வரலாற்றுப் பிழைகள்……

நான் முன்பே சொன்னது போல், வரலாறு என்பதே கோடிட்ட இடங்களை நிரப்புகிற வேலைதான்.

அதை எவ்வளவு லாஜிக்குடன் செய்கிறார்கள் என்பதில்தான் அதன் நம்பகத் தன்மை அடங்கியிருக்கிறது. அதை எப்படிச் செய்தாலும் , அதன் துல்லியம் எப்போதுமே ஒரு கேள்விக்குறிதான்.

அதே சமயம், தெரிந்தோ தெரியாமலோ வரலாற்றை மாற்றி சொல்லிக் கொடுப்பதும், தவறான கருத்துக்களை கால ஏடுகளில் பதிவு செய்வதும் மறக்க முடியாத குற்றமாகும். அது போன்ற என் கண்ணுக்குத் தெரிந்த சில பிழைகளைப் பற்றி எழுதுகிறேன். உங்களுக்குப் பிடித்திருந்தால் இது போன்ற நிறைய பிழைகளைக் கண்டு பிடிப்போம் ( குற்றம் கண்டு பிடிக்கிறதுதான் நம் ரத்தத்திலேயே ஊறிப் போய் இருக்கிறதே ).

பிழை எண் 1: விடா முயற்சிக்கு கஜினி முகமதுவை எடுத்துக்காட்டாக சொல்லிக் கொடுப்பது. 

கஜினி முகமது, ஏதோ 16 முறை படையெடுத்து 17 – வது முறைதான் இந்தியாவை வெற்றி கொண்டது போல் நமக்கு சொல்லிக் கொடுக்கப் படுகிறது. எவ்வ்வ்வ்வ்வ்வளவு பெரிய தவறு…..

காபூலை தலை நகராகக் கொண்டு ஆட்சி செய்த கஜினிக்கு ரொம்ப நாளாக ஒரு ஆசை. எல்லோரும் இந்தியாவைப் பற்றி ஏதேதோ சொல்கிறார்களே, ஒரு முறை அங்கு போய் பார்க்க வேண்டும் என்று. அங்கு சென்று வந்த வணிகர்கள் சொன்ன கதைகள் அவன் ஆவலை ரொம்பவே தூண்டி விட்டது. ஆனால், அவன் வர ஆசைப்பட்டது இந்தியாவை வென்று அதை ஆள வேண்டும் என்ற ஆசையில் அல்ல. அந்த அளவற்ற செல்வத்தைக் காண வேண்டும் , அதை கொள்ளையடிக்க வேண்டும் என்பதுதான் அவனுடைய ஒரே குறிக்கோள். ஆம், இந்தியா அப்போது ரொம்பப் பெரிய பணக்கார நாடு ( காங்கிரஸ், திராவிடக் கட்சிகள் எல்லாம் வருவதற்கு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நாளைக்கு முன்னால்).

உடனே, அவன் நல்ல நேரம் ராகு காலம் எல்லாம் பார்க்காமல் உடனே கிளம்பி விட்டான். அவனுடைய முதல் இலக்கு பஞ்சாப். இது நடந்தது மிகச் சரியாக கி.பி. 1000. கஜினிதான் இந்தியாவுக்குள் ஊடுருவிய முதல் முஸ்லிம் மன்னன். அப்போது நம்ம ஊரில் ராஜ ராஜ சோழன் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தான். 

