அய்யனாரைத் தேடி – 1

அடைக்கலம் காத்த அய்யனார்.

இடம் : புதுக்கோட்டை மாவட்டத்தில், நார்த்தாமலைக்கு அருகில் ஊரப்பட்டி என்னும் கிராமம். 

அது என்ன அடைக்கலம் காத்த அய்யனார் ?

அதற்கு  ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தைச் சொல்கிறார் நண்பர் நாராயண மூர்த்தி.

சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட மிகப்பெரிய பஞ்ச காலத்தில் நிறைய கிராமத்தில் மக்கள், தங்கள் கிராமங்களைக் காலி செய்து வெவ்வேறு இடங்களுக்கு புலம் பெயர்ந்திருக்கிறார்கள்.

அப்படி புலம் பெயரும்போது, தங்கள் குலதெய்வங்களை நிராதரவாக அங்கேயே விட்டு விட்டுச் சென்றால் தெய்வ குத்தம் ஆகி விடுமென்று கருதி,  இந்த ஊரப்பட்டிக்கு வந்து இந்த அய்யனார் கோயிலுக்கு வெளியில் தங்கள் குலதெய்வங்களை விட்டுச் சென்றிருக்கின்றனர்.

இந்த அய்யனாரும் பெருந்தன்மையோடு அனைத்து குலதெய்வங்களையும் அன்புடன் அரவணைத்துக் கொண்டதால், இவர் “ அடைக்கலம் காத்த அய்யனார்” என்று அன்புடன் அழைக்கப்படுகிறார்.

கிராமங்களை விட்டு வெளியேறிய மக்கள் அனைவரும் வெவ்வேறு ஊர்களில் செட்டில் ஆகி விட்டதால், யாரும் இந்த தெய்வங்களை திரும்ப எடுத்துச் செல்லவில்லை.

இன்றும், இந்த அய்யனார் கோயிலைச் சுற்றி ஏராளமான நாட்டார் தெய்வச் சிலைகள் புதர்கள் மண்டி வெயிலிலும், மழையிலும் நனைந்து கொண்டிருக்கின்றன. 

மக்கள், சிவராத்திரி போன்ற குலதெய்வங்களைக் கும்பிடும் நாட்களில், இந்த ஊருக்கு வந்து, தங்கள் தெய்வங்களைத் தேடிக் கண்டு பிடித்து ( ???), புதர்களை வெட்டிச் சுத்தப்படுத்தி, தங்கள் தெய்வங்களுக்கு பொங்கல், கிடா என்று படையல் வைத்து சாமி கும்பிட்டு விட்டுச் செல்கின்றனர்.

விசேட நாட்கள் முடிந்ததும், “ வருஷம் 16” படத்தில் வரும் பூரணம் விஸ்வநாதன் மாதிரி, தெய்வங்களும் அடுத்த வருட பண்டிகைக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன. 

மக்கள் தங்கள் வேண்டுதல்களுக்காகவோ, வேண்டுதல் நிறைவேறியதற்காகவோ மண்ணில் குதிரைகளையோ, யானைகளையோ, காளைகளையோ செய்து அய்யனார் கோயில்களில் வைப்பது காலம் காலமாக நடந்து வரும் தமிழர்களின் கலாச்சாரம்.

இந்த அய்யனார் கோயிலில் 100 வருடங்களைக் கடந்த அது போன்ற மண் சிலைகளை இன்றும் காண முடிகிறது. 

இந்த சிலைகள் மூலமாக 100 வருடங்களுக்கு முன்னர் இருந்த மண் வேலைப்படுகளின் தரத்தையும், அப்போதிருந்த நம் மக்களின் கலாச்சார பழக்க வழக்கங்களையும் இன்றும் காண முடிவது சிறப்பு.

அதில் நான் கண்ட நாலே நாலு வித்தியாசமான விஷயங்களை மட்டும் இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

  1. ஆசீவர்கள் ஏற்றுக் கொண்ட ஏழு சின்னங்களில் நமது “ திருநிலை “ யும் ஒன்று.  இரண்டு பக்கங்களிலும் யானைகள் இருக்க நடுவில் தாமரையில் வீற்றிருக்கும் ஒரு பெண் தெய்வம் இருப்பதே திரு நிலை ஆகும் . ஆதி காலத்தில் நம் தமிழர் பண்பாட்டில் அனைத்து வீடுகளின் வாசல் நிலைகளிலும், வழிபாட்டு தலங்களிலும் இந்தச் சின்னம் இடம் பெற்றிருக்கிறது. இன்றும் கூட பெரும்பாலான சமுதாயத்தினரின் தாலியில் இந்த “ திருநிலை” யைக் காண இயலும். பின்னாளில் வைதீக மதமானது , சைவ மதம், வைணவ மதம், சமணம் என்று அனைத்து சமயங்களையும் அவற்றின் பண்பாடுகளையும் கபளீகரம் செய்த போது, தமிழர்கள் இந்த திரு நிலையை விட மாட்டார்கள் என உணர்ந்து இந்தச் சின்னத்தையும் உள்வாங்கி அதற்கு “ கஜலெக்‌ஷ்மி” என பெயர் மாற்றம் செய்து விட்டனர் ( ஈயம் பூசுன மாதிரியும் இருக்க வேண்டும். பூசாத மாதிரியும் இருக்க வேண்டும்).

