வரலாற்றின் தொடக்க காலத்தில் மனித இயல்பால் சில தவறுகள் நடந்ததென்னவோ உண்மைதான்.
ஆனால், மனித எண்ணங்கள், அறிவியல் எல்லாமே ஏகத்துக்கும் வளர்ந்து விட்ட இந்த நவீன யுகத்தில் வேண்டுமென்றே வரலாற்றை திசை திருப்பியதை தமிழர்கள் மீதும், நம் தமிழ் மீது கொண்ட வன்மம் என்று சொல்வதா, நம் தொன்மை மீது கொண்ட பொறாமை என்று சொல்வதா இல்லை குரோதம் என்று சொல்வதா, உண்ட வீட்டிற்கே இரண்டகம் செய்த கயவாளித்தனம் என்று சொல்வதா… புரியவில்லை.
இதில் சமீபத்தில் இறந்த நாகசாமி என்ற கேரக்டர் ஒரு வகை என்றால், அனைவராலும் மிகப் பெரிய அறிஞர் என்று தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்பட்ட ஐராவதம் மகாதேவன் ஐ ஏ எஸ் அவர்கள் வேறொரு வகை.
இவர்களுக்குப் பின்னால் வந்த மற்ற அறிஞர்களான முனைவர் சாந்தலிங்கம் அவர்கள், முனைவர் வேதாச்சலம் அவர்கள் மேற்சொன்ன நாகசாமி, ஐராவதம் சொன்ன கருத்துகளுக்கு மறுப்பேதும் சொல்லாமல் அதை அப்படியே ஏற்றுக் கொண்டது காலத்தின் சோக வரலாறு.
உதாரணத்திற்கு :
“ நீடியசடையோடு ஆடாமேனிக்
குன்றுரை தவசியர் “
என்று நற்றிணையில் ஒரு பாடல் வருகிறது ( பாடல் எண்: 141).
இதில் வரும் “ நீடிய சடையோடு” அதாவது “நீண்ட சடையுடன் கூடிய” என்ற வார்த்தையை வசதியாக மறைத்து விட்டு “ ஆடாமேனி” என்ற வார்த்தையைப் பிடித்துக் கொண்டனர்.
“ ஆடாமேனி “ என்றால் ஆடாமல், அசையாமல் தவம் செய்தவர் என்பதுவே பொருள். ஆனால், மேற்சொன்ன நாகசாமி , ஐராவதம் போன்ற So called “அறிஞர்கள்” , ஆடாமேனி என்றால் “ நீராடாதவர்கள்” அதாவது “குளிக்காதவர்க்ள்” என்று பொருள். அதை வைத்துப் பார்க்கையில் அவர்கள் கண்டிப்பாக சமணர்கள்தான் என்று அறிக்கையை சமர்ப்பித்து, அதை முறைப்படி பதிவும் செய்து விட்டனர்.
சமணர்கள் “ நீண்ட சடையோடு” இருக்க மாட்டார்களே என்று யாரும் கேள்வி கேட்கவில்லை. (கேட்கவும் விடவில்லை என்று நினைக்கிறேன்).
இதேபோல்,
“ உண்ணாமையின் உயங்கிய மருங்கின்
ஆடா படிவத்து ஆன்றோர் போல
வரைசெறி சிறுநெறி நிரையுடன் செல்லும்
கானயானை கவினழி குன்றம்”
என்று அகநானூற்றில் ஒரு பாடல் வருகிறது ( பாடல் எண்: 132).
அதாவது, உண்ணா நோன்பு இருந்து , ஆடாமல் அசையாமல் தவம் செய்து உடல் மெலிந்த ஆன்றோர் போல இருந்ததாம் அங்கு பசியால் நடந்து சென்ற யானைகள்.
ஆனால், நமது “ அறிஞர்கள்” இதில் வரும் “ ஆடா படிவத்து” என்பதற்கு திரும்பவும், “ நீராடாத “ ஆன்றோர்கள்,அதாவது” குளிக்காமல்” என்று வருவதால் கண்டிப்பாக இவர்கள் “ சமணர்கள்” தான் என்று உறுதி பட பதிவு செய்து விட்டனர். இந்தக் கொடுமையை எங்கு போய், யாரிடம் சொல்வது என்று தெரியவில்லை.
