அந்த சங்க காலக் கட்டிடத்தின் எச்சங்களை சிறிது நேரம் ஆராய்ந்து விட்டு, நிறைய படங்களையும் எடுத்துக் கொண்டு, துறவிகளின் குகைகளை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். ஐந்து பெரிய பெரிய பாறைகளும், குகைகளும் தூரத்திலிருந்தே தெரிந்தன.
இருந்த இடத்திலிருந்தே ஐயன் கணி நந்தனுக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டு விட்டு நெருங்கினோம். இங்குள்ள ஐந்து கல்வெட்டுக்களில் இரண்டு கல்வெட்டுகளில் “கணி நந்தஶ்ரீ குவன்” என்னும் பெயரும், “நெடுஞ்செழியன்” என்னும் பெயரும் இடம் பெற்றுள்ளன.
சரி….யாரிந்த கணி நந்தன் ?
அவரைப் பற்றி அறிந்து கொள்ளுவதற்கு முன்னர், நாம் கொஞ்சூண்டு “ஆசீவகம்” என்ற மதத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.
கி.மு. ஆறாம் நூற்றாண்டில் மூன்று பெரும் மதங்கள் இந்தியாவில் பெரிய அளவில் தோன்றி அசுர வளர்ச்சி அடையத் தொடங்கின.
ஒன்று பௌத்தம். இரண்டாவது சமணம் . மூன்றாவது இந்த ஆசீவகம்.
இதில் ஆசீவகம் ஒன்றே தமிழகத்தில் தோன்றிய மதம். அதேபோல், இந்த ஆசீவகம் மட்டுமே பௌத்த மதம் தோன்றுவதற்கு முன்னரே இருந்துள்ளது என்று அனைவரும் கருதுகின்றனர்.
ஏதோவொரு காரணத்தினால், அந்த மதம் பெரிய அளவில் வளரவில்லை என்பதால், தமிழகத்தைச் சேர்ந்த மற்கலி கோசாலர், நந்தவாச்சா மற்றும் வெண்காசியபன் என்னும் மூவர் இந்த மதத்தைப் புரணமைத்தார்கள் என்று வெளி நாட்டு அறிஞர் பாஷம் , நம் நாட்டு அறிஞர் முனைவர். க. நெடுஞ்செழியன் உட்பட அனைவரும் கருதுகின்றனர்.
இதில் மற்கலிகோசாலர் மட்டும், ஆசீவகத்தைப் புரணமைப்பதற்கு முன்னால் புத்தருடனும், கடைசி தீர்த்தங்கரரான ஆதி நாதருடனும் இணைந்து 6 வருடங்கள் துறவறத்திலும், சமயத் தொண்டுகளிலும் ஈடுபட்டிருக்கிறார். ஏதோ ஒரு காரணத்தினால், அவர்களுடன் பிணக்கு ஏற்பட, தமிழகம் திரும்பி வந்து, நந்தவாச்சா மற்றும் வெண்காசியபனுடன் இணைந்து இங்கே முன்பே இருந்த ஆசீவகத்தை புணரமைத்திருக்க வேண்டும்.
இவர்களின் வழிபாட்டு தெய்வம் ஐயனார். ஐயப்பன் உட்பட ஐந்து முக்கிய ஐயனார்கள் இவர்கள் காலத்தில் ரொம்பவே பிரசித்தம். முருகன் கூட ஒரு ஐயனார்தான் என்கின்றனர் சிலர்.
ஐயப்பன் கோயிலில் உள்ள 18 படிகளுக்கும், ஆசீவத்திற்கும் தொடர்பு இருக்கிறது என்கிறார் முனைவர் க.நெடுஞ்செழியன். 18 வகைக் குற்றங்களையும் கடந்து நிற்பவனே ஐயனாராக முடியும் என்பது ஆசீவகத்தின் கொள்கை.
பசி, நீர்வேட்டல், பயம், வெகுளி, உவகை, வேண்டல், நினைப்பு, உறக்கம், நரை, நோய் வாய்ப்படுதல், மரணம், பிறப்பு, மதம், இன்பம், அதிசயம், வியர்த்தல், கேதம், கையறவு ஆகிய பதினெட்டுமே அவர்கள் குறிப்பிடுகிற குற்றங்கள் என்கிறது ஐயனார் பிள்ளைத்தமிழ் பாடல்.
ஆசீவகர்ள்தான் “ ஊழ்” (விதி) என்ற கருத்தை முதன்முதலில் முன் வைத்தது ( அதனால்தான். “ ஊழ்” என்ற அதிகாரத்தை இயற்றிய திருவள்ளுவர் கண்டிப்பாக ஒரு ஆசீவகர்தான் என்ற கருத்து சமீபத்தில் வலுப் பெற்று வருகிறது).
