தோராயமாக 7000 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்ததுதான் பெருங்கற்காலம் என்பது.
அப்போது இறந்தவர்களையோ அல்லது அவர்களின் எலும்புகளையோ ஒரு தாழியிலோ அல்லது ஈமப்பேழை எனப்படும் சுடுமண்ணால் செய்த தொட்டி போன்ற ஒரு பெட்டியில் வைத்து மண்ணில் புதைத்து, அந்த இடத்தைச் சுற்றி வட்ட வடிவில் பெரிய பெரிய கற்களை நட்டு விடுவார்கள்
புதைத்த இடத்தில் அதாவது நடுப்பகுதியில், பெரிய கற்களை வைத்து பதுக்கை என்று சுமை தாங்கி போன்ற அமைப்பில் மூன்று கற்களை வைத்து நினைவுச் சின்னம் அமைப்பது அல்லது கிட்டத்தட்ட 10 அடி உயரத்தில் நெடுகல் எனப்படும் ஒரே ஒரு பெரிய கல்லை வைப்பது சுத்தமாக வசதி இல்லாதவர்கள் சிறு சிறு கற்களாக ஒரு கற்குவியலை ஏற்படுத்துவது நமது தமிழர்களின் பண்பாடு .
அதேபோல், சில இடங்களில் கற்பதுக்கையை இரண்டாகப் பிரித்து ஒன்றின் அடியில் முதுமக்கள் தாழி அல்லது ஈமப் பேழையையும் மற்றொரு பகுதியில் இறந்தவருக்குப் பிடித்த உணவுப் பொருட்கள் மற்றும் துணி மணி போன்ற மற்ற பொருட்களையும் வைப்பது வழக்கமாக இருந்திருக்கிறது.
கீழே உள்ள படங்களில் ஒன்று இந்த வகையில் இருப்பதை நீங்கள் பார்க்கலாம்.
இந்தப் பெருங்கற்காலம் என்பது கி.மு.500 வரை இருந்தது போல் தெரிகிறது.
படத்தில் இருக்கும் இந்த ஈமச்சின்னங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நார்த்தா மலைக்கு அருகில் உள்ள துடயூர் என்னும் இடம்.
இந்த ஒரே இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஈமச்சின்னங்களை இன்றும் காண முடிகிறது.
பொறுமையுடன் இந்த இடத்திற்கு கூட்டிச் சென்று எங்களுக்கு விளக்கிய நண்பர் நாராயணமூர்த்திக்கு நன்றிகள் கோடி.
வெ. பாலமுரளி





