மகாத்மா என்பவர் யார் ?


” இது என்ன ரொம்ப சின்னப் புள்ளத் தனமான கேள்வியா இருக்கு . நம்ம காந்தியடிகள்தானே மகாத்மா ” என்று பதில் சொல்வீர்களேயானால், உங்களுக்கு நூற்றுக்கு 50 மதிப்பெண்கள்தான். ஜஸ்ட் பாஸ்.

காரணம், காந்தியடிகள் ஒன்றும் இந்தியாவின் முதல் மகாத்மா இல்லை. அவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பே, இன்னொருவர் ஒரு மாபெரும் புரட்சிக்கு வித்திட்டு அந்த பட்டத்தைத் தட்டிச் சென்று விட்டார். இது நடந்தது மே 11, 1888 – இல் . அவர் பெயர் ஜோதிராவ் ஃபுலே. மகாராஷ்ட்ரியர். 

நம் நாடு முன்னேற வேண்டுமெனில், எல்லாத் துறைகளிலும் பெரிய மாற்றங்களைக் கொண்டு வருவது ஒன்றே வழி என்றார். அதன் முதல் படியாக ஜாதிகளை ஒழிக்க வேண்டும். தாழ்ந்த ஜாதி மக்களுக்கு கல்வியறிவு வழங்க வேண்டும். அதிலும், மிகவும் முக்கியமாக பெண்களுக்கு கல்வி போதிக்க வேண்டும், என்று முழங்கினார். எதிர்பார்த்தது போலவே ஏகப்பட்ட எதிர்ப்பு. 

அவர், தாழ்ந்த இனமாகக் கருதப்பட்ட ஒரு ஜாதியைச் சார்ந்தவர். தன்னுடைய பிராமண நண்பர் ஒருவரின் திருமண ஊர்வலத்தில் கலந்து கொள்ள முயற்சிக்கும் போது, அந்த நண்பரின் பெற்றோர்களாலும், உறவினர்களாலும் அவமானப்படுத்தப் பட்டு, விரட்டியடிக்கப்பட்டிருக்கிறார். கிட்டத்தட்ட தென்னாப்பிரிக்காவில் நம் காந்தியடிகள் சந்தித்த அதே அவமானம், ஆனால் ஒரே வித்தியாசம் இங்கு அவமானப்படுத்தியதும் நம் மக்கள், அவமானப் படுத்தப் பட்டதும் நம்மாள் . அவரால் அதை ஜீரணிக்கவே முடியவில்லை. தன நெருங்கிய நண்பர்களிடம் சொல்லிக் குமுற, அப்படி ஆரம்பித்ததுதான் அந்த அக்னி. 

ஜாதி அராஜகங்களுக்கு எதிராகவும், எல்லோருக்கும் சமச்சீர் கல்வி ( ????!!!) அவசியம் என்றும் கன்னா பின்னா என்று பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விட்டார். அது மட்டுமல்லாமல், தன் பிஸியான வேலைகளுக்கிடையிலும், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பள்ளிகள் தொடங்க ஆரம்பித்து விட்டார். அத்தோடு நின்று விடாமல், தன் மனைவியையும் படிக்க வைத்து, அவர் மூலம் 1848- இல் பெண்களுக்காகவே ஒரு பள்ளியைத் தொடங்கினார். இதுவே, இந்தியாவின் பெண்களுக்கான முதல் பள்ளி என்று தெரிகிறது. அது மட்டுமல்லாமல், விதவைகளுக்கான மறுமணம், அநாதை ஆசிரமங்கள் என்று கன்னா பின்னாவென்று பட்டையைக் கிளப்பியிருக்கிறார்.

அவருடைய மிகப் பெரிய சேவைகளைப் பாராட்டி இன்னொரு சமூக ஆர்வலரான விட்டல்ராவ் கிருஷ்ணாஜி வண்டேகர் என்பவர் 1888 – இல் புனேயில் ஒரு மேடையில் வைத்து அவருக்கு “மகாத்மா” என்ற பட்டத்தை வழங்கியிருக்கிறார். உடனே இந்தியா முழுக்க அவரை மகாத்மா என்று தலையில் தூக்கி வைத்து கொண்டாடியிருக்கிறது. அம்பேத்கார், பெரியார் போன்றவர்களுக்கெல்லாம் அவரே முதல் வழிகாட்டி. 

