மனிதன் பாதி….மிருகம் பாதி.. Part II


தொடர்ச்சியாக உணவு கிடைக்காததாலோ அல்லது தட்ப வெப்பநிலை காரணமாகவோ மனிதன் தான் இருக்கும் இடத்தை (கிழக்கு ஆப்பிரிக்காவை ) விட்டு மற்ற இடங்களுக்கு நடக்க ஆரம்பித்தான்.

இந்த கிழக்கு ஆப்பிரிக்கா என்னும் தியரி, இப்போதுள்ள தியரி மட்டுமே. வரும் காலங்களில் மாறலாம். 

அப்போது உலகையெல்லாம் பனிக்கட்டிகள் சூழ்ந்திருந்தன. கடல் மட்டமெல்லாம் இன்னும் உயரவில்லை. எனவே, நிறைய நாடுகள் ஒன்றோடொன்று இணைந்தேயிருந்தன. சுமார் 17,000 ஆண்டுகளுக்கு முன்னால்தான் வெப்ப நிலையில் ஒரு மிகப் பெரிய மாற்றம் நடந்திருக்கிறது. ஒரு சில டிகிரிகள் ஏற …சாரி… எகிற, ஐஸ் கட்டிகள் உருகி கடல் மட்டம் உயர்ந்து நிறைய (இன்றைய) நாடுகள் பிரிந்திருக்கின்றன.

அப்போது இமிக்ரேஷன் பாலிஸியெல்லாம் உருவாகியிருக்கவில்லை. எனவே மனிதன் பாகுபாடின்றி இன்றைய அமெரிக்கா உட்பட உலகின் அனைத்துப் பகுதிகளையும் நோக்கி நடக்க ஆரம்பித்து விட்டான் ( அவனுக்குக் கண்டிப்பாக சுகர் பிரச்சினை இருந்திருக்க வாய்ப்பில்லை).

ஆம்….அமெரிக்காவை கண்டுபிடித்தது நான்தான் என்று கொலம்பஸ் மார் தட்டிக் கொள்வதற்கு சில லட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே மனிதன் அமெரிக்காவிலும் குடியேற ஆரம்பித்து விட்டான்.

அவனுடைய முதல் மேஜர் ஸ்டாப் இன்றைய எகிப்து என்று தெரிகிறது. ஆனால், முதல் நாகரிகம் அங்கு பிறக்கவில்லை. “மனிதன் பாதி மிருகம் பாதி” என்று சொல்வது போல அப்போது அங்கு “பாலைவனம் பாதி ஐஸ் பாதி” என்றிருந்திருக்கலாம். 

அடுத்த ஸ்டாப் இன்றைய ஈராக் இருக்கும் பாபிலோனியா என்றழைக்கப்படும் மெசபடோமியா. இங்குதான் சக்கரம், நெருப்பு போன்ற சமாச்சாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பின்னாளில் இங்குள்ள யுப்ரைட்டிஸ் & டைக்ரீஸ் என்ற நதிகளையொட்டியே முதல் நாகரிகம் பிறந்தது. ஆனால், அதற்கு இன்னும் சில லட்ச வருடங்கள் இருக்கின்றன. அப்போதெல்லாம் காலச் சக்கரம் ரொம்ப ரொம்ப ஸ்லோ மோஷனில்தான் போய்க் கொண்டிருந்திருக்கின்றது.

ஒவ்வொரு நகர்வுக்கும் சில ஆயிரம் வருடங்கள் , சில சமயம் சில லட்ச வருடங்கள் கூட ஆகியிருக்கக் கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். 

இதுவே ஒரு ஜங்க்‌ஷன் பாயிண்டாக இருந்திருக்க வேண்டும். இங்கிருந்து ஒரு குழு ரஷ்யா, சைனா, மங்கோலியா, இந்தியா, ஆஸ்திரேலியா என்றும் இன்னொரு குழு ஐரோப்பா, அமெரிக்கா என்றும் பிரிந்திருக்க வேண்டும்.

அவன் சென்ற வழித் தடங்களைப் (ரூட்) பற்றி இன்னும் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டுதானிருக்கின்றன. உறுதியாக ஒன்றும் நிரூபிக்கப் படவில்லை. 

அப்போது ஒவ்வொரு காலகட்டத்திலும் தனக்குத் தெரிந்த பொருட்களை வைத்து ஆயுதங்கள் செய்து , அவற்றை வைத்து தன்னுடைய உணவுத் தேவைக்கும், தான் எதிரி என்று நினைத்துப் பயந்த அனைத்து உயிரினங்களை அழிக்கவும் கன்னா பின்னாவென்று வேட்டைகள் ஆட ஆரம்பித்தான். 

பின்னாளில் அரசியல்வாதிகள் என்று கொடூரமான ஒரு இனம் உருவாகப் போகிறது என்று தெரிந்ததால்தானோ என்னவோ நிறைய உயிரினங்கள் சைலண்டாக அந்த ஆதி மனிதனின் கையால் அழிந்து கொண்டன. 

