பயணிக்க வாய்ப்புண்டு).
இவ்வளவு சிறப்பு வாய்ந்த “ ஓரையான் உடுக்கணத்தை”, நம் ஆசீவகச் சித்தர்கள், குறைந்த பட்சம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வெண் சாந்து ஓவியத்தில் வரைந்து வைத்திருக்கும் அதிசயத்தை என்னென்று சொல்வது.
நான் இந்தக் கட்டுரையின் முதல் பாகத்தில் சொல்லியிருப்பது போல, இந்த வானியல் குறித்த வெண் சாந்து ஓவியங்களின் காலத்தை அறிவியல் பூர்வமாக கண்டறிவதும், அதில் உள்ள குறியீடுகளை Decode செய்வதும் அசீவகத்தைப் பற்றிய உண்மைகளை வெளிக் கொணர நாம் செய்ய வேண்டிய தலையாயக் கடமை.
முடியுமா ?
தேடல் தொடரும்…..
வெ.பாலமுரளி
நன்றிகள்:
பாலா பாரதி அவர்களுக்கும், சில படங்களைத் தந்து உதவிய கூகுளுக்கும்.