நல்லவர்களை அவ்வளவு எளிதாகப் பாராட்டி விடாத பிரிட்டிஷ் அரசாங்கம் கூட ” தி கிரேட் மகாத்மா மிஸ்டர் ஜோதிராவ் ஃபுலே” என்று தலையங்கச் செய்திகள் வெளியிட்டிருக்கிறது அந்த நாட்களில் . அதுமட்டுமல்லாமல், அவருடைய சேவையைப் பாராட்டி அவரை புனேயின் கவுன்சில் மெம்பராக்கியிருக்கிறது. ஏனோ, காந்தியடிகளுக்குப் பிறகு, இப்படியொரு மகாத்மா இருந்திருக்கிறார் என்பதையே இந்தியா மறந்து விட்டது. இன்று ரிசர்வேஷன் என்னும் பெயரில், அவர் ஆரம்பித்து வைத்த மகத்தான சேவை கொச்சைப் படுத்தப்படுவது காலத்தின் அவலம். 

அது தவிர, நம்முடைய சம காலத்திலேயே , மகாத்மா என்ற அடை மொழி இல்லாமல் ஒரு மகாத்மா வாழ்ந்து மறைந்திருக்கிறார், அது யார் தெரியுமா ?

நெல்சன் மண்டேலா. 

அவருடைய சாதனை ? ” நாட்டு விடுதலைக்காக 27 வருடம் சிறையில் இருந்தார், அதுதானே ? அதுக்காகவெல்லாம், மகாத்மா பட்டம் குடுக்க முடியுமா ராசா ? அப்படிப் பார்த்தால், நம் நாட்டில் கூட பெயர்கள் வெளி வராத மகாத்மாக்கள் நிறைய பேர் இருந்திருக்கிறார்கள் ” என்று நீங்கள் சொல்லலாம். சரியான வாதம்.

ஆனால், அவருடைய நிஜமான சாதனை 27 வருடம் சிறையில் இருந்தது கிடையாது . அதற்கும் மேல் பிரமாண்டமான சாதனை ஒன்று செய்திருக்கிறார். நம்மில் நிறையப் பேருக்கு அது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

நான் சரித்திரம் தேடி எந்த நாட்டிற்குச் சென்றாலும், அங்குள்ள சிறுபான்மையினரிடமும் , பாதிக்கப் பட்டவர்களிடமுமே ரொம்பப் பேச்சுக் கொடுப்பேன். காலம் மறைத்த நிறைய நிஜங்கள் அப்போதுதான் வெளி வரும்.

நான் 2004 -இல் தென்னாப்பிரிக்கா சென்றிருந்தேன்.அங்கிருந்த வெள்ளையர்களிடம் நிறைய பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஒட்டு மொத்தமாக அவர்கள் அனைவரும் ஒத்துக் கொண்ட ஒரு விஷயம், நெல்சன் மண்டேலா என்னும் ஒரே ஒருவர் மட்டும் இல்லாவிட்டால், 1994 – இல் நடந்திருக்க வேண்டிய ஒரு மிகப் பெரிய கலவரத்தில் நாங்கள் அனைவரும் கொல்லப் பட்டிருப்போம். வெள்ளையர்கள் ஒரு கறுப்பினத்தவரை அப்படி வெளிப்படையாக பாராட்டுவது சாதாரண விஷயமில்லை. பொதுவாக அவர்கள் அப்படி யாரையும் பாராட்டவும் மாட்டார்கள். 

நெதர்லாந்திலிருந்து , டச்சு கிழக்கிந்திய கம்பெனி மூலமாக தென்னாப்பிரிக்கா வந்த ஐரோப்பியர்கள் போட்ட வெறியாட்டம் உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அவர்களும்கூட ஒரு நேரத்தில் தங்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் இருந்திருக்கிறார்கள்.

1990- இல் நெல்சன் மண்டேலாவும் அவர் சார்ந்த ANC ( African National Congress ) – யும், விடுதலை செய்யப் பட்டனர் . அங்கு பஞ்சம் பிழைக்க வந்த டச்சுக் காரர்கள்,1993- இல் பெரிய மனது ( ????) பண்ணி , ANC – யும் அதன் சார்பில் மண்டேலாவும் அடுத்த தேர்தலில் போட்டியிடலாம் என்று சட்டம் இயற்றினார்கள். கிட்டத்தட்ட அப்போதே தெரிந்து விட்டது, 1994- இல் நடக்கப் போகும் தேர்தலில் மண்டேலா ஜெயிக்கப் போவது உறுதி என்று. 

அப்போதுதான் ஒரு மிகப் பெரிய வன்முறை நடத்துவதற்கு ஆப்பிரிக்கர்கள் வித்திட ஆரம்பித்தார்கள். எப்படியெல்லாம் கொடூரமாக வெள்ளையர்களை கொல்லலாம் என்று ஊர் ஊராக பேசிக் கொள்ளவும், அதற்கான நில வேலைகளில் ( அதாங்க Ground Work ) இறங்கவும் ஆரம்பித்தார்கள். அந்த திட்டமிடல் ஒன்றும் ரகசியமாக நடக்கவில்லை. வெளிப்படையாகவே எல்லோரும் பேசிக் கொள்ள, நம்ம பரங்கியர்களுக்கு வேல வெலத்துப் போய் விட்டது. ரொம்ப காலமாகவே தென்னாப்பிரிக்காவில் செட்டில் ஆகி விட்டதால், நெதர்லாந்தில் அவர்களில் பெரும்பாலானோருக்கு சொல்லிக் கொள்ளும்படி வேர் ஒன்றும் இருக்கவில்லை. அவர்கள் யாரும் அந்த நாட்களில் தூங்கியது மாதிரி தெரியவில்லை. செம டென்ஷன்.

