அஃஉ
உலகில் தோன்றிய மொழிகளிலே முதல் மொழி தமிழ் மொழிதான் என்று நிறையப் பேர் பேச ஆரம்பித்துள்ளனர். நல்ல ஆரோக்கியமான விஷயம். ஆனால், அதை நிரூபிப்பதற்கான, ஆணித்தரமான ஆதாரங்கள் என்று ஒன்றும் இல்லை என்பதும் வருத்தமான ஒரு விஷயம்.
அதேசமயம், உலகில் உள்ள தொன்மையான மொழிகளில் தமிழும் ஒன்று என்பதை கிட்டத்தட்ட அனைவருமே ஒத்துக்கொள்கின்றனர் – சமஸ்கிருத ஆதரவாளர்கள் தவிர்த்து.
ரிக் வேதத்தில், இங்குள்ள (இந்தியாவில் உள்ள பூர்வகுடி ) “தஸ்யுக்களை” ( அரக்கர்களை ) அழித்து வாகை சூடிட உதவி புரியுமாறு இந்திரனையும், சோமனையும், அக்னியையும் வேண்டிக் கொண்ட ஸ்லோகங்கள் வருகின்றன. அதற்கு கை மாறாக சோம பானம், மாமிசங்கள் போன்றவற்றை படையலாகத் தருகிறோம் என்று வேண்டிக் கொண்டவையும் சொல்லப்பட்டிருக்கின்றன. அந்த “தஸ்யுக்கள்” (அரக்கர்கள் – அதாங்க… தமிழர்கள்) இன்னும் அழியாமல், எராளமான தொல்லியல் சமாச்சாரங்களையும், வரலாற்றையும் மீட்டெடுத்துக் கொண்டு வீறு கொண்டு எழுந்தால் எந்த (நாக) சாமியால்தான் பொறுத்துக் கொள்ள முடியும், சொல்லுங்கள்.
ஆசீவகத்தைப் பற்றிய தொடரில், ரிக் வேதத்தையும், தஸ்யுக்களையும் பற்றி பேசுவது தேவைதானா என்று தோணலாம்.
“சும்மா சும்மா போராட்டம் போராட்டம் என்று சண்டை போட்டுக் கொண்டிருந்தால், நம்மால் ஒன்றும் சாதிக்க முடியாது என்று வெளி மாநிலத்திலிருந்து வந்த நடிகர் ஒருவர் சில வருடங்களுக்கு முன்னர் பேட்டி ஒன்று கொடுத்தார். பாவம்,அவருக்கு தமிழர்களின் வரலாறு தெரியவில்லை. இந்த “தஸ்யுக்க”ளின் போராட்டம் கிட்டத்தட்ட 4000 வருடங்களுக்கு முன்னரே தொடங்கிய விஷயம் என்பது அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அந்தப் போராட்டம் வெவ்வேறு வடிவங்களில் இன்றுவரை தொடர வேண்டியிருப்பது இந்த “தஸ்யுக்க”ளின் சாபக் கேடு.
இந்தத் தொடரை எழுதுவதற்காகவும், ஆசீவகம் பற்றி தெரிந்து கொள்வதற்காகவும், ஆராய்வதற்காகவும் நிறைய இடங்களுக்குப் பயணப்பட ஆரம்பித்திருக்கிறேன். ஆரம்பித்து ஒரு வருடம்தான் ஆகியிருக்கிறது. ஆனால்,இதற்குள்ளாகவே தடங்கல்கள், எதிர்ப்புகள், துரோகங்கள், வரலாற்று அழிப்புகள் என்று நிறைய திருப்பு முனைகள்.
ஐயா…சூப்பர் ஸ்டார் அவர்களே, இதுதான் எங்கள் வாழ்க்கை. போராடாமல், எங்களுக்கு எதுவுமே “நீட்” டாகக் கிடைத்ததில்லை.
உண்மைகள் வெல்லும் வரை தொடர்ந்து போராடுவோம்.
வின்ஸ்டன் சர்ச்சில் சொன்னது எங்களுக்கும் பொருந்தும் –
(தஸ்யுக்கள்) Never never never Give up.
சரி, விஷயத்துக்கு வருவோம்.
உலகில் இவ்வளவு பழைமையான ஒரு மொழிக்கு மெய்யியல் என்று ஒன்று இருந்திருக்க வேண்டுமே, அது என்ன என்று நம்மில் யாருமே கேட்பதில்லை.
