இந்தக் கட்டுரையின் மூலம் : டாக்டர் பி.இராமன் எழுதிய அச்ச ரேகை தீர்வு ரேகை.
“நாம் இருக்கும் பூமி போல இன்னொரு பூமியை உருவாக்க முடியுமா ?”.
இந்தக் கேள்வி எழுந்தவுடனேயே , முதலில் துள்ளிக் குதித்து எழுந்தது அமெரிக்கர்கள்தான்.
பறக்கும் தட்டு, மனித ரத்தம் குடிக்கும் டிராகுலா, வேற்றுக் கிரகவாசிகள், பேய்களின் நடமாட்டம், அமானுஷ்ய சக்தி என்று எல்லா உடான்ஸ் மேட்டர்களையும் நினைத்துத் தானும் பயந்து, மற்றவர்களையும் பயமுறுத்தி, அதை வைத்து நிறைய நாவல்கள் எழுதி , படங்கள் எடுத்து எக்குத்தப்பாகப் பணம் பண்ணியது அமெரிக்கர்கள்தான் .
அதனால், இந்த ” டுப்ளிகேட் பூமி” மேட்டர், அவர்களின் வெறும் வாய்க்கு அல்வா கிடைத்தது போலாகி விட்டது. எண்பதுகளில் நிறைய நாவல்களும் , படங்களும் வெளியாகின.
அதைப்பார்த்தவுடன் , கையில் நிறைய பணம் வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்த கோடீஸ்வரர் ” எட்வர்ட் பாஸ்” ( அப்பாடா இந்தக் கட்டுரையின் தலைப்பை நியாயப் படுத்தியாகி விட்டது ) என்பவருக்கு , நாம் ஏன் இதில் இறங்கக் கூடாது என்று பொறி தட்டியது. இதற்காக அவர் ஒதுக்கிய தொகை 900 கோடி ரூபாய். எண்பதுகளின் இறுதியில் அது ரொம்ப ரொம்பப் பிரம்மாண்டமான தொகை.
இந்தப் ப்ராஜக்ட் மட்டும் சக்ஸஸ் ஆகி விட்டால், மற்ற கிரகங்களிலேயும் இது போன்ற டூப்ளிகேட் பூமிகளை (???!!!!!! ) உருவாக்கி, அவற்றிற்கு மனிதர்களை அனுப்பி பில்லியன் பில்லியனாக பணம் பார்க்கலாம் என்பது அவர் கணக்காக இருந்தது.
ஒருவன் முக்கி முக்கி சாப்பிட்டாலும், ஒரு நாளைக்கு அதிக பட்சம் நான்கு வேலைதான் சாப்பிட முடியும் ( மாலை டிபனையும் சேர்த்துக் சொன்னேன் ). ஒரு நேரத்தில் ஒரு வீட்டிற்கு மேல் வசிக்க முடியாது. எத்தனை கார்கள் இருந்தாலும் ஒரு நேரத்தில் ஒரு காரில்தான் பயணிக்க முடியும். இருந்தாலும் மனிதனுக்குக கோடிக்கணக்கில் பணம் தேவைப் படுகிறது. ஆச்சரியம்.
” Biosphere – 2 ” ( உயிரிக்கோளம் -2 ) என்ற பெயருடன், 3 .14 ஏக்கரில் அரிசோனா மாகாணத்தில் ஓராக்கிள் என்னும் ஊரில் செயற்கை பூமி உருவானது . 8 மீட்டர் ஆழத்தில் கடல், ஆப்பிரிக்காவில் உள்ளது போன்ற சவானா புல்வெளி, பாலை வனம், சதுப்பு நிலம் என்று எல்லாமே செயற்கையாக உருவாக்கப் பட்டது.அது மட்டுமல்லாமல் 1400 வகை விலங்கினங்கள், 3 வகை எறும்புகள் எல்லாம் உள்ளே அனுப்பப்பட்டன. பாக்டீரியாக்கள் வளர்வதற்கும் வகை செய்யப் பட்டது. 60 லட்சம் தண்ணீர் உள்ளே விடப்பட்டது.
பெரிய இரும்புக் கட்டுமானத்தில் , கண்ணாடிச் சுவர்களால் அமர்க்களமான கட்டிடம். நிறைய சூரிய வெளிச்சம் உள்ளே வருமாறு செய்திருந்தார்கள். இயற்கையாக (???) ஆக்ஸிஜன் உருவாதற்கும் ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆராய்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்னரே, கோதுமை பயிரிடப்பட்டு விளைச்சலுக்குத் தயாராக இருந்தது. மக்கள் உள்ளே நுழையும்போது உணவு வேண்டுமல்லவா, அதற்காக. அது மட்டுமல்லாது , 3 மாத உணவு வேறு ஸ்டாக் வைக்கப்பட்டது.
