குடுமியான் மலை சென்று வந்தேன் என்று சொன்னவுடனேயே , என்னுடைய நண்பர் உயர்திரு சிவராமன் நடராஜன் அவர்கள், உங்கள் பயணம் பற்றி எழுதினால், மறக்காமல் இதன் பெயர்க் காரணம் பற்றி எழுத வேண்டும் என்று அன்புக் கட்டளையிட்டிருந்தார் .
எனவே அதிலிருந்தே ஆரம்பிப்போம்….
இதன் உண்மையான பெயர்க் காரணம் யாருக்கும் தெரியாது ( ம்க்கும்…இதுக்குத்தான் இந்த பில்ட்டப்பா , என்று பெங்களூருவிலிருந்து யாரோ திட்டுவது லேசாக இங்கே கேட்கிறது )
ஆனால்….இது பற்றி இரண்டு கதை சொல்லப் படுகிறது.
ஒன்று.
கடைச் சங்க காலத்தில் (கி.மு. 400 முதல் கி.பி. 200 வரை கடைச் சங்க காலம் எனக் கொள்ளலாம் ) , முதுகுடுமிப் பெருவழுதிப் பாண்டியன் என்னும் ஒரு மன்னனின் கீழ் இந்த ஊர் இருந்திருக்கிறது. இவன் மிகவும் நல்லவன் மட்டுமல்ல பெரும் கொடையாளியும் கூட . அதனால் இந்த ஊர் அவன் பெயரால் அழைக்கப் பட்டிருக்கலாம்.
இது பற்றி ஏதோ ஒரு சங்க நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று ஒரு தகவல். ( ஆதாரம்: புதுக்கோட்டை மாவட்ட வரலாறு . எழுதியவர் : டாக்டர் ஜெ. ராஜாமுகமது )
இரண்டு :
கிட்டத்தட்ட 15 ம் நூற்றாண்டில் இந்தப் பகுதியை ஆண்ட ஒரு பாண்டிய மன்னன் தினமும் இங்குள்ள சிவாலயத்தில் இரவு நேரப் பூஜை செய்வதை வழக்கமாக வைத்திருக்கின்றான். அந்த பூஜை முடிந்த பிறகே கோயில் மூடுவது வழக்கமாக இருந்திருக்கிறது.
ஒரு நாள் மன்னன் வரத் தாமதமாகி விட்டது. அங்கிருந்த அர்ச்சகர், இனி மன்னன் வர மாட்டான் என எண்ணி, பூஜைக்காக வைத்திருந்த மலரை அவருடைய பெண் தோழிக்குக் கொடுத்துத் தலையில் சூட வைத்திருக்கிறார். இது நடந்து சில நிமிடங்களிலேயே, மன்னன் வரும் “ பராக் பராக்” ஒலி கேட்டு, பதறிப் போன அர்ச்சகர் , அந்தப் பெண்ணிடம் கொடுத்த மலரைத் திரும்ப வாங்கி, ஒன்றுமே நடக்காதது போல், மன்னன் முன்னிலையில் இறைவனுக்குப் படைத்து அந்தப் பூவை மன்னனிடம் அளித்திருக்கிறார்.
அந்த மன்னனுக்கு கண்ணு செம பவர் போலிருக்கு. அந்தப் பூவிலிருந்த ஒரு நீண்ட தலை முடியைப் பார்த்து விட்டு “ என்ன இது அபச்சாரம் ? “ என்று கோபத்துடன் அந்த அர்ச்சகரைப் பார்த்து கேட்டிருக்கிறார்.
அதற்கு அந்த அர்ச்சகர் கொஞ்சமும் யோசிக்காமல், “ இங்குள்ள சிவனுக்கு குடுமி உள்ளதே உங்களுக்குத் தெரியாதா ? அதில் இருந்து உதிர்ந்த முடிதான் இது “ என்று பெரும்போடாக ஒரு போடு போட்டிருக்கிறார். கொஞ்சம் குழம்பிப் போன மன்னன் , “ அப்படியா ? எங்கே காண்பி..நான் பார்க்க வேண்டும்” என்றிருக்கிறார். அதற்கு அந்த அர்ச்சகர் , “ இரவு நேரப் பூஜைக்குப் பிறகு இறைவனைத் தரிசிப்பது முறையல்ல. நாளைக்குக் காலையில் காண்பிக்கிறேன்” என்றிருக்கிறார்.