“தொல்காப்பியத்திலிருந்து, திருக்குறள், சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி, நீலகேசி , என்று நிறைய சங்க காலப் பாடல்கள் வரை, சமணமும்( ஜெயினம்), பௌத்தமும், தமிழுக்குக் கொடுத்த நன்கொடை என்று நம்மை நம்ப வைத்து விட்டார்களே” என்று ஐயா நெடுஞ்செழியன் அவர்கள் ஒரு நேர்காணலில் வருத்தப்பட்டிருந்தார்கள்.
அதையும் தாண்டி, தமிழே “ அகஸ்தியர்” என்ற ஒரு ஆரியர் நமக்கு “அருளியதுதான்” என்றும் சொல்லப்பட்டதும்,சொல்லப்படுவதும் காலத்தின் கொடுமை.
தமிழுக்கு என்று ஒரு மெய்யியலும், அறிவு சார்ந்த மரபும், பாரம்பரியமும் இருந்திருக்கா விட்டால் மட்டுமே மேற்சொன்ன “நன்கொடைகள்” சாத்தியம்.
அப்படியென்றால், நமது தமிழின், தமிழரின் மெய்யியல் என்ன ? ஆசீவகம் ஏன் அந்த மெய்யியலின் வெளிப்பாடாக இருக்கக் கூடாது என்று யோசித்து ஆய்வில் இறங்கினால், செல்லும் இடமெல்லாம் தங்கப் புதையல் கொட்டிக் கிடக்கிறது.
அப்படிப்பட்ட ஒரு புதையலை திருடிக் கொள்ள, அழிக்க, மறைக்க, சோமபானமும், இறைச்சியும் கொடுத்து வேண்டிக் கொண்டதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
ஆசீவகத்தைத் தேடி நாம் பயணிக்க ஆரம்பித்தால், நமது பயணத்தை பாறை/குகை ஓவியங்களில் இருந்தோ, நீத்தார் நினைவுச் சின்னங்களிலிருந்தோ, ஐயனார் வழிபாட்டிலிருந்தோ, அல்லது அறிவர் (சித்தர்) மரபிலிருந்தோதான் தொடங்க வேண்டும்.
இது புரியாமல், உங்கள் பயணத்தைத் தமிழிக் கல்வெட்டிலிருந்திலிருந்து தொடங்கினால், உங்களுக்கு மண்டை காய்வது உறுதி – எனக்குக் காய்ந்தது போல.
என் ஆய்வு முடியும்வரை இந்தத் தொடரை எழுத உத்தேசித்துள்ளேன். என் காலத்திலேயே இந்த ஆய்வு ஒரு முடிவுக்கு வரும் என்றும் உறுதியாக நம்புகிறேன் ( நம்பிக்கைதானே எல்லாம் – இதை நடிகர் பிரபு ஸ்டைலில் படிக்கவும்).
நான் ஒவ்வொரு இடத்திற்கும் கள ஆய்விற்கு சென்று வந்த பிறகு, நான் பார்த்தவற்றை, தெரிந்தவற்றை புகைப்படங்களுடன் எழுதுகிறேன். எப்போதெல்லாம் முடிகிறதோ, அப்போதெல்லாம் அது சம்பந்தமான வீடியோவும் வெளியிடுகிறேன்.
நான் முன்பு எழுதிய “அமணர்களும் சமணர்களும்” தொடரில் எழுதிய சில விஷயங்களும் இதில் ரிப்பீட் ஆகும். ஒரு தொடர்ச்சியான ஆவணத்திற்காக முன்பு சொன்ன விஷயங்களை மறுபடியும் சொல்ல வேண்டியுள்ளது. தவறாக நினைக்க வேண்டாம்.
சரி….ஏன் பாறை / குகை ஓவியங்கள் ?
ஆசீவக மரபு, ஒரு சமயமாக அல்லது ஒரு நிறுவனமாக மாற்றமடைந்தது புத்தர் காலத்தில்தான். அதாவது கி.மு.ஆறாம் நூற்றாண்டில்தான். மற்கலி கோசாலர் என்பவரால்.