அப்படி ஆயுதங்களை வைத்து உருவானதுதான் கற்காலம், வெண்கலக் காலம், இரும்புக் காலம் எல்லாம். 

அப்படி கற்கால மனிதர்களால் ஆரம்பித்த ராகுகாலம் இன்று நவநாகரிக மனிதர்களால் உருவான “அணு ஆயுத காலத்” த்தில் கொண்டு வந்து நம்மை நிறுத்தியிருக்கிறது. இதற்குப் பெயர்தான் “கேடு காலம்”. 

அப்போதெல்லாம் மனிதர்கள் சில ஆயிரத்தில்தான் இருந்தார்கள். நகர்ந்து கொண்டேயிருந்ததால் “நாகரிகம்” என்றழைக்கப்படும் Civilization ஒன்றும் உருவாகியிருக்கவில்லை. 

அப்படி ஒன்று உருவானது ஏறத்தாழ ஒரு 10,000 வருடங்களுக்கு முன்னால்தான். 

இன்றைய ஈராக் பகுதியில் . யெஸ்…..மனித குலத்தை அழிக்கக் கூடிய Mass Destruction Weapon இருக்கிறது என்று ஒரு பொய்க் குற்றச்சாட்டைச் சுமத்தி சதாம் ஹூசேனை அநாகரிகத்தின் உச்சத்தில் கொன்ற அந்தப் பகுதியில்தான் முதல் நாகரிகம் தோன்றியிருக்கிறது. ஆம், சுமேரிய நாகரிகம் பிறந்தது இன்றைய ஈராக்கில்தான். 

சக்கரம், நெருப்பு தவிர, இங்கு “குடியிருப்பு” என்ற ஒரு அமைப்பு உருவானதாலேயே அதை நாகரிகம் என்று அழைக்கிறோம். ஆமாம், இங்குதான் மனிதர்கள் தங்களுக்கென்று மண்ணாலும், குச்சிகளாலும் (இன்று கென்யாவில் உள்ள , மசாய் வீடுகள் போல – படம் கீழே உள்ளது) கட்டிக் கொண்டு குழு குழுவாக வாழ்ந்திருக்கிறார்கள். ஒவ்வொரு குழுவிற்கும், ஒரு நாட்டாமை வேறு – நம்ம விஜயகுமார் போல.

சில நூறு ஆண்டுகள் கழித்து இது என் நாடு அது உன் நாடு என்ற பிரிவினையும் வந்து விட்டது – Obviously. 

நாடு என்றதும் அமெரிக்காவும் இங்கிலாந்து போலிருக்குமோ என்று நினைத்து விட வேண்டாம். நீங்கள் இருக்கும் தெரு ஒரு ராஜ்ஜியம் என்றால் உங்கள் பக்கத்துத் தெருதான், உங்கள் எதிரி ராஜ்ஜியம். ஆம்…அப்போதுதான் ஒரு நாட்டிற்கும் இன்னொரு நாட்டிற்கும் போர் என்ற அநாகரிகத்தின் அடுத்த அத்தியாயம் ஆரம்பித்தது. 

அப்படி நிறைய ராஜ்ஜியங்களை வென்று வரலாற்றின் முதன் முதல் சக்கரவர்த்தியாக விளங்கியது “ ஹமுராபி” என்ற ஒருவர்தான் என்று தெரிகிறது. 

கிட்டத்தட்ட கி.மு. 6000 ஆண்டுகளில் நாகரிகம் உலகின் மற்ற பகுதிகளிலும் கிளர்ந்தெழுந்தன. எகிப்து, மாயன், சிந்துச் சமவெளி போன்றவை அதில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவை….

அதிலும் எகிப்திய நாகரிகமும் மாயன் நாகரிகமும் வளர்ந்ததற்குப் பெயர் “அசுர வளர்ச்சி”. விவசாயம், மெடிக்கல் சயின்ஸ், இறந்த உடல்களைக் கெட்டுப் போகாமல் பதப்படுத்தும் முறை என்று கன்னாபின்னாவென்ற வளர்ச்சி. 

கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் இன்னும் பெயர் சூட்டப் படாத ஒரு நாகரிகம் நம் தமிழகத்தில் இருந்திருக்க வேண்டும். பாண்டிச்சேரிக்கு அருகில் உள்ள அரிக்கமேடு , நம் சிவகங்கைக்கு அருகில் உள்ள கீழடி போன்ற ஊர்களில் கிடைத்திருக்கும் நிறைய பொருட்கள் அந்த நாகரிகத்தைத்தான் பறை சாற்றுகின்றன. 

எகிப்தில் கிடைத்துள்ள “மம்மிகள்” உலகப் பிரசித்தம். ஆனால், கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் , கிட்டத்தட்ட அதே கான்செப்டில், நம் தமிழகத்தில் “முது மக்கள் தாழி” என்று, ஒரு பிரமாண்டமான பானை செய்து, அதில் இறந்த மக்களைப் பதப்படுத்தும் முறை இருந்திருக்கிறது. நம்மில் எத்தனை பேருக்கு அது பற்றித் தெரியும் ? 

