கொடும்பாளூர்…..ஒரு காலத்தில் மிகவும் பிரசிதிபெற்ற நகரம்….கல்கியின் அனைத்து நாவல்களிலும் கொடும்பாளூர் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். அந்த அளவிற்கு சரித்திரத்தில் ஒரு தனி இடம் உண்டு இந்த நகரத்திற்கு.
கண்ணகியும், கோவலனும் மதுரை நோக்கி செல்லும் போது , இந்த ஊரைக் கடந்துதான் சென்றார்கள் என்று குறிப்பிடுகிறார் இளங்கோவடிகள்.
அப்போது இந்த ஊரின் பெயர் கொடும்பை.
இந்த ஊரை ஆண்டது “ இருக்கு வேளிர் குடி” மன்னர்கள். இவர்கள் சோழ அரசின் கீழ் ஆண்ட சிற்றரசர்கள். எனவே இந்த ஊர் “ இருக்கு வேளூர்” என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 7ம் நூற்றாண்டிலிருந்து 12ம் நூற்றாண்டு வரை சோழ மற்றும் பல்லவ மன்னர்கள் தொடுத்த பெரும்பாலான போர்களில் இந்த “ இருக்கு வேளிர் “ சிற்றரசர்களின் பங்கும் இருந்திருக்கிறது.
எல்லாவற்றிற்கும் மேல், ராஜ ராஜ சோழனின் பட்டத்தரசி, ராஜேந்திர சோழனின் தாயார் வானவன் மாதேவி கொடும்பாளூர் இளவரசிதான்.
பின்னர் திருமலை நாயக்கர் காலத்தில் அவருடைய ஆட்சியின் கீழ் இந்த ஊர் வந்துள்ளது. பின்னாளில் வந்த ராணி மங்கம்மாள் இந்த ஊருக்கு “மங்கம்மாள் சமுத்திரம்” என்று பெயர் சூட்டி அழகு பார்த்திருக்கிறார்.
63 நாயன்மார்களில் ஒருவரான இடங்கழி நாயனார் இந்த ஊரில்தான் பிறந்திருந்திருக்கிறார். இது பற்றி சேக்கிழார் தனது பெரியபுராணத்தில் குறிப்பிட்டிருக்கிறார். அது 12 ம் நூற்றாண்டில் .
இவ்வளவு சிறப்பு வாய்ந்த கொடும்பாளூர் இன்று ஒரு சிறிய கிராமம். மதுரை – திருச்சி மெயின் ரோட்டில் உள்ளது.
நாங்கள் குடுமியான் மலை சென்று விட்டு திரும்பும்போது , கொடும்பாளூர் சென்றோம் .
நான் வாசித்த கொடும்பாளூர் இந்த கிராமம்தானா என்று என்னால் நம்பவே முடியவில்லை. இன்றுள்ள கிராம மக்களுக்கு இந்த ஊரின் பெருமை பற்றி ஒன்றும் தெரியவில்லை. இங்கு வரலாற்று சிறப்பு மிக்க அரண்மனை, கோயில்கள் ஏதும் இருக்கிறதா என்று ஒரு பாட்டியைக் கேட்டேன். அதெல்லாம் தெரியாது. ஆனா, மூவர் கோயிலையும், ஐவர் கோயிலையும் பார்க்க கவர்ன்மெண்ட் ஆபிசருங்க வருவாக, என்று சொல்லி விட்டு, அதற்கு எப்படிப் போவது என்ற வழியையும் காண்பித்தார்.
அது போதாதா , எனக்கு. சல்லென்று வண்டியை விட்டேன் மூவர் கோயிலை நோக்கி.
மிகவும் ஆச்சரியமாக , தமிழ்நாடு தொல்லியல் துறை இந்தக் கோயிலை மிகவும் சுத்தமாகப் பராமரித்து வருவது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
நுழையும் இடத்தில், இந்த மூவர் கோயில் , இருக்கு வேளான பூதி விக்கிரம கேசரி காலத்தில் கட்டப்பட்டது என்று ஒரு பலகை நம்மை வரவேற்கிறது.
இவன் பத்தாவது நூற்றண்டில் வாழ்ந்த “ இருக்கு வேளிர்” வம்சத்தைச் சார்ந்த ஒரு சிற்றரசன். இவனுக்கு இரண்டு மனைவிகள். வரகுண நங்கை (அனுபமா ) மற்றும் கற்றளி பிராட்டியார். இதில் முதல் மனைவி வரகுண பிராட்டியார், இரண்டாம் பராந்தகனின் மகள் என்று தெரிகிறது.
அவர்களுக்காக இரண்டு கோயில்களும், தனக்காக ஒரு கோயிலும் சேர்த்து மூன்று கோயில்களாகக் கட்டியிருக்கின்றான். அந்த மூன்று கோயில்களையும் இணைத்து ஒரு பெரும் மண்டபமும், ஒரு பெரிய விமானமும் இருந்திருக்கிறது. சரியான பராமரிப்பு இல்லாதலாலும், சில இயற்கைச் சீற்றங்களாலும், வலது பக்கம் உள்ள ஒரு கோயிலும் ( இது எந்த மனையின் பெயரால் கட்டப் பட்டது என்ற தகவல் இல்லை ) , பொது மண்டமும், விமானமும் அழிந்து அதன் மிச்சங்கள் மட்டுமே இன்று தாங்கள் வாழ்ந்த சிறப்பைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கின்றன.
இந்த மூன்று கோயில்களுமே சிவாலயங்கள். அதில் ஒன்றில் மட்டுமே சிவலிங்கம் உள்ளது. மற்றொன்றில் அதுவும் இல்லை. பெரிதாக பூஜை ஒன்றும் நடப்பது போல் தெரியவில்லை.
அதில் நடுவில் உள்ள கோயிலில் ஏராளமான கல்வெட்டுக்கள், இந்த மன்னனின் சிறப்பைப் பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன. இது வடமொழி சார்ந்த கிரந்த லிபியில் உள்ளது ( இது போன்ற கல்வெட்டுக்கள் மொழி பற்றி விரைவில் ஒரு கட்டுரை எழுதுகிறேன் ) .
இந்த மூன்று கோயிலும் அப்பர் , சுந்தரர் மற்றும் சம்பந்தருக்காகக் கட்டப்பட்டது என்றும், இல்லை இல்லை இது சிவா , விஷ்ணு , பிரம்மா ஆகிய மூவருக்காவும் கட்டப்பட்டது என்று வெவ்வேறு விவாதங்கள் உள்ளன.
இந்தக் கோயிலின் இடது பக்க மூலையில் , ராஜ வம்சத்துப் பெண்கள் குளிக்கும் ஒரு கிணறு ஒன்றும் உள்ளது. அதன் உள்ளே செல்லும் படிக்கட்டுகள் வழியே உள்ளே சென்றால், உள்ளே தண்ணீர் இல்லை. ஆனால், மிகவும் த்ரில்லிங்காக இருந்தது. ராணிகள் செல்லும் அந்தக் கிணற்றின் படிக்கட்டில் எங்கள் வீட்டு ராணியான என் மனைவியை ( சரித்திரம் முக்கியம் அமைச்சரே ) உட்கார வைத்து ஒரு படம் எடுத்து விட்டு அங்கிருந்து கிளம்பினோம்…..
ஏனோ…அந்த இடத்தை விட்டுக் கிளம்பவே மனமில்லை. ஏதோவொரு பூர்வ ஜென்ம பந்தம் என்னை இழுப்பது போலவே ஒரு உணர்வு.
அங்கிருந்து ஒரு 100 மீட்டர் தொலைவில் ஐவர் கோயில் என்றழைக்கப்படும் “ ஐற்றளி” உள்ளது. இந்த இடம் முற்றிலுமாக அழிந்து அதன் அடித்தளம் மட்டுமே இன்று காண முடிகிறது.
இதைக் கட்டியவன் “ இராஜ சிம்ம பல்லவன்” என்பத்தைத் தவிர வேறு எந்தத் தகவலும் இல்லை.
ஆனால், அதன் அமைப்பை வைத்துப் பார்க்கையில், இங்கு ஐந்து தனித் தனி கோயில்கள் ஒரே இடத்தில் இருந்திருப்பது தெரிகிறது.
இராஜ சிம்மன் இதை இப்போது பார்த்தால், என்ன நினைப்பான் என்று நினைக்கையிலேயே என் மனம் கனத்து விட்டது….
ஏதாவது செய்ய வேண்டும்…..
வெ.பாலமுரளி…