ரஞ்சித்தும் ராஜ ராஜனும்…


ரஞ்சித்தும் ராஜ ராஜனும்…

காலா, கபாலி படங்கள் இயக்கியபோது கூட இவ்வளவு பாப்புலாரிட்டி கிடைக்கவில்லை. பா.ரஞ்சித்துக்கு இந்த முறை அவ்வ்வ்வ்வ்வ்வளவு பாப்புலாரிட்டி. ஆனால்,இந்த முறை நெகட்டிவ் பாப்புலாரிட்டி.

இது தேவையா என்றால்,கண்டிப்பாக தேவையில்லாத ஒன்று.

அதுவும் அவர் அங்கிருந்த கூட்டத்தை கவரும் வகையில்,கை தட்ட வேண்டுமென்ற வகையில் பேசிய விதம்,திருமாவளவன்,டாக்டர் கிருஷ்ணசாமி வரிசையில் விரைவில் இவரும் ஒரு ஜாதிக் கட்சியை ