“கல் தோன்றி மண் தோன்றா காலத்து மூத்த குடி மக்கள் தமிழ் மக்கள்” இதைச் சொல்லி பெருமைப் படாதவர்கள் நம்மில் யாரும் இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.
அதிலும் வாட்ஸப் வந்தபிறகு நம்ம மக்களோட ரவுசு ரொம்பவே கூடிப் போய் விட்டது. 15,000 வருடங்களுக்கு முன்னால் நம் தமிழ் மொழி இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன (உடான்ஸ் 1), கடந்த 10,000 வருடங்களில் நம் தமிழ் மன்னர்கள் மட்டும்தான் வேறு எந்த நாட்டையும் கைப்பறுவதற்காக எந்த நாட்டின் மீதும் படையெடுத்ததில்லை (உடான்ஸ் 2), என்று சரளமாக சரடுகள் வலம் வருகின்றன.
அதிலும் ஒருவர் ஒரு படி மேலே போய், நிலவில் தமிழ் கல்வெட்டு கண்டு எடுத்திருக்கிறார்கள். இந்த மெஸேஜை நீங்கள் ஒரு 10 பேருக்கு ஃபார்வார்டு செய்யாவிட்டால், ரத்தம் கக்கி சாவீர்கள் என்ற ரேஞ்சுக்கு மெஸேஜ் அனுப்புகிறார்கள். இது போன்ற பொய் செய்திகள் அனுப்புவதில் அவர்களுக்கு அப்படி என்ன ஒரு சந்தோஷம் என்று தெரியவில்லை.
அது சரி….உண்மையாகவே என்னதான் நம்ம வரலாறு என்று நீங்கள் யாராவது ஆராய முனைந்திருக்கிறீர்களா ?
நான் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன் – கடந்த 10 வருடங்களாக.
இதன் மூலத்தை ஆராய நினைத்தால் தலை சுற்றும்.
கிட்டத்தட்ட 3000 வருடங்களுக்கு முன்னால் ஆரியர்கள் இங்கு வருவதற்கு முன்னரே, நம் தமிழினம் இருந்திருக்க வேண்டும். நம்மவர்கள் கலாச்சாரம், கட்டடக் கலை , வானவியல் சாஸ்திரம் போன்றவற்றில் செழித்து வளர்ந்திருக்க வேண்டும். ஆனாலும், ரொம்பவே அப்பாவியாகவும் இருந்திருந்ததால் , ஆரியர்கள் லேசாகப் பொறாமை கொண்டு நம் வரலாற்றைத் திட்டம் போட்டே இரட்டடிப்பு செய்திருக்க வேண்டும்.
ஆம், எல்லாமே “டும்” தான். எதற்கும் முறையான ஆதாரம் எதுவும் இல்லை.
பின்னால் ஆண்ட நம் மன்னர்களும் கூட நம் வரலாற்றை முறையாக பதிவு செய்யவில்லை. ஆனால், சில விஷயங்களை முறையாக பதிவு செய்ய வேண்டும் என்ற அறிவு ரொம்பவே இருந்திருக்கிறது.
உதாரணத்திற்கு, மன்னர்கள் கோயில்களுக்கு செய்த தானம் தர்மங்கள் அனைத்தையும் மிகவும் முறையாக கோயில்களிலும் வேறு பல பொது இடங்களும் கல்வெட்டுக்களாகவும் , செப்பேடுகளாகவும் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். அதிலும் ராஜராஜசோழன் ஒரு படி மேலே போய், பெரிய கோயிலுக்கு மற்றவர்கள் செய்த தான தர்மங்களையும் விலாவாரியாக கோயில் மதில் சுவர்களில் செதுக்கி வைத்தான். ஆனால், ஏனோ அவனும் கூட , தன் காலகட்டத்தில் நடந்த மிகப் பெரிய பல வரலாற்று நிகழ்ச்சிகளை பதிவு செய்யத் தவறி விட்டான்.
அவர்கள் சொல்லத் தவறிய நிறைய வரலாற்றை வெளிக் கொண்டு வந்ததில் புலவர்களின் பங்குதான் மிகப் பெரியது. (இதுவரை நமக்குக் கிடைத்த ) தாங்கள் இயற்றிய பெரும்பாலான பாடல்களில் தங்களின் ஆட்சி காலத்தில் நடந்த பல வரலாற்று விஷயங்களை நேரடியாகவும் , சிலேடையாகவும் எழுதி வைத்து விட்டுப் போய் விட்டார்கள்.
தமிழில் எழுதியிருந்த அந்தப் பாக்களை எல்லோருக்கும் புரியக் கூடிய எளிய தமிழில் மொழிபெயர்ப்பதற்குள் நம் தமிழ் அறிஞர்கள் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமில்லை. அதை வைத்து ஒரு சுவையான நாவலே எழுதி விடலாம். அந்த அளவிற்கு பல சுவையான மற்றும் எரிச்சலான விஷயங்கள் நிறைய உண்டு.
அவர்கள் அவற்றை ஆராய்ச்சி பண்ணும் போது மூன்று பெரிய பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருந்தது.
1. சிலேடை. பல நேரங்களில் அவற்றை சரியான அர்த்தத்தில் மொழி பெயர்க்க முடியவில்லை. இன்று வரை, அவை சரியான அர்த்தம்தானா என்ற குழப்பம் நிறையப் பேருக்கு இருக்கின்றன.
2. பணத்துக்காக பல புலவர்கள் நிறைய பொய்யான செய்திகளையும் பாடி வைத்துப் போயிருக்கின்றனர். உதாரணத்திற்கு மிகவும் ஃபேமஸான புலவர் ஒருவர், ஒரு மன்னனைப் பார்த்து ” 100 களம் கண்ட மாவீரனே” என்று பாடி நிறைய பொற்கிழிகளை லவட்டிக் கொண்டு போயிருப்பதாக ஒரு கல்வெட் கூறுகிறது. இதில் ஒரு கூத்து என்னவென்றால், அப்படி புகழப்பட்ட அந்த மன்னன், தான் வாழ்நாள் முழுவதும் ஒரு ப்ளே பாய் போல செம என்ஸாய் பண்ணி விட்டு, ஒரு போருக்குக் கூடச் செல்லாமல் தன் 34 வது வயதில் பாலியல் நோய் வந்து இறந்திருக்கிறான். புலவர் ஒருவேளை வஞ்சப் புகழ்ச்சி அணியாக அதை எழுதினாரா என்பது பற்றி எந்த ஒரு குறிப்பும் இல்லை. ஆனால், அவர் அதை சீரியஸாகவே பாடியிருக்க வேண்டும். காரணம், ஒருவேளை அது வஞ்சப் புகழ்ச்சி அணியாக இருந்திருந்தால் அந்த மன்னன் பொற்கிழி கொடுத்திருக்க சான்ஸ் இல்லை. நையப் புடைக்க வேறு ஏதாவதுதான் கொடுத்திருப்பான்.
இதுபோல சமயங்களில் வரலாற்று அறிஞர்களுக்கு ரொம்பவே குழப்பம் – எதை விடுப்பது எதை தொடுப்பது என்று.
3 கிட்டத்தட்ட அனைத்து கல்வெட்டுக்களுமே பழைய காலத்து வட்டெழுத்து முறையிலேயே இருந்தன. ஆரம்பத்தில் மண்டை காய்ந்து போயிருக்கிறார்கள்.
இருந்தாலும் கூட, பல வரலாற்று ஆராய்ச்சியாளர்கள், சரித்திர நாவலாசிரியர்கள் புண்ணியத்தில்தான் நமக்கு ஏதோ கொஞ்சமேனும் விஷயங்கள் கிடைத்திருக்கின்றன. அதிலும் உ.வே.சுவாமிநாதன் ஐயர், .ஆ.பெ.விசுவநாதம் பிள்ளை, கல்கி , குடந்தை பாலசுப்பிரமண்யம், ஏ.வி. சுபிரமணிய ஐயர் போன்ற பல அறிஞர்களின் பங்கு மிகப் பெரியது. தன் வாழ்நாள் முழுவதையுமே தமிழ் மற்றும் தமிழர்களின் ஆராய்ச்சிக்காக செலவிட்டவர்களும் நிறையப் பேர் உண்டு (கண்டிப்பாக இவர்களில் யாரும் இரண்டாவது பத்தியில் சொன்ன வாட்ஸப் மெஸேஜை அனுப்பியிருக்க மாட்டார்கள்) .
வரலாற்றுக் குறிப்புகள் என்று எடுத்துக் கொண்டால் சில யாத்திரிகர்கள் அளித்த பங்கும் ரொம்பவே பெரியது. முக்கியமாக மெகஸ்தனிஸ் மற்றும் யுவான் சுவாங். ஆனால், இவர்களும் கூட தமிழர்கள் வரலாற்றைப் பற்றியும் தமிழ் நாட்டைப் பற்றியும் மிகவும் விலாவாரியாக எழுதவில்லை. சின்னச் சின்ன குறிப்புக்களை மட்டுமே விட்டுச் சென்றிருக்கிறார்கள்.
இந்த விஷயத்தில், 16 -ம் நூற்றாண்டில் உள்ளே நுழைந்த மொகலாய மன்னர்கள்தான் ரொம்பவே விசேஷம். பாபர் நாமா, அக்பர் நாமா, ஹூமாயூன் என்று கிட்டத்தட்ட எல்லா மொகலாய மன்னர்களுக்குமே மிகவும் விரிவாக டைரி எழுதும் பழக்கம் இருந்திருக்கிறது. அதிலும் சில டைரிக் குறிப்புகள் ரொம்பவே தெளிவாக இருக்கின்றன. ” இன்று மதிய உணவு புறாக் கறியும் , மீன் வறுவலும். மகாராணி தன் கையால் ஊட்டியதால், கொஞ்சம் கூடவே சாபிட்டு விட்டேன் என்று நினைக்கிறேன். சரியான வயிற்றுப் போக்கு. மொத்தம் 6 முறை டாய்லெட் போகும்படி ஆகி விட்டது” ( இதில் மகாராணியின் உள்குத்து எதுவும் இருந்ததா என்பது பற்றி தகவல் எதுவும் இல்லை).
இது போல சுவையான தகவல்கள் முள்றியின் டைரியில் ….ஸாரி, மொகலாயர்களின் டைரியில் நிறையவே உண்டு.
ஏனோ நம் தமிழ் மன்னர்கள் யாருக்கும் இது போன்ற பழக்கம் எதுவும் இருந்தது போல் தெரியவில்லை. கொடுமை.
பின்னாளில் வந்த பிரிட்டிஷார் தமிழர்கள் பற்றிய சில பல விஷயங்களை வெளிக் கொண்டு வந்தனர். ஆனால், அவர்களை எதிர்த்துப் போராடியபோது , மறுபடியும் நம் வரலாறு வட இந்தியர்களால் வேண்டுமென்றே இரட்டடிப்பு செய்யப் பட்டது. வீர பாண்டிய கட்ட பொம்மன்தான் இந்தியாவிலேயே முதன்முதலில் வெள்ளையர்களை எதிர்த்து குரல் கொடுத்தது. இது எத்தனை வட இந்திய மக்களுக்குத் தெரியும் ? இந்தியாவில் முதல் சிப்பாய்க் கலகம் நடந்தது நம் வேலூரில்தான். அதற்குப் பிறகே பஞ்சாபுக்கும் மற்ற மாநிலங்களுக்கும் பரவியது. இது பற்றி உங்கள் வட இந்திய நண்பர்களிடம் கேட்டுப் பாருங்கள்- யாருக்காவது தெரியுமாவென்று. இதுபோல நிறைய நிறைய ….