அதுசரி…யாரிந்த சமணர்கள், எங்கிருந்து, எப்போது வந்து நமக்கு “தமிழைக் கற்பித்தார்கள்” என்று பார்ப்போம்.
கதை மௌரிய சாம்ராஜ்யத்தைத் தோற்றுவித்த சந்திரகுப்த மௌரியனின் காலத்திலிருந்து தொடங்குகிறது. அதாவது கி.மு.நான்காம் நூற்றாண்டின் இறுதி அல்லது கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்க காலம். சந்திரகுப்தனின் ஆன்மீக குருவின் பெயர் பத்திரபாகு. அவர் ஒரு சமணத் துறவி. சந்திரகுப்தனும் அவர் பாதையைப் பின்பற்றி சமணத் துறவியாகி தெற்கே கர்நாடகாவில் உள்ள ஷ்ரவண பெலகுலா என்னும் இடத்திற்கு வந்து “சமண மதக் கொள்கை” படி தவமிருந்து வடக்கிருந்து உயிர் நீத்தனர் என்கிறது வரலாறு. இது நடந்தது கி.மு.297 இல்.
அப்போது பத்திரபாகுவின் ஆணைப்படி, அவர் மாணவர் “வைசாகா” என்பவர்தான் தமிழகத்திற்கு முதல் முதலாக வந்து சமணத்தைப் பரப்பத் தொடங்குகிறார். அப்படித் தொடங்கையில்தான் “தனக்கும்”, தமிழர்களுக்கும் தெரியாத தமிழ் மொழியை நமக்குக் கற்றுத் தந்திருக்க வேண்டும் ( அப்படித்தான் மேற்சொன்ன “அறிஞர்களும்”, இந்தியத் தொல்லியல் துறையும் சொல்கிறது).
நமக்கு இதேபோல் இன்னொரு கதையும் சொல்லப்பட்டிருக்கிறது.
வடக்கில் சிவனுக்கும், பார்வதிக்கும் திருமணம் நடந்தபோது, அனைத்து மக்களும் வடக்கிற்கு சென்று விட்டதால்,தெற்கு பாலன்ஸ் இழந்து மேலே சென்று விட, அதை சமன் செய்ய சீர்காழி கோவிந்தராஜன் …சாரி…. அகஸ்திய முனிவர் தெற்கிற்கு வந்து (அவருக்கும் தெரியாத ) தமிழை நமக்குக் கற்பித்து அதற்கு “ அகஸ்தியம்” என்று இலக்கண நூலையும் நமக்குத் தந்தருளினார் என்பது முதல் கதை. ஆரம்பத்தில் அதை நம்பிய நாம், ஆமாம் “அகஸ்தியம்” என்ற நூல் எங்கே ? நமக்கு தொல்காப்பியம் தானே கிடைத்திருக்கிறது என்று கேள்வி கேட்க ஆரம்பித்தவுடன், தொல்காப்பியர் வேறு யாருமல்லர். அகஸ்தியரின் மாணாக்கர்களின் முதன்மையானவர் தொல்காப்பியர்தான் என்றும் சொல்லப்பட்டது.
அதாவது அகஸ்தியர் என்ற ஆரிய முனிவரிடமிருந்து கற்றுக் கொண்டதால்தான் தொல்காப்பியர் தொல்காப்பியத்தையே எழுதினார் என்ற கதையும் நமக்குச் சொல்லப்பட்டது. ( ஆனால் அவர் இருந்த வடக்கில், அவர் போற்றிய சம்ஸ்க்ருதத்திற்கு எழுத்து வடிவமோ, இலக்கண நூலோ இன்று வரை இல்லை. அவர் கஷ்டப்பட்டு தமிழகத்திற்கு வந்து தமிழ் கற்றுக் கொடுத்ததற்குப் பதில், அங்கேயே இருந்து சமஸ்க்ருதத்திற்கு ஏதேனும் செய்திருக்கலாம் ).