கஜினியின் முதல் படையெடுப்பே மிகப் பெரிய வெற்றி. டன் கணக்கில் தங்கம் வெள்ளி என, நூற்றுக்கணக்கான ஒட்டகங்களில் அள்ளிச் சென்றிருக்கிறான். இந்தியா ரொம்பவே பிடித்துப் போய் விட, கிட்டத்தட்ட வருடத்துக்கு ஒரு முறை என்று 16 முறை இந்தியா வந்தான். ஒவ்வொரு முறையும் ஏராளமான கொலைகள், ஏராளமான செல்வங்கள், ஏராளமான கோயில்கள் இடிப்பு என்று செம வெறியாட்டம். அது மட்டுமல்லாமல், அவனுக்கு ஒரு வினோதமான ஹாபி ஒன்று உண்டு. அவன் யார் யாரை எல்லாம் வெற்றி கொள்கிறானோ , அவர்களுடைய விரல்கள் அனைத்தையும் வெட்டி , அதைச் சேகரித்து வைப்பது. அது போல, அவன் செல்ஃபில் ஏராளமான விரல்கள். 

16 முறை வந்தும் அவனுக்கு ஏனோ திருப்தி இல்லை. அப்போதுதான், யாரோ அவனுக்கு குஜராத்தில் உள்ள பணக்காரக் கோயிலான சோமனாதபுரத்தைப் பற்றிச் சொல்ல, 1025 – இல் அவனுடைய (வரலாற்றுச் சிறப்பு மிக்க ) 17 – வது படையெடுப்பு நடந்தது. அந்த கோயிலைக் காப்பாற்ற ஒரு பெரிய படை நிற்கப் போகிறது என்று எதிர்பார்த்த அவனுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி. அந்தக் கோயிலைக் கவசம் போல் காத்து நின்றது எல்லாம் அந்த ஊர் அப்பாவி மக்கள். வெறும் நூறு , இருநூறு அல்ல. ஐம்பதாயிரத்துக்கும் மேல். ஏதோ வாழைத்தாரை வெட்டுவது போல் அனைவரையும் வெட்டிச் சாய்த்து விட்டு அந்தக் கோயிலைக் கொள்ளையடித்துப் போனவன்தான், அதற்குப் பிறகு வரவேயில்லை. நாம் எல்லோரும் ஆசைப்படுவது போல், கடவுள் ஒண்ணும் அவன் கண்ணை உடனே குத்தி விடவில்லை. ஒரு ஐந்து வருடம் கழித்து , ஒரு விஷக் காய்ச்சலில் ரொம்ப அவஸ்தைப் படாமல் பொட்டென்று போய் விட்டான். 

” இதில் சுவாரஸ்யமான தகவல் ஒன்று உண்டு. அவன் சோமனாதபுரத்தைக் கொள்ளையடித்த அதே நேரத்தில்தான் நம்ம ராஜேந்திர சோழன் வட இந்திய மன்னர்களோடு சண்டையிட்டு வென்று, கங்கைக்குச் சென்று, தோல்வியுற்ற மன்னர்கள் தலையில் குடம் குடமாக கங்கை தண்ணீரைக் கொண்டு வந்தது. அவனுக்கு கஜினியைப் பற்றியும், கஜினிக்கு ரா.சோழனைப் பற்றியும் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். ஏனோ , சரித்திரம் அவர்களைச் சந்திக்க விடவில்லை என்றே தெரிகிறது. யார் கண்டது, ஒரு வேளை அவர்கள் சந்தித்திருந்தால் சரித்திரம் மாற்றி எழுதப் பட்டிருக்கலாம்” என்கிறார் மதன். 

நேரம் கிடைத்தால் , மதன் எழுதிய “வந்தார்கள் வென்றார்கள்” படியுங்கள். அமர்க்களமான ஒரு புத்தகம். 

பிழை எண் 2 : விடா முயற்சிக்கு பாபரைப் பற்றிச் சொல்லிக் கொடுக்காதது. 

பாபர், மேல் சட்டையேதும் போடாமல் ஒரு அரை டவுசருடன் பம்பரமோ, கோலிக் குண்டோ விளையாடிக் கொண்டிருக்கும்போது, இன்றைய உஸ்பெக்கிஸ்தானின் ஒரு பகுதியான பெர்கானா என்ற ஒரு சிறு நாட்டின் அரசரான அவர் தந்தை உமர்ஷேக் மாடியில் இருந்து தடுக்கி விழுந்து இறந்து விட்டார். உடனே பாபர் அரசுப் பொறுப்பை ஏற்க வேண்டிய சூழ்நிலை. 
அப்போது அவருக்கு வயது 11. நம்புவது கடினமாக இருந்தாலும் அதுதான் உண்மை.

