ஆசீவகர்கள் “ ஊழ்” (விதி) கொள்கையை திடமாக நம்பியிருக்கிறார்கள். “இப்பொழுது நடப்பது அல்லது இனிமேல் நடக்கப் போவது அனைத்துமே முன்னரே நிர்ணயிக்கப்பட்டு விட்டது. அதை மாற்றுவது என்பது இயலாதது. அதை நிர்ணயிப்பது 9 கோள்கள் (அ) இயற்கை” என்பதே ஆசீவக தத்துவம். இதே கருத்தை நமது கண்ணதாசன் கூட ஒரு இடத்தில், “ விதியை மதியால் மாற்ற முடியுமென்றால், அதுதான் விதி” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஒரு கால கட்டத்தில் மக்களுக்கு இந்தக் கொள்கையில் திருப்தி ஏற்படவில்லை. தீர்வே சொல்லாத மதம் நமக்கு எதற்கு என்று எண்ணியிருக்க வேண்டும். அப்போதும் கூட ஆசீவகர்கள், மதப் பரவலுக்காக தங்கள் கொள்கைகளை சமரசம் செய்து கொள்ளவில்லை.
சமணம் என்ற ஜைன மதம், “ முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்”, அதாவது உங்கள் நல்ல, தீய செயல்களே உங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கும்” என்ற கொள்கையை போதித்தது. அதாவது நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்ள,நல்ல செயல்களைச் செய்ய சமண மதம் போதித்தது. இந்தக் கொள்கையின் தாக்கத்தை திருக்குறள் நெடுக நீங்கள் பார்க்கலாம். மற்றபடி சமண மதமும் பெரிய தீர்வு ஒன்றையும் கொடுத்து விடவில்லை. மக்களுக்கோ “ Instant Solution” தேவைப்பட்டது.
இந்த விஷயத்தில்தான் வேத மதம், அதாவது நமது இந்து மதம் சிக்சர் அடித்தது. அனைத்து செயல்களுக்கும் இறைவனே காரணம். அவன் நினைத்தால் எதனையும் மாற்ற இயலும். அதற்கு எங்கள் சமூகத்தினருக்கு, உங்கள் பிரார்த்தனைக்கேற்ப, பிரம்ம தேயம் என்ற நிலத்தையோ அல்லது சதுர்வேதிமங்கலம் என்று முழு ஊரையோ அல்லது ஒரு பசுமாட்டையோ அல்லது பல பசு மாடுகளையோ அல்லது எங்கள் வீட்டிற்குத் தேவையான வேஷ்டி, சேலை, “பச்சரிசி”, வாழைக்காய் போன்ற பொருட்களோடு சேர்த்து பணமும் கொடுத்தால், நாங்கள் யாகம், ஹோமம் நடத்தி உங்களுக்குப் புரியாத மொழியில் மந்திரங்கள் சொல்லி இறைவனிடம் பேசி உங்கள் பிரச்சினையைத் தீர்த்து வைக்கிறோம் என்றனர், வேத மதத்தைத் தீவிரமாகப் பரப்பியவர்கள். நமது மக்களுக்கு இந்த டீல் பிடித்திருந்ததை, இன்று வரை பிடித்திருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.
குருவி உட்கார பனம்பழம் விழுந்த கதையாக சில அற்புதங்களும் நடந்து விட ஜைன மற்றும் ஆசீவக மதங்கள் விழி பிதுங்க ஆரம்பித்தன. உண்மையைச் சொல்லப் போனால் புத்த, ஜைன மற்றும் ஆசீவக மதங்கள் தோன்றக் காரணமே வேத மதத்தின் இந்த “ We are the only solution providers “ என்ற அணுகுமுறைதான்.
சரி…நம்ம சமண, அமண மேட்டருக்கு வருவோம்.
