நாம் இந்த “பிராமி” எழுத்தின் தொடக்க காலத்திற்குப் போவதற்கு முன்னர், ஒரே ஒரு தமிழி கல்வெட்டை மட்டும் கொஞ்சம் விரிவாக பார்த்து விடுவோம்.
“ எஉமிநாடு குமுழ்ஊர் பிறந்த காவுடி ஈ
தென்குசிறுபோசில் இளயர் செய்த அதிட்அனம்”
என்பது புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் சித்தன்னவாசலில் உள்ள கல்வெட்டு.
இதன் அர்த்தம் “ எஉமி நாட்டில் உள்ள குமுழூரில் பிறந்த காவுடி என்பவருக்கு தெற்கு சிறுபோசிலைச் சேர்ந்த இளையர் என்பவர் செய்து கொடுத்த இருப்பிடம்”.
இந்தக் கல்வெட்டை மொத்தம் 8 பேர் வாசித்து, தமிழ்நாட்டுத் தொல்லியல் துறையில் முறையாக ஆவணப்படுத்தியுள்ளனர்.
இந்த 8 பேருமே தொல்லியல் துறையில் பெரிய ஆட்கள்தான். அதில் 6 பேர், இந்தக் கல்வெட்டின் முதல் வார்த்தையை “எஉமிநாடு” என வாசித்திருக்க, நாகசாமியும், ஐராவதம் மகாதேவனும் மட்டுமே இதனை “ எருமிநாடு” என வாசித்திருக்கிறார்கள்.
சரி…இரண்டிற்கும், எழுத்தில் என்ன வித்தியாசம் என பார்ப்போம்.
இப்போதுள்ள தமிழில் இருக்கும் “ட” னாவில் உள்ள செங்குத்து கோட்டை கொஞ்சூண்டு கீழே இழுத்து விட்டால் அது “ ரு”. அப்படியில்லாமல், “ட” னாவில் உள்ள செங்குத்து கோட்டையும் மட்டத்தில் இருக்கும் கோட்டையும் ஒரு சின்ன வளைவுடன் இணைத்தால் அது “ உ “ . இப்போது கீழே இணைத்துள்ள அந்தக் கல்வெட்டுப் புகைப்படத்தைப் பாருங்கள். உங்கள் புரிதலுக்காக படத்தின் மேற்பகுதியில் “ரு” வுக்கும் “உ” வுக்கும் உள்ள வித்தியாசத்தைக் காண்பித்துள்ளேன். நீங்களே சொல்லி விடுவீர்கள் அது “ எஉமி நாடா” இல்லை “எருமி நாடா “ என்று.
இப்போது பொருளில் உள்ள வித்தியாசத்தைப் பார்க்கலாம்.
இந்தக் கல்வெட்டு வெட்டப்பட்ட காலம் கி.மு.முதல் நூற்றாண்டு என்று நமது தொல்லியல் துறை சொல்கிறது. அப்படியென்றால் உண்மையில் அது கி.மு. 4 அல்லது கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு என்று கொள்ளலாம்.
அந்த கால கட்டத்தில் ஒரு 10 ஊர்கள் இணைந்து இருந்தால் கூட அதை “ நாடு” அல்லது “ கூற்றம்” என்று சொல்லும் வழக்கம் இருந்திருக்க வேண்டும். அப்படிப் பார்த்தால் “ எஉமிநாடு” என்று ஒன்று இருந்திருக்க வாய்ப்புகள் நிறைய உண்டு.
எனவேதான், இதை வாசித்த 8 அறிஞர்களில் 6 பேர் இதை “எஉமி நாடு” என்றே வாசித்துள்ளனர்.
அப்படியென்றால் , நாகசாமியும், ஐராவதமும் மட்டும் இதை “எருமி நாடு” என்று வாசிக்கக் காரணமென்ன ?
கர்நாடக வரலாற்றின் பிற்பகுதியில் அவர்களுடைய சின்னம் “எருமை” . அதனால்தான் இன்றும் அங்குள்ள கோயில்களில் கோபுரத்தின் உச்சியில் எருமையின் கொம்புகளைக் காணலாம். ஆனால், மேற்சொன்ன கி.மு. நாலு அல்லது ஐந்தாம் நூற்றாண்டிலும் அதே எருமை சின்னம்தான் அங்கு இருந்தது என்பதற்கான ஆதாரம் எதுவுமில்லை. ஆனால், நமது நாகசாமியும் , ஐராவதமும் பிற்கால வரலாற்றுச் சின்னத்தை முற்கால வரலாற்றோடு இணைத்து, “எருமை நாடு” என்றால் அது கண்டிப்பாக கர்நாடகாதான். எனவே அவர்கள் “ எருமி நாடு” என்றுதான் எழுத நினைத்திருக்க வேண்டும். ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆகி “ எஉமி நாடு” என்று பொறித்து விட்டார்கள் என்று விளக்கம் கொடுக்க, நமது தொல்லியல் துறையும் மற்ற 6 பேர் வாசித்ததையும் ஒதுக்கி வைத்து விட்டு, This is final. No more arguments என்று சொல்லி “ எருமி நாடு” என்றே பதிவுசெய்து விட்டார்கள்.
