கீழடி …..சில உண்மைகள்….
கொஞ்சம் நீளமான கட்டுரை. ஆனால், தயவுசெய்து படியுங்கள். இவை உண்மை என்று நம்பினால் அதிகம் பகிருங்கள். தற்சமயம் இது மட்டுமே நம்மால் செய்ய இயலும்.
கீழடி பற்றி விஷயம் வெளியான நாளிலிருந்து அதை மிக உன்னிப்பாக கவனித்து வரும் வரலாற்று ஆர்வலர்களில் நானும் ஒருவன்.
2014 இல் ஆராய்ச்சி தொடங்கிய சில நாட்களிலேயே சில பல பொருட்கள் கிடைத்தவுடனேயே , இந்த ஆராய்ச்சியின் முடிவை ஓரளவிற்கு ஊகித்திருந்தேன்…
கீழடி கதை ஒன்றும் இன்று நேற்று ஆரம்பித்ததல்ல. 1980 களின் தொடக்கத்தில் மத்திய அகழ்வாராய்ச்சித் துறை சமர்ப்பித்த ஒரு அறிக்கையிலேயே மதுரையைச் சுற்றி சில ஆராய்ச்சிகள் செய்தால் நிறைய வரலாற்று உண்மைகள் வெளி வர வாய்ப்புகள் உள்ளன என்று கூறப்பட்டுள்ளது.
அப்போது மத்தியில் இருந்த காங்கிரசும் , மாநிலத்தில் இருந்த அ.தி.மு.க அரசும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.
பின்னால் மாநிலத்தில் ஆட்சிக்கு வந்த , ” தமிழுக்கும், தமிழர்களுக்காகவும் மட்டுமே உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்” என்று அடிக்கடி கூறும் கலைஞரும் கூட கீழடிக்காக ஒரு புல்லையும் கிள்ளிப் போடவில்லை என்பது கசப்பான ஒரு உண்மை.
அப்போதெல்லாம் மத்திய தொல்பொருள் ஆராய்ச்சித் துறைக்கு மொத்தம் நான்கே கிளைகள்தான். அதில் ஒன்றும் தென்னகத்தில் கிடையாது.
2001 ல்தான் தென்னகத்தில் ஒரு கிளை வேண்டும் என்ற வேண்டுகோளுக்குப் பணிந்து மைசூரில் ஒரு கிளை திறந்தது மத்திய அரசு.
அதற்குப் பிறகு நம் தென்னகத்தில் மொத்தம் 90 அகழ்வாராய்ச்சிகள் நடந்தன. அந்த 90 இல், 60 கர்நாடகாவிலும், 20 ஆந்திராவிலும் , பத்தே பத்து நம் தமிழகத்திலும் நடைபெற்றன.
அந்த பத்தில் குறிப்பிடும் வகையில் செய்த ஆராய்ச்சிகள் ஆதிச்ச நல்லூர் அகழ்வாராய்ச்சி, மாங்குடி , கொடுமங்கலம் மற்றும் அழகன் குளம்.
அதற்கு முன்னர் இரண்டே இரண்டு ஆய்வுகள் மட்டுமே தமிழகத்தில் பெரிய அளவில் செய்யப் பட்டிருக்கின்றன. ஒன்று 1945 இல் அரிக்கமேடு என்னும் இடத்தில் . இது பாண்டிசேரிக்கு அருகில் உள்ளது. இங்கு கிரேக்க மற்றும் ரோமானிய நாடுகளுடன் செய்த வர்த்தங்கள் சம்பந்தமான நிறைய ஆதாரங்களும் பொருட்களும் கிடைத்துள்ளன. கிடைத்த பொருட்களின் காலம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் கி.பி. எட்டாம் நூற்றாண்டு வரை.
அடுத்த பெரும் ஆராய்ச்சி நடந்த இடம் காவிரி பூம்பட்டினம் என்றழைக்கப்படும் பூம்புகார். வருடம் 1965. பூம்புகார், நாகபட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய ஊர். இதுவே மக்கள் ஒரே இடத்தில் வசித்ததற்கான சான்றுகள் கிடைத்த முதல் இடம்.
இவை தவிர தமிழகத்தில் சொல்லிக் கொள்ளும்படி ஒரு ஆராய்ச்சியும் நடை பெறவில்லை.