ஜைனர்களுக்கு (சமணர்களுக்கு) வானவியல் தெரியாது. அதில் நம்பிக்கையும் இல்லை. அதில் ஆராய்ச்சி செய்த ஆசீவகர்களை ஜைன இலக்கியங்களில் நிறைய கேலி பேசியிருக்கிறார்கள்.
ஆனால், ஆசீவகர்களுக்கோ ( அமணர்களுக்கோ) வானவியல் சாத்திரத்தில் ஆழ்ந்த அறிவும், முதிர்ச்சியும், நிறைய நம்பிக்கையும் இருந்துள்ளது. வானவியலில் ஆராய்ச்சி செய்தவர்களுக்கு “ கணி” அல்லது “ கணியன்” என்று பெயர். புற நானூறில் “ யாதும் ஊரே யாவரும் கேளீர் “ பாடல் எழுதிய “கணியன்” பூங்குன்றனார், ஆசீவகத்தை நிறுவிய எழுவரில் ஒருவரான “ கணி நந்தன்” அனைவரும் ஆசீவகர்களே ( இது பற்றி என்னுடைய “ கணி நந்தனைத் தேடி” யில் விரிவாக எழுதியிருக்கிறேன்).
இந்த “யாதும் ஊரே யாவரும் கேளீரின்” முழுப் பாடலையும் படித்தீர்களென்றால், உங்களுக்கு ஆசீவகத்தின் மொத்தக் கொள்கையும் தெளிவாக விளங்கும். வரிக்கு வரி “ ஊழ்” தத்துவம் விளக்கப்படும். அது, கட்டுரையின் இந்தப் பகுதியின் இறுதியில்.
விஷயத்திற்கு வருவோம். முதன்முதலில் வானவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்கள் ஆசீவகர்களே – ஆர்யபட்டாவெல்லாம் வருவதற்கு 700 வருடங்களுக்கு முன்னரே. ரொம்பப் பேருக்குத் தெரியாத ஆச்சரியம்.
நான் சென்ற குகைத்தளங்களில் பெரும்பான்மையானவை, ஏகாந்தமாக வெட்ட வெளியில் ஆகாயத்தை 360 டிகிரி கோணத்தில் பார்த்து ஆராய்ச்சி செய்வதற்கு ஏற்ற இடமாக உள்ளன என்பது கவனிக்கத்தக்கது. அதிலும் குறிப்பாக மதுரைக்கு அருகில் உள்ள மீனாட்சிபுரம் குன்றின் மீது ஒரு வானவியல் சம்பந்தப்பட்ட பள்ளிக் கூடமே இருந்திருக்க வேண்டும். அங்கு, குன்றின் மீது இரண்டு சங்க காலக் கட்டிடங்களின் அடித்தளங்களை இன்றும் காண முடியும்.
அதில் ஒன்று பள்ளிக்கூடக் கட்டிடமாகவும், மற்றொன்று அங்கு பயிலும் மாணவர்களுக்கு உணவு தயாரிக்கும் உணவுக் கூடமாகவும் இருந்திருக்க வாய்ப்புக்கள் உள்ளன. காரணம், இந்த இரண்டாவது கட்டிடடத்திற்கு அருகில் ஏராளமான உடைந்த பானைத் துண்டுகளை இன்றும் காண முடிகிறது. சிறிது ஆண்டுகளுக்கு முன்பு வரை முழு சைஸ் பானைகளே அங்கு இருந்ததாகவும், அவ்வூர் சிறுவர்கள் அவற்றை உடைத்து விளையாண்டதாகவும் உள்ளூர் நண்பர் கூறியது மனசை என்னவோ செய்தது.
