பைபிள் ஒரு பார்வை …….

ஆண்டவரே, உமது அடியானின் ஜெபத்தையும், உமது நாமத்துக்குப் பயப்படவேண்டும் என்று விரும்புகிற உமது அடியாரின் ஜெபத்தையும் உமது செவிகள் கவனித்திருப்பதாக;”நெகேமியா 1:11

“கர்த்தருடைய உடன்படிக்கையையும் அவருடைய சாட்சிகளையும் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, அவருடைய பாதைகளெல்லாம் கிருபையும் சத்தியமுமானவைகள்.”சங்கீதம் 25:10

“எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ் செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது. “1 தெசலோனிக்கேயர் 5:18

“உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன். “எசேக்கியேல் 36:26

நான் உனக்கு ஆரோக்கியம் வரப் பண்ணி உன் காயங்களை ஆற்றுவேன். எரே 30: 17

இவற்றைப் படிக்கையில் நிறைய இலக்கணப் பிழைகளும், தவறான வார்த்தைப் பிரயோகங்களும், ஏன் இவை நடை முறைத் தமிழில் இருப்பதில்லை என்ற கேள்வியும் , இவர்கள் என்னதான் சொல்ல வருகிறார்கள் என்ற குழப்பமும் உங்களுக்குத் தோன்றுகிறதா ? 

ஆம் என்றால்……” அப்பாடா …..நான் தனி மரமில்லை” . 

நான் சிறு வயதில் படித்தது எல்லாம் De Britto என்னும் ஒரு கிறிஸ்தவப் பள்ளியில்தான். ஃபிரீ வகுப்பு கிடைக்கும்போதெல்லாம் எங்கள் ஆசிரியர்கள் திரு. மைக்கேல் ராஜ், திரு. அருள்ராஜ், திரு அந்தோணிசாமி, உயர்திரு. அப்பாத்துரை எல்லோரும் கிறிஸ்துவ மதத்தைப் பற்றியும் இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் நிறைய கதை சொல்ல ஆரம்பித்து விடுவார்கள் . மிகவும் பிரமிப்பாக வாயைப் பிளந்து கேட்டுக் கொண்டிருந்திருக்கிறேன் 

கதைகள் சொல்லி முடித்ததும், நான் இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்னது போல சில வாக்கியங்களை கரும்பலகையில் எழுதுவார்கள். அப்போதுதான் பிரச்சினை ஆரம்பிக்கும் . ஒண்ணுமே புரியாது. கேள்வி கேட்டால் ‘பொளேர்’ என்று ஒரு அறை விழும் என்பது தெரியுமாதலால் சும்மா இருந்து விடுவேன் ( ஆம். நான் பள்ளியில் படிக்கும் போது (ம்) நிறைய அடி வாங்கியிருக்கிறேன்) .

வருடத்துக்கு ஒரு முறை புதிய ஏற்பாடு புத்தகம் ஒன்று கொடுப்பார்கள். பள பளவென்று வாசனையாக இருக்கும். எனக்கு ஏதோ மெர்செடிஸ் காரே கிடைத்தது போல ஒரு தெனாவெட்டாகத் திரிவேன். அதே போல், ஒவ்வொரு வருடமும், இந்த வருடமாவது இந்தப் புதிய ஏற்பாடை முழுவதுமாகப் படித்து விட வேண்டும் என்று சபதம் எடுத்துக் கொள்வேன். ஆனால், என்னால் எப்போதுமே ஓரிரு பக்கத்தைத் தாண்ட முடிந்ததில்லை. காரணம், அவ்வளவு கடினமான மொழி வீச்சு. ஏன் இவர்கள் எல்லோருக்கும் புரிகிற நடை மொழித் தமிழில் எழுத மாட்டேன் என்கிறார்கள் என்று வருத்தமாக இருக்கும். யாரிடம் கேட்பது என்று தெரியாது விட்டு விடுவேன்.

பின்னாளில் நிறைய நண்பர்களிடம் இதைப் பற்றி பேசியிருக்கிறேன். யாரும் இதற்கான தெளிவான காரணத்தை தெளிவு படுத்தியதில்லை. ஃபேஸ் புக் வந்த பிறகு சில நண்பர்களுக்கு இது பற்றி மெஸேஜ் அனுப்பியிருக்கிறேன். யாரிடம் இருந்தும் தெளிவான பதிலில்லை. அதிலும் ஒரு நண்பர், நம்ம விஜய் ஸ்டைலில் தன் வலது கையைக் குவித்து என் முகத்திற்கு நேரே காண்பித்து ” எல்லாம் கரெக்டாத்தான் இருக்கு . உன் சோலியைப் பாரு ராசா ” என்றார் . நானும் அவர் சொன்னது போல செய்து விட்டு அந்த இடத்தைக் காலி செய்து போய் விட்டாலும் கூட , என் மண்டைக் குடைச்சல் மட்டும் குறையவேயில்லை. 

