அசோகத் தமிழி ( பிரம்மகிரி கல்வெட்டு)……

அசோகத் தமிழி ( பிரம்மகிரி கல்வெட்டு)……

பிரம்மகிரி, மத்திய கர்நாடகாவில் சித்திரதுர்கா மாவட்டத்தில் இருக்கும் ஒரு மலைப் பிரதேசம்.

பெங்களூருவிலிருந்து நாங்கள் காரில் சென்றோம். சாலை நன்றாக இருந்தாலும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு டீ கடைகளோ, உணவகங்களோ இல்லை. ரொம்பவே சிரமப்பட்டு விட்டோம்.
அசோகரின் ஒரு கல்வெட்டையாவது பார்த்து விட வேண்டுமென வைராக்கியத்துடன் போனால், அவரே “ நான் இரண்டரை வருடங்களாக வைராக்கியமில்லாமல் இருந்து விட்டேன்..” என்று அந்தக் கல்வெட்டில் புலம்பிக் கொண்டிருக்கிறார்.

இந்தக் கல்வெட்டு 1892 இல் ஒரு ஆங்கிலேயரால் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையும் சேர்த்து அசோகரின் கல்வெட்டுக்கள் மொத்தம் 33 . பெரும்பாறைக் கல்வெட்டுக்கள், சிறுபாறைக் கல்வெட்டுக்கள், தூண் கல்வெட்டுக்கள் என்று அவை வகைப் படுத்தப்பட்டுள்ளன.

நம்ம மதுரை மாங்குளம் கல்வெட்டைக் கண்டுபிடிப்பதற்கு முன்னால் அசோகரின் “சில” கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதால், அந்த பிராமியில் இருந்து வந்ததுதான் நம்ம தமிழ் பிராமி ( தமிழி) என்று ஐராவதம், நாகசாமி போன்றவர்கள் கருதி அதை ஆவணப்படுத்தி விட்டார்கள்.

பின்னாளில் புள்ளிமான் கோம்பை மற்றும் தாதப்பட்டி நடுகல் கல்வெட்டுக்கள், கீழடி, பொருந்தல், கொடுமணல், ஆதிச்ச நல்லூர் எல்லாம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு ஐராவதம் மற்றும் நாகசாமியின் கருத்துக்கள் தவறானவை, ஐராவதத்தால் தமிழ் பிராமி என்று பெயரிடப்பட்டது உண்மையில் “தமிழி” என்பது நிரூபணமானது. அதுமட்டுமல்ல. அந்தத் தமிழி , அசோக பிராமிக்கெல்லாம் ரொம்ப ரொம்ப பழையது என்பதும் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது.
அப்படியென்றால், பிராமி எப்படி உருவானது ?

ரொம்ப சிம்பிள்.
அசோகர் தன்னுடைய ஆணைகள் அனைத்தும் தான் ஆளும் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்றடைய வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அப்போது நாட்டில் பெரிய அளவில் புழக்கத்தில் இருக்கும் எழுத்து வடிவங்களைத் தேடும்போது கரோஷ்த்தி, அராமிக், கிரேக்கம் மற்றும் தமிழி எழுத்துக்களைத் தேர்வு செய்கிறார்.

அதில் தமிழி எழுத்து வடிவம், வர்க்க எழுத்துக்கள் இல்லாமலும், ஷ, ஸ போன்ற சிறப்பெழுத்துக்கள் இல்லாமலும் மிகவும் “ரா” வான மொழியாக இருந்ததால், அதை பிராகிருத மொழியில் நேரடியாக எழுத சிரமப்பட்டு அதில் சில பல மாற்றங்களை செய்து அந்தக் கல்வெட்டுக்களை வெட்டியிருக்கிறார் (மிகவும் தெளிவான, விரிவான எழுத்துருவம் எப்போதும் தொடக்க காலத்தில் உருவாவதில்லை என்பதை அனைத்து அறிஞர்களும் ஒத்துக் கொள்கிறார்கள். அசோகர் கல்வெட்டுக்கள் மிகவும் தெளிவாகவும் எழுத்துப் பிழைகள் குறைவாகவும், அழகாகவும் வெட்டப்பட்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது). அவருக்குப் பின்னால் வந்தவர்களும் அதையே பின்பற்றியிருக்கின்றனர். ஆனால், அந்த எழுத்துருவை அசோகருக்கு முன்னால், கல்வெட்டிலோ, பானை ஓடுகளிலோ “இதுவரை” கண்டு பிடிக்க இயலவில்லை.

இதை வைத்தே அவர்கள் சொல்லும் “அசோக பிராமி” காலத்தால் மிகவும் புதிது என்பதை கண்ணை மூடி சொல்லி விடலாம். அதுமட்டுமல்ல. என்னுடைய கருத்தில் அதை “அசோக பிராமி” என்று சொல்வதை விட “ அசோகத் தமிழி” என்று சொல்வதே பொருத்தமானது. அந்த அளவிற்கு நிறைய எழுத்துக்களும் ஓசைகளும் தமிழியை ஒத்தே இருக்கின்றன (த, ப, வ, ச என்று நிறைய).

சரி…பிரம்மகிரி கல்வெட்டு அப்படி என்னதான் சொல்கிறது ?

“தேவர்களுக்குப் பிரியனானவன் இங்ஙனம் ஆணையிடுகிறான். நற்காரியங்களில் விசேஷ ஊக்கம் செலுத்தாமல் இரண்டரை ஆண்டுகளுக்கு மேலளவும் நான் உபாஸகனாயிருந்தேன். கடந்த ஒரு ஆண்டாக சங்கத்திற் சேர்ந்து மிகுந்த ஊக்கத்தோடு உழைத்துவர எனக்கு நேரிட்டிருக்கிறது. இதுவரையும் தேவர்களை அனுசரித்து ஒழுகா மனிதர் இப்பொழுது ஜம்பூத்தீவிவு முழுவதும் தேவர்களை அனுசரித்து ஒழுகிவருகின்றனர். இது எனது உழைப்பின் பயனாகும். இந்நன்மை பெருமுயற்சியின்றிக் கிடைக்கக்கூடியதன்று. ஆனால் சிறியோரும் தமது உழைப்பால் மறுமையின் க்ஷேமத்தை யடையலாம். இதனாலன்றோ “சிறியோரும் பெரியோரும் முயன்றுவரட்டும்” என்ற முதுமொழி ஏற்பட்டுள்ளது. என் அயலாரும் இப்போதனையை உணர்ந்து இத்தகைய நன்முயற்சியை அழியாதபடி நிலைநாட்ட வேண்டும். இவ்வுத்தேசம் கட்டாயமாய் வளரும். இன்னுமின்னும் பல மடங்கு பயனளிக்கும்”.
— ஆர். ராமய்யர் மொழிபெயர்ப்பு, நூல் அசோகனுடைய சாஸனங்கள்- முதல் உபசாஸனம்

தொடர்ந்து பயணிப்போம்…