அங்குள்ள 5 தமிழிக் கல்வெட்டுக்களில் கணி நந்தனைத் தவிர “ கணி நத்தி” என்பவர் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது. அதில் கணி நந்தனே ஆசிரியன் என்கிறார் முனைவர் க.நெடுஞ்செழியன். அது மட்டுமல்லாது அங்குள்ள ஒரு பாறையின் மீது ஏறிப் படுத்தால், வானத்தின் முழுப் பரிமாணத்தையும் காண முடியும். அங்கு என் ட்ரோன் பட்ட பாட்டையும், காற்றே அடிக்காத ஒரு கணத்தில் என் கேமரா கீழே விழுந்து லென்ஸ் உடைந்தது பற்றியும் முன்பே எழுதியுள்ளேன். எனக்கு,இந்த அமானுஷ்ய விஷயங்கள் பற்றியெல்லாம் நம்பிக்கை கிடையாது. ஆனால், அங்கு கண்டிப்பாக சித்தர்கள் இருந்திருக்க வேண்டும் என்று அன்றுதான் உறுதியாக நம்பினேன்.
இதேபோல், அழகர்மலை கல்வெட்டுக்களிலும் “ கணி நாகன்” மற்றும் “ கணி நதன்” போன்ற பெயர்களைக் காணலாம். அந்தக் குகைத் தளமும் வானவியல் ஆராய்ச்சிக்கு அற்புதமான இடம்.
ஆசீவகர்கள் கடுமையான தவத்தை மேற்கொள்ளும் வழக்கத்தை உடையவர். ஒற்றைக் கால் தவம், தலைகீழாக மரத்தில் தொங்கிக் கொண்டே புரியும் தவம், நீண்ட காலம் பேசாமல் இருக்கும் தவம் என்று நிறைய வகை.
கோவலனும், கண்ணகியும், கவுந்தி அடிகளுடன் மதுரைக்குள் நுழையும் முன்னர் அழகர் மலையில் வைத்து சில துறவிகளைச் சந்தித்து ஆசி பெற நினைக்கின்றனர். அந்தத் துறவிகள் சிறிது நேரம் கண்களை மூடி தியானித்து நடக்கப் போவதை முன் கூட்டியே அறிந்தது போல் இருந்தது. அவர்கள் கண்கள் கலங்கி இருந்தன. ஆனால், அவர்கள் மௌன விரதம் இருந்தது போல், பேச மறுத்து விட்டனர் என்கிறார் இளங்கோவடிகள். இந்த வர்ணனை முழுவதும் ஆசீவகத்தோடு ஒத்துப் போகிறது. அவர்கள் ஆசீவக முனிவர்களாக இருந்திருக்க வேண்டும்.
அந்தக் காலத் திரைப்படங்களில் ஒரு முனிவரைச் சுற்றி கரையான் புற்றே உருவாகி விடுவது போல் காண்பிப்பார்கள். அதெல்லாம் நம்ம ஆசீவகர்கள்தான். மகாபலிபுரத்தில் உள்ள அர்ஜூன் தபஸில் உள்ள ஒற்றைக் காலில் விலா எலும்பெல்லாம் தெரிகின்றாற்போல் இருக்கின்ற சிற்பம் கூட ஒரு ஆசீவக முனிவராகத்தான் இருக்க வேண்டும் என்கிறார் ஐயா நெடுஞ்செழியன். அந்தக் கருத்தை புறந்தள்ளி விட முடியாது. ஒரிஜினல் வியாசரின் மகாபாரதத்தில் அர்ஜூனன் கடும் தவமெல்லாம் இருந்தது போல் தெரியவில்லை.
பௌத்தம் போல ஆசீவகமும், ஆசையைத் துறந்து இது போல் தவத்தில் ஈடுபட்டால் வாழ்க்கையின் கடுமையிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்றது. இல்லறத்தில் ஈடுபட்டு சொகுசாக வாழ்ந்து கொண்டிருந்த குடும்பிகளுக்கு இது ஏற்றதாக இல்லை. ஆசீவகத்தின் அழிவிற்கு இதுவும் ஒரு காரணம்.