அப்போது ஆரம்பித்த அவருடைய போராட்டமான வாழ்க்கை, அவருடைய 47 ஆவது வயது வரை தொடர்ந்தது.ஆம் , 1530 – இல் அவர் சாகும்போது அவருக்கு வயது 47 தான். ஆனால், அதற்குள்தான் எத்தனை போராட்டங்கள்…. எத்தனை தோல்விகள்….. எத்தனை வெற்றிகள்…. எத்தனை இமாலய சாதனைகள். அப்பப்பா…..வாழ்க்கையில் வெற்றி பெற நினைக்கும் அத்தனை பேரும் அவரைப் பற்றிப் படிக்க வேண்டும். அவருடைய சுய சரிதையான பாபர் நாமா, ஒரு அற்புதமான தன்னம்பிக்கை நூல்.

அவருக்கு, வாழ்க்கையில் பின் வாங்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒரு விஷயத்தை ஆரம்பித்து விட்டால், முடித்தே ஆக வேண்டும். அதுவும் வெற்றிகரமாக முடித்தாக வேண்டும். யாராவது லேசாக மண்டையைச் சொரிந்தால் கூடப் போதும். அவரை அங்கேயே விட்டு விட்டு மேலும் மேலும் முன்னேறிக் கொண்டேயிருப்பார். அதனால்தான், அவர் எவ்வளவோ தோல்வியைச் சந்தித்திருந்தாலும் கூட, வரலாறு இன்னும் அவரை ஒரு மாபெரும் சக்கரவர்த்தியாக நினைவு கூர்கிறது. 

அவரைப் பற்றி எழுத ஏராளமான விஷயங்கள் இருப்பதால், இந்தக் கட்டுரையில் அவரைப் பற்றி அவ்வளவுதான். ” ஐ யாம் பாபர்” இன்னொரு கட்டுரையின் மூலம்.

பிழை எண் 3 : ஒவ்வொரு நாட்டின் சிறப்பு அடையாளம் அதன் கொடி. நம் நாட்டின் கொடியை வடிவமைத்தது யார் தெரியுமா ? மகாத்மா காந்தி ஐடியா கொடுக்க அதை காங்கிரஸ் கட்சி அப்ரூவ் செய்தது என்கிற ரேஞ்சில்தான் வரலாற்றில் பதிவாகியிருக்கிறது. 

ஆனால், அதை வடிவமைத்தது ‘பிங்காலி வெங்கைய்யா’ என்னும் ஒரு தையல் கடைக் காரர். ஆந்திராவைச் சார்ந்த அவர், காங்கிரஸ் கட்சியில் மிகுந்த ஈடுபாடும் , மகாத்மா காந்தியின் மீது அளவற்ற மரியாதையும் வைத்திருந்தவர்.

விஜயவாடாவில் 1921 -இல் பெரிய அளவில் காங்கிரஸ் மாநாடு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அதில் நாம் ஏன் நம் நாட்டின் கொடியை முறையாக அறிமுகம் செய்யக் கூடாது என்று யோசித்த அந்த தேசப் பற்று மிகுந்த தையல் கடைக் காரர், கிட்டத் தட்ட 30 நாடுகளின் கொடிகளை அலசி ஆராய்ந்து ஆரஞ்சு, வெள்ளை, பச்சை பட்டைகள் கொண்ட ஒருகொடியைத் தயாரித்து காந்தியிடம் கொடுத்தார். 