ஆசீவகர்களும், பௌத்தம் மற்றும் சமணம் போலவே வேத (இன்றைய இந்து) மதத்தையும், அதில் உள்ள மூட நம்பிக்கைகளையும், தங்களை வேத விற்பன்னர்கள் என்று சொல்லிக் கொண்டவர்களையும், வேள்வி, யாகம், உயிர்ப்பலி என்று அவர்களால் முன்வைத்த சாத்திரங்களையும் கடுமையாக எதிர்த்துள்ளனர்.
ஆசீவகம் அழிந்ததற்கு அதுதான் முதல் காரணம் என்கிறார் பாஷம்.
இந்த ஆசீவகத்தைப் புரணமைத்தவர்களில் ஒருவரான நந்தவாச்சாதான் இந்த “ கணி நந்தஶ்ரீ” என்று அடித்துச் சொல்கிறார் முனைவர் க. நெடுஞ்செழியன் அவர்கள். பின்னாளில் அவர் வானியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டதால் , அவருக்கு “ கணி” என்ற பட்டம் வந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். எது எப்படியோ, இந்த கணி நந்தன் இன்றைய மீனாட்சிபுரத்தில் உள்ள ஒவ்வா மலையின் மீது பெரிய அளவில் ஒரு பள்ளியை நடத்தியிருப்பது தெளிவாகத் தெரிகிறது. அது சமயம் தொடர்பான பள்ளியா இல்லை வானிலை தொடர்பான ஆராய்ச்சி மையமா ( நான் சொல்வது மையம். “மய்யம்” கிடையாது) இல்லை வானிலை ஆராய்ச்சி சம்பந்தமான ஆராய்ச்சிக் கல்லூரியா என்று தெரியவில்லை.
ஏன் இந்த இடத்தைத் தேர்வு செய்தார் என்பதும் ஒரு ஆச்சரியம். அத்துவான காட்டில் இருக்கும் இந்த மலையில் கன்னா பின்னாவென்று மின் காந்த அலைகள் இருப்பதைக் கண்டு நானும் நண்பர்கள் ஆனந்தும், பாண்டியும் ஆடிப் போய் விட்டோம். அது பற்றி பின்னர் சொல்கிறேன்.
முதலில் வரும் குகை உள்ள பாறைக்கு நான் வைத்துள்ள பெயர் டால்ஃபின் பாறை. ஒரு கோணத்திலிருந்து பார்ப்பதற்கு டால்ஃபின் போலவே உள்ளது. இந்த டால்ஃபின் பாறையில் மொத்தம் இரண்டு கல்வெட்டுக்கள் உள்ளன.
கல்வெட்டு: 1
கல்வெட்டு வாசகம் :
“கணிய் நந்த அஸிரிய்இ குவ் அன்கே தம்மம்
இத்தாஅ நெடுஞ்சழியன் பணஅன் கடல்அன்
வழுத்திய் கொட்டுபித்தஅ பளிஇய்”
அர்த்தம்:
கணி நந்தஶ்ரீ குவன் என்பவருக்கு நெடுஞ்செழியனின் அலுவலனாக விளங்கிய கடலன் வழுதி என்பவன் இப்பள்ளியை (கற்படுக்கையை) உருவாக்கிக் கொடுத்தான்.
இந்தக் கல்வெட்டின் காலம் பொ.ஆ.மு. (கி.மு) இரண்டாம் நூற்றாண்டு என்று சொல்லப்படுகிறது. நெடுஞ்செழியனின் பெயர் குறிப்பிடப்படும் முதல் கல்வெட்டு.
கல்வெட்டு : 2
முதல் கல்வெட்டு இருக்கும் இடத்திலேயே இந்தக் கல்வெட்டும் இருப்பதால் இதுவும் அந்தக் கல்வெட்டின் தொடர்ச்சிதான் எனவும், இதன் காலமும் பொ.ஆ.மு.2ம் நூற்றாண்டுதான் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது
கல்வெட்டு வாசகம்:
“கணிய் நத்திய் கொடிய்அவன்”
அர்த்தம் : ( முதலில் உள்ள நீண்ட கல்வெட்டை) “கணி நத்தி” என்பவன் பொறித்துக் கொடுத்துள்ளான்.