அது கடவுளுக்கே பொறுக்கவில்லை என்று நினைக்கிறேன் . 2013 இல் திரு அமர்நாத் ராமகிருஷ்ணன் என்பவர் மாற்றலாகி மத்திய அகழ்வாராய்ச்சி துறையின் மைசூர் பிராஞ்சில் கண்காளிப்பாளராக சேர்ந்தார். அவர் எடுத்த முதல் அசைண்மெண்டே ம….து….ரை.
இது அவரே வற்புறுத்தி தன்னுடைய மேலதிகாரியை கன்வின்ஸ் பண்ணி எடுத்த ப்ராஜக்ட். முதல் ஒரு வருடம் சர்வே மட்டுமே செய்தார். தேர்ந்தெடுத்தது வைகை ஆற்றங்கரைப் பகுதிகள்.
வைகை ஆறு, வெள்ளி மலையில் தொடங்கி ராமநாதபுரத்திற்கு அருகில் உள்ள அழகன் குளம் என்னும் ஊரில் வந்து கடலுடன் கலக்கிறது ( எழுத்தாளர் உயர்திரு. எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் தன்னுடைய தேசாந்திரி என்னும் புத்தகத்தில் வைகை ஆறு ராமநாதபுரத்தில் உள்ள கண்மாயில் கலக்கிறது என்று எழுதியுள்ளார். இது பின்னால் மாறிப்போயிருக்க வேண்டும் ). வைகை ஆற்றின் மொத்த நீளம் 176 கி.மீ. இந்த அழகன் குளம் (அந்தக் காலத்தில் இந்த ஊருக்குப் பெயர் அருகர் குளம். அருகர் ? சமண மதத்தின் கடவுள்) அந்தக் காலத்தில் மிகப் பெரிய துறைமுகமாக இருந்திருக்கிறது.
திரு அமர்நாத் ராமகிருஷ்ணன் சர்வே செய்ய எடுத்துக் கொண்டது மொத்த ஆற்றின் இரு கரையிலும் 5 கி.மீ தூரத்தில் உள்ள அனைத்து ஊர்களும். கிட்டத்தட்ட 293 கிராமங்கள். கிட்டத்தட்ட அனைத்து ஊர்களிலும் ஏராளமான ஆச்சரியங்கள். அதிலும் குறிப்பாக ஆற்றின் தென் கரையில் உள்ள அனைத்து ஊர்களிலும் ஏராளமான பொருட்கள், எங்கள் ஊரில் இருந்து தொடங்கு எங்கள் ஊரில் இருந்து தொடங்கு அவரை அழைக்க நம்ம ராமகிருஷ்ணன்
மயங்கிப் போயிருக்கிறார்.
கடைசியில் அவர் தேர்ந்தெடுத்தது மதுரைக்கு அருகில் உள்ள மூன்று ஊர்கள். சித்தர் நத்தம், மாரநாடு மற்றும் கீழடி. இந்த மூன்று கிராமங்களுக்கு கீழுமே மிகப்பெரிய வரலாற்றுப் பொக்கிஷங்கள் புதைந்திருக்கின்றன என்று ஆணித்தரமாக நம்பியிருக்கிறார்.
இதில் கீழடி மற்றும் கொஞ்சம் ஸ்பெஷல். காரணம் ஆற்றங்கரையில், ஆனால் ஆற்றின் நிலப்பரப்பில் இருந்து மூன்று மீட்டர் உயரத்தில் இருந்த ஒரு பெரிய பொட்டலும் அதை ஒட்டிய பெரிய தென்னந்தோப்பும். அவர் தேர்ந்தெடுத்தது மொத்தம் 80 ஏக்கர். கிட்டத்தட்ட 8000 செண்ட் பரப்பளவு.
தங்கள் குடியிருப்பு ஆற்றங்கரையிலும் இருக்க வேண்டும் ஆனால் ஆற்றில் வெள்ளம் வரும்போது தண்ணீரும் உள்ளே வந்து விடக் கூடாது என்ற ஜாக்கிரதை உணர்வால் கண்டிப்பாக இங்கு மக்கள் வசித்திருக்கக் கூடும் என்று அவர் பட்சி சொல்லியது. அது மட்டுமல்லாது அங்கு கிடைத்த சில மண் பானைகளும் அவர் ஆர்வத்தை இன்னும் கூட்டியது .
கிட்டத்தட்ட 2014 இன் இறுதியில் முக்கிய வேலைகள் ஆரம்பித்தன.
Bingo…..