அது பற்றித் தேட ஆரம்பித்ததும், புதுப் புது விஷயங்கள் நிறைய தெரிய வந்தன. அந்த விஷயங்களுக்குப் போகும் முன்னால், உங்களுக்கு தரங்கபாடியில் நடந்த சில விஷயங்கள் பற்றியும் , டென்மார்க் அரசாங்கம் செய்த சில கேவலமான வேலைகள் பற்றியும் சொல்ல வேண்டும். 

1600 களின் தொடக்கத்தில் இந்தியாவிலும் கிழக்கு ஆசியாவிலும் வியாபாரத்தில் போர்ச்சுகீசியர்களே நிறைய ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கின்றனர். டென்மார்க் (டேனிஷ் ) அரசாங்கத்திற்கு எப்போதுமே நமது பிராந்தியந்தின் மீது ஒரு கண். அந்த நாட்டின் மன்னர் கிறிஸ்டியனின் அனுமதியுடன் ஒரு சில வணிகர்கள் சேர்ந்து ஶ்ரீலங்காவைக் குறி வைத்து 4 கப்பல்களில் 1618 -இல் கிளம்பினார்கள். அவர்கள் ஶ்ரீலங்கா சென்றடையும் முன்னரே அவர்கள் கப்பல்கள் கடற்கொள்ளையர்களால் சூரையாடப் பட்டன . செம டென்ஷன். பற்றாக் குறைக்கு அவர்கள் ஶ்ரீலங்கா சென்றடைந்ததும், அங்கிருந்த போர்த்துகீசியர்களின் தூண்டுதலால் கண்டி மன்னர் அவர்களை அங்கு வியாபரம் செய்ய அனுமதிக்காமல் விரட்டி விட்டார். அவர்கள் அங்கிருந்து கிளம்பி, சோர்ந்து போய் தங்கள் கப்பல்களை பார்க் செய்த இடம் தமிழகத்தில் நாக பட்டினத்துக்கு அருகில் உள்ள தரங்கம்பாடி. 

அப்போது தரங்கம்பாடி, தஞ்சை நாயக்கர்கள் ஆட்சியின் கீழ் இருந்த ஒரு சிறிய மீனவ கிராமம். அந்த கிராமத்தை வருடத்திற்கு 4000 ரூபாய் என்று குத்தகைக்கு எடுத்தது டேனிஷ் அரசாங்கம் சார்பில் டேனிஷ் ஏஷியாட்டிக் நிறுவனம் (இதுதான் பின்னாளில் டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனியாக மாறியது ) . குறு மிளகு, கிராம்பு என்றுதான் முதலில் வணிகம் தொடங்கியது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு பிஸினஸ் போகவில்லை. அப்போதுதான் கடற்கொள்ளை என்னும் குறுக்கு வழியில் நுழைந்தது அந்த நிறுவனம் – தனது அரசாங்கத்தின் ஆசிவாதத்துடன். செல்வம் கொழிக்க ஆரம்பித்து விட்டது. கடனில் இருந்து அந்த நிறுவனம் மீண்டது மட்டுமல்லாமல் , டென்மார்க்கிற்கும் எக்குத்தப்பாக பணம் அனுப்பப்பட்டது. டேனிஷ் அரசாங்கமும் பயங்கர குஷியாகி விட்டது. அவர்கள் பதிலுக்கு நிறைய படைகளை அனுப்பியது – கடற்கொள்ளையை ப்ரொஃபஷனலாக பண்ணுவதற்கு. நாகபட்டினம், சென்னை , தூத்துக்குடி என்று எந்த கப்பல்கள் வந்தாலும் லூட்டிங்தான். அந்த அட்டகாசம் கிட்டத்தட்ட 150 வருடங்களுக்கு நடந்திருக்கிறது – எல்லாம் தரங்கம்பாடியை மையமாக வைத்து . நாயக்கர்கள் அதை கண்டு கொள்ளாமல் விட்டது ஏன் என்பது பற்றி தகவல்கள் இல்லை.

இதற்கிடையில் டென்மார்க்கில் புதிய மன்னராக நான்காம் ஃபிடெரிக் பொறுப்பேற்றார். . தரங்கம்பாடி பற்றிக் கேள்விப்பட்ட மன்னர், நாம் ஏன் கிறிஸ்துவ மதத்தை முறையாக அங்கே பரப்பக் கூடாது என்று யோசித்து அங்கே செல்ல சரியான ஒரு பாதிரியாரைத் தேட ஆரம்பித்தார். டென்மார்க்கில் இருந்து யாரும் வர முன் வராதலால், ஜெர்மனியில் இருந்து பார்த்தோலோமாஸ் சீகன்பால்க் என்னும் 24 வயதேயான ஒரு இளம் பாதிரியாரை 1706 – இல் தரங்கம்பாடி அனுப்பி வைத்தார். நம்ம மொழியும் புரியாமல், நம்ம கலாச்சாரமும் புரியாமல், பாவம் அவர் பட்ட பாடு சொல்லி மாளாது. 