இன்றைக்கும் கிராமப் புறங்களில், கல்லில் பொறிப்பதை “ கொட்டுதல்” அல்லது “கொத்துதல்” என்றுதான் அழைக்கிறார்கள் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
அதேபோல், இதில் வரும் “ கணி” நத்தி, சாதாரண பாறை கொத்துபவன் போலத் தெரியவில்லை. “கணி” (வானிலை ஆராய்ச்சியாளன்) என்று வருவதால், இவன் “கணி நந்தனின்” மாணாக்கனாக இருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
கல்வெட்டு : 3
மு̀தல் இரண்டு கல்வெட்டுக்கள் இருக்கும் பாறைக்கு அடுத்து இருக்கும் பாறையிலும் இரண்டு கல்வெட்டுக்கள் தனித்தனியே உள்ளன.
அதில் முதல் கல்வெட்டு :
“சந்தரிதன் கொடுபிதோன்”
அர்த்தம் : இந்த உறைவிடத்தை சந்தரிதன் என்பவன் அமைத்துக் கொடுத்தான்.
இதில் உள்ள “கொடுபிதோனி” ல் “ப்” மற்றும் “ த்” என்ற மெய்யெழுத்துக்கள் விடுபட்டுள்ளன. அதாவது “ கொடுப்பித்தோன்” என்ற அர்த்தத்தில் வெட்டப்பட்டுள்ளது. இதே வார்த்தையை , இதே போல் மெய்யெழுத்துக்கள் விடுபட்டுள்ள கல்வெட்டுக்களை நிறைய இடங்களில் காண முடிகிறது.
கல்வெட்டு: 4
மேலே உள்ள அதே பாறையில் உள்ள இரண்டாவது கல்வெட்டு:
கல்வெட்டு வாசகம் :
“ வெள்அறை நிகமதோர் கொடிஓர்”
அர்த்தம் : வெள்ளறை என்னும் ஊரைச் சேர்ந்த ஒரு வணிகக் குழு இந்த குகைத் தளத்தைச் செதுக்கி அமைத்தனர்.
இதில் வரும் “கொடிஓர்” ல் “ட்” என்ற மெய்யெழுத்து விடுபட்டுள்ளது. அதைச் சேர்த்து வாசித்தால் “ கொட்டியோர்” என்று வருகிறது.
இதில் வரும் “வெள்ளறை”, இன்றைக்கு மீனாட்சிபுரத்திற்கு அருகில் உள்ள “வெள்ளரிப்பட்டி”யாக இருக்கலாம் என்கிறது நமது தமிழ்நாடு தொல்லியல் துறை.
கல்வெட்டு: 5
மூன்றாவது பாறையை விட்டு விட்டு நான்காவது பாறையில் நீண்ட கல்வெட்டு உள்ளது.
கல்வெட்டு வாசகம்:
“கணிஇ நதஸிரிய் குவ…. வெள் அறைய் நிகமது காவிதிஇய்
காழிதிக அந்தை அஸூதன் பிணஉ கொடுபிதோன்”
அர்த்தம் :
கணி நந்தஶ்ரீ குவ(ன்) என்பவருக்கு வெள்ளறை என்ற கிராமத்தைச் சார்ந்த உழவு சம்பந்தமான வணிகம் செய்யும் காழிதிக அந்தை அஸூதன் இந்த உறைவிடத்தை அமைத்துக் கொடுத்தான்.
இதில் “குவ” என்னும் எழுத்திற்கு அடுத்துள்ள எழுத்து(க்கள்) அழிந்துள்ளன. எனவே இது “குவன்” ஆக இருக்க வாய்ப்பு உள்ளது.
இந்தக் கல்வெட்டிலும் ஸி, ஸூ போன்ற வட மொழிச் சொற்கள் இருப்பது கவனிக்கத்தக்கது.
கல்வெட்டு : 6
இந்த ஆறாவது கல்வெட்டு இருக்கும் இடம்தான் கொஞ்சம் ஆட்டம் காண்பிக்கும். ஆனால், நண்பர் பாண்டி இருந்ததால், மிகவும் ஈசியாக அந்த இடத்திற்கும் சென்று விட்டோம்.
மேலே உள்ள பாறைகளுக்கு நேர் கீழே, கொஞ்சம் தாழ்வாக திறந்தவெளி சுரங்கம் போல் ஒரு பாதை செல்கிறது. அதில் போனால், கீழே ஒரு பெரிய பாறையும், அதனுள்ளே மிகப் பெரிய குகை ஒன்றும், அதில் ஏராளமான படுகைகளும், இடையில் ஒரு நீண்ட வடி நீர்க் கால்வாயும் உள்ளது. அந்தப் பாறையின் வெளிப்புறத்தில்தான் இந்தக் கடைசிக் கல்வெட்டு உள்ளது.