அடுத்தடுத்து பல பல பொருட்கள் கிடைத்தன. நிறைய தந்தத்தால் செய்த பொருட்கள், கருப்பு சிவப்பு வண்ணத்தில் செய்த பானைகள், சில பாசி மணிகள், முத்து ஆபரணங்கள் என்று இதுவரை கிடைத்துள்ள பொருட்களின் எண்ணிக்கை 5000 ஐத் தாண்டி விட்டது.
ராமகிருஷ்ணனின் குழு மிக ஊற்சாகமாகி தங்கள் வேலையைத் தொடர, ஒரு சிறிய சுவரில் ஆரம்பித்து ஒரு மிகப்பெரிய கட்டட அமைப்பே கண்ணில் பட உலகம் விழித்துக் கொண்டது – நமது மத்திய அரசாங்கம் உட்பட.
அடுத்தடுத்து அதிசயங்கள் நடந்தன. ஒரு தொழிற்சாலை மாதிரி இருந்த கட்டடம் ஒன்றும் கிடைத்தது.
கழிவுநீர் வெளியேற்றும் முறை மிகவும் பிரமாதமாக இருந்தது. சுடு மணலை வைத்தே குழாய்கள் செய்து கழிவு நீரை வெளியேற்றும் முறையைப் பார்த்தால் அவர்களுடைய நாகரிகமும், அறிவியல் வளர்ச்சியும் எப்படி இருந்தது என்பதை கற்பனை செய்ய முடிகிறது.
குண்டூசியை விட சிறிதே பெரிதான ஒரு மணியில் மிக நுட்பமாக துளையிட்டிருக்கிறார்கள். அந்தக் காலத்தில் எப்படி அப்படி ஒரு தொழில் நுட்பம் இருந்தது என்பதை நினைக்கும்போதே மிகவும் பிரமிப்பாக இருக்கிறது.
இவ்வளவுக்கும் நமது குழு தோண்டியது அந்த 80 ஏக்கர் நிலப்பரப்பளவில் வெறும் அரை ஏக்கர் இடம்தான். அதற்குள் இவ்வளவு பொக்கிஷங்கள்.
அவர்கள் தோண்டிய 6 மீட்டர் ஆழத்தில் நிறைய அடுக்குகள் வெவ்வேறு கால கட்டத்தைப் பறை சாற்ற, நமது குழு ஒரு 10 மண் சாம்பிள்களை எடுத்து கார்பன் டேட்டிங் டெஸ்டிற்கு அனுப்ப முடிவெடுத்தது. அதன் மூலம் ஒவ்வொரு பொருட்களின் கால கட்டத்தையும் துல்லிதமாக அறிந்து கொள்ள முடியும்.
மேல் அடுக்குகளில் கிடைத்த பொருட்களையும், அதில் உள்ள தமிழ் பிராமி எழுத்துக்களையும் பார்க்கும் போது இந்த நாகரிகம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 10 ம் நூற்றாண்டுக்குள் இருக்கலாம் என்கிறார் ராமகிருஷ்ணன். ஆனால், அடுத்தடுத்து கீழே உள்ள மண் அடுக்குகளை இன்னும் முறையாக ஆராய்ந்தால் , மேலும் நிறைய நூற்றாண்டுகளுக்கு பின்னே நம்மை இழுத்துச் செல்ல வாய்ப்பிருக்கிறது.
இதற்குள் 2016 செப்டம்பர் வந்து விட்டது. அதாவது ப்ராஜக்ட்டின் முதல் நிலை ஆரம்பித்து 2 வருடம் முடிந்து விட்டதால், அதைத் தொடர மத்திய அரசு ஒப்புதல் வழங்க மறுத்து விட்டது .
கீழடியில் இன்னும் ஒரு 15 அல்லது 20 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்தால் , தமிழர்களைப் பற்றியும் பண்டைய தமிழர்கள் நாகரிகங்களைப் பற்றியும் மிகப்பெரிய ஆச்சரியங்களை வெளிக் கொண்டு வர முடியும் என்று வெளிப்படையாகத் தெரிவித்த இந்த ஆராய்ச்சியை முன்னின்று நடத்திய கண்காணிப்பாளர் உயர்திரு அமர் நாத் ராமகிருஷ்ணனை அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள ஒரு மியூசியத்தின் கண்காணிப்பாளராக இடம் மாற்றியிருக்கிறது மோடி அரசாங்கம் ( கன்னா பின்னாவென்று ஆக்ஷன் எடுத்த நேர்மையான போலிஸ் அதிகாரிகளை ட்ராஃபிக் துறைக்கு இடம் மாற்றம் செய்வது போல).
உடனே நிறைய ஆர்வலர்கள் பொங்கி எழ, நாங்கள் இடைக்கால அறிக்கை வந்தால்தான் ப்ராஜக்ட் தொடர அனுமதி அளிப்பது தொடர்பாக யோசிப்போம் என்று கூலாகச் சொல்லி விட்டார்கள்.
அதுசரி….இந்த இடக்கால அறிக்கை என்றால் என்ன ? ஒரு ஆராய்ச்சியின் போது பெரிதாக ஒன்றுமே கிடைக்கவிட்டால், மத்திய அரசாங்கம் தலையிட்டு “ What the hell is going on” என்று ஒரு ரிப்போர்ட் கேட்கும். ஆனால், கீழடியில் நிலைமை கொஞ்சம் தலைகீழ். தமிழர்கள் வரலாறு பின்னோக்கிப் போவது சில பெரும்புள்ளிகளுக்குப் பிடிக்கவில்லை. எனவே , அதே “ What the hell is going on” என்ற அதே கேள்வியைக் கேட்டு ஆராய்ச்சியை நிப்பாட்டி விட்டார்கள்.
இதுவரை கீழடிக்கு ஆன செலவு வெறும் 70 லட்சம்தான்.
ராமகிருஷ்ணன் கார்பன் டேட்டிங்கிற்காக அனுப்பிய 10 மண் சாம்பிள்களில் இரண்டே இரண்டே மட்டும் , அதுவும் மேல் அடுக்கில் இருந்து செலக்ட் செய்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளது நமது அரசாங்கம். காரணம் ஃபண்ட் இல்லையாம். ஒரு சாம்பிளுக்கு ஆகும் செலவு என்ன தெரியுமா ? வெறும் ஐம்பதாயிரம் ரூபாய் மட்டுமே .
கீழடி ஆராய்ச்சி ஆரம்பித்த அதே நேரத்தில் இன்னும் இரண்டு ஆராய்ச்சிகள் தொடங்கின. ஒன்று மோடி பிறந்த ஊரான வாட் நாகரில். அதில் ஒரு வருடம் முடிந்த நிலையில் ஒரு பழைய இத்துப் போன குண்டூசி கூட கிடைக்காத நிலையில் அதன் கண்காணிப்பாளர் , இந்த இடத்தில் ஆராய்ச்சியைத் தொடர்வது வேஸ்ட் என்று ஒரு அறிக்கை கொடுக்க , அவரையும் இடம் மாற்றம் செய்து உத்தரவிட்டது. ஆனால், ஆராய்ச்சி என்னும் பெயரில் நிறைய குழிகள் தோண்டுவது மட்டும் நிற்கவில்லை. அதே நிலைமைதான் மத்திய பிரதேசத்திலும். அவை இரண்டிற்கும் ஒதுக்கப்பட்டுள்ள நிதியும் கண்னைக் கட்டுவதாக உள்ளது.
கீழடியில் இன்னும் நிறைய வேலைகள் உள்ளன. வெறும் 50 செண்ட் இடத்தில் செய்த ஆராய்ச்சியே இப்படி என்றால், மொத்த 80 ஏக்கரையும் தோண்டினால் எப்படியிருக்கும் ….??? உலகையே நம் தமிழ் நாடு பக்கம் திரும்பிப் பார்க்க வைக்கலாம். மத்திய அரசு செய்யும் அரசியல் நம் தமிழ்நாட்டு அரசாங்கத்திற்குத் தெரியாமல் இல்லை. ஏதாவது சொன்னால், தங்கள் பதவிக்கு ஆபத்து என்று நம் வரலாற்றை மறைக்கும் விஷயத்தில் துணை போகிறார்கள் . வேதனை.
கீழடி பற்றி இன்னும் சில சுவாரசியமான தகவல்கள்…
கீழடிக்கு அருகில் உள்ள கொந்தகை என்னும் ஊரில் கீழடி சம்பந்தமான ஒரு சுடுகாடு வேறு இருக்கிறது. அதில் இன்னும் ஆராய்ச்சி தொடங்கவில்லை. அதில் நிறைய முது மக்கள் தாழிகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன…
கீழடி தவிர மாரநாடு , சித்தர் நத்தம் போன்று இன்னும் நிறைய ஊர்கள் க்யூவில் உள்ளன. எல்லாவற்றிலும் ஆராய்ச்சி செய்தால், உலகமே மூர்ச்சையாகி விடும் அளவிற்கு வரலாற்றுப் பேரதிசயங்கள் கிடைக்க வாய்ப்புள்ளன.
