தவ்வை என்னும் அருள்மிகு மூத்த தேவி….

(முருகனின் தாயார்) கொற்றவைக்கு அடுத்த படியாக நமது முன்னோர் அதிகமாக வணங்கிய பெண் தெய்வம் இந்த “ தவ்வை” தான். இவளின் மற்ற பெயர்கள் சேட்டை, கேட்டை மற்றும் மாமுகடி.

அனைத்து தெய்வங்களுக்கும் மூத்தவள் என்பதால் “மூத்த தெய்வம்” என்னும் அர்த்தத்தில் “ மூத்த தேவி” என்று அழைக்கப்பட்டாள் இந்த தவ்வை. பின்னாளில், மிகவும் பாப்புலராக இருந்த இந்தத் தமிழ் தெய்வத்தை மக்கள் மனதில் இருந்து மறக்கடிக்க வேண்டும் என்ற நோக்கில், கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வளர்ந்த வைதீக ( இன்றைய இந்து ) மதம், இந்த மூத்த தேவியை “மூதேவி” என்று பெயர் மாற்றி அமங்கலத்தின் சின்னமாக ஆக்கியது நம் தமிழகத்துக்குச் செய்த மற்றுமொரு பிரமாண்டமான துரோகம் .

இந்த “ தவ்வை”யின் கோயில்களும், சிலைகளும் இன்று தமிழகத்தில் மிகக் குறைவான அளவிலேயே உள்ளன.

சென்ற மாதம் திருச்சிக்கு அருகில் உள்ள திருவெள்ளரைக்கு “ ஸ்வஸ்திகா” கிணறைக் காணச் சென்றிருந்தோம். அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சிவ பெருமானின் ஒரு குடைவரைக் கோயில் இருப்பதறிந்து அதைக் காணச் சென்ற போது, அந்தக் கோயிலுக்கு அருகில் ஒரு சித்தர் சமாதியும், அதன் அருகில் “ ஜேஷ்டா தேவி” என்ற பெயரிடப்பட்ட ஒரு மிகச்சிறிய கோயிலும் பார்த்தேன்.

“ ஜேஷ்டா தேவி” என்ற பெயர் கேள்விப்பட்டதில்லையே என்று அருகில் போய் பார்த்தால், வலது மடியில் எருமையின் தலையுடன் கூடிய மகன் மாந்தன் என்ற குளிகனும் , இடது மடியில் மாந்தி என்ற ஒரு பெண் குழந்தையும்….அட நம்ம “ தவ்வை ”.

அந்தச் சிறிய கோயிலைப் பராமரிக்கும் அங்கிருந்த ஒருவரிடம், “ இது என்னங்க ஜேஷ்டா தேவி ?” என்றேன் – உறுதிப்படுத்திக் கொள்ளும் நோக்கில்.

அவர் மிகவும் சோகமாக, “ இந்தத் தெய்வத்தின் உண்மையான பெயர் மூத்த தேவிங்க. ஆனால், சமீபத்தில் இங்கு வந்த ஒரு குழு இதற்கு ஜேஷ்டா தேவி என்ற ஒரு போர்டை மாட்டி விட்டுப் போய் விட்டார்கள்” என்றார்.

நமது அனுமானம் சரி என்ற மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து விட்டு சில ஃபோட்டோக்கள் எடுத்து விட்டு, “ அடுத்த முறை இங்கு வரும்போது “அருள்மிகு மூத்த தேவி என்ற தவ்வை” என்ற ஒரு போர்டை கொண்டு வந்தால், மாட்டி விடுவீர்களா ?” என்றேன்.

அவர் மகிழ்ச்சியுடன் “ கண்டிப்பாக” என்றதும், நான் அவரை விட மகிழ்ச்சியாக அந்த இடத்தை விட்டுக் கிளம்பினேன்.

வெ.பாலமுரளி