பூம்புகார் – அன்று


பூம்புகார் ஒரு அதிசய நகரம் – இன்று ஒரு கிராமம்.

பூம்புகார் எவ்வளவு பழமையான நகரம் என்று தெரிந்தால், உங்களுக்கு ஆச்சரியத்தில் மயக்கமே வந்து விடும்…

ஆனால், பூம்புகார் பற்றி நமக்குத் தெரிய வருவது சிலப்பதிகாரம் நடந்ததாகக் கருதப்படும் இரண்டாம் (அ) மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே.

கோவலனும் , கண்ணகியும் தங்கள் மணவாழ்க்கையை இங்கிருந்துதான் தொடங்கினார்கள் என்கிறார் மிஸ்டர் இளங்கோ. 

மற்ற இதிகாசங்கள் மற்றும் காவியங்களோடு ஒப்பிடும்போது, சிலப்பதிகாரம் மட்டும் உண்மையில் நடந்த ஒரு கதையாகவே எனக்குத் தோன்றுகிறது. காரணம் , இளங்கோவடிகள் அந்த மாதிரி ஒவ்வொரு சம்பவத்தையும் அந்த இடங்களோடு ஒப்பிட்டு செமையாக ரெஃபெரன்ஸ் பாயிண்ட்ஸ் கொடுத்து விட்டுப் போயிருக்கிறார்.

கோவலன் மனம் திருந்தி , மேடம் கண்ணகியிடம் திரும்பியவுடன், இருவரும் டிஸ்கஸ் பண்ணி, மதுரைக்குச் சென்று புதிய தொழில் ஏதேனும் தொடங்கி , புது வாழ்க்கை ஆரம்பிப்போம் என்று பூம்புகாரை விட்டுக் கிளம்புகிறார்கள்.

அந்த இடத்திலிருந்து , அவர்கள் செல்லும் பாதையை மிகவும் நுணுக்கத்தோடு அணு அணுவாக விளக்குகிறார் இளங்கோவடிகள். அதை வைத்து , அவர்கள் சென்ற பாதையை முழுவதுமாகக் கணித்து விட்டார்கள் வரலாற்று ஆசிரியர்கள். அந்த வழிகளில் இன்றும் இரண்டு கண்ணகி கோயில்கள் உள்ளன எனகிறார் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன்.

கலைஞர் காலத்தில் ,தமிழக அரசாங்கமும் அந்தப் பாதைகளில் சில பலகைகளை வைத்து “ கண்ணகி , கோவலன் நடந்து சென்ற சாலை” என்று வழி சொல்லுகிறார்கள். அவற்றை கும்பகோணம், மயிலாடுதுறை பகுதிகளில் இன்றும் காணலாம் ( நான் இரண்டு இடங்களில் அது போன்ற போர்டுகளைப் பார்த்தேன்).

அவர்கள் செல்லும்போது கவுந்தி அடிகள் என்னும் ஒரு சமணத் துறவியும் , கூடவே சென்றிருக்கிறார். அழகர்கோயில் வழியாக மதுரையை நெருங்க்கும் போது கடச்சனேந்தல் என்னும் கிராமத்தில்தான் முதல் நாள் இரவைக் கழித்திருக்கின்றனர். இன்றும் அங்கு ஒரு பாழடைந்த வீட்டை “ இதுதான் கண்ணகி இருந்த வீடு என்கின்றனர்” என்கிறார், மதுரையைப் பற்றி ஆராய்ந்து வரும் எழுத்தாளர் சு. வெங்கடேசன். 

மேலும் அவர், கோவலன் கொல்லப்பட்டதும், கண்ணகி ஆவேசமாக சென்று கொளுத்திய மதுரை , இன்றைக்கு கீழடிக்கு அருகில் உள்ள மணலூர்தான் என்று அடித்துச் சொல்கிறார். ( சு. வெங்கடேசன் எழுதிய வைகை நதி நாகரிகமும், காவல் கோட்டமும் MUST READ புத்தகங்கள்).

