சமணமும் அமணமும்- 1

இது ஒரு நீண்ட கட்டுரை என்பதால் இதை இரண்டு அல்லது மூன்று பாகங்களாக பிரித்து எழுதுகிறேன்.

சென்ற (2021) வருடம் தொல்லியலில் டிப்ளோமா கோர்ஸ் பண்ணும்போது, “மதுரையும் தமிழியும்” என்ற தலைப்பில் ஒரு ப்ராஜக்ட் பண்ணினேன்.

அதற்காக, மதுரையைச் சுற்றியிருக்கும் தமிழி கல்வெட்டுக்கள் உள்ள 15 இடங்களுக்குச் செல்ல நேர்ந்தது. 

ஒவ்வொரு இடத்திற்குச் செல்லும்போதும் திரும்பத் திரும்ப எனக்கு இரண்டு கேள்விகளே முன் நின்றன. 

  1. நமது மத்திய தொல்லியல் துறை இதை எப்படி கர்நாடகாவிலிருந்து வந்த சமணத் துறைவிகளின் வாழ்விடம் என்று முடிவு செய்தது ?
  2. எந்தவொரு அறியல் சார்ந்த சோதனைகளும் செய்யாமல், இந்தக் கல்வெட்டுக்களின் காலத்தை எப்படி கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கும், கி.பி.இரண்டாம் நூற்றாண்டிற்கும் இடையில் நிர்ணயித்தார்கள் ?

இதில் சில அரசியலும், சில உள்குத்துக்களும் இருந்தாலும், குழப்பம் ஆரம்பித்த இடம் நமது இலக்கியங்களே.

சரி…கொஞ்சம் ஃபிளாஷ் பேக்குக்குப் போவோம்.

வைதீக மதம் என்னும் பிராமணிய மதம் தழைத்திருந்த காலம் அது. ஜைன மற்றும் ஆசீவகக் கொள்கைகளும் அப்போது பரவலாக இருந்த போதிலும், அந்த மதங்களுக்கு அப்போது அந்தப் பெயர்கள் கிடையாது. ஜைன மதத்தைத் தோற்றுவித்த ஆதிநாதரின் காலம் இன்று வரை கண்டறியப் படவில்லை. ஜைனர்களின் இலக்கியங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கால கட்டத்தைக் குறிப்பிடுகின்றன. எல்லாமே யுகக் கணக்குகளில் இருப்பதால் அறிவியல் சார்ந்த வரலாறு அவற்றை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.

ஆசீவகக் கொள்கைகளும் அப்போது இருந்தன என்று ஏ.எல்.பாஷம் போன்ற ஆய்வாளர்கள் கூறினாலும், அதைத் தோற்றுவித்தது யார், எப்போது என்ற கேள்விகளுக்கு யாரிடமும் பதிலில்லை.

கி.மு. 6 ம் நூற்றாண்டில் ஏறத்தாழ ஒரே சமயத்தில் கௌதம புத்தரால் பௌத்த மதமும், 24  ம் தீர்த்தங்கரரான மகாவீரால் ஜைன (சமண) மதமும், மற்கலி கோசாலரால் ஆசீவக (அமண) மதமும் பெரிய அளவில் பரப்பப்படுகின்றன. 

கிட்டத்தட்ட 6 வருடங்கள் புத்தர், மகாவீர் மற்றும் மற்கலி கோசாலர் மூவரும் ஒன்றாக இணைந்தே தவம் புரிந்து, தங்கள் பொதுக் கொள்கையான “ வைதீக மத எதிர்ப்பையும், அஹிம்சை” கொள்கைகளையும் மக்களிடம் அதி தீவிரமாக பரப்பியதாக சமணர்களின் “பகவதி சூத்திரம்”, புத்த மதத்தின் “லலித விஸ்தாரா” போன்ற நூல்கள் வாயிலாக நம்மால் அறிய முடிகிறது. 