இங்கிருந்தவர்கள் அனைவரும் கர்நாடகாவிலிருந்து வந்த சமணர்களே என்பதற்கு, இந்த ஒரு கல்வெட்டையும் மிக முக்கியமான ஆதாரமாகக் காண்பிக்கிறார்கள்.
அது மட்டுமல்ல. கி.பி. 9 அல்லது 10 ம் நூற்றாண்டு வாக்கில், அச்சணந்தி என்னும் சமண முனிவர் தீவிரமாக சமண மதத்தை மறு மலர்ச்சி செய்வதில் ஈடுபட்டிருக்கிறார்.
அப்போது அவர் தமிழி கல்வெட்டுக்கள் எங்கெல்லாம் இருக்கிறதோ, (கிட்டத்தட்ட) அந்த இடங்கள் அனைத்திற்கும் சென்று அங்கு ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட தீர்த்தங்கரர்கள் மற்றும் சமண இயக்கிகள் சிலைகளை வடித்து அதற்கு அருகில் சில வட்டெழுத்துக் கல்வெட்டுக்களையும் பொறித்து வைத்து விட்டுப் போயிருக்கிறார்.
இவற்றின் மூலம் “ இங்குள்ள கல்படுக்கைகள் மற்றும் தமிழிக் கல்வெட்டுக்களும் எங்களவர்களதுதான்” என சொல்லாமல் சொல்லி விட்டார்.
சமணர்களில் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டிற்குப் பிறகுதான் உருவ வழிபாடே வந்திருக்கிறது. அதற்கு முந்தைய காலத்து தீர்த்தங்கரர்களின் சிலை எதுவும் கண்டெடுத்தது போலத் தெரியவில்லை ( இதில் தவறு இருந்தால் சொல்லுங்கள். திருத்திக் கொள்கிறேன்). அப்படி இருக்கையில், அவர் எப்படி அல்லது அவர் ஏன் தமிழிக் கல்வெட்டுக்கள் மற்றும் கல்படுக்கைகள் இருக்கும் இடங்களுக்குச் சென்று சொந்தம் கொண்டாடினார் என்பது ஏழு கோடியே அறுபது லட்ச ரூபாய் கேள்வி ( அதாங்க…மில்லியன் டாலர் கொஸ்டின்). அவர் செய்த அதே வேலையைத்தான் இன்றைக்கு “ ஜெயின் சங்கம், புனே” என்ற க்ரூப்பும் மேற்சொன்ன எல்லா இடங்களுக்கும் சென்று மஞ்சள் போர்டை வைக்கிறது ( உதாரணத்திற்கு ஒரு படத்தை இங்கு இணைத்துள்ளேன்).
நமது தொல்லியல் துறை இந்த அச்சணந்தி செய்த தீர்த்தங்கரர்களின் புடைப்புச் சிற்பங்களையும் ஒரு வாதமாக வைக்கிறது.
நான் இதுவரை சொன்ன காரணங்களுக்கு மேல், இங்கிருந்தவர்கள் சமணர்கள்தான் என்பதற்கு வேறெந்த காரணமும் சொன்னது போல் தெரியவில்லை.
இதிலிருந்து தமிழர்களின் அல்லது ஆசீவகர்களின் அதாவது அமணர்களின் பெருமையைக் குலைக்க ஒரு பெரிய க்ரூப்பே பின்புலத்தில் இருப்பது கண்கூடாகத் தெரிகிறது.
அதேபோல்…..சொல்லி வைத்தாற்போல், இதுவரை கண்டுபிடித்த அனைத்துத் தமிழிக் கல்வெட்டுக்களின் காலத்தையும் கி.மு.2ம் நூற்றாண்டிற்கும் , கி.பி.இரண்டாம் நூற்றாண்டிற்கும் இடையே நிர்ணயித்திருக்கிறார்கள். இதற்கு கார்பன் டெஸ்ட் போன்ற ஏதேனும் அறிவியல் ரீதியான டெஸ்ட் எதுவும் எடுத்தார்களா என்றால், இல்லை என்பதே வருத்தமான பதில். அப்புறம் எப்படி மேற்சொன்ன காலகட்டத்தை நிர்ணயித்தார்கள் ?
