ஒரு சின்னக் கேள்வி….
நம் இந்தியாவிற்கு எப்பொழுது சுதந்திரம் கிடைத்தது ?
” இது என்ன ரொம்பச் சின்னப்புள்ளத்தனமான கேள்வியா இருக்கு…….ஆகஸ்ட் 15 , 1947″ என்று நீங்கள் சொல்வீர்களென்றால், உங்கள் பதில் தவறு.
சரி…சரி…நீங்கள் என்னை அடிக்க வருவதற்கு முன்னால் இன்னும் இரண்டே இரண்டு கேள்விகள்.
1 . சுதந்திரம் என்றால் என்ன?
2 . நம்முடைய சுதந்திரத்தை யாரிடமிருந்து வாங்குவது? ( நம் மனைவியிடமிருந்து என்று சொல்லாதீர்கள். “அந்த” வரலாற்றைத் தேடி பக்கம் வேற .)
உங்களுடைய அடிப்படை உரிமைகளை நீங்கள் தக்க வைத்துக் கொண்டால் அதுதான் சுதந்திரம்.
இப்போது என்னுடைய இரண்டாவது கேள்விக்கு பதில் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
கரெக்ட் …உங்களுடைய சுதந்திரத்தை யாரிடமிருந்தும் வாங்க முடியாது. நீங்களாக எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.
இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருக்கும் போது, மகாத்மா காந்தி தலைமையிலிருந்த இந்திய தேசிய காங்கிரஸ், நம்மை அடிமைப் படுத்தி லட்சாதி லட்ச மக்களைக் கொன்று குவித்த பிரிட்டிஷாரின் வெற்றிக்கு பாடு பட்டுக் கொண்டிருந்தது.
அதே சமயத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், 1943 ம் ஆண்டு அக்டோபர் 21 ம் தேதி, சிங்கப்பூரில் நடந்த ஒரு மாநாட்டில் இன்றிலிருந்து நமது இந்தியா சுதந்திரம் அடைந்து விட்டது என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதே ஆண்டு டிசம்பர் மாதம் 29 ம் தேதி சுதந்திர இந்தியாவின் தலைவராக கொடியேற்றினார். அவருடைய ( நம்முடைய) தேசிய அரசை ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி, சைனா உட்பட பிரிட்டிஷைப் பிடிக்காத 9 நாடுகள் உடனே அங்கீகரித்தன.
அது மட்டுமல்ல, நமது இந்திய தேசிய ராணுவம், இந்தியாவை அடிமைப் படுத்தி வைத்திருந்த பிரிட்டிஷாருக்கு எதிராக போர் பிரகடணம் செய்கிறது என்று வெளிப்படையாக அறிவித்தார் போஸ். அதை உடனே செயல்படுத்தும் விதமாக பர்மாவின் எல்லையோரத்திற்கு தமது ராணுவத்தை கொண்டு சென்றார்.
காந்தி, நேரு போன்ற அஹிம்சாவாதிகள் அதை ஏற்க மறுத்தது அரசியலின் ஒரு அசிங்கமான பக்கம். அரசியல் என்று வந்து விட்டால் , மகாத்மாவாக இருந்தால் என்ன, மகாதேவனாக இருந்தால் என்ன, எல்லோரும் ஒன்றுதான் என்று திரும்ப ஒரு முறை நிரூபணமாகியது.
காந்தியின் அந்த முடிவு பிரிட்டிஷாருக்கு இன்னும் வசதியாகப் போய்விட்டது. இரண்டாம் உலகப் போர் முடிந்தவுடன் இந்தியாவிற்கு சுதந்திரம் தந்து விடுகிறோம் என்று வாக்குக் கொடுத்த சர்ச்சில், போர் முடிந்தவுடன் முடியாது என்று பல்டியடித்து காந்தியின் முகத்தில் கரியைப் பூசினார்.
இதற்கிடையில் என்னென்னவோ நடந்து போய், நிலைமையே தலை கீழாகி விட்டது. ஹிட்லர் தோற்றதும், சுபாஷ் சந்திர போஸ் இறந்ததும் நமது அஹிம்சா வாதிகளுக்கு ரொம்பவும் கொண்டாட்டமாகப் போய் விட்டது.
இப்போது சொல்லுங்கள்……
இந்தியாவிற்கு எப்போது சுதந்திரம் கிடைத்தது ?
வெ.பாலமுரளி