ஆசீவகம் பற்றி நமக்கு ஒரு நூலும் இது வரை கிடைக்கவில்லை. ஆனால், ஆசீவகம் பற்றி சமண , பௌத்த இலக்கியங்களிலும், நமது சங்க இலக்கியங்களிலும் நமக்கு நிறையவே குறிப்புகள் கிடைக்கின்றன. 

அந்த 6 வருடங்களில் அவர்கள் மூவரும் இணைந்தே நிறைய பயணித்திருக்கிறார்கள். அவர்களின் நோக்கங்கள் ஒன்றாக இருந்தாலும், சில கருத்துக்கள் அவர்களைப் பிரிக்கின்றன. 

ஆசீவகத்தின் பிதாகரான மற்கலியும், ஜைனத்தின் கடவுளரான / குருவான ஆதி நாதரையும் , 23ம் தீர்த்தங்கரரான பார்சுவநாதரையும் தங்கள் மதிப்பிற்குரிய குருக்களாகவும் கடவுளராகவும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

அது மட்டுமல்லாது, ஜைனர்களின் ஒரு பிரிவினரான ஸ்வேதாம்பரரும், ஆசீவகர்களும் வெள்ளை ஆடைகளையே உடுத்தியிருக்கின்றனர்.

இவையிரண்டும்தான்  இடியாப்பச் சிக்கலின் தொடக்கம். 

என்னதான் இந்த மூன்று மக்களும் பிரிந்து விட்டிருந்தாலும், அவர்கள் கொள்கைகளினாலும், சில பொதுவான கடவுளர்களாலும் நிறைய தமிழ் இலக்கியங்கள் ஜைனர்களையும், ஆசீவகர்களையும் சமணர்கள் என்றே அழைத்தன. 

நற்றிணை போன்ற மிகச் சில இலக்கியங்களே ஜைனர்களை சமணர்கள் என்றும் ஆசீவகர்களை அமணர்கள் என்றும் பிரித்து எழுதி வைத்தன. 

உள்ள குழப்பங்கள் போதாது என்று, கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த திவாகர முனிவர் என்பவரும் தன் பங்குக்கு

“ சாவகரும் அருகரும் சமணர் ஆகும்;

  ஆசீ வகரும் அத்தவத் தோரே “ என்று தன்னுடைய திவாகர நிகண்டுவில் எழுதி வைத்து விட்டார். 

ஆசீவகத்தைப் பற்றி நிறைய ஆய்வு செய்பவரும், எழுதி வருபவருமான முனைவர். க. நெடுஞ்செழியன் என்பவர்  மற்கலி கோசாலர் தமிழகத்தைச் சார்ந்தவர்தான், விராலி மலைக்கு அருகில் உள்ள திருப்பட்டூரைச் சார்ந்த ஒரு குறு நில மன்னராக இருந்து பின்னர் ஆசீவகத் துறவியாக மாறியவர் என்கிறார்.

இதற்கு தகுந்த ஆதாரங்கள் இல்லாமையால், அவருடைய இந்தக் கூற்றை கிட்டத்தட்ட அனைத்து வரலாற்று ஆசிரியர்களுமே மறுக்கின்றனர். அது வேறு கதை. 

ஆனாலும், ஆசீவகத் துறவிகள் தமிழகத்தில் நிறைய பேர் இருந்து தொண்டு செய்தது என்னவோ உறுதி.

ஆரம்பத்தில் இவர்களைத்தான் நம் தமிழ் இலக்கியங்கள் சித்தர்கள் என அழைத்திருக்க வேண்டும். இவர்கள் மலைகளில் இருந்த குன்றுகளில் வாழ்ந்து மருத்துவச் சேவைகளும், ஏழைகளுக்குக் கல்வியும் போதித்திருக்கின்றனர். 

