மகாத்மா காந்தியின் கொலை வழக்குத்தான் இந்தியாவின் முதல் மெகா வழக்கு.
அஹிம்சையை போதித்த ஒருவரைக் கொன்ற வழக்கிற்கு தீர்ப்பு எப்படி வழங்கப்படும் என்று நம் இந்தியர்கள்மட்டுமன்றி உலகமே உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தது.
குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை வழங்கினால் மகாத்மா போதித்த அஹிம்சைக்கு அர்த்தம் இல்லாமல்போய் விடும். தண்டனை வழங்காது போனால் மற்ற கிரிமினல்களுக்கு துளிர் விட்டுப் போகும். யாராவதுஅஹிம்சையைப் பற்றி வாயைத் திறந்தாலே ‘ போட்டுத் தள்ளும்’ சூழல் உருவாகலாம்.
ஒரு மாதிரி இடியாப்பச் சிக்கல் வழக்கு.
காந்தியைக் கொன்று விட்டு கோட்சே எங்கும் ஓடி விடவில்லை. அங்கிருந்த தோட்டக்காரர் ரகு நாத் நாயக்என்பவர் கையிலிருந்த புல் வெட்டும் கருவியால் கடுமையாகத் தாக்கியிருக்கிறார். அவரைத் தட்டுப்பதற்குள்போதும் போதும் என்றாகி விட்டது அங்கு காவலுக்கு இருந்த போலீஸ்காரருக்கு.
காந்தியைக் கொலை செய்தது ஒரு முஸ்லிம் என்ற தவறான தகவல் ஒன்று காட்டுத் தீயாகப் பரவியது. அதைத்தொடர்ந்து நிறைய வன்முறைச் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்தேறியது. அப்போது பொறுப்பில் இருந்தஆங்கிலேய அரசாங்கம் மிகவும் நிதானமாகத்தான் அந்த நிலைமையைக் கட்டுக்குக்குள் கொண்டு வந்தது.இந்தியாவை எல்லா வகையிலும் சீரழிக்க வேண்டுமென்ற நினைப்பில் இருந்த மௌண்ட் பேட்டனுக்கு ,காந்தியின் கொலை அல்வா சாப்பிட்டது போல் இருந்திருக்க வேண்டும்.
கொலை விசாரிக்கும் பொறுப்பு மும்பை உயர் அதிகாரி நகர்வாலா என்பவரிடம் வந்தது. நகர்வாலா ‘ மிஸ்டர்க்ளீன்’ பார்ட்டி. எந்தவித அரசியல் குறுக்கீடும் இல்லாவிட்டால் மட்டுமே இந்த வழக்கை எடுத்து நடத்துவேன்,இல்லாவிட்டால் என்னை விட்டு விடுங்கள் சாமி, என்று தெளிவாகச் சொல்லி விட்டார். அனைவரும் அதற்கு ஒத்துக்கொண்டதன் பேரில் நகர்வாலா தன் விசாரணையைத் தொடங்கினார்.
மிகவும் விரைவிலேயே அந்தக் கொலை வழக்கில்
சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்தார். மொத்தம் ஒன்பது பேர்.
காந்தி கொல்லப்பட்டது 1948 ஜனவரி 30. 1948 மே 27 இல் முதல் கட்ட விசாரணையும் ஜூன் 24 இல் தீவிர விசாரணையும் தொடங்கியது. அரசாங்கம் வாக்குக் கொடுத்தபடியே, எந்தவித குறுக்கீடும் செய்யவில்லை. குற்றவாளிகளுக்கும் எல்லாவிதமான சட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
டில்லியில் உள்ள செங்கோட்டையில்தான் விசாரணை நடந்தது. இங்கேதான் ஷாஜகான் அமர்ந்து விசாரணை நடத்தியது. இந்த இடத்தைத் தேர்வு செய்தது யார் என்று தெரியவில்லை.