ஆனால், நாம் காலம் தாமதிக்க தாமதிக்க, ரியல் எஸ்டேட் மக்கள் அனைத்து வரலாற்று இடங்களிலும் அடுக்கு மாடிக் கட்டடங்களாக எழுப்பி விட வாய்ப்புள்ளது. நாம் வழக்கம்போல் “ நாங்கள் கல் தோன்றி மண் தோன்றா காலத்துக் குடி மக்கள்” என்று வசனம் பேசிக் கொண்டிருக்க வேண்டியதுதான்.
இப்போதுள்ள மதுரையிலேயே ஏராளமான வரலாற்று பொக்கிஷங்கள் புதைந்துள்ளன என்கிறார் ராமகிருஷ்ணன். ஆனால், அவை எல்லாவற்றிலும் இப்போது கட்டடங்கள் முளைத்து விட்டன….யாரைப் போய்க் குற்றம் சொல்ல முடியும் ?
சிலப்பதிகாரத்தில் சொல்லும் மதுரை ( திருப் பெரும் குன்றத்தில் இருந்து நேர் கிழக்காக உள்ள மதுரை ) இப்போதுள்ள கீழடியைக் குறிக்கிறது என்கிறார் சுப வீ.
அதே சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் மணலூர் என்னும் ஒரு ஊர் இப்போதும் கீழடிக்கு அருகில் உள்ளது. சிலப்பதிகாரத்தில் குறிப்பிட்டுள்ள திசையும் இந்தத் திசையும் ஒத்துப் போகிறது. சொல்பவர் மதுரையைப் பற்றி நிறைய ஆராய்ச்சி செய்து ‘காவல் கோட்டம்’ என்னும் ஒரு புத்தகத்தை எழுதி சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் சு. வெங்கடேசன் அவர்கள். அவர்தான் கீழடி ஆராய்ச்சிக்கு “ வைகை நதி நாகரிகம்” என்று பெயர் வைத்தது.
இந்த மணலூர் பற்றிய குறிப்பு 13ம் நூற்றாண்டில் எழுதிய திருவிளையாற்புராணத்திலும் உள்ளது. அவர்கள் குறிப்பிடும் லொக்கேஷனும் இன்றைய மணலூருக்குப் பொருந்துகிறது.
அந்தக் காலகட்டத்தில் கீழடிக்குப் பெயர் குந்திதேவி சதுர்வேதிமங்கலம் என்கிறது 13 ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டு. அது இன்றும் அங்குள்ள சிவன் கோயிலில் உள்ளது. இந்தக் குந்திதேவி ஒரு பாண்டிய மன்னனின் மனைவி என்பது ஒரு உபரித் தகவல்.
இவ்வளவு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கீழடி ஆராய்ச்சியை நிறுத்தி வைத்ததற்கு அரசியல் தவிர வேறு ஒரு காரணமும் இருக்க முடியாது.
இதற்கிடையில் கனிமொழி என்னும் வழக்கறிஞர் ஒருவர் கோர்ட்டிற்கு சென்று கீழடி ஆராய்ச்சியை நிறுத்தி வைத்ததில் ஒரு மிகப் பெரிய அரசியல் இருக்கிறது என்று வழக்கு ஒன்றைப் போட, கோர்ட்டும் ஒத்துக் கொண்டு, அதைத் தொடர உடனே அனுமதி அளிக்குமாறு அரசாங்கத்திற்கு ஆணை ஒன்றைப் பிறப்பித்துள்ளது. அதற்குப் பிறகே இந்த ஆண்டில் அந்த ஆராய்ச்சியைத் தொடர அனுமதி அளித்தது.
ராமகிருஷ்ணனுக்குப் பதிலாக ஶ்ரீராமன் என்னும் ஒருவரை நியமித்துள்ளது அரசாங்கம். பாவம் ஶ்ரீராமனுக்கு அகழ்வாராய்ச்சியில் எந்தவொரு முன் அனுபவமும் இல்லை. அவர் ஒரு மியூசியத்தில் உதவியாளராக இருந்துள்ளார். அவர் கோயில்களைப் பற்றி ஆய்வு செய்பவராம் – மியூசியத்தில் இருந்து கொண்டே.