இந்தியாவில் அதிகம் உள்ள இந்து , முஸ்லிம் மற்றும் சீக்கிய மதங்களைக் குறிப்பதற்காக மூன்று வண்ணங்களை தேர்வு செய்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். காந்திஜிக்கு மிகவும் மகிழ்ச்சியாகப் போய் விட்டது. இருந்தாலும் Boss என்றால் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்ற எழுதப் படாத விதி அப்போதே இருந்திருக்கிறது போல. உடனே அந்தக் கொடியின் நடுவில் ஒரு ராட்டைச் சின்னத்தைச் சேர்த்து அந்த மாநாட்டில் அறிமுகப் படுத்தி விட்டார். 

காங்கிரஸ் கட்சியின் ஒப்புதல் இல்லாமலேயே காந்தி நமது தேசியக் கொடியை அறிமுகப் படுத்தியது கண்டு, கொஞ்சம் சங்கடப்பட்ட காங்கிரஸ் கமிட்டி , அவசரம் அவசரமாக அந்தக் கொடிக்கு ஒப்புதல் வழங்கியது. சில ஆண்டுகள் கழித்து, அந்த ராட்டைச் சின்னத்தை எடுத்து விட்டு அதற்குப் பதிலாக, அசோகரச் சக்கரத்தை சேர்த்து விட்டு, 1947 ஆம் ஆண்டு ஜூலை 22 ம் தேதி நடைபெற்ற இந்திய அரசியல் நிர்ணய சபைக் கூட்டத்தில் , நமது தற்போதைய கொடியை ஜவஹர்லால் நேரு நமது நாட்டின் அதிகாரபூர்வமான கொடி இனிமேல் இதுதான் என்று அறிவித்து விட்டார். ரொம்ப சந்தோஷம். ஆனால், ஒரு சம்பிரதாயத்துக்குக் கூட வெங்கையாவின் பெயரை யாருமே குறிப்பிடவில்லை. 

இந்தக் கொடி டிசைன் என்னவோ ஆதி முதல் அந்தம் வரை எல்லாமே காந்திஜியின் கைவண்ணம் போல் வரலாற்றில் பதிவு செய்யப் பட்டு விட்டது. இதில் இன்னுமொரு சோகம் என்னவென்றால், வெங்கையாவை கடைசி வரை யாருமே அங்கீகரிக்காமல், அவர் வறுமையிலேயே வாழ்ந்து 1963- இல் உயிர் நீத்தார் . பாவம், அந்த அப்பாவியும் இது என்னுடைய உழைப்பு என்று சொல்லாமலேயே போய்ச் சேர்ந்து விட்டார். நிஜமான தியாகி. 

பிழை எண் 4: மௌன்ட் பேட்டன் பிரபு என்னவோ இந்தியாவை ரட்சிக்க வானத்தில் இருந்து வந்த தூதர் போல நம் வரலாற்றில் சித்தரிப்பது….

1947 – இன் தொடக்கத்தில்தான் மௌண்ட் பேட்டன் ( Mount Batten ) இந்தியா வந்தது. அவன் லண்டனில் இருந்து கிளம்பு முன் அவனுக்கு இரண்டு உத்தரவுகள் வந்தன. ஒன்று எழுத்துபூர்வமான உத்தரவு. ” போ ராசா. போய் இந்தியர்களுக்கு சுதந்திரத்தைக் கொடு. சனியன்கள் போய்த் தொலையட்டும்” . என்ன நினைத்தார்களோ , உடனே வாய் மொழி உத்தரவு ஒன்றும் கொடுத்தார்கள். ” நீ என்ன செய்வியோ ஏது செய்வியோ தெரியாது. ஏதாவது ஒரு பெரிய கலவரத்தை உண்டு பண்ணு. மவனே….இப்போ கீழே விழும் இந்தியர்கள்தான்…. இனிமேல் ஜென்மத்துக்கும் எழுந்திரிக்கவே கூடாது”. 

இந்த இரண்டு உத்தரவுகளையும் சிரமேற்று செயல்படுத்த வந்த வெற்றி நாயகனே மௌன்ட் பேட்டன் ( இனி என்னத்துக்கு அவனை பிரபு பட்டம் சொல்லிக் கூப்பிடணும் ????? ).