இப்படித்தான், தமிழர்களுக்கு கல்வியறிவோ, கலாச்சாரமோ, நீண்ட பண்பாடோ கிடையாது என்று காலாகாலத்துக்கும் சொல்லி வருகிறார்கள். சமீபத்தில் பி.ஏ.கிருஷ்ணன் என்பவர் கீழடி ஆராய்ச்சியைக் குறித்து மிகவும் கீழ்த்தரமாக எழுதிய கட்டுரை, அவர்கள் இன்னும் முயற்சிக்கிறார்கள் என்பதை ஊர்ஜிதம் செய்கிறது.
அதுமட்டுமல்ல. தமிழகத்தில் உள்ள தமிழ்க் கல்வெட்டுக்களை ஆராய்ந்த நாகசாமி, ஐராவதம் போன்ற “அறிஞர்கள்”, அவை பற்றி சமர்ப்பித்த ஆய்வறிக்கையில், இந்தக் கல்வெட்டுக்களில்:
“திராவிட” வார்த்தைகள் : 213
இந்தோ – ஆரிய வார்த்தைகள் : 81
சந்தேகத்திற்கிடமானவை: 13
என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். மிகவும் கவனமாக “ தமிழ் வார்த்தைகள்” என்ற பதத்தைத் தவிர்த்திருக்கிறார்கள் ( அதுசரி, “ திராவிட வார்த்தைகள்” என்றால் என்ன ? ).
சரி…இந்தக் கல்வெட்டுகளில் உள்ள எழுத்தமைப்பு, வார்த்தைகளின் உண்மை நிலவரம் என்ன ?
அதற்கு முன்னர், தொல்காப்பியரின் சில அடிப்படை விதிகளைப் பார்ப்போம்:
- “பன்னிரு உயிரும் மொழி முதல் ஆகும்” ( தொல். விதி : 49). அதாவது பன்னிரெண்டு உயிரெழுத்துக்களையும் தொடக்கமாக வைத்து ஒரு வாக்கியத்தை அமைக்கலாம். இதில் ஐ, ஓ மற்றும் ஔ தவிர மற்ற அனைத்து உயிரெழுத்துக்களாலும் தமிழிக் கல்வெட்டுக்களில் வாக்கியங்கள் / சொற்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
- “ஆ வோடல்லாது யகரம் முதலாது “ – தொல்.விதி 65. அதாவது “ ய” வில் வாக்கியமோ , வார்த்தைகளோ தொடங்கக் கூடாது. அதேசமயம் “ யா” வில் தொடங்கலாம். புகளூர் கல்வெட்டில் “ யாற்றூர்” என்ற சொல் உள்ளது. ஆனால் எந்தக் கல்வெட்டுக்களிலும் “ய” கரத்தில் தொடங்கும் எழுத்து இல்லை.
- “இகர யகரம் இறுதி விரவும்” – தொல் விதி 58. அதாவது “ யி” அல்லது “ய்” ஒரு வார்த்தையின் இறுதி எழுத்தாக வரலாம். இதை “ பளிஇய், கணிய், நத்திய், நெல்வெளிஇய்” என்று நிறைய கல்வெட்டுக்களில் காணலாம்.
இது போல, கிட்டத்தட்ட அனைத்து தமிழிக் கல்வெட்டுக்களிலும் தொல்காப்பிய விதிகள் முறையாக கடைப்பிடிக்கப்பட்டுள்ளதைக் காண முடிகிறது.
இன்றைக்கும் கூட, என்னதான் சில வெளி மாநில மக்கள் நல்ல தமிழில் பேசினாலும் கூட, எழுத்து என்று வருகிறபோது திணறி விடுவார்கள். மதுரையில் ஏராளமான மார்வாடிகள் நீண்ட காலமாக தொழில் செய்கிறார்கள். நம்மைப் போலவே நல்ல தமிழில் பேசினாலும், அவர்களில் பெரும்பாலானோருக்கு தமிழில் எழுதத் தெரியாது. தமிழில் எழுதத் தெரிந்த வெகு சிலருக்கும், தூய தமிழில் எழுதத் தெரிவதில்லை என்பது நான் கண்ட உண்மை.