ராமகிருஷ்ணன் கண்டு பிடித்த பொருட்களையெல்லாம் மைசூர் கொண்டு செல்லப் போகிறோம் என்று அரசு சொல்ல, அதைத் தொடர்ந்து ஒரு பெரிய போராட்டம் நடந்தது. கடைசியில் அனைத்துப் பொருட்களையும் அதே இடத்தில் வைத்து விட முடிவு செய்து விட்டது – ஆனால் ஒரு முறையான பாதுகாப்பு இல்லாமல். கங்கை கொண்ட சோழ புரத்தில் உள்ள பழம்பெரும் சிலைகளைப் போல , கீழடி பொருட்களும் மழையிலும் வெயிலும் காய்ந்து கொண்டிருக்கின்றன..தங்கள் விதியை நொந்து கொண்டு. ( ரஜினி சார்…எங்கள் வரலாற்றில் போராட்டத்தினால்தான் பெரும்பாலான விஷயங்களுக்குத் தீர்வு கிடைத்திருக்கிறது).
இதற்கிடையில் வழக்கறிஞர் கனிமொழி, திரு. ராமகிருஷ்ணனை மறுபடியும் கீழடி ஆராய்ச்சிக்கு பொறுப்பாளராக நியமிக்க உத்தரவிட வேண்டும் என்று இன்னுமொரு வழக்கு தொடர்ந்திருக்கிறார். ஆனால், அதற்கு அரசு தரப்பிலிருந்து “ சாரி” என்று பதில் வந்து விட்டது. ஒவ்வொரு மூன்று வருடமும் ட்ரான்ஸ்ஃபர் கட்டாயமாம். அது எப்படி அகழ்வாராய்ச்சித் துறைக்குப் பொருந்தும் என்பது அந்த (நமோ)நாராயணனுக்குத்தான் வெளிச்சம்.
இதுவரை கண்டு பிடித்துள்ள 5300 பொருட்களில் , ஒன்று கூட கடவுளைப் பற்றியோ, கோயில்களைப் பற்றியோ , ஏதேனும் வழிபாடுகளைப் பற்றியோ இல்லை. இதன் மூலம், மதம், கடவுள் போன்ற கான்செப்ட் எல்லாம் வருவதற்கு முன்னால் வாழ்ந்த மக்களாக இருந்திருக்கலாம் என்பது உயர்திரு. சு.வெங்கடேசனின் கருத்து.
சமீபத்தில் கீழடியில் இரண்டாம் கட்ட ஆராய்ச்சிக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த 2 வருடங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை வெறும் 40 லட்சம்….இந்தத் தொகை அந்த டீமில் வேலை செய்யும் மக்களுக்கு சம்பளம் கொடுக்கக் கூடப் பத்துமா என்பது சந்தேகமே.
ஏன் வெறும் 40 லட்சம் ? அரசாங்கத்திடம் பணம் இல்லையாம்.
சரி…..இனி இந்தக் கீழடிக்குத் தொடர்பில்லாத சில செய்திகள்.
• அம்பானிக்கும் அதானிக்கும் பிஸினஸ் கொண்டு வர நமது பிரதமர் இதுவரை வெளி நாடுகளுக்குப் பயணம் செல்ல ஆன செலவு : ரூ 4500 கோடி
• ராமர் பிறந்ததாக நம்பப்படும் அயோத்தியில் ஆராய்ச்சி செய்ய ஒதுக்கியுள்ள தொகை 160 கோடி
• கிட்டத்தட்ட 6000 வருடங்களுக்கு முன்னால் அழிந்து போனதாக நம்பப்படும் சரஸ்வதி நதியைக் கண்டுபிடிக்க ஒதுக்கியுள்ள தொகை 400 கோடி…
• இதுதவிர நம் தமிழக அரசாங்கம் வெட்டியாக செலவழித்த, செலவழித்துக் கொண்டிருக்கிற, செலவழிக்கப் போகும் தொகை லட்சக் கணக்கான கோடிகள்.
நாமெல்லாம் கல் தோன்றி மண் தோன்றா காலத்து மூத்த குடி மக்களாம்…….
வேதனையுடன்…..
வெ.பாலமுரளி