ஆசீவகர்கள், வானியல் ஆராய்ச்சியில் சிறந்து விளங்கினர் என்பதை பௌத்த மத நூல்களும், ஜைன மத நூல்களும் தெளிவாக எடுத்துரைக்கின்றன. ஆசீவகர்கள் எழுதிய நூல்கள் ஒன்றும் நமக்கு கிடைக்கவில்லை – இன்னும்.
ஆசீவகத்தை அழித்தது என்னவோ பின்னால் வந்த சைவம் என்றாலும் கூட, அழிய வேண்டும் என்று முதன் முதலில் ஆசைப்பட்ட மதங்கள் என்னவோ பௌத்தமும், ஜைனமும்தான். எனவே, அவர்களே, ஆசீவகர்களை வானவியல் ஆராய்ச்சியில் வல்லுனர்கள் என்று ஒத்துக் கொள்ளும்போது, நாமும் அதை அப்படியே எடுத்துக் கொள்வதில் தவறில்லை.
நான் தமிழிக் கல்வெட்டுக்களைத் தேடிச் சென்ற குகைகளில், அனேகமாக அனைத்துமே வானவியல் ஆராய்ச்சிக்கு ஏற்ற இடமாக இருந்தது மேற்சொன்ன கருத்தை வலுப்படுத்துகிறது.
அதிலும், நிலாப்பாறை என்று ஒன்று இருக்கிறது. அந்தப் பாறையில் மல்லாந்து படுத்துக் கொண்டு வானத்தைப் பார்த்தால், வானத்தின் முப்பரிமாணமும் தெரிகிறது. இந்த நிலாப்பாறை கிட்டத்தட்ட அனைத்து குகைத் தளங்களிலும் உள்ளது. ஆச்சரியம்.
இங்கு நான் எடுத்த படங்களை “ ஆசீவர்களின் பார்வையிலே” என்று தலைப்பிட்டு முன்பு வெளியிட்டிருக்கிறேன்.
ஆசீவகர்கள் தங்கள் ஆராய்ச்சி பற்றி கண்டிப்பாக சில பல நூல்களாவது எழுதியிருக்க வேண்டும். அவை அழிந்து போயிருக்க வேண்டும் அல்லது பகைவர்களால் அழிக்கப் பட்டிருக்க வேண்டும்.
ஆனால், மிகவும் ஆச்சரியமாக சில குகைத் தளங்களில் தங்கள் ஆராய்ச்சிகளை பாறை ஓவியங்களாகவும் தீட்டியிருக்கிறார்கள்.
அதில் பெரும்பாலானவை, வெண் சாந்து ஓவியங்களே.
வெண்சாந்து ஓவியங்கள் புதிய கற்காலத்திலும், பெருங்கற்படைக் காலத்திலும் வரையப்பட்ட வகை.
தோராயமாகச் சொன்னால், கி.மு.3000 அல்லது கி.மு. 2000 இல் தொடங்கியிருக்கலாம். பாறை ஓவியங்களைப் பொறுத்த வரை காலக் கணக்கீடு என்பது ஒரு குத்து மதிப்பே.
வெண்சாந்து ஓவியத்தை, வெப்பாலை என்னும் மரத்திலிருந்து பால் எடுத்து அதை சுண்ணாம்புக் கல்லோடு குழைத்து , விரலால் வரைந்திருக்கலாம் என்பது பொதுவான கருத்து.
(Kumar loves Priya, Murugesan Loves Lavanya என்று வெள்ளை சாக்பீசால் எழுதி ஒரு காதல் சின்னத்தை வரைந்து நடுவில் ஒரு அம்பை எய்வது இந்த வெண்சாந்து ஓவிய வகையில் வராது ).
ஆசீவகத்தில் வானியல் ஆராய்ச்சி செய்தவர்களுக்கு “கணி அல்லது கணியன்” என்ற பட்டப் பெயர் உண்டு. கணியன் பூங்குன்றனார், கணி நந்தாசிரியன், பக்குடுக்கை நன்கணியார் போல.
இந்தக் கணியர்கள், மேற்சொன்ன குகைகளில் வசித்து வானிலை ஆய்வும், மருத்துவ சேவையும் செய்திருக்க வேண்டும். காரணம், கிட்டத்தட்ட நான் பார்த்த அனைத்துக் குகைகளிலுமே மருந்து அரைக்கும் குழிகளைக் காண முடிகிறது.