பூம்புகாரில் ஆரம்பித்து மதுரைக்குப் போய்விட்டேனோ ?

சரி..திரும்பலாம்.

அன்றைக்கு , முற்காலப் பாண்டியர் காலத்திலும், சோழர் காலத்திலும் , பூம்புகார் மிகப் பெரிய துறைமுக நகரமாக விளங்கியிருக்கிறது என்பது சங்க இலக்கியங்கள் மூலமாகவும், சில தொல்லியல் ஆராய்ச்சிகள் மூலமாகவும் தெரிய வருகிறது.

காவிரி ஆறு இங்கு வைத்துத்தான் கடலில் கலப்பதால் , காவிரி ஆறு புகும் ஊர் என்னும் அர்த்தத்தில் “ காவிரி புகும் பட்டினம்” என்று பெயர் வந்திருக்கிறது. பின்னால் மருவி காவிரிப் பூம் பட்டினம், புகார், பூம்புகார் என்று மாறியிருக்கிறது.

சிலப்பதிகாரம் முடிந்து சில வருடங்களில் சுனாமி ஒன்று வந்து இந்தத் துறைமுகத்தை கடலுக்குள் கொண்டு சென்று விட்டது. இது பற்றி இரட்டைக் காப்பியத்தில் மற்றொன்றான மணிமேகலையில் விரிவாகச் சொல்லப் பட்டிருக்கிறது. 

மாநகர் கடல்கொள 
அறவண ரடிகளும் தாயரும் ஆங்குவிட்டு 
இறவாது இப்பதிப் புகுந்தது கேட்டதும் (மணிமேகலை 28 அடி 80-81). 

( அதாவது, எங்கள் மாநகரை கடல் நீர் சூழ்ந்து கொள்ள அறவணர் அடிகளும் , என் தாயும் ( மாதவி) இந்த இடம் விட்டு (காஞ்சிக்குக் ) கிளம்பினோம் என்கிறாள் மாதவியின் மகள் மணிமேகலை ) 

சிலப்பதிகாரத்தைத் தொடர்ந்து அதன் தொடர்ச்சியாகக மற்றொரு காப்பியமும் இயற்றப் பட்டிருப்பதால் , கண்டிப்பாக அது ஒரு உண்மைச் சம்பவமாகவே இருந்திருக்க வேண்டும் என்பது என் கருத்து.

கடல்கோள் (சுனாமி) வந்து காவிரிப் பூம்பட்டினத்தை கடலுக்குள் இழுத்துச் செல்லுவது ஒன்றும் முதல் முறையல்ல. இரண்டாவது முறை என்கிறார் Graham Hancock என்னும் ஆராய்ச்சியாளர். அது மட்டுமல்லாது 18ம் நூற்றாண்டின் இறுதியில் மூன்றாவது முறையும் ஒரு சுனாமி வந்து இந்த நகரத்தை அழித்திருக்கிறது. அது பற்றி கடைசியில்.

பின்னால் 6ம் நூற்றாண்டுக்குப் பிறகு இந்நகரம் பல்லவர் கைகளில் சென்று இன்னும் சிறப்புற்றிருக்கிறது. அவர்கள் கட்டிய “ பல்லவேஷ்வரர்” ஆலயம் இன்றும் அவர்களின் சிறப்பை ஜம்மென்று வெளியுலகிற்குச் சொல்லிக் கொண்டிருக்கிறது. 

கிட்டத்தட்ட ஏழாவது அல்லது எட்டாவது நூற்றாண்டிலிருந்தே இங்கு செட்டியார் சமூகம் அதிகமாக வாழ்ந்திருப்பதாகத் தெரிகிறது.