அவன் இங்கு வருவதற்கு முன்னரே , அவனுக்கு முன்னால் இருந்தவர்கள் கொஞ்சம் Ground Work பண்ணியிருந்தார்கள்- முகமது அலி ஜின்னாவை தூண்டி விட்டதன் மூலம் . எனவே, பேட்டனுக்கு எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்ற பிரச்சினை இல்லை. 

வந்த சில நாட்களிலேயே, ஆகஸ்ட் 15 ம் தேதி சுதந்திரம், அன்றே, இந்தியா …. பாகிஸ்தான்- இந்தியா என்று இரண்டு நாடுகளாகப் பிரியும் என்றும் அறிவித்து விட்டான். அப்போதே பிரச்சினை ஆரம்பித்து விட்டது. அடுத்து எல்லோருக்கும் எழுந்த கேள்வி, எப்படி எல்லைகளைப் பிரிப்பார்கள்? ஆயிரக்கணக்கான வருஷங்களாக ஒன்றாகவே இருந்த நாடுகள். எப்படிப் பிரிக்க முடியும் ? மௌண்ட் பேட்டன், இந்த விஷயத்தை டிப்ளமேட்டிக்காக ஹேண்டில் பண்ணுகிறேன் பேர்வழி என்று சிரில் ஜான் ரெட்கிளிஃப் என்னும் வழக்கறிஞர் ஒருவரை இங்கிலாந்தில் வரவழைத்தான் . 

ரெட் கிளிஃபுக்கு இதில் அனுபவம் ஏதும் இல்லை என்பது ஒரு புறமிருக்க, அவனுக்கு இந்தியாவைப் பற்றி ஒண்ணுமே தெரியாது என்பதுதான் பெரிய அதிர்ச்சி. அவன் முதன் முதலில் இந்தியா வந்து இறங்கியதே 1947 ம் வருடம் ஜூலை 8 ம் தேதிதான். அவனுக்குக் கொடுத்தது ஐந்தே ஐந்து வாரங்கள்தான். அவன் அப்போதுதான் முதன் முதலாக இந்தியாவின் வரைபடத்தையே பார்த்தான். ஏராளமான நதிகள், மலைகள் , காடுகள் என இந்தியா பாகிஸ்தான் என்று இரண்டு நாட்டுக்குமே நிறைய விஷயங்கள் பொதுவாக இருந்தன. அவனுக்கு மண்டை காய்ந்திருக்க வேண்டும். அவனுக்கு மௌண்ட் பேட்டனிடமிருந்து ஏகத்துக்கும் பிரஷர் என்பதால் , ஏதோ கெக்கரே பிக்கரே என்று எல்லைக் கோடுகளை வகுத்து ஆகஸ்ட் மாதம் 13 ம் தேதி தன்னுடைய ப்ராஜக்ட் ரிப்போர்ட்டைக் கொடுத்து தன் வேலையை முடித்து விட்டான். 

அதைப் பார்த்த மௌண்ட் பேட்டனுக்கே தலை சுற்றியிருக்க வேண்டும். அதை உடனே ரிலீஸ் பண்ணாமல், சுதந்திரம் கொடுத்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளி வைத்து விட்டான். 
ஆகஸ்ட் 15 சுதந்திரம் கொடுக்கும் போது எல்லையோரத்தில் வசித்த பெரும்பாண்மையான மக்களுக்கு தாங்கள் எந்த நாட்டோடு சேரப் போகிறோம் என்றே தெரியாமல் சுதந்திர தினத்தைக் கொண்டாடினார்கள். ஆகஸ்ட் 16 – எல்லைக் கோடுகளை ரிலீஸ் பண்ணிய கையோடு ரெட் கிளிஃபை விமானத்தில் ஏற்றி லண்டனுக்கு அனுப்பி வைத்து விட்டார்கள் ( பின்ன……யாராவது அவரைப் போட்டுத் தள்ளி விட்டால் ???) .