இது அறிந்து நெல்சன் மண்டேலா பயங்கரக் கவலையில் ஆழ்ந்து விட்டார். நாம் ரத்த ஆற்றிலா படகோட்டி அதிபர் பதவியை அடைய வேண்டும், அந்த மாதிரி பதவியும் அந்த மாதிரி சுதந்திரமும் தேவைதானா என்று தீவிர யோசனையிலும், குழப்பத்திலும் ஆழ்ந்து விட்டதாகத் தெரிகிறது.

சரி, கடைசியாக முயற்சிப்போம் என்று வேலையில் இறங்கினார். தேர்தல் பிரச்சாரம் என்ற போர்வையில் ஒவ்வொரு ஊராகச் சென்று , நாம் தேர்தலில் ஜெயிக்கப் போவது உறுதி . ஆனால், அப்படி ஜெயித்ததும் இங்கு இருக்கும் நமது சகோதர சகோதரிகளான வெள்ளை இன மக்களுக்கு எந்த ஒரூ ஆபத்தும் வராமல் நீங்கள் பார்த்துக் கொண்டால் மட்டுமே, நான் அதிபராவேன். இல்லாவிட்டால், நான் தேர்தலில் நிற்கப் போவதேயில்லை என்று தடாலடியாக ஒரு ஸ்டேட்மென்ட் விட்டிருக்கிறார். திருடன் கையிலேயே சாவியைக் கொடுத்துப் பார்ப்போமே என்பது அவருடைய திட்டம் . அவர் நினைத்தது போலவே அவர் திட்டம் வேலை செய்தது.

“பாபா ஹோலிஷ்லாஷ்லா” வே சொல்லி விட்டார் என்று அனைவரும் அமைதி காத்தனர் . நெல்சன் மண்டேலாவின் ஆப்பிரிக்கப் பெயர் ஹோலிஷ்லாஷ்லா ஆனால் எழுதும்போது Rolihlahla என்றுதான் எழுதுவார்கள். இங்கு ஆப்பிரிக்காவில் கிட்டத்தட்ட எல்லோருக்குமே மூன்று பெயர்கள் இருக்கும். ஒன்று ஆப்பிரிக்கப் பெயர் (ஹோலிஷ்லாஷ்லா ), இரண்டாவது ஆங்கிலப் பெயர் ( நெல்சன் – இது அவருக்கு அவருடைய ஆசிரியர் வைத்த பெயர் ) மூன்றாவது , குடும்பப் பெயர் ( மண்டேலா ).

ஒரு தனிப்பட்ட மனிதரின் வேண்டுகோளுக்கிணங்கி , ஒரு நாடே அமைதி காத்தது வரலாற்றின் அழகான ஒரு பக்கம் . அங்கிருந்த வெள்ளையர்கள் மட்டுமல்ல , உலகமே ஒரு பெருமூச்சு விட்டது. அவர் மட்டும் அந்த அளவுக்கு மெனக்கெடாவிட்டால், ருவாண்டாவில் அதே வருடம் நடந்த ஒரு மாபெரும் இனப் பேரழிவு தென்னாப்பிரிக்காவிலும் கண்டிப்பாக நடந்தேறியிருக்கும் ( என்னுடைய அடுத்த தலைப்பிற்கு க்ளூ கொடுத்து விட்டேனோ ? ). அவர் காப்பாற்றியது ஏதோ பத்தோ நூறோ அல்ல. லட்சக் கணக்கு. இப்போது சொல்லுங்கள் அவரும் ஒரு மகாத்மாதானே ? 

சீஸரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாய் இருக்க வேண்டும் என்பது போல ஒரு வசனம் வருமே, அது போல, மகாத்மா என்ற அடைமொழிக்குரியவர் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவராய் இருக்க வேண்டும் என்பது என் போல பலருடைய எதிர்பார்ப்பு. அந்த வகையில் மேற்கூறிய இருவருமே மகாத்மாக்கள்தான். 

நான் சொல்வது சரிதானே ?

வெ.பாலமுரளி

ஆதாரம் : எஸ் ராமகிருஷ்ணன் எழுதிய மறைக்கப்பட்ட இந்தியா . மதனின் ” ஹாய் மதன்” மற்றும் விக்கிப்பீடியா அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்…