பதினொன்றாம் நூற்றாண்டில் இங்கு வாழ்ந்த பட்டினத்தார் இந்த நகரை இன்னும் ஃபேமஸாக்கி விட்டார். பூம்புகாருக்கு மிக அருகில் உள்ள திருவெண்காடு என்னும் ஊரில் பிறந்த பட்டினத்தார், வாழ்ந்தது , தொழில் புரிந்தது எல்லாமே காவிரிப் பூம்பட்டினத்தில்தான். கப்பலில் வாணிகம் சென்றவர் , வெறும் சாம்பலையும், விராட்டிகளையும் கொண்டு வந்ததைப் பார்த்து டென்ஷனான அவரது பெற்றோர்கள் , என்ன ராசா இது என்று கேட்க, கோபித்துக் கொண்டு “ காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே” என்று எழுதி வைத்து விட்டு துறவரம் சென்றதும் இந்தக் காவிரிப் பூம்பட்டினத்தில்தான். பின்னாளில் அவரது அன்னையார் இறந்த பிறகு , பச்சை வாழை மட்டைகளை வைத்து பத்து பதிகங்களைப் பாட அவை எரிந்தது வரலாறு. ( வைரமுத்து எழுதும் சில தங்கிலீஷ் பாடல்களுக்கும் அந்த மகிமை உண்டு என்பது வெறு விஷயம்) .

அவருக்குப் பிறகு அதே பட்டினத்தார் என்ற பெயரில் இன்னும் சில துறவிகளும் இந்த ஊருக்கு அருகிலேயே வசித்திருப்பதாத் தெரிகிறது.

18ம் நூற்றாண்டின் இறுதியில் மறுபடியும் ஒரு பெரிய புயலோ , சுனாமியோ வந்து இந்த நகரை சூரையாடியிருக்கிறது. அப்போது இங்கிருந்த நாட்டுக் கோட்டை செட்டியார் சமூகம் புலம் பெயர்ந்து காரைக்குடி தேவகோட்டை பக்கங்களுக்குச் சென்று அதை செட்டி நாடு என்று அழைக்கத்தொடங்கி விட்டார்கள். ஆனால் , உண்மையான செட்டி நாடு, பூம்புகார்தான் என்றார் அங்கிருந்த ஒரு பெரியவர். அதனால்தான் ஒவ்வொரு சிவ ராத்திரி அன்றும் (இன்றைய) செட்டி நாட்டிலிருந்து ஏராளமான மக்கள் பூம்புகார் வந்து பல்லவேஷ்வர் ஆலயத்தில் பெரிய திருவிழா எடுப்பதாகவும் கூறுகிறார்.

1960 களிலும், 70 களிலும் , அங்குள்ள மீனவர்கள், கடலுக்குள் ஒரு பெரிய ஊர் தெரிகிறது. அதில் உள்ள பெரிய பெரிய சுவர்களிலும் , தூண்களிலும் எங்கள் மீன் பிடி வலைகள் சிக்கி பாழ்படுகின்றன என்று கம்ப்ளெய்ன் பண்ணிக் கொண்டேயிருந்தார்கள். அதை ரொம்ப நாள் யாரும் கண்டு கொள்ளவேயில்லை. தமிழக மீனவர்கள் இருந்தால் என்ன, செத்தால் என்ன மனப்பாங்கு அப்போதே இருந்திருக்கிறது.

எங்க வீட்டுக்காரனும் கச்சேரிக்குப் போனான் என்பது போல, நமது மத்திய அரசாங்கத்திடம் உள்ள கடலாழ்வாராய்ச்சித் துறையும் 1980 முதல் 1993 வரை இங்கு வந்து நிறைய ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார்கள். கடலுக்குள் மூழ்கிப் போயிருக்கும் ஒரு நகரத்தையும் கண்டு பிடித்திருக்கிறார்கள். அதைப் பற்றி செய்தித் தாளில் வந்த ஒரு துணுக்குச் செய்தி மட்டும் இங்குள்ள அருங்காட்சியகத்தில் உள்ளது. அது பற்றி என்னுடைய அடுத்த கட்டுரை (பூம்புகார் – இன்று ) பேசும். கீழடியில் நடப்பது போலவே, அந்த ஆராய்ச்சி பற்றியும் எந்தவொரு அறிக்கையும் சமர்ப்பிக்காமல் ஃபைலை மூடி விட்டார்கள். 