கல்வெட்டின் வாசகம்:
“கணிய் நந்தஸிரிய் குஅன் தமம் ஈதா நெடுஞ்சழியன்
ஸாலகன் இளஞ்சடிகன் தந்தைய் சடிகன் சேஇய் பளிய்”
இந்தக் கல்வெட்டில் சில எழுத்துப் பிழைகள் இருப்பதால், அதைத் திருத்தி மேலே உள்ள வாசகம் கொடுக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டின் அர்த்தம் :
கணி நந்தஶ்ரீ குவன் என்பவருக்கு நெடுஞ்செழியனின் சகலையான இளஞ்சடிகன் என்பவனின் தந்தை சடிகன் என்பவன் இந்தப் பள்ளியை (உறைவிடத்தை) அமைத்துக் கொடுத்தான்.
இந்தக் கல்வெட்டில் உள்ள இரு முக்கியமான விஷயங்கள்
- நெடுஞ்செழியன் என்பவனின் பெயர் உள்ள இரண்டாவது கல்வெட்டு. இது மன்னன் நெடுஞ்செழியனாகத்தான் இருக்க வேண்டும் என்று அனைத்து அறிஞர்களும் கருதுகின்றனர். இந்தக் கல்வெட்டின் காலம் பொ.ஆ.மு.இரண்டாம் நூற்றாண்டு என்பதால், சங்க இலக்கியங்களில் வரும் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் மற்றும் தலையாலங்கானத்து நெடுஞ்செழியன் என்ற இருவருக்கும் முந்தைய நெடுஞ்செழியன் இவன் என்பது தெளிவு.
- சகலை என்ற அர்த்ததில் வரும் “ஸாலகன்” என்ற சொல் வரும் ஒரே கல்வெட்டு இதுதான்.
இந்த எல்லாக் கல்வெட்டுக்களையும் வாசித்து விட்டு, ஃபோட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்து விட்டு மேலே உள்ள பாறையின் மேல் நின்று ட்ரோன் ஷாட்ஸ் எடுக்க ப்ளான் பண்ணினோம். அப்போதுதான் கிரகம் ஆரம்பித்தது.
ஒவ்வொரு முறையும் அந்த இடத்திற்கேற்ப ட்ரோனை
Calibrate பண்ண வேண்டும். என்ன செய்தும் ட்ரோன் Calibrate ஆவதற்கு வம்பு பண்ணியது. High Electro Magnetic Wave Interference என்ற Message திரும்பத் திரும்ப வர குழம்பி விட்டோம். Mr கணி நந்தன் ஆராய்ச்சி செய்வதற்கு சரியான இடமாகத்தான் செலக்ட் பண்ணியிருக்கார் என்று புலம்பிக் கொண்டே, ட்ரோனை ஒவ்வொரு இடத்திற்கா எடுத்து சென்று ட்ரை பண்ண ஏதோ ஒரு இடத்தில் காலிப்ரேட் ஆகியது.
“ஆகா….கணி சார் நன்றி” என்று மகிழ்ச்சியுடன் சொல்லிக் கொண்டே, ட்ரோனை மேலே செலுத்த முயற்சித்தேன். மறுபடியும் தகராறு. ஒரு 10 மீட்டர் மேலே சென்றவுடன், என் கண்ட்ரோலை விட்டு அதுவாகவே கிளம்பிய இடத்திற்கே வந்து சேர்ந்தது. அதுவும் Land ஆகும்போது ரொம்பவும் Force ஆக வந்து Land ஆனது. இதுபோல இரண்டு மூன்று முறை நடக்கவே, நான் பயந்து விட்டேன். இதுவரை ட்ரோன் இப்படி பிஹேவ் பண்ணியதே இல்லை. இனி ட்ரோனை மேலே செலுத்துவது உசிதமில்லை என்றேன் ஆனந்திடம்.