சில விஞ்ஞானிகள், ஒரு டாக்டர், ஒரு என்ஜினியர் என்று 8 பேர் கொண்ட குழு ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களை உள்ளே அனுப்பி ஆராய்ச்சி செய்வதே நோக்கம். வெளியில் இருந்து எந்தவொரு உதவியும் கிடைக்காது. அவர்களுக்குத் தேவையானவற்றை அவர்களே பயிரிட்டு சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். அவர்களின் கழிவை உரமாக்கி பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எந்த வித செயற்கை (அ) ரசாயன உரங்களுக்கும் அனுமதில்லை.
4 மணி நேரம் விவசாயம், 4 மணி நேரம் ஆராய்ச்சி மற்ற நேரங்களில் சமைப்பது, படிப்பது, ஓய்வெடுப்பது என்று எல்லாம் பார்த்துப் பார்த்து பிளான் பண்ணினார்கள். ஏதாவது எமர்ஜென்ஸி என்றால் மட்டுமே அபாய மணியை அழுத்தி விட்டு வெளியில் வரலாம். மற்றபடி வெளியில் வர அனுமதி கிடையாது.
1991 ஆம் ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி ஒரு சுப வேளையில் “எட்வர்ட் பாஸின்” உத்தரவுப் படி “பிக் பாஸ்” டீம் உள்ளே சென்றது. ஒரே ஒரு முறை , ஒரு பெண்மணி தன் கையை அரவை எந்திரத்தின் உள்ளே கொடுத்து விட்டதால், கை நன்றாக வெட்டுப் பட்டு விட்டதென்று வெளியில் வந்தார். உள்ளே நல்ல மருத்துவ வசதியிருந்தாலும் கூட அறுவை சிகிச்சைக்கு வழியில்லை. எனவே வெளியில் வந்து அறுவை சிகிச்சை செய்து விட்டு, 5 மணி நேரத்தில் மறுபடியும் உள்ளே சென்று விட்டார்.
மற்றபடி எல்லோரும் கட்டுப்பாடாக 2 வருடங்கள் உள்ளே இருந்தனர். 2 வருடங்கள் முடிந்து எல்லோரும் வெளியில் வந்தனர். ப்ராஜக்ட் மிகப் பிரமாண்டமான வெற்றி என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், என்னென்ன ஆராய்ச்சி செய்தார்கள், எப்படி வெற்றி போன்ற விபரம் எதுவும் கொண்ட வெள்ளை அறிக்கை ஒன்றும் வெளியிடவில்லை.
பத்திரியாளர்களுக்கும், இந்த ஆராய்ச்சியைத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருந்த வெளியுலக விஞ்ஞானிகளுக்கும் ஒரே மண்டைக் குடைச்சல், என்னதாண்டா செய்தீர்கள் என்று.
அவர்கள் மெதுவாக விசாரிக்க ஆரம்பித்தார்கள். “பிக் பாஸ்” டீம் மக்களிடம் என்னதான் உறுதி மொழிகள் வாங்கியிருந்தாலும், அவர்களும் மனிதர்கள்தானே. விஷயம் மெதுவாக லீக் ஆக ஆரம்பித்தது.
அந்த 2 வருடங்களும் அவர்கள் ஏராளமான பிரச்சினைகளைச் சந்தித்திருக்கிறார்கள். அடிக்கடி அடிக்கடி ஆக்ஸிஜன் அளவு நார்மலான அளவான 21 சதவிகிதத்திலிருந்து 14 சதவிகிதம் வரை குறைந்திருக்கிறது. எனவே, அனைவருக்கும் அடிக்கடி மூச்சுத் திணறல் ஏற்பட்டு, செயற்கையாக (யாருக்கும் தெரியாமல்) ஆக்ஸிஜன் உள்ளே செலுத்தப் பட்டிருக்கிறது.
விவசாயம் நினைத்த அளவிற்கு கை கூடவில்லை. யாருக்கும் புரியாத ஒரு ராட்சச களைச் செடி தாறு மாறாக முளைத்து பயிர்களை நாசம் செய்தது. நம்ம “பிக் பாஸ்” டீம், அந்தக் களைகளைக் களைவதிலேயே நிறைய நேரத்தை விரயம் செய்தார்கள். காற்றில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடும் தடால் தடாலென்று எகிறியது. அதைக் கண்ட்ரோல் பண்ணும் சூட்சுமம் புரியவில்லை. அதில் ஓரிருவர், நாம் கண்டிப்பாக இறந்து விடுவோம் என்று பயந்திருக்கிறார்கள்.