அதைக் கேள்விப்பட்டு, Graham Hancock என்னும் ஆராய்ச்சியாளர், நமது அரசாங்கத்தை நாடி, ஒரு பெரும் போரட்டத்திற்குப் பிறகு 2000 முதல் 2003 வரை இங்கு தங்கியிருந்து , கடலில் மூழ்கி நிறைய ஆராய்ச்சிகள் செய்து “ The Underworld” என்னும் ஒரு நூல் எழுதினார். அந்தப் புத்தகம், இந்தியாவைத் தவிர மற்ற நாடுகள் அனைத்திலும் ஒரு பெரிய பரபரப்பை உண்டு பண்ணியது. 

அவருடைய ஆராய்ச்சியின் படி, நம் மீனவர்கள் சொன்னது போல பெரிய பெரிய கட்டடங்களும், பெரிய மதில் சுவர்களும், ராஜகாலத்துத் தூண்களும் நிறையவே உள்ளே இருப்பது உண்மை. நான் அனைத்தையும் தொட்டுப்பார்த்து , அதில் உள்ள பாசிகளையும் , கற்களின் துகள்களையும் எடுத்து வந்து ஆராய்ந்ததில், அவை அனைத்தும் 11,000 வருடத்துப் பழமையானது என்று தெரிய வந்தது என்று சொன்னார். இது ஏறத்தாழ ஐஸ் ஏஜ் எனப்படும் பனிக் காலத்தின் முடிவின் போது ஏற்பட்ட ஒரு சுனாமியின் போது கடல் அழித்த நகரம். அப்படியென்றால், அந்தக் காலத்திலயே நாகரிகத்தில் படு அட்வான்ஸ்டாக இருந்த ஒரு சமூகம் இந்தத் தமிழ்ச் சமூகம் என்ற கூற்றையும் முன் வைத்தார். 

வட இந்தியர்களால், ஆக்கிரமிக்கப் பட்டிருக்கும் நம் தொல்லியல் துறை அதை எப்படி ஒத்துக் கொள்ளும்…..க்ரஹாமின் ஆராய்ச்சியையும் , அவர் எழுதிய புத்தகத்தையும் நம் இந்தியாவில் யாருமே கண்டு கொள்ளவில்லை. அவருடைய ஆராய்ச்சியின் முடிவிற்கு , நம் இந்திய அரசாங்கத்தின் அங்கீகாரம் எதுவும் கிடைக்காததால், இதர நாடுகளின் ஆதரவும் கிடைக்கவில்லை. 

இது பற்றி, நிறைய படங்களும், காணொளிகளும் இணையதளத்தில் கொட்டிக் கிடக்கின்றன. க்ரஹாமின் ப்ளாக்கிலும் நிறைய தகவல்கள் உள்ளன. 

காங்கிரஸூம், பி.ஜே.பி யும், அரசியலில் எவ்வளவுதான் அடித்துக் கொண்டாலும், நம் தமிழர்களின் வரலாற்றை அழிப்பதிலும், ஒடுக்குவதிலும் நன்றாகவே ஒத்துப் போகிறார்கள். அதைத் தட்டிக் கேட்க வேண்டிய தமிழக அரசியல்வாதிகள் ஊழலிலும், தனி நபர் துதியிலும், மலிவான அரசியலிலும் ரொம்பவே பிஸியாக இருக்கிறார்கள். 

அது சரி……மக்கள் ???????

சரி…சரி..…விடுங்கள். நம் வாழ்வாதார விஷயத்திற்கு வருவோம். பேட்ட படம் 100 கோடியும், விஸ்வாசம் 125 கோடியும் வசூலாமே ? அப்படியா ? நம் வாழ்வை மலர வைக்கப் போகும் சூப்பர் ஸ்டார் ரொம்பவே அப்செட்டாமே ? உண்மையா ? யாராவது கொஞ்சம் அப்டேட் பண்ணுங்கப்பா .

வெ.பாலமுரளி 

பி.கு : பூம்புகார் – இன்று …….விரைவில் . மனதைத் திடப் படுத்திக் கொள்ளுங்கள்