ஆசீவகர்கள் மருத்துவத்திலும் சிறந்தவர்கள் என்பதற்கும் நிறைய ஆதாரங்கள் இலக்கியங்கள் வாயிலாகக் கிடைக்கின்றன.
அதேபோல், வானிலை தொடர்பான ஆய்வுகளை சில இடங்களில் நேரிடையாகவும், பல இடங்களில் குறியீடுகளாகவும் வரைந்து வைத்துள்ளனர்.
அதில் ஒரு இடம்தான் “புலிப் பொடவு”. இது மதுரைக்கு அருகில் உள்ள உசிலம்பட்டியிலிருந்து ஒரு 12 கி.மீ தொலைவில் உள்ளது.
பொடவு என்றால் குகை. புலிப் பொடவு என்றால் புலி தங்கும் குகை. இதை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு புலியின் செங்காவி ஓவியத்தை இந்த குகையின் முகப்பில் உள்ள பாறையில் பார்க்க முடிகிறது.
அதே இடத்தில்தான், வானிலை தொடர்பான சில ஓவியங்களும் உள்ளன.
அதில் முக்கியமான ஒன்று, சூரியன், நிலா மற்றும் அதை இணைத்து ஒரு நீண்ட கோடு அதில் 15 சிறிய கோடுகள்.
அமாவாசை நாளிலிருந்து நாம் சூரிய ஒளி மூலம் முழு நிலவைக் காண ஆகும் காலம் 15 நாட்கள் என்று அர்த்தம் எடுத்துக் கொள்ளலாம்.
அதாவது, நிலவின் வெவ்வேறு பரிமாணங்கள், நிலா சூரியனைச் சுற்றுவதாலும், சூரியனின் ஒளிச் சிதறலினாலுமே தெரிகிறது என்பதையும், அமாவாசையிலிருந்து முழு நிலவு தெரிவதற்கும், முழு நிலவிலிருந்து அமாவாசை அவதற்கும் அகும் காலம் 15 நாட்கள் என்பதையும் என்பதை ஏறத்தாழ 3000 வருடங்களுக்கு முன்னரே கணித்துள்ளனர் ஆசீவகர்கள்.
அதாவது ஆரியப்பட்டா, திராவிடப்பட்டா போன்ற “மேதை” களெல்லாம் பிறப்பதற்கு 1000 அல்லது 1500 வருடங்களுக்கு முன்னரே.
அது மட்டுமல்ல, நட்சத்திரங்களைக் குறிக்கும் வகையில் ஏராளமான புள்ளிகளும், விதவிதமான குறியீடுகளும் புரியாத வகையில் உள்ளன. இவற்றையெல்லாம் Decoding செய்து ஆய்வறிக்கை சமர்ப்பித்தால், அடுத்த நாளே உலக அறிஞர்கள் அனைவரையும் உசிலம்பட்டியில் பார்க்கலாம் ( அதற்குள் நல்ல ரெஸ்டாரெண்ட் நான்கு வந்தால் நன்றாயிருக்கும். சாப்பிடுவதற்கு உருப்படியான ஹோட்டல் ஒன்றும் இல்லை. சும்மா தோணுச்சு ….சொன்னேன். பசிக்கும்ல…).
இது போன்று அறிவு சார்ந்த நிறைய விஷயங்கள் நடந்துள்ளன.
இதுவே தமிழின் / தமிழரின் மெய்யியல்.
ஓரையான் என்ற உடுக்கணம் பற்றி அடுத்த பாகத்தில்…
வெ.பாலமுரளி.
நன்றிகள் :
உயர்திரு.ராஜகுரு, ஆசிரியர், திருப்புலாணி
முனைவர்.க.நெடுஞ்செழியன், திருச்சி
உயர்திரு. பாலபாரதி, திருச்சி
உயர்திரு.கண்ணன், காவல்துறை, சென்னை
தம்பி ஹாருண் பாஷா, ஆசிரியர், மதுரை
உயர்திரு. தென்கொங்கு சதாசிவம்
உயர்திரு. நாராயணமூர்த்தி, புதுக்கோட்டை.
உயர்திரு. முத்து ஜோதி ஐயா, பெண்ணடம்
உயர்திரு. செந்தில்குமார், கடச்சனேந்தல்.
தம்பி அனந்த குமரன்.