தமிழர்களின் பழைய கலாச்சாரத்தில், நான் மேற்சொன்ன, அய்யனாருக்கு நேர்ந்து விடப்படும் மண் குதிரைகளிலும் இந்தச் சின்னத்தைப் பயன்படுத்தியிருந்ததை இங்குள்ள நிறைய மண் குதிரைகளில் காண முடிவது புல்லரிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. 

அதிலும் நடுவில் உள்ள அந்தப் பெண் தெய்வத்தை ஒரு நூறு அல்லது இருநூறு வருடங்களுக்கு முன்னர் மண்ணில் நம் மக்கள் செய்த விதம் மிகவும் வித்தியாசமாக உள்ளது. 

அய்யனார் வழிபாடு என்பது வைதீக மதம் தமிழகத்தில் நுழைவதற்கு முன்பே இங்கு இருந்திருக்கிறது என்பதால், இந்தத் “திருநிலை” சின்னம் தமிழர்களின் பண்பாடுதான் என்பது கண்கூடு.

இந்த கஜலெக்‌ஷ்மியின் ஒரிஜினல் பெயர் “ மாதங்கி” என்பது நம்மில் பலர் அறியாதது.   

  • இன்னொரு குதிரையில், கையில் கிண்ணம் ஏந்தியவாறு உள்ள ஒரு பெண்ணின் உருவம் உள்ளது. அதன் முகம், சிந்துவெளியில் கண்டெடுத்த ஒரு உருவத்தின் சிலையை ஒத்திருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம் ( அதன் படத்தை இங்கு இணைத்துள்ளேன்). 
  • இன்னொரு குதிரையின் நெஞ்சில்,  இரண்டு நபர்களின் இனிஷியலை கா.மு.கு, சா.மு.கு என்று “தலைகீழாக” பொறித்து வைத்துள்ளர்கள் ( கண்ணாடி வைத்துப் பார்த்தாலோ அல்லது ஃபோட்டோஷாப்பில் ஃப்லிப் இமேஜ் போட்டாலோத்தான் படிக்க முடியும்). . அதை நேர்ந்து விட்டவரின் பெயரை யாரும் எளிதாக தெரிந்து கொள்ளக் கூடாது என்று நினைத்தார்களோ என்னவோ. நூறு அல்லது நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த அவர்களின் மனநிலையை யாரறிவார். இதே போல், குன்றக்குடியில், தலைகீழாகப் பொறிக்கப்பட்டுள்ள  ஒரு தமிழிக் கல்வெட்டையும் நான் பார்த்தேன் (கி.மு. இரண்டாம் நூற்றாண்டு கல்வெட்டு). ஆச்சரியம்.  
  • ஒரு குதிரையின் தலை மட்டும் சேதமடைந்து துண்டாகி கீழே கிடக்கிறது. அதன்  கடிவாளத்தை ஒரு முறுக்குக் கயிற்றால் செய்திருக்கிறார்கள். களி மண்ணால் அதைச் செய்த விதம் அழகு. அதை இணைக்கும் இடத்தில் “இலவச” இணைப்பாக ஒரு பூ டிசைனையும் பொருத்தியிருப்பது, செய்த கலைஞனின் கலாரசனையைக் காட்டுகிறது.

நம்ம சீர்காழி கோவிந்தராஜன்  வாய்ஸில் “ மண்ணிலே கலை வண்ணம் செய்தான் “ என்று பாட வேண்டும் போல் தோன்றியது.

அய்யனாரைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்புவோர் அனைவரும் செல்ல வேண்டிய அற்புதமான ஓர் இடம் ஊரப்பட்டி. 

இந்தக் கட்டுரையை முடிக்கும் முன், நிறையப் பேர் அறியாத ஒரு தகவல். நமது அய்யனார் சுத்த சைவம். அவர் வாசலில் உள்ள கருப்புசாமிக்கு கிடா, கோழி என்று பலி கொடுத்து படைக்கும் போது, அய்யனார் சிலையை ஒரு வெள்ளைத் துணியை வைத்து மூடி, நாம் உயிர்பலியிடுவதை அய்யனார் பார்க்காதபடி பார்த்துக் கொள்கிறார்கள். 

மறக்காமல் இங்கு இணைத்துள்ள அனைத்துப் படங்களையும் பார்க்கவும். நான் எழுதியுள்ளது எளிதாகப் புரியும்.

வெ.பாலமுரளி. 

நான் எதிர்பாராமல் இந்த இடத்திற்குக் கூட்டிச் சென்று இதன் அருமை பெருமைகளை விளக்கிய நண்பர் நாராயண மூர்த்திக்கு நன்றிகள் கோடி. 

திரு நிலை விளக்கம் உதவி : மறைந்த உயர்திரு ஆதி சங்கரன் எழுதிய ஆசீவக மரபின் அழியா சின்னங்கள்.

அய்யனார் பற்றி அறிய என் ஆவலைத் தூண்டிய நண்பர் கண்ணன், காவல்துறை, சென்னை. நன்றிகள் கோடி கண்ணன் சார்.