ஜைனத்தில், இல்லறத்தில் ஈடுபட்டும் சமணக் கொள்கைகளைப் பின்பற்றலாம் என்ற தளர்வு இருந்தது. அவ்வகையினருக்கு சாவகர்கள் என்று பெயர். அந்தப் பிரிவினர்தான் இன்றுவரை ராஜஸ்தான், குஜராத் மற்றும் மகராஷ்ட்ராவில் வாழ்கின்றனர்.
சமணப் படுகைகள் மற்றும் தமிழிக் கல்வெட்டுகள் உள்ள இடங்களில் ஒரு மஞ்சள் போர்டை வைத்து “ இது நாங்கள்தான்” என்று பட்டா போட்டு வைத்திருக்கும் இவர்களை யாரும் கேள்வி கேட்பதில்லை. ஒரு வகையில்,மேற்சொன்ன இடங்கள் “ஓரளவுக்காவது” பார்க்கும்படி இருப்பதற்கு இந்த மஞ்சள் போர்டும் ஒரு காரணமென்பதையும் ஒத்துக் கொள்ள வேண்டும்.
ஆசீவகர்கள் மருத்துவத்தில் கெட்டி என்பதை அவர்களுக்குப் பிடிக்காத ஜைன, பௌத்த இலக்கியங்களே சுட்டிக் காட்டுகின்றன. நீலகேசி, சிவஞான சித்தி போன்ற நூல்கள் சில எடுத்துக்காட்டுகள்.
மருத்துவத்தில் ஜைனர்களின் ஞானம் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.
கிட்டத்தட்ட நான் சென்ற அனைத்து குகைத் தளங்களிலும் மருந்து தயாரிப்பதற்கான குழிகளையும், உரல் போன்ற அமைப்புகளையும் காண முடிந்தது. இந்தக் குகைத்தளங்களில் வசித்தது ஆசீவக சித்தர்கள்தான் என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரம். அங்கு எடுத்த சில படங்களை இங்கு வெளியிடுகிறேன்.
ஒப்பீடு தொடரும்….
வெ.பாலமுரளி
பி.கு:
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம்: 192)
பொருள்[தொகு]
எல்லா ஊரும் எம் ஊர் எல்லா மக்களும் எம் உறவினரே
நன்மையும் தீமையும் அடுத்தவரால் வருவதில்லை
அது போல துன்பமும் அதற்கு மருந்தான ஆறுதலும் கூட மற்றவர் தருவதில்லை
சாதல் மற்ற பிறத்தல் அது போல ; வாழ்தல்
இன்பம் எல்லாம் மகிழ்ச்சி இல்லை எப்பொழுதுமே
இரவுக்கு முன் வரும் இனிமையான தென்றலும் கூட மகிழ்ச்சி இல்லை
வானத்தில் மின்னலுடன் வருகின்ற சிறுத்துளி மழைநீர் ஒன்றுசேர்ந்து பெரிய கல்லைக் கூட பேராற்று நீர்வழி ஓடி பள்ளத்தில் தள்ளுகிறது.
அது போல
இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று
என்பது போல சான்றோர் பார்வையில் தெளிந்த வண்ணம் ஆகும்
ஆதலினால், பெருமையில் பெரியோரை வியந்து போற்றுவதும் தவறு அதைவிட
சிறியோரை இகழ்ந்து தூற்றுவதும் மிகவும் தவறு
நன்றிகள்
முனைவர் க.நெடுஞ்செழியன் (ஆசீவகமும் அய்யனார் வரலாறும்)
முனைவர் ர.விஜயலெட்சுமி (தமிழகத்தில் ஆசீவகம்)
சுஜாதா (சிலப்பதிகாரம் விளக்கவுரை)
மறைந்த உயர்திரு ஆதி சங்கரன் (ஆசீவக மரபின் அழியாச் சின்னங்கள் என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை)
நண்பர் கண்ணன் அவர்கள் அனுப்பிய சில தரவுகள்.
மற்றும் தமிழ் விக்கிப்பீடியா
அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்