அரசு தரப்பில் 149 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 720 பக்க முக்கிய ஆதாரங்களும், 404 துணை ஆவணங்களும் பதிவு செய்யப்பட்டன. 80 தடயப் பொருட்களும் சமர்ப்பிக்கப்பட்டன.
160 பக்கங்கள் குற்றவாளிகளின் வாக்குமூலங்களும், 297 பக்க எழுத்து பூர்வ அறிக்கையும் தாக்கல் செய்யப் பட்டன.
இவை போதாதென்று கோட்சேயும் தன் பங்க்குக்கு 90 பக்க அறிக்கையை வாசித்தான். கொஞ்சம் கூடக் குற்ற உணர்வே இல்லாமல், தன்னை ஒரு பெரிய ஹீரோ போலக் காட்டிக் கொண்டது, அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 7 புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
1949 , ஃபிப்ரவரி 10 ம் தேதி, கோட்சேக்கு மரண தணடனையும், அவனுக்கு உதவியவர்களுக்கு ஆயுள் தண்டனையும் அளித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. 204 பக்கத் தீர்ப்பு அது.
அதில், “ மகாத்மா காந்தி போன்ற ஒரு அஹிம்சாவதியைக் கொன்று விட்டுக் கூட தண்டனையில் இருந்து தப்பி விடக் கூடாது என்பததனை மனதில் கொண்டு இந்தத் தீர்ப்பளிக்கிறேன் “ என்று குறிப்பிட்டார் நீதிபதி ஆத்மசரண்.
பின்னர் பஞ்சாபில் உள்ள உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்து அதே தீர்ப்பைப் பெற்றான் கோட்சே.
கோட்சே தூக்கிலிடப்பட வேண்டிய குற்றவாளி என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. இருந்தாலும் எனக்குச் சில கேள்விகள்.
- கேட்சேவும் அந்தச் சதியில் சம்பந்தப்பட்ட 9 பேர் மட்டும்தான் குற்றவாளிகளா ?குற்றம் செய்பவருக்கு சமமாக அந்தக் குற்றத்தைச் செய்யத் தூண்டியவருக்கும் சம பங்கு என்கிறது நம் சட்டம். அப்படிப் பார்த்தால், காந்தியின் தவறு என்று ஒன்றுமேயில்லையா ?
- இப்படி ஒரு சதி நடக்கிறது என்று உளவுத்துறைக்கு முன்பே தெரிந்து அதை நேருவுக்கும், மௌண்ட் பேட்டனுக்கும் சொல்லியிருக்கிறார்கள். ஏன் அதற்கு அப்புறமும் தகுந்த பாதுகாப்பு வழங்கவில்லை ? இதற்கு யார் பொறுப்பு ?
- அப்போது நடந்த கலவரத்தில் காரணமேயில்லாமலும், காரணமே தெரியாமலும் இறந்து போன அப்பாவிகளின் மரணத்திற்கு யார் பொறுப்பு ? அதற்கு என்ன இழப்பீடு ?
- இழப்பீடை விட்டுத் தள்ளுங்கள். அப்படி இறந்து போனவர்களின் லிஸ்ட் என்று ஒன்று இருக்கிறதா – அட்லீஸ்ட் ?
- கலவரத்தின் போது அரசாங்கத்தில் கவர்னர் ஜெனரலாக இருந்த மௌண்ட் பேட்டன், மிகவும் மெத்தனமாக செயல்பட்டதன் காரணம் என்ன ?
இது போன்ற மரணங்களில், பெரும்பாலான சமயங்களில் இறந்தவர்களுடன் சேர்ந்து நிறைய கேள்விகளும் புதையுண்டு போகின்றன என்பது வரலாற்றின் சோகங்களில் ஒன்று.
வெ.பாலமுரளி
கட்டுரையின் மூலம் : எஸ் ராமகிருஷ்ணனின் மறைக்கப்பட்ட இந்தியா & விக்கிப்பீடியா . நன்றிகள்.