அவரும் விடாமல் , முதலியப்பன், அழகப்பன் என்ற இரு மீனவர்களின் உதவியால் (கடல் மணலிலேயே எழுதிப் பழகி ) கொஞ்சம் தமிழும் கற்றுக் கொண்டு கிட்டத்தட்ட 20,000 வார்த்தைகள் அடங்கிய ஒரு தமிழ் அகராதியையும் அவர் வெளியிட்டார். தமிழில் வெளி வந்த முதல் டிக்ஷனரி இதுதான். இவர்தான் 1715 – இல் தமிழ் பைபிளையும் வெளியிட்டது . ஆனால், இது ஒன்றும் முதல் பைபிள் கிடையாது. 1554- லேயே போச்சுகல் நாட்டின் தலை நகர் லிஸ்பன் நகரில் ” கார்டிலா” என்னும் பெயரில் முதல் பைபிள் பிரிண்ட் ஆகி விட்டது. ஆனால், அதில் ஏராளமான சமஸ்கிருத வார்த்தைகள் கலந்திருந்ததாலோ என்னவோ அது அந்த அளவிற்கு பரவலாக உபயோகப் படுத்தப் படவில்லை. இந்த கார்டிலாவே இந்திய மொழிகளில் அச்சில் ஏறிய முதல் புத்தகம். அதற்குப் பிறகு இந்தியாவில் பிரிண்டிங் இயந்திரங்கள் வந்து அச்சில் ஏறிய இரண்டாவது ( இந்திய மொழிப்) புத்தகமும் தமிழ்தான், ” தம்பிரான் வணக்கம்” . இதுவும் கிறிஸ்துவ மதத்தைப் பற்றிய புத்தகம்தான்.

சரி…விஷயத்திற்கு வருவோம். நம்ம சீமன்பால்க் எழுதிய பைபிளிலும் நிறைய பிழைகள். முதலில் இயேசுவை ” சர்வேஸ்வரன்” என்றே அழைத்தார். அப்பத்திற்குப் பதிலாக ” கஞ்சி” என்ற வார்த்தையையே உபயோகித்திருக்கிறார். பைபிள் ” வேதம் (அ) வேதாகமம்” என்றும் அதில் வரும் வாக்கியங்கள் “வேத வாக்குகள்” என்றும் அழைக்கப் பட்டிருக்கின்றன. ஆம்…அப்படித்தான் “வேத வாக்கு” ( நான் சொன்னா அப்படியே வேத வாக்காக எடுத்துக் கொள்ள வேண்டும் ) என்ற வார்த்தைப் பிரயோகம் நம் நடை முறைக்கு வந்தது. இந்தச் சொற்றாடலுக்கும் நம்ம இந்து மத வேதங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

இதுவும் சரியில்லை என்று பின்னாளில் ஆறுமுக நாவலர் என்பவர் அதை மறுபடியும் மொழிபெயர்த்தார். அதையும் . கிறிஸ்துவ மதத்தில் உள்ள பெரும்பாலானோர் ” சாரி ” என்று நிராகரித்து விட்டார்கள். 

பிறகு, பிரிட்டிஷாரிடம் வேலை செய்த சில துபாஷிகர்கள் ( மொழிபெயர்ப்பாளர்கள் ) , குறிப்பாக பிராமணர் மற்றும் பிள்ளைமார் வகுப்பைச் சார்ந்த சிலர் நிறைய திருத்தங்கள் செய்து கொண்டு வந்ததுதான் நாம் இன்று பயன்படுத்தும் பைபிள் (அ) திருவிவிலியம் . அவர்களில் யாரும் தமிழில் பெரிய அறிஞர்களாக இருந்தது போல் தெரியவில்லை. கர்த்தர், ஸ்தோத்திரம், தவறான அர்த்தத்தில் சமாதானம், விசுவாசம், பரிசுத்த ஆவி, சத்தியம் போன்ற வார்த்தைகள் எல்லாம் இவர்கள் கைங்கர்யம்தான். 

என்ன காரணத்தாலோ, அதை இன்று வரை யாரும் ஒரு நடை முறைத் தமிழில் , எந்த ஒரு இலக்கணப் பிழையும் இல்லாமல் மொழிபெயர்க்க முன் வரவேயில்லை – பெரிய பணக்காரர்களான சாம் செல்லத்துரை , பால் தினகர் போன்ற பெரிய மத போதகர்கள் உட்பட. 

நம்ம திருக்குறளை , பரிமேலழகர், மு. வரதராசனார் , மு. கருணாநிதி, சாலமன் பாப்பையா போன்ற தமிழ் அறிஞர்கள் காலத்திற்கேற்ப நம் அனைவருக்கும் புரிகிறாற்போல் கருத்துரைகள் எழுதியது போல , பைபிளையும் யாரேனும் எழுதினால் எனக்குச் சொல்லுங்கள். 
அதை வாங்கிப் படிக்கும் முதல் நபர் நானாகத்தான் இருப்பேன். 

வெ. பாலமுரளி 

பி.கு: கண்ணதாசன் எழுதிய இயேசு காவியத்திற்கு, கிறிஸ்துவ அமைப்பினர் முறையான அங்கீகாரம் கொடுத்து அதை இன்றைய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தினால், அது, அவர்கள் தமிழுக்கும், அவர்கள் தம் மதத்திற்கும் செய்யும் மிகப் பெரிய அரும் பணியாக இருக்கும்.