பிரிட்டிஷார் செய்ததுதான் கொடுமையிலும் கொடுமை. ஆங்கிலம் தெரியாவிட்டால், ஆங்கிலத்தில் பேசாவிட்டால் நீங்களெல்லாம் உயிர் வாழ்வதே வேஸ்ட் என்ற ரேஞ்ச்சுக்கு பிரச்சாரம் செய்ய, நாம் புளியங்கொம்பாக அதைப் பிடித்துக் கொண்டு விட்டோம். “நான் பார்ன் & ப்ராட் அப் இன் மும்பை. எனக்கு டமில் கொஞ்சம் கொஞ்சம்தான் வரும் . பட் நோ ரீடிங் & நோ ரைட்டிங் ” என்று சொல்வது இன்று பெருமை கலந்த கர்வம். யாரேனும் சுத்தத் தமிழில் பேசினால் நம்ம மயில்சாமி போன்றோரைக் கூட்டி வந்து மொழிபெயர்க்க வேண்டியுள்ளது.
சரி , அவர்களை எல்லாம் விட்டு விடலாம். சுதந்திரத்திற்குப் பிறகு தமிழகத்தை ஆண்ட நம் ஆட்சியாளர்கள் என்ன செய்தார்கள் ? நம்மில் பெரும்பாலானோருக்கு வரலாற்றின் மீது வெறுப்பு வரக் காரணமே இவர்கள்தான். அசோகர் மரம் நட்டதையும், குளம் வெட்டியதையும், யுவான் சுவாங்கும், ஃபாஹியானும் வந்து போனதையும் வருடா வருடம் திரும்பத் திரும்ப பாடத் திட்டத்தில் சேர்த்ததுக்குப் பதிலாக தமிழர்கள் வரலாறு பற்றி கொஞ்சமேனும் ஆதாரத்துடன் சொல்லிக் கொடுக்கலாம்.
அதை விடக் கொடுமை, நம்மை கன்னாபின்னாவென்று சீரழித்த ஆங்கிலேயர்களை, “பிரபு” பட்டம் கொடுத்து விலாவாரியாக பஞ்ச சீலக் கொள்கை, புண்ணாக்குக் கொள்கை, ரௌலட் சட்டம் என்று சொல்லிக் கொடுப்பது. தேவைதானா? இருக்கிற குழப்பங்களில் இதைப் போய் அவர்களிடம் யார் சொல்வது ?
ஆட்சியாளர்கள்தான் இப்படியென்றால், நம் அறநிலையத் துறையும் , தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் கொடுக்கும் ரவுசு இன்னும் கொடுமை. சில பழமையான கோயில்களில் இது 5000 வருடக் கோயில் , 6000 வருடக் கோயில் என்று எந்த ஆதாரத்தையும் காட்டாமல் போர்டு வைத்திருக்கிறார்கள். சரி என்று , அந்தக் கோயிலின் ஸ்தல புராணத்தை வாங்கிப் பார்த்தால், இது அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் வந்து பாடிய ஸ்தலம் என்பதைத் தவிர்த்து வேறு எந்த உருப்படியான தகவலையும் சொல்வதில்லை. பிறகு எதற்கு ஸ்தல புராணம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
இப்போதெல்லாம் எல்லாவற்றிலும் அரசியல்தான். அது வரலாற்றிலும் விளையாடுவதுதான் மிகவும் வேதனையான விஷயம். உதாரணத்திற்கு நம் ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி மற்றும் கீழடி அகழ்வாராய்ச்சியை பெரிய அளவில் வெளிக் கொண்டு வராதது. அது என்னதான், மத்திய அரசாங்கத்தின் துறையென்றாலும் கூட நம் மாநில அரசாங்கங்களும் கூட பெரிய அளவில் அலட்டிக் கொள்லவில்லை.
பெரிய தமிழ் அறிஞர் , தமிழ் வித்தகர் என்று போற்றப் படும் கலைஞர் கூட தமிழுக்கும் தமிழர் ஆராய்ச்சிக்கும் இன்னும் நிறைய பண்ணியிருக்கலாம் என்பது என்னுடைய கருத்து.
வெறுமனே செம்மொழி அந்தஸ்து மட்டும் வாங்கிக் கொடுத்து விட்டால் போதுமா?
வெ.பாலமுரளி