அவர் எந்தத் தைரியத்தில் அதைச் சொன்னார் என்று தெரியவில்லை. ஆனால், அவர் செம தில்லானவர் என்று மட்டும் புரிகிறது. பின்னே….அவர் மட்டும் காண்பிக்காவிட்டால், அவர் தலை அவர் வசம் இருக்காது என்பது அவருக்குத் தெரியாதா என்ன …
துணிந்து சொல்லி விட்டு, மன்னன் சென்ற பின்னர், இறைவனிடம் போய் ( நம்ம பாண பத்தர் போல ) , ஓவென்று கதறி அழுது , என்னைக் காப்பாற்று ஈஸ்வரா என்று முறையிட்டிருக்கிறார். இறைவனும், “இவெய்ங்கெளோட ஒரே ரோதனையாப் போச்சு. நம்மளக் கேட்காம இவெய்ங்கெளா ஏதாவது ஒரு பீலா விட்டு விட வேண்டியது, அப்புறம் நம்மளை வந்து காப்பாற்று என்று சொல்ல வேண்டியது என்று அலுத்துக் கொண்டே….ஓ.கே. லெட் அஸ் ஸீ “ என்று சொல்லியிருக்கிறார்.
மறு நாள் காலை வந்து பார்த்த மன்னனுக்கு ஒரே அதிர்ச்சி. கடவுளுக்கு ஒரு குடுமி இருந்திருக்கிறது. உடனே, “ சாரி அர்ச்சகர் சார் “ என்று மன்னிப்பு கேட்டு விட்டு கோயிலுக்கு நிறைய தான தர்மங்கள் செய்தான் என்று ஒரு கதை உள்ளது.
ஆனால், இன்றும் இங்குள்ள சிவனுக்கு , குடுமி இருப்பதைக் காணலாம்.
அதனாலேயே , இங்குள்ள சிவனுக்கு “ சிகாநாத சுவாமி “ என்று பெயர்.
10ம் நூற்றாண்டில் இந்த ஊரின் பெயர் “ திரு நலக் குன்றம்” என்பதை ஒரு கல்வெட்டிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது .
14 ம் நூற்றாண்டு வாக்கில் எழுதப்பட்ட ஒரு கல்வெட்டில், இந்த ஊரின் பெயர் “ சிகா நல்லூர் “ என்று பொறிக்கப்பட்டுள்ளது.
எனவே , குடுமியான் மலை என்னும் பெயர் , பின்னாளில் ஏற்பட்ட
பெயர் போலவே தெரிகிறது.
என்ன சிவராமன் சார்….பெயர்க் காரணங்கள் போதுமா ? மெயின் சப்ஜெக்ட்டிற்குள் நுழையலாமா ?
இதுவரை , இந்தியாவில் ஒரு லட்சம் கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப் பட்டிருக்கின்றன. அதில் கிட்டத்தட்ட 60,000 கல்வெட்டுக்கள் தமிழகத்தில் மட்டும் கண்டெடுக்கப்பட்டவை. ( இந்த அறுபதாயிரத்தில், “ இந்த பேருந்து நிலையத்தை எங்கள் அம்மா, இதயதெய்வம் , தமிழகத்தை காக்க வந்த பராசக்தி, புரட்சித்தலைவி மாண்புமிகு டாக்டர் ஜெ.ஜெயலலிதா திறந்து வைத்தார்” மற்றும் “ இந்த சமத்துவபுரத்தை முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் மு.கருணாநிதி திறந்து வைத்தார் “ போன்ற இக்காலக் கல்வெட்டுக்கள் கணக்கில் வாரா ).
இந்தியாவில் கிடைத்த பழங்காலக் கல்வெட்டுக்களில் மிகவும் பழமையான ஒன்றான அசோகர் கல்வெட்டுக்களில் தமிழகத்தில் ஆண்ட பாண்டிய மன்னர்களைப் பற்றிய குறிப்புகள் ஒன்றும் உள்ளது. இந்தக் கல்வெட்டு கி.மு மூன்றாம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்டது என்பதிலிருந்து, அப்போது தமிழகமும் ஒரு மன்னனின் ஆட்சியில் மிகவும் சிறப்போடு இருந்தது என்பது தெளிவாகிறது….
சரி…விஷயத்திற்கு வருவோம்…..
நம் தமிழகத்தில் கிடைத்துள்ள 60,000 கல்வெட்டுக்களில் 120 கல்வெட்டுக்கள் , இந்தக் குடுமியான் மலையில் மட்டுமே உள்ளன….
