திருவாவடுதுறை அதிசயங்கள்….

ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர், தன் தந்தை நடத்தும் வேள்வி ஒன்றுக்கு பணம் திரட்டுவதற்காக இந்தக் கோவிலுக்கு வந்து சிவபெருமானை பற்றி பதிகம் ஒன்று பாட, இறைவனும் மகிழ்ந்து போய் ஒரு 1000 பொற்கிழியை ஒரு பூதம் மூலமாக அவருக்கு அளித்திருக்கிறார் ( அது அந்தக் காலத்தில் நம்ம 2G யை விடப் பெரிய தொகையாக இருந்திருக்க வேண்டும் ) .

சம்பந்தரும் அகமகிழ்ந்து போய் , கோவிலை வலம் வந்து இந்தப் படத்தில் உள்ள பீடத்தின் முன்பாக நின்று சிவபெருமானைப் பார்த்து ஒரு நன்றி நவிலல் பாடல் ஒன்று பாடியிருக்கிறார் ( “லவகுசா” படத்தில் வருவது போல அந்தக் காலத்தில் எல்லாவற்றிற்கும் பாடல்தான் போலிருக்கு ).

பாடி முடிக்கும்போது , அவர் உடலில் அதிர்வலை ஒன்று தோன்றி மறைந்திருக்கிறது. ஒரு நிமிடம் கண்னை மூடி யோசித்து விட்டு, ” இந்த இடத்தில் தமிழ் சம்பந்தப்பட்ட ஒரு மாபெரும் பொக்கிஷம் இருப்பது போல் எனக்குத் தோன்றுகிறது. உடனே இந்த இடத்தைத் தோண்டுங்கள் ” என்று உத்தரவிட்டிருக்கிறார். 

தோண்டிய அனைவருக்கும் ஆச்சரியம். சம்பந்தர் சொன்னது போலவே, அந்த இடத்தில் திருமூலர் எழுதிய திருமந்திரம் புதைந்து போய் இருந்திருக்கிறது. 

திருமூலர் 5-ம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த ஒரு மாபெரும் சித்தர். வரலாறு போற்றும் 18 சித்தர்களில் இவரும் ஒருவர். 63 நாயன்மார்களில் மிகவும் முக்கியமானவர்.

‘அன்பே சிவம்’ என்பது இவர் அருளியதே. அது கீழ்க்கண்ட பாடல். 

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் 
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார் 
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின் 
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே

அது மட்டுமில்லை . நாமனைவரும் ரசித்த , திருவிளையாடலில் கண்ணதாசன் எழுதி கே.பி. சுந்தராம்பாள் பாடிய ” ஒன்றானவன்…உருவில் இரண்டானவன் ” என்னும் (வரிசைப் ) பாடல் திருமூலர் எழுதிய பாடலில் இருந்தே கையாளப் பட்டது ( இது கண்னதாசனே மலேஷியாவில் நடந்த சொற்பொழிவில் சொன்னது ) . 

அந்தப் பாடல் :

ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந்தான் ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தானிருந் தானுணர்ந் தேட்டே 

( இதே போல் கண்ணதாசன் எழுதிய இன்னொரு இலக்கியப் பாடல் ” இட்ட அடி நோக எழுந்த அடி கொப்புளிக்க” என்னும் பாடல் கம்ப ராமாயணத்தில் இருந்து கையாளப் பட்டது. அதுவும் அவரே ஒரு கருத்தரங்கில் சொன்னது ) .

சரி விஷயத்திற்கு வருவோம்…

அங்குள்ள ஒரு வில்வ மரத்தின் அடியில் திருமூலர் தவம் செய்து, திருமந்திரத்தை இயற்றினார் என்னும் செய்தியும், அங்கேயே அவர் சமாதியானார் என்ற ஒரு கல்வெட்டும் நம் அகழ்வாராய்ச்சித் துறையால் கண்டெடுக்கப்பட்டு , அது தஞ்சைப் பல்கலைக் கழகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது என்னும் விபரம் தாங்கிய பலகை ஒன்று அங்குள்ளது. 

இன்றும் அங்குள்ள அந்த வில்வமரத்தைச் சுற்றி ஒரு வேலி போட்டு வைத்துள்ளார்கள். இதுதான் அன்றிருந்த மரம் என்பது எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. அது உண்மையாக இருக்கும் பட்சத்தில், அது 1600 வருடம் பழமையான மரம் . ஆச்சரியம்….

அதேபோல், இங்குள்ள நந்தி சிலை , எனக்கென்ன உனக்கென்ன என்று பிரமாண்டமாக இருக்கிறது. அங்கேயுள்ள ஐயர், இந்த நந்திதான் உள்ளதிலேயே மிகப் பெரியது என்கிறார் – தஞ்சையைக் காட்டிலும், ராமேஸ்வரத்தைக் காட்டிலும், கர்நாடகாவைக் காட்டிலும். நான் அந்த மூன்றையும் பார்த்திருப்பதால், அவர் சொன்னது உண்மை போலவே எனக்குத் தோன்றியது. சரியாக, மார்க்கெட்டிங் பண்ணாதலால் வெளி உலகத்துக்கு இந்தக் கோவில் பற்றிய அருமை இன்னும் தெரியவில்லை. வருத்தம். 

இதுபோல் இன்னும் ஏராளமான பொக்கிஷங்கள் கும்பகோணத்தையும், தஞ்சாவூரையும் சுற்றி இன்றும் புதைந்திருக்கும் என்று நினைக்கிறேன்….

(அரசாங்கக் ) கடவுள் மனது வைத்தால் , இன்னும் நிறைய விஷயங்களை வெளிக் கொண்டு வரலாம்.

அதற்கு முன்னால் அந்தக் கடவுள் அப்போலாவை விட்டு முதலில் பத்திரமாக வெளியில் வர வேண்டும். 

பிரார்த்திப்போம்…

வெ.பாலமுரளி 

பி.கு: திருவாவடுதுறை , கும்பகோணத்திலிருந்து 18 கி.மீ. தூரத்தில் மயிலாடுதுறை செல்லும் சாலையில் உள்ளது.