நாடெங்கும் பிரச்சினை உடனே ஆரம்பித்து விட்டது. எல்லையோரப் பகுதிகளில் வன்முறை கட்டவிழ்த்து விடப் பட்டது. கிட்டத்தட்ட 2 லட்சம் மக்கள் படு பயங்கரமாகக் கொல்லப் பட்டார்கள். வழக்கம்போல் பெண்களே அதிக அளவில் வன்முறையைச் சந்தித்தார்கள். நிறைய பலாத்கார நிகழ்ச்சிகள் ( ஹே ராம் படத்தில், கமல் அந்த நிகழ்ச்சிகளை முகத்தில் அறைகிறாற்போல் காண்பித்திருப்பார் ). 

அதில் பாதிக்கப் பட்ட நிறையப் பெண்கள் விரைவிலேயே கர்ப்பம் தரித்தார்கள். ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட 50,000 பெண்களுக்கு கருக்கலைப்பு செய்யப்பட்ட அவலம் உலகிலேயே இந்தியாவில்தான் நடந்தது. அதுபோலவே பாகிஸ்தானிலும் நிறைய நிகழ்ச்சிகள். இந்தியாவை விட பாகிஸ்தானில்தான் பாதிப்புகள் அதிகம் என்றது பாகிஸ்தான். கடைசி வரை இரண்டு நாடுகளுமே பாதிக்கப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கையை வெளியிடவேயில்லை. 

Man is Kind. But men are cruel என்றார் ரவீந்திரநாத் தாகூர். அந்தக் கூற்றை நிருபிக்கிறார் போல், அந்தக் கலவரத்தில் ஈடுபட்ட ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய கோர முகத்தை காண்பித்தான். இதில் இந்துக்கள் முஸ்லிம்கள் என எல்லோருமே சம அளவில் வெறியாட்டம் ஆடியிருக்கிறார்கள். At the end of the day, மனிதன் மனிதன்தானே. 

இவ்வளவு நடந்தபோதும், மௌண்ட் பேட்டன் ஒண்ணும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால், மனதுக்குள் சந்தோஷப் பட்டிருக்கலாம். ஒப்புக்காக அங்கங்கு 1000, 2000 சிப்பாய்களை அனுப்பி, கலவரத்தை அடக்க முயற்சிப்பதாகக் காட்டிக் கொண்டான். 

இதில் ஒரு சோகம் என்னவென்றால், அவனுடைய இவ்வளவு ராஜதந்திரத்தைப் பார்த்த பின்னரும் , அவனையே இன்னும் சில ஆண்டுகளுக்கு வைஸ்ராயாக நீடிக்குமாறு , காந்திஜி சார்பில் காங்கிரஸ் கட்சி அவனைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டது. இந்த ட்விஸ்ட்டை அவனே எதிர்பார்த்திருக்க மாட்டான். அவனும் பெரிய மனது ( ??????) பண்ணி ஒத்துக் கொண்டான். 

காந்திஜி தேவையில்லாமல், தான் நிஜமாகவே மகாத்மாதான் என்பதைக் காட்டிக் கொண்டார் என்றே அனைத்து அரசியல் பார்வையாளர்களும் கருத்துத் தெரிவித்தார்கள். 

பாவம், அந்தக் கலவரத்தில் பாதிக்கப்பட்ட ஜீவன்கள்…. என்ன நினைத்திருக்குமோ , தெரியவில்லலை. வரலாறு எப்போதுமே பாதிக்கப்பட்டவர்களின் ஸ்டேட்மெண்டைப் பதிவு செய்வதில்லை. அது இன்று எஃப்.ஐ. ஆர் பதிவு செய்வது வரை தொடர்கிறது. 

எது எப்படியோ, இது போன்ற வரலாற்றுப் பிழைகள் காலா காலத்துக்கும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. யாரும், இவற்றிலிருந்து பாடம்தான் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை.

வெ.பாலமுரளி.