அப்படியிருக்கும்போது, சுருதி சுத்தமாக தமிழைக் கற்றுக் கொள்ள வாய்ப்புகள் குறைவாக இருந்த காலத்தில் , கர்நாடகாவிலிருந்த வந்த சமணர்கள் தொல்காப்பிய இலக்கண சுத்தத்தோடு இந்தக் கல்வெட்டுக்களை செதுக்கியிருப்பார்களா என்பதை யோசிக்க வேண்டும்.
இந்தக் கல்வெட்ட்டுக்களில் பெரும்பான்மையானவை தங்களுக்குத் தேவையானவற்றை யார் ஸ்பான்சர் செய்தது என்ற குறிப்பையே செதுக்கி வைத்துள்ளனர் ( இதில் எங்கும் நன்றி என்ற வார்த்தையோ அல்லது அதற்கு சமமான வேறு வார்த்தைகளோ இல்லை என்பதையும் கவனிக்க வேண்டும்).
அதனால், ஸ்பான்சர் பண்ணிய மக்களே ஏன் செதுக்கி வைத்திருக்கக் கூடாது என்ற கேள்வி எழலாம். ஒரு இடத்தில் இருக்கும் ஏராளமான கல் படுகைகளை முறையாக வழு வழுவென்று செதுக்கவும், மழை நீர், குகைக்குள் வராமல் தடுப்பதற்கு குடையப்படும் “ நீர் வடி விளிம்பை” செதுக்கவும் கண்டிப்பாக மாதக் கணக்கில் ஆகும். அதுவரை, ஸ்பான்சர் செய்யும் வணிகர்கள் காத்திருந்து “உபயம்” கல்வெட்டை செதுக்கியிருப்பர்களா என்று யோசித்தால், அதற்கு வாய்ப்புகள் குறைவு என்பது புலப்படும்.
ஒரு வாதத்திற்கு. இந்தக் கல்வெட்டுக்களை செதுக்கியது கர்நாடகாவிலிருந்து வந்த “சமணர்கள்”தான் என்று வைத்துக் கொள்வோம். அப்படியென்றால், அவர்களின் பூர்வீகமான கர் நாடகாவில் இது போன்ற ஏராளமான கல் படுக்கைகளும், கன்னா பின்னாவென்று தமிழிக் கல்வெட்டுக்களோ அல்லது அதே கான்செப்ட்டில் வேறு மொழிகளில் கல்வெட்டுக்கள் இருந்திருக்க வேண்டுமே, ஏன் இல்லை ?
ஆனால், மிகவும் ஆச்சரியமாக இதே போன்ற கல் படுக்கைகளும், தமிழிக் கல்வெட்டுக்களும் ஏராளமாக இலங்கையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. எனவே, அந்தக் காலத்திலேயே இலங்கையிலும் தமிழ் மக்களும், தமிழ் பேசும் ஆசீவகத் துறவிகளும் இருந்திருக்க வேண்டும் என்பது புலனாகிறது.
அப்படியென்றால் தமிழி எனப்படும் தமிழ் பிராமி எங்கிருந்து வந்தது, அது எந்தக் காலத்தைச் சார்ந்தது, கர்நாடகா என்ற குறிப்பு எந்தக் கல்வெட்டிலும் உள்ளதா, சமணம் அல்லது அமணம் போன்ற சொற்கள் எந்தக் கல்வெட்டிலும் கண்டுபிடிக்கப்பட்டதா என்பதை நமது சான்றோர்கள் நாகசாமி, ஐராவதம் போன்றோர் என்ன சொல்கிறார்கள் என்பதை தொடரின் அடுத்த பகுதியில் பார்ப்போம்.
அவலம் தொடரும்…..
வெ.பாலமுரளி
தகவல்கள்: தமிழ் நாடு அரசு தொல்லியல் துறை வெளியிட்ட “ தமிழ்- பிராமி கல்வெட்டுக்கள்”
பதிப்பாசிரியர் உயர்திரு ஶ்ரீதர் ஐ.ஏ.எஸ் அவர்களுக்கு நன்றிகள் கோடி