இந்தக் கல்வெட்டுக்களின் மூலம் இந்தக் குடுமியான் மலை கிட்டத்தட்ட நாலைந்து வெவ்வேறு அரசாட்சிகள் மூலம் மேன்பட்டிருக்கின்றது என்பதை அறியும் போது ஆச்சரியமாக இருக்கிறது. நமக்குக் கிடைத்த இந்தக் கல்வெட்டுக்கள் மூலம், இந்த ஊரைச் சுற்றி 1500 வருடங்கள் நிறைய விஷயங்கள் நடந்திருக்கின்றன என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
முற்காலப் பாண்டியர்களில் ஆரம்பித்து, பல்லவர், சோழர், திருச்சியைச் சுற்றி ஆண்ட தொண்டைமான் அரசர்கள், நாயக்கர்கள் என்று நிறைய அரசர்கள் இந்த ஊரைக் கொண்டாடியிருக்கின்றனர்.
ஒவ்வொருவர் காலத்திலும் இந்தக் கோயில் ஒவ்வொரு விதமாக மெருகேறியிருக்கிறது. அது மட்டுமல்லாமல், 17ம் நூற்றாண்டில் உமையாள்வி நாச்சி என்னும் ஒரு தாசிப் பெண்ணும் இந்தக் கோயிலுக்கு ஏராளமான பொற்செல்வங்கள் அளித்து மகிழ்ந்திருக்கிறாள் என்று தெரிகிறது.
இங்குள்ள கல்வெட்டுக்களில் மிகவும் பழமையானது, இங்குள்ள மலையின் அடிவாரத்தில் செதுக்கப்பட்டுள்ள இசைக் கல்வெட்டுக்கள். இதன் சரியான காலத்தைக் கண்டறிய யாரும் முயற்சித்ததாகத் தெரியவில்லை. ஆனால், அதன் வட்டெழுத்து முறையை வைத்துப் பார்க்கையில், இது கி.பி. 4ம் நூற்றாண்டிலிருந்து கி.பி 6ம் நூற்றாண்டிற்கிடையில் பொறிக்கப் பட்டதாக இருக்க வேண்டும் என்கிறார் டாக்டர் ராஜாமுகமது. இது பல்லவர்கள் செதுக்கியது என்று பரவலாகக் கருதப் பட்டாலும், இது பாண்டிய மன்னர்களின் அரும்பணியே என்பதுதான் உண்மை.
அதில், “சித்தம் நமஹ சிவாய” என்று ஆரம்பித்து நிறைய சங்கீதம் பற்றிய குறிப்புகள் எழுதப்பட்டு, கடைசியில் இதை வடித்தது ருத்ராச்சாரியரின் மாணவன் பரம மகேஸ்வரன் என்னும் மன்னன் என்னும் குறிப்போடு முற்றுப் பெறுகிறது. மொத்தம் 13 அடிக்கு 13 அடி சைஸ். அதில் ஒரு விநாயகரின் சிலையும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தப் பரம மகேஸ்வரன் பல்லவ மன்னனா இல்லை பாண்டிய மன்னனா என்பது பற்றிய விவாதம் இன்னும் முற்றுப் பெறவில்லை.
எது எப்படியோ, ஏறத்தாழ 1500 வருடங்களுக்கு முன்னால், சங்கீதத்தில் நிறைய ராகங்களையும் , அதை எப்படி பாடுவது அல்லது வாசிப்பது என்ற விதிமுறைகளையும் ஒரு பொது இடத்தில் பொறித்து வைத்ததன் மூலம் இதுவே உலகின் முதல் சங்கீதப் பள்ளியாக இருக்க வேண்டும் என்று அனைத்து (தமிழ்நாட்டு) கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களும் கருதுகின்றனர்.
கண்டிப்பாக இங்கு நிறைய மாணாக்கர்கள் வந்து திறந்தவெளியில் அமர்ந்து சங்கீதம் கற்றுக் கொண்டிருக்க வேண்டும்.
இது பற்றி, தமிழகத்தை விட்டு வெளியில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
நம் உள்ளூரில் உள்ளவர்கள் நிறையப் பேருக்கே இது தெரியவில்லை என்பது வருத்தமான ஒரு செய்தி.