அவர்கள் உள்ளே கொண்டு வராத, கரப்பான் பூச்சி அழையா விருந்தாளியாக உள்ளே நுழைந்து ஏகத்துக்கும் ரகளை பண்ணியது. அவர்கள் உள்ளே விட்டிருந்த எறும்புகள் அனைத்தும் காரணமே புரியாமல் செத்து விழ எங்கிருந்தோ வந்த சில ராட்சத எறும்புகள் கேஷூவலாக வளைய வந்தன. ஆனால், அவற்றிற்குக் கடிக்கும் இயல்பு போயிருந்தது.
ஆக்ஸிஜணும், கார்பன் டை ஆக்ஸைடும் கன்னா மூச்சி காட்டியதில் அனைவரின் உடல் நலமும் கெட்டுப் போயிருந்தது. அனைவரின் கொழுப்புச் சத்தும் ஏகத்துக்கும் குறைந்து, எல்லோரும் பேயறைந்தது போல இருந்திருக்கிறார்கள். காரணமே இல்லாமல், ஒருவர் மேல் ஒருவர் எரிந்து விழுந்திருக்கிறார்கள்.
ஆக மொத்தம் ப்ராஜக்ட் பயங்கரத் தோல்வி. இயற்கையை கொஞ்சம் கூட அவர்களால் காப்பியடிக்க முடியவில்லை.
இவ்வளவு பிரச்சினைகளுக்குமிடையில் இரண்டே இரண்டு பேர் மட்டும் காதலும் பண்ணியிருக்கிறார்கள். அது ஒண்னுதான் இந்த ப்ராஜக்டினால் கிடைத்த வெற்றி (இருந்தாலும் ஒரு காதலுக்கு 900 கோடி ரூபாய் கொஞ்சம் ஓவர்தான்).
பின்னர், இந்த இடத்தை விலைக்கு வாங்கி கொலம்பியா பல்கலைக் கழகம் சிறு சிறு ஆராய்ச்சிகள் சிலவற்றைச் செய்து கொண்டிருக்கிறது.
எது எப்படியோ, இயற்கைக்கு மாற்று என்பது கிடையாது என்பதை இயற்கை மறுபடியும் மறுபடியும் சொல்லிக் கொண்டேயிருக்கிறது. நாம்தான் அதை நம்பவும் மறுத்து, புரிந்து கொள்ளவும் மறுத்துண, அதை அழிக்கவும் அதனுடன் விபரீதமாக விளையாடவும் முயற்சி செய்து கொண்டேயிருக்கிறோம். “நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாந்தரை நினைந்து விட்டால்” என்று பாரதி இதை நினைத்துத்தான் பாடியிருப்பானோ?
சரி….இப்போது ஒரு சின்னக் கணக்கு.
வெறும் எட்டே எட்டு பேர், இரண்டே இரண்டு வருடம் வாழ்வதற்கு செலவான தொகை 900 கோடி ரூபாய் ( அவ்வளவு செலவு செய்தும், அவர்களால் வாழ முடியவில்லை என்பதை கொஞ்ச நேரத்திற்கு மறந்து விடுவோம்).
இதுவரை வாழ்ந்து மடிந்து போன மக்களையும் மறந்து விடுவோம். இப்போதுள்ள மக்கள் தொகை 750 கோடி. நாம் சராசரியாக வாழும் காலம் 50 ஆண்டுகள் என்று எடுத்துக் கொள்வோம்.
திடீரென்று ஒரு நாள் பூமித்தாய் நம் எதிரில் தோன்றி , ” Hallo guys….enough is really enough. Please settle my rent immediately ” என்று கேட்டால், நாம் எவ்வளவு கொடுக்க வேண்டி வரும் ? அவ்வளவு பணம் நம்மால்தான் கொடுக்க முடியுமா ? இல்லை நம்ம மல்லையா மாதிரி லண்டனுக்குப் போனால் தப்பிக்கத்தான் முடியுமா ?.
இப்போ சொல்லுங்க, உண்மையான “பிக் பாஸ்” யாருங்க ?
வெ.பாலமுரளி
நன்றி : டாக்டர் பி. இராமன்