தேவாரத்தில் திருஞானசம்பந்தர் குறிப்பிட்டிருக்கும் “ சமணர்கள் கழுவேற்றத்தில்” சொல்லப்பட்டிருக்கும் (அ) கொல்லப்பட்டிருக்கும் சமணத் துறவிகள் இவர்களாக இருந்திருக்கவே வாய்ப்புகள் அதிகம். இந்தச் சித்தர்களை வதை செய்து கொன்றதினாலே “சித்தர் வதை” என்ற வார்த்தைப் பிரயோகம் உருவாகியிருக்கிறது. பின்னாளில் இது “சித்திரவதை” என்று மருவியிருக்க வேண்டும். சங்க இலக்கியங்கள் எதிலும் “சித்தர் வதை” அல்லது “ சித்திரவதை” என்ற வார்த்தைப் பிரயோகம் கிடையாது. ( அதேபோல் சம்பந்தர் குறிப்பிட்ட “எண்ணாயிரம் சமணர்கள்” என்பது எட்டாயிரம் என்ற எண்ணைக் குறிக்கவில்லை. “ எண்ணாயிரம் சமணர்கள்” என்பது ஒரு குழு அல்லது ஒரு சமணப் பிரிவினரையே குறிக்கும் என்று சமீபத்தில் படித்தேன். ஆனால், சமபந்தர் பொய் சொல்லியிருக்க மாட்டார் என்பதை வைத்துப் பார்க்கையில் ஒரு சில நூறு சித்தர்களா (அமணர்களா) வது கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது).

சரி…ஜைனர்களுக்கும், ஆசீவகர்களுக்கும் வேறென்ன வித்தியாசங்கள் என்று பார்ப்போம்…

ஜைனர்கள் வசித்த இடங்களுக்கு “பள்ளி” என்று பெயர். ஆசீவகர்கள் வசித்த இடங்களுக்கு “ பாழி” அல்லது “ பாளி” என்று பெயர். நான் சென்ற “தமிழிக் கல்வெட்டுகள்” இருக்கும் நிறைய குகைகளில் “பளீஇ” அல்லது “பாளீஇ” என்ற சொல்லைப் பார்க்க முடிந்தது. அதை நமது தொல்லியல் துறை “ பள்ளி” யைத்தான் அப்படி குறிப்பிட்டிருக்கிறார்கள் என்று ஒரு விளக்கம் சொல்லி (No more arguments என்று ) ஃபைலை மூடி விட்டனர். 

ஜைனத்திலிருந்து வைதீக மதத்திற்கு மாறிய திருநாவுக்கரசர் கூட தனக்கு வயிற்று வலி வந்து அமணர்களின் “பாழிக்கு” சென்று (அறுவை) சிகிச்சை எடுத்து அது சரியாகி விட்டதாகக் குறிப்பிடுகின்றார். தான் முன்பு இருந்த மதம் சமணம் என்றும், வசித்த இடம் “பள்ளி” என்றும் அடிக்கடி குறிப்பிடும் நாவுக்கரசர், மருத்துவ சிகிச்சை எடுத்த இடத்தை மட்டும் “ அமணர்கள்” என்றும், அவர்கள் வசித்த இடத்தை “ பாழி” என்றும் குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது.  

ஜைனர்கள் தலையை மழித்துக் கொள்ளும் வழக்கம் உடையவர்கள். ஆசீவகர்கள் நீண்ட தலை முடியை வைத்திருப்பர். கழுவேற்றம் பற்றி குறிக்கும் அனைத்து சிற்பங்களிலும் கழுவேற்றப்படுபவருக்கு நீண்ட சிகை இருக்கும். அதன் ஒரு படத்தை இங்கு பதிவிடுகின்றேன். 

அது மட்டுமல்ல. சித்தன்ன வாசலில் உள்ள பழங்கால ஓவியங்களில் உள்ள துறவிகளுக்கும் நீண்ட சிகை இருப்பதை புறந்தள்ளி விட முடியாது. இது சமணர்கள் வரைந்த ஓவியங்கள் என்று நமது அரசாங்கம் சொல்லினாலும், இவை ஆசீவகர்களாகிய அமணர்கள் வரைந்திருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம் ( அதன் படத்தையும் இங்கு பதிவிடுகிறேன்).

தொடர்ச்சி அடுத்த பாகத்தில்….