இது மட்டுமல்லாமல், இங்குள்ள குன்றின் மேல் 63 நாயன்மார்களின் திருவுருவங்களும் பொறிக்கப்பட்டுள்ளதை கீழிருந்தே பார்க்க முடிகிறது. பாதுகாப்பு கருதி, மேலே செல்வது தடை செய்யப்பட்டுள்ளது ..இது பொறிக்கப்பட்ட காலம் தெரியவில்லை.
இங்குள்ள குகைக் கோயிலில் ஒரு சுரங்கம் உள்ளது. அதை இப்போது ஒரு கம்பி வேலி போட்டு மூடியிருந்தாலும், உள்ளே உள்ள ஒரு மின்சார விளக்கின் மூலம், அதன் அமைப்பை ஓரளவு ஊகிக்க முடிகிறது. இது கிட்டத்தட்ட 8ம் நூற்றாண்டில் கட்டப் பட்டிருக்கிறது. இங்கும் நிறைய கல்வெட்டுக்கள். ஃபிடில் போல, கொட்டாங்குச்சி வயலின் போல நிறைய இசைக் கருவிகளின் கல்வெட்டுக்கள், இந்தப் பகுதியே இசை சம்பந்தப்பட்ட ஒரு பல்கலைக் கழகமாக இருந்திருக்குமோ என்று எண்ணத் தோணுகிறது.
அதற்குப் பின்னர் அருகில் கட்டப்பட்ட அம்பாள் சந்நிதியிலும் இசை பற்றிய நிறைய கல்வெட்டுக்கள். அதில் சில படங்களை இங்கு பதிவிடுகிறேன்.
பின்னாளில் விஜய நகர மன்னர்கள் காலத்திலும், தொண்டைமான் மன்னர்கள் காலத்திலும் செதுக்கப்பட்ட சிற்பங்கள் நிறைய முன் மண்டபத்தில் உள்ளன…..இவை அனைத்தும், அற்புதமான சிற்பங்கள். அதிலும் நாராயணனின் நரசிம்ம அவதார சிற்பமும், பத்துத் தலை ராவணனின் சிலையும், மனமதன்,ரதிதேவியின் சிலையும் குறிப்பிட்டுச் சொல்லும் அற்புதங்கள்.
மேலே குன்றிற்குச் செல்லும் வழியில் உள்ள குகைகள் கற்கால மனிதர்கள் மனிதர்கள் வசித்த இடமாக இருந்திருக்க வேண்டும் என்கிறார் ராஜா முகமது.
நாங்கள் நேரமின்மை காரணமாக இரண்டு மணி நேரம் மட்டுமே இங்கு செலவிட முடிந்தது வேதனையான ஒரு விஷயம்.
குடுமியான் மலையைப் பார்த்து விட்டு சென்றதால்தானோ என்னவோ , அதற்கு அருகில் உள்ள சித்தன்ன வாசல் என்னை ரொம்ப ஈர்க்கவில்லை. அது பற்றி இன்னொரு கட்டுரை விரைவில்.
அதையும் பார்த்து விட்டு , வரும் வழியில் ராஜ ராஜ சோழனின் மாமனார் ஊரான கொடும்பாளூர் சென்றோம். அங்குள்ள மூவர் கோயில், ஐவர் கோயிலுல் பற்றி விரைவில்….
வெ.பாலமுரளி…
பி.கு: வழக்கம் போல், இந்தக் கோயிலிலும் தொல்லியல் ஆராய்ச்சியார்கள் இங்கு செய்துள்ள ஆராய்ச்சிகள் பற்றி எந்தவொரு பலகைகளையும் வைத்திருக்கவில்லை. அங்குள்ள அர்ச்சகர்களும், அங்கு கைடு போல வேலை செய்யும் ஒருவரும் நிறைய தகவல்களைச் சொல்கிறார்கள். அவற்றில் நிறைய கதைகளும் உள்ளடக்கம்….மன்மதன் சிலையைப் பார்த்து ராமன் சிலை என்று சொல்வது, குகைக் கோயில் என்பதாலேயே இதைக் கட்டியது ஒரு பல்லவ மன்னன் என்பது போல நிறைய. இருந்தாலும் , அரசாங்கம் செய்யாது விட்டதை இது போன்ற எளிய மக்கள் செய்வதறிந்து மகிழ்ச்சியே …..
இந்தக் கோயிலுக்கு ரொம்பப் பேர் வருவதில்லைங்க என்று வருத்ததுடன் அர்ச்சகர் சொன்னது மனதை என்னவோ செய்தது. இன்னும் செய்கிறது …