ரொம்ப சிம்பிள்.
இருநூறு வருடங்களுக்கு முன்னர், பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில்தான் அசோகரின் கல்வெட்டுக்கள் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டன. அதுவே நமக்குக் கிடைத்த முதல் வகை கல்வெட்டுக்கள். அதாவது அவைதான் நாம் ஆராய்ச்சி செய்த முதல்வகை கல்வெட்டுக்கள் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். காரணம், அதை அங்குள்ள மக்கள் முன்னரே பார்த்து கண்டு கொள்ளாமல் விட்டு விட்டிருக்க வேண்டும்.
அசோகரின் கல்வெட்டுக்கள், பெரும் பாறை கல்வெட்டுக்கள், சிறு பாறை கல்வெட்டுக்கள், தூண் கல்வெட்டுக்கள் மற்றும் குடை வரைக் கல்வெட்டுக்கள் என்று நாற்பதுக்கும் மேல்.
அவை கிரேக்கம், அராமிக், பிராகிருதம், கரோஷ்த்தி மற்றும் இன்னொரு “யாருக்கும் புரியாத ஒரு எழுத்துருவம்” என்று நிறைய எழுத்து வடிவங்களில் பொறிக்கப்பட்டிருந்தன. இதில் உள்ள “யாருக்கும் புரியாத “ எழுத்துருவத்தைக் கண்டுபிடிக்க சில காலம் ஆனது. 1830 என்று நினைக்கிறேன். அந்த கோட்டு வடிவ எழுத்தை ஒருவர் கொஞ்சம் கொஞ்சமாக வாசிக்க ஆரம்பித்து விட்டார்.
ஆனால், அந்த வடிவ எழுத்திற்கு என்ன பெயர் என்று “அந்த சமயத்தில்” யாருக்கும் தெரியவில்லை.
பின்னர்தான் அந்தக் காலத்தில் புலக்கத்தில் இருந்த “பிராமி” என்னும் எழுத்து அது என்று கண்டறிந்தார்கள். கி.மு.3ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சமண நூலான சம வயங்க சூத்திரம் மற்றும் கி.பி.3 ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட புத்த நூலான “ லலித விஸ்தார சூத்திரம்” என்னும் நூலில் “பம்மி” என்று குறிப்பிடப்பட்ட , “பிராமி “ தான் என்று கண்டறிந்தார்கள் ( அதே நூல்களில் நமது “ தமிழி” யும் அப்போது பிரபலமாக இருந்த ஒரு எழுத்து மொழியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது).
பின்னர் அதே மாதிரி, மற்ற சில இடங்களிலும் அந்த எழுத்து வடிவ எழுத்துருவம் கிடைக்க, அதை வித்தியாசப்படுத்த வேண்டுமேயென்று, அதற்கு “ அசோக பிராமி” என பெயரிட்டனர்.
பின்னர், 1906 இல் தமிழ் நாட்டில் மதுரைக்கு அருகில் உள்ள மீனாட்சிபுரம் என்னும் மாங்குளத்தில் முதல் “பிராமி” கல்வெட்டு கிடைக்க , அதை வாசிக்க ரொம்பவே சிரமப்பட்டு விட்டனர்.
ஏறத்தாழ 20 வருடங்கள் கழித்து இந்த எழுத்துக்களை வாசிக்க ஆரம்பித்தனர். அப்போது அதற்குப் பெயர் “ பிராமி” தான்.
பின்னர் இந்த எழுத்துக்களுக்கு “ தமிழ் பிராமி” என்று பெயர் சூட்டியது உயர்திரு ஐராவதம் அவர்கள்தான். அதற்கு அவர் சொன்ன காரணம், இது அசோக பிராமியிலிருந்து பிரிந்த எழுத்துருவம். இது தமிழகத்தில் இருப்பதால், இதை “தமிழ் பிராமி” என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.
இதை மறுப்பேதும் சொல்லாமல் எல்லோரும் உடனே ஏற்றுக் கொண்டு விட்டனர்.