ஆனால், ஆனந்திற்கோ இந்த பாறையின் உச்சியிலிருந்து மீனாட்சிபுரத்தையும், கணி நந்தனின் ஒட்டு மொத்த பாசறையையும் ட்ரோனில் எடுக்காவிட்டால் இந்தப் பிறவிக்கே இழுக்கு என்று தோன்றியதால், நாங்கள் கொஞ்சமும் எதிர்பார்க்காத நேரத்தில் சட்டென்று மண்டியிட்டு, “ ஐயா கணி நந்தனாரே, அவனவன் உங்க இடத்துக்கு வந்து தண்ணி அடிக்கிறான், சிக்கன் பிரியாணி சாப்பிடுகிறான். நாங்கள் வெறும் ஃபோட்டோவும் வீடியோவும்தானே எடுக்கிறோம். அது ஒரு குத்தமா ? அதுவும் உங்கள் புகழை பரப்புவதற்குத்தானே செய்கிறோம். கொஞ்சம் அனுமதி தாங்கையா “ என்று வாய் விட்டு மனமுருக வேண்டிக் கொண்டு, கர்ணன் படத்தில் கிருஷ்ணராக வரும் என்.டி.ராமாராவ் கர்ணனிடம் அவன் செய்த புண்ணியம் அனைத்தையும் தானமாக பெற்றுக் கொண்டு, அர்ஜூனனாக வரும் முத்துராமனைப் பார்த்து ,” இப்போது விடு உன் பாணத்தை” என்பாரே, அதுபோல என்னைப் பார்த்து “ பாலா சார் இப்போது செலுத்துங்கள் உங்கள் ட்ரோனை” என்றார் ஒரு ஆவேசத்துடன்.
நிஜமாகவே எனக்கு, ஆனந்த் உடம்புக்குள் மிஸ்டர் கணிதான் வந்து விட்டாரோ என்று தோன்ற, சற்றும் யோசிக்காமல் ட்ரோனை விண் நோக்கிச் செலுத்தினேன். இந்த முறை ட்ரோன் சல்லென்று மேலேறியது. மேலே ஒரு 100 மீட்டர் போயிருக்கும். பாலஸ்தீன் மீது இஸ்ரேல் ஏவும் ஏவுகணை போல, அதுவே எங்களை நோக்கி அதி வேகமாக இறங்கி வர, என்ன செய்தும் அதை என் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இயலவில்லை.
வந்த வேகத்தில், எங்களுக்கு ஒரு பத்தடி தொலைவில் பாறையில் ஒரு பெரும் சத்தத்துடன் மோதி நிலை கொண்டது.
அந்த பெரும்சத்தம் எல்லோருக்கும் “டமாலென்று” கேட்க, எனக்கு மட்டும் “ ஸ்வாஹா” என்று கேட்டது.
கொஞ்ச நேரம் நாங்கள் யாரும் பேசிக் கொள்ளவேயில்லை. மிகவும் சோகத்துடன், “சரி வாங்க கீழே போவோம்” என்றார் பாண்டி. அப்போதுதான் என் நாக்கில் வழக்கம்போல் மிஸ்டர் ஏழரை அமர்ந்து கொண்டு, “ போவதற்கு முன்னால், இந்த பாறையை பின்னணியாக வைத்து ஒரு க்ரூப் ஃபோட்டோ எடுத்துக் கொள்வோம்” என்று சொல்ல வைத்தது.
அவர்கள் இருவரும் நிற்க, நான் என் கேமராவில் செல்ஃப் டைமரை செட் பண்ணி விட்டு, அதை ட்ரைப்பாடில் பொருத்தி விட்டு, அதன் ஸ்திரத் தன்மையை ஒன்றுக்கு இரண்டு முறை செக் பண்ணி விட்டு ஓடுவதற்குத் தயாரானேன். க்ளிக் பட்டனை அழுத்தி விட்டு ஒரு இரண்டு அடிதான் எடுத்து வைத்திருப்பேன். அப்போது காற்றும் அடிக்கவில்லை. ஆனால் எப்படி நடந்தது என்று எங்கள் யாருக்கும் புரியவில்லை. ட்ரைப்பாட் தலைகுப்புற விழுந்து சலீரென்று ஒரு சத்தம் வந்தது. அதைப் பார்ப்பதற்குக் கூட எனக்குத் தைரியம் வரவில்லை.
கேமரா லென்ஸில் முன்னால் இருந்த கண்னாடி சுக்கு நூறாய் உடைந்திருந்தது.
எனக்கு இந்த, சகுனம், நல்ல நேரம், கெட்ட நேரம், ஆவி, பேய் இதிலெல்லாம் நம்பிக்கையில்லை.
ஆனால், வாழ்க்கையில் முதல் முறையாக என்னுடன் யாரோ ஒருவர் அமானுஷ்யமாக இருந்ததை உணர்ந்தேன்.
வந்ததற்கு, கணி சார் அமர்ந்து பாடம் எடுத்த இடத்தில் உட்கார்ந்து ஓரிரு ஃபோட்டோக்கள் எடுத்துக் கொண்டு கிளம்பினோம்.
வெ.பாலமுரளி