சமய மோதல்கள் என்பது மனிதகுலத்தின் சாபக்கேடு.
கடவுள் பேரைச் சொல்லி சமயத்தைத் தொடங்கியதும் மனிதன்தான். அதே கடவுள் பேரைச் சொல்லி ஒருவரையொருவர் அடித்துக் கொண்டதும், அடித்துக் கொண்டிருப்பதும் அதே மனிதன்தான்.
இந்த சாபக்கேட்டிற்கு உலகில் உள்ள எந்த சமயமும் விதிவிலக்கல்ல. கிட்டத்தட்ட உலகில் உள்ள அனைத்து சமயங்களும் ஏதோ ஒரு காலகட்டத்தில் ஒரு பெரும் மோதலை சந்தித்துள்ளது என்பதுதான் வரலாறு சொல்லும் பாடம்.
“நம் நாடு கடந்த 10,000 (??????) வருடங்களாக எந்த நாட்டின் மீதும் படையெடுத்து ஆகிரமித்ததில்லை. அதேபோல், நம் மதம்தான் உலகிலேயே மிகவும் சாத்வீகமான மதம். நீ உண்மையான இந்தியனாக இருந்தால் உடனே 10 பேருக்கு ஷேர் பண்ணு. இல்லாவிட்டால் ரத்தம் கக்கி சாவாய்” என்று நாம் வாட்சப்பில் பீற்றிக் கொண்டாலும், அது உண்மையல்ல என்பதே வரலாறு.
ஏனோ வரலாற்று உலகம், வாட்சப் மெசேஜ்களை ஏற்றுக் கொள்வதில்லை. Very sad.
அதுபோன்ற சமய மோதல்களுக்கு நமது தமிழகமும் விதிவிலக்கல்ல என்பதே கசப்பான உண்மை.
அப்படிபட்ட சமய மோதல்களுக்கு மௌன சாட்சியாக விளங்கும் ஒரு இடம்தான் நார்த்தா மலை.
இந்த மலையின் மேல் ஒரு சிவன் கோயில் உள்ளது. ஆரம்பத்தில் அதைச் சுற்றி சிறு கோயில்களாக 8 கோயில்கள் இருந்ததாகத் தெரிகிறது. அதில் ஆறு சிறுகோயில்கள் மட்டுமே இன்று உள்ளது. காலத்தால் அழிந்திருக்க வேண்டும். இந்த 6 சிறு கோயில்களிலும் இன்று தெய்வ சிலைகள் ஏதும் இல்லை.
சாத்தன் பூதி என்பவர் இந்தக் கோயிலைக் கட்டியதாகவும், கோவில் மழையினால் பெரும் சேதம் அடைந்ததனால், மல்லன் விடுமன் என்பவர் விஜயாலய சோழன் காலத்தில் ( கி.பி.9ம் நூற்றாண்டு) இந்தக் கோயிலைப் புதுப்பித்ததாகவும் இங்குள்ள ஒரு கல்வெட்டு கூறுகிறது. ஆனால், கோயில் கட்டப்பட்ட ஆண்டு பற்றிய தகவல்கள் ஏதுமில்லை.
இந்த சாத்தன் பூதி, முத்தரையர் குல சிற்றரசராகவோ, அல்லது முத்தரையர் குல வணிகராகவோ இருந்திருக்க வேண்டும்.
அந்தக் காலத்தில் இங்கு நிறைய வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. ஆச்சரியமாக இந்த சிவன் கோயிலில், பெருமாளை கையில் சங்கு, சக்கரத்துடன் வரைந்த ஓவியத்தை இன்றும் காண முடிகிறது – நிறைய சேதமடைந்த நிலையில்.
இந்தக் கோயில் அனேகமாக கி.பி. எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்டப்பட்டிருக்க வேண்டும். அதாவது, காஞ்சி கைலாச நாதர் கோயில் கட்டிய சில ஆண்டுகளில் இது கட்டப்பட்டிருக்கலாம்.
இரண்டு கோயில்களுக்கும் உள்ள ஒரு பெரிய ஒற்றுமை, இவற்றின் கருவறைகள் வட்ட வடிவில் இருப்பது.