இதையே வரலாற்று எழுத்தாளரும் ஆய்வாளருமான நீலகண்ட சாஸ்திரியும் தன்னுடைய “தமிழரின் பண்பாடும் வரலாறும்” என்ற நூலில் அடித்து சொல்கிறார். கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்குப் பிறகே அசோக பிராமியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக உருமாறி தமிழ் பிராமி என்ற எழுத்துருவம் வடிவம் பெற்றது. அதற்கு முன்னர் தமிழுக்கு எழுத்துருவம் கிடையாது ( இவர் பெரிய வரலாற்று ஆய்வாளர். நம்புங்கள் ப்ளீஸ்).
அவர்கள் எந்த “ சம வயங்க சூத்திரத்தையும்” “லலித விஸ்தார சூத்திரத்தையும்” மேற்கோள் காட்டி “பிராமி” என்னும் எழுத்தை பிரபலமாக்க முயன்றார்களோ, அதே “ சம வயங்க சூத்திரத்திலும்” “லலித விஸ்தார சூத்திரத்திலும்” , அப்போது விளங்கிய மொழிகளில் ஒன்றாக “தமிழி” யும் இருந்தது என்று குறிப்பிட்டிருந்ததை வசதியாக மறைத்து விட்டனர் ( இது என்னுடைய மைண்ட் செட் இல்லை. உயர்திரு ஐராவதத்தின், நாகசாமி மற்றும் நீலகண்ட சாஸ்திரி போன்றோரின் மைண்ட் செட் ). அதில் சமஸ்கிருதம் குறிப்பிடப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. காரணம் சமஸ்க்ருதத்திற்கு என்ற தேவ பாஷைக்கு இன்று வரை எழுத்துருவம் கிடையாது.
அசோகர் ஒன்றும் பிராமி எழுத்தில் மட்டுமே அவருடைய எல்லா கல்வெட்டுக்களையும் பொறித்து விடவில்லை. அவருடைய ஆணைகளும், நிர்வாக முறையும் பரத கண்டம் முழுவதும் பரவ வேண்டும் என்ற நோக்கில் நிறைய மொழிகளில் பொறித்து அதை நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவிடச் செய்தார்.
அப்போது, தென்னகத்திலும் “தமிழி” மிகவும் செழிப்புடன் இருந்ததால், தமிழி கல்வெட்டு பொறிக்கத் தெரிந்த சிற்பி ஓரிருவரை வரவழைத்து அவர்கள் சொன்ன “பிராமி” யில் பொறித்திருக்க வேண்டும். ஆம், அவருடைய “பிராமி” கல்வெட்டு எழுத்துக்கள் அனைத்தும் அச்சு அசல் தமிழி. ஆனால் அதை வாசிக்கும்போது அர்த்தம் நாம் புரிந்து கொள்ளாத வகையில் உள்ளது.
அதாவது இப்போதுள்ள வாட்சப் மொழி போல. “ enga veettula Chicken Biryani. Unga veettula enna samaiyal ?” என்பது போல. இதில் எழுத்து வடிவம் ஆங்கிலம். ஆனால் சொல்ல வரும் விஷயமோ தமிழ்.
நான் இதைச் சொல்வதற்குக் காரணம், அவர்கள் சொல்லும் பிராமி அவ்வளவு பழைமையானது என்றால், வட நாட்டில் அவர்கள் செய்த ஆயிரக்கணக்கான அகழ்வாராய்வில் அசோகருக்கு முந்தைய கல்வெட்டுக்களோ, பானைக் கீறல்களோ ஏன் கிடைக்கவில்லை ?
ஆனால், நமக்கோ கீழடி, ஆதிச்ச நல்லூர், கொடு மணல், பொருந்தல், கொந்தகை என்று தோண்டத் தோண்ட “தமிழி” எழுத்து பொறிக்கப்பட்ட பானைக் கீறல்கள், நெல் குதிர், தங்கத்தில் செய்த தாயக் கட்டை என்று கிடைத்துக் கொண்டே இருக்கிறது. இதுவரை செய்த வேண்டா வெறுப்பு கார்பன் டேட்டிங்கில் கி.மு. 900 முதல் கி.மு.600 வரை என்று கால வரைவு செய்யப்பட்டுள்ளது. அதாவது அசோகர் பிறப்பதற்கு முன்னால் 300 முதல் 600 வரை என்று அறிவியல் பூர்வமாக “அவர்களாலேயே” நிரூபிக்கப் பட்டு விட்டது.