நம் நாடு சுதந்திரம் வாங்கிய பிறகு, இது போன்ற திராவிடர்களின் வரலாறை வெளியில் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள் -ஆரியர்கள் வழியில் வந்த நம் வட இந்திய சகோதரர்கள். அதன் தொடர்ச்சிதான் , நம்ம மோடி ஜீ கீழடி அகழ்வாராய்வை சில ஆண்டுகள் நிறுத்தி வைத்தது. ஏராளமான போராட்டங்களுக்குப் பிறகு , மறுபடியும் அங்கு வேலை நத்தை வேகத்தில் ஆரம்பித்திருப்பது ஒரு சிறிய சந்தோஷமான விஷயம். அதன் முடிவு அந்த (நமோ) நாராயணனுக்குத்தான் வெளிச்சம். 

சரி….விஷயத்திற்கு வரலாம்…

இப்படி நாகரிகம் வளர வளர மனிதனின் சுய நலத்தால் நிறைய தேவைகளும் அதிகரிக்க, இது என் வீடு, இது என் நாடு போன்ற எல்லைக் கோடுகளும் வளர ஆரம்பித்தன. 

விளைவு …நிறைய போர்கள்…நிறைய அழிவுகள்….மனிதன் வெற்றிக் களிப்பில் அப்போதே மிதக்க ஆரம்பித்து விட்டான்….

கி.மு.விற்கும் கி.பி.க்கும் செண்டர் பாயிண்ட்டான இயேசு மகான் பிறக்கும் வரை மனிதர்கள் நிறைய வெறியாட்டங்களை காட்டுமிராண்டித் தனமாக நடந்தேறியிருக்கிறார்கள். 

அவர் பிறந்தபிறகும் வெறியாட்டத்திற்கும் காட்டுமிராண்டித் தனத்திற்கும் ஒன்றும் குறைவில்லை. அவரைக் கொன்ற முறையே அதற்கு ஒரு மிகச் சிறந்த உதாரணம். 

பின்னர் மனிதன் கொஞ்சம் மனம் திருந்தி முன்னால் செய்த காட்டுமிராண்டித்தனங்களை கொஞ்சம் முறையோடு புதுப் புது ஆயுதங்களுடனும் , அவனாக இயற்றிக் கொண்ட சட்டத்தின் உதவியோடும் இன்னும் கொடூரமாக நிறைவேற்ற ஆரம்பித்தான். 

இந்த வெறிச்செயல் உலகின் எல்லா பகுதியிலும் நடந்தேறியிருக்கிறது. நமது பாரதமும் அதற்கு விதி விலக்கல்ல. தங்களுக்கு பிடிக்காத மனிதர்களை, அரசியல் மற்றும் சமயக் குற்றவாளிகளை கழு மரத்தில் ஏற்றியிருக்கிறார்கள், மாட்டுத் தோலை ஒரு வாரம் தண்ணீரில் ஊற வைத்து, அதை அப்படியே சட்டத்தைப் பயன்படுத்தி குற்றவாளிகளின் (அ) பிடிக்காதவர்களின் உடலில் இறுக்க வைத்துத் தைத்து அப்படியே வெயிலில் நிற்க வைத்திருக்கிறார்கள். வெயில் ஏற ஏற, தோல் சுருங்கிக் கொண்டே போகும். உள்ளே இருப்பவனால் வாய் விட்டுக் கதறக் கூட முடியாது. இது மாதிரி சித்திரவதைகளை ரூம் போட்டு யோசித்து நிறைவேற்றியிருக்கிறார்கள்.

அதே சமயத்தில், உண்மையாகவே நிறைய நாகரிகங்களும் வளர்ந்ததையும் மறுக்க முடியாது. நிறைய மகான்கள், தத்துவவாதிகள், தலைவர்கள், புனிதர்கள் என்று தோன்றி, எல்லா மனிதர்களும் மோசமில்லை முரளி என்று சொல்லாமல் சொல்லி விட்டுப் போயிருக்கிறார்கள். 

எல்லாம் இருக்கட்டும்….இன்று நாம் எல்லோரும் நம்மை மறந்து பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும் ஃபுட்பால் எனப்படும் கால்பந்து விளையாட்டே ஒரு காட்டுமிராண்டித் தனமான வெறிச் செயலில் இருந்துதான் தோன்றியது என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் ? 

ஏறத்தாழ ஒரு 3000 வருடங்களுக்கு முன்னால் கிரேக்கர்களுக்கும் ரோமானியர்களூக்கும் சும்மா டைம் பாஸூக்காகவெல்லாம் போர் வரும். அப்படி ஒரு முறை போர் நடந்த போது கிரேக்கர்கள் பெருமளவில் ஜெயித்த உற்சாகத்தில், இறந்த ரோமானியர்களின் தலையை எட்டி உதைத்துக் கொண்டாடியிருக்கிறார்கள். அதுவே பிடித்துப் போய், அதையே ஒரு விளையாட்டாகவும் ஆரம்பிக்க , அது 2018 வோர்ல்ட் கப் வரை நம்மைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. 

வெ.பாலமுரளி…