தாரசுரம் எனப்படும் பழையாறை


இரண்டாம் ராஜராஜ சோழனால் 12 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோயில், சிற்பிகளின் கலைக் கூடம்.

இரண்டாம் ராஜராஜன், தன் பாட்டனார் ராஜேந்திர சோழன் கட்டியாண்ட கங்கை கொண்ட சோழ புரத்தில் இருந்து பழையாறை என்று அழைக்கப்பட்ட இந்த நகரத்திற்கு தன் தலை நகரை மாற்றி அதனை ராஜராஜேஸ்வரம் என்று பெயர் மாற்றி ஆண்டிருக்கிறான். அதுவே இன்று தாராசுரம் என்று மாறியிருக்கிறது. ஆனால், தாராசுரம் அருகில் பழையாறை என்னும் பெயரிலும் சில கிராமங்கள் இன்னும் இருக்கின்றன.

அவன் ஆட்சி புரிந்தது 1146 முதல் 1173 வரை. அங்கு அவன் கோயில் கட்ட நினைத்து, தன் பாட்டனார்கள் கட்டிய தஞ்சை பெரிய கோயில் மற்றும் கங்கை கொண்ட சோழபுரம் பாணியில் இருந்து முற்றிலுமாக வேறுபட்டு கட்டியது ஒரு மரபுக் கவிதை. அந்த விதத்தில் ராஜேந்திர சோழன், கங்கை கொண்ட சோழபுரத்தில் தன் தனித்தன்மையைக் காட்ட மறந்து விட்டான் என்பது என் கருத்து .

இந்த மூவர் கட்டிய கோயில்களே “ அழியாத சோழர் பெருங்கோயில்கள்” என்று அழைக்கப் படுகின்றன. என்னுடைய தனிப்பட்ட அபிப்ராயத்தில் , இந்த மூன்று கோயில்களில் மிகச்சிறந்த கலைப் படைப்பாக முதலில் நிற்பது இந்த தாராசுரம் கோயிலே. இதற்குப்பிறகுதான் தஞ்சையும் , கங்கை கொண்ட சோழபுரமும். தாராசுரம் ஒரு அதி அற்புதமான கலைக் கூடம். விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை.

இந்திரனின் வாகனமான “ஐராவதம்” என்றழைக்கப்படும் வெள்ளை யானை, துர்வாச முனிவரால் சாபமிடப்பட, ஐராவதம் இந்த இடத்தில்தான் வந்து சிவ பெருமானை வழிபட்டு சாபம் நீங்கியதால் , இங்குள்ள சிவனுக்கு “ ஐராவதேஸ்வரர்” என்று பெயரிடப்பட்டதாகத் தெரிகிறது.

நான் இந்தக் கோயிலுக்குச் செல்லும்போது, பொழுது சாய்ந்து விட்டது . எனவே சூரிய அஸ்தமனம் சார்ந்த சில புகைப்படங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது . ஒரு முறை இந்தக் கோயிலைப் படம் எடுக்க மட்டுமே இந்தியா செல்லும் எண்ணம் உள்ளது. என்னுடன் யார் வருகிறீர்கள் ?