ஆனால், ஐராவதம், நீலகண்ட சாஸ்திரி , நாகசாமி போன்றோரால் “ தமிழ் பிராமி” என்று அழைக்கப்பட்டபோது, மேற்சொன்ன அகழ்வாராய்வு முடிவுகள் வரவில்லை. எனவே, எந்தக் காரணத்தைக் கொண்டும், தமிழ் நாட்டில் உள்ள “தமிழ் பிராமி” கல்வெட்டுக்கள் அசோகர் காலத்திற்கு முந்தையதாகக் காட்டி விடக் கூடாது என்ற ஒரே நோக்கில் நமது கல்வெட்டுக்களின் காலத்தை கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. இரண்டாம் என்று வரையறை செய்தார்கள்.
ஆதாவது, அசோகருக்குப் பிறகே, இங்கு வந்த “சமணர்கள் தந்த கொடையே தமிழ் எழுத்து வடிவம்” என்று ஆவணப்படுத்தி விட்டார்கள்.
இந்த ஒரு விஷயத்தில் மட்டும் காங்கிரஸ், பிஜேபி எல்லோரும் ஒண்ணு சேர்ந்து விடுவார்கள். காரணம், இது, அரசியல் கட்சிகளைத் தாண்டி வடக்கான்ஸ், தெற்கான்ஸ் மற்றும் ஆரியர், தமிழர் அரசியல். கட்சி அரசியலை விட இன்னும் கேவலமானது.
ஆனால் , காலமானது, கடவுள் இருக்கான் குமாரு என்று நிரூபித்து விட்டது.
இதிலிருந்து நம் ஊரில் இருக்கும் கல்படுக்கைகளும், தமிழிக் கல்வெட்டுக்களும் சமணத்துக்குரியதல்ல என்பது விளங்கும்.
இந்தத் தொடரை தற்காலிகமாக முடிக்கிறேன்.
இதே தொடரை “ஆசீவகத்தையும் அய்யனாரையும் தேடி …” என்ற தலைப்பில் விரைவில் தொடர்கிறேன்.
பொறுமையாக இந்தத் தொடரை வாசித்தவர்களுக்கும், இவன் சொல்வது ஏதோ நம்புகிறாற்போல் இருக்கிறது என்று என்னை(யும்) நம்பி, என் கட்டுரைகளை தங்கள் தளத்தில் பகிர்ந்தவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் கோடி.
இன்னொரு விஷயம். நான் யார் மனதையும் நோகடிக்க வேண்டும் என்ற நோக்கிலோ, துறையின் பெரிய ஜாம்பவான்களை இழிவு படுத்த வேண்டுமென்ற நோக்கிலோ இந்தத் தொடரை எழுதவில்லை.
நம் தமிழகத்தில் இருந்து கொண்டே நம் தமிழை முன்னுக்குக் கொண்டு வர தடை விதிக்கிறார்களே என்ற வேதனையில் மட்ட்ட்ட்ட்டுமே எழுதினேன். மற்றபடி ஒரு புண்ணாக்கு மைண்ட் செட்டும் இல்லை.
நம் கவியரசன் சொன்னது போல:
போற்றுபவர் போற்றட்டும்
புழுதி வாரி தூற்றுபவர் தூற்றட்டும்
தொடர்ந்து செல்வேன் என் பாதையில்.
எங்கும் நில்லேன்
எதற்கும் அஞ்சேன்
நன்றி…வணக்கம்.
வெ.பாலமுரளி.
இந்தத் தொடரை எழுத உதவியவை :
முனைவர் க.நெடுஞ்செழியன் எழுதிய ஆசீவகமும் அய்யனார் வரலாறும்
முனைவர் ர.விஜயலட்சுமி எழுதிய தமிழகத்தில் ஆசீவகர்கள்
உயர்திரு ஆதிசங்கரன் எழுதிய சில கட்டுரைகள்
தமிழ் நாடு தொல்லியல் துறை வெளியிட்ட தமிழ்-பிராமி கல்வெட்டுக்கள்
உயர்திரு.ராஜகுரு – ஆசிரியர் ராமநாதபுரம், உயர்திரு. கண்ணன்- காவல்துறை, சென்னை, உயர்திரு பாலபாரதி – கல்வித்துறை , திருச்சி, உயர்திரு. செல்வக்குமார் – கடச்சனேந்தல் போன்ற நண்பர்களுடன் நடந்த உரையாடல்கள்.
இது சம்பந்தமாக மேலும் தேடுவதற்குக் காரணமாகயிருந்த உயர்திரு.ஐராவதம் மகாதேவன் மற்றும் நாகசாமி.
உயர்திரு நீலகண்ட சாஸ்திரி எழுதிய “ தமிழர் பண்பாடும் வரலாறும்”
அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.