கருவறைகள் வட்ட வடிவில் இருந்தால், அவை ஆரம்பத்தில் பௌத்த ஸ்தூபிகளாக இருந்திருக்க வேண்டும் என்கிறார் மறைந்த வரலாற்று ஆய்வாளர் தொ.பரமசிவம் அவர்கள் தன்னுடைய “அழகர் கோயில்” என்னும் நூலில்.
ஆம். அழகர் கோயிலில் உள்ள மூல சன்னிதி வட்ட வடிவில்தான் இருக்கிறது. அவருடைய நூல் வந்த பிறகா இல்லை அதற்கு முன்பிருந்தா என்று தெரியவில்லை, கள்ளழகரின் கருவறை இருக்கும் சுற்றுப் பிரகாரத்தை மூடியே வைத்திருக்கிறார்கள். யாருக்கும் உள்ளே நுழைய அனுமதியில்லை.
சமீபத்தில் தெரிந்தவர் ஒருவர் மூலமாக உள்ளே நுழையும் வாய்ப்பு கிடைத்தது. கருவறையின் பின்பகுதியைப் பார்த்ததும் அசந்து விட்டேன். அச்சு அசல் அப்படியே வட இந்தியாவில் நாம் பார்க்கும் பௌத்த ஸ்தூபியின் கட்டுமானம். ஆடிப் போய் விட்டேன். அதைப் பார்க்கும் யாரும், தமிழகத்தில் பௌத்தம் அழியத் தொடங்கியதும் இந்தக் கோயில் வைணவர்களில் கைக்கு மாறி பெருமாள் கோயிலாக மாற்றப்பட்டிருக்கிறது என்ற தொ.ப வின் கூற்றை மறுக்க இயலாது.
(என்னைக் கூட்டிச் சென்ற நண்பர் கண்டிப்பாகப் புகைப்படம் எடுக்கக் கூடாது என்று சொல்லி விட்டார்).
அதே கதைதான் விஜயாலய சோழீஸ்வரத்திலும் நடந்திருக்க வேண்டும்.
எனக்கு ஆகம சாத்திரம் என்று சொல்லப்படும் சைவ சிற்ப சாத்திரம் பற்றி ஒன்றும் தெரியாதலால், அது பற்றித் தெரிந்த இரண்டு நண்பர்களிடம் பேசினேன். அவர்களும் தொ.ப வின் கருத்தையே ஆமோதிக்கிறார்கள்.
இது பற்றி உங்களில் யாருக்கேனும் மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் ஆதாரத்துடன் சொல்லுங்கள் நானும் கற்றுக் கொள்கிறேன்.
ஆனால், தொ.ப வின் கருத்தை நிரூபிக்கும் வகையில், இங்குள்ள சிவ லிங்கம் தாமரைப் பீடத்தின் மீது நிறுவபட்டுள்ளது.
தாமரைப் பீடம் என்பது புத்தர் சிலைகளுக்கு உரித்தானது. சிவ லிங்கத்தை தாமரைப் பீடத்தின் மீது நான் எங்கும் பார்த்ததில்லை.
அது மட்டுமல்ல. சிவலிங்கத்தின் ஆவுடையாரும், தாமரைப் பீடமும் வெவ்வேறு கால கட்டத்தில் செதுக்கப்பட்டவை என்பதை அவற்றைப் பார்க்கும்போதே புரிகிறது. முற்றிலுமாக வெவ்வேறு கற்கள்.
கோயிலுக்குள் சில உடைந்த சிற்பங்களை இன்றும் காண முடிகிறது.
அவை நம்மிடம் ஏதோ சொல்ல வருவது புரிகிறது. ஆனால், என்னவென்றுதான் புரியவில்லை.
வெ.பாலமுரளி.
நன்றிகள்:
என்னிடம் முதன் முதலில் நார்த்தா மலை பற்றி சொன்ன நண்பர் கண்ணன் – காவல் துறை, சென்னை.
என்னை இங்கு அழைத்துச் சென்ற நண்பர் நாராயண மூர்த்தி
மறைந்த வரலாற்று ஆய்வாளர் தொ.பரமசிவம் அவர்கள்.
என்னுடன் வந்த என் நண்பர்கள் வெற்றி , செந்தில் குமார், ரமேஷ் மற்றும் என் மனைவி அர்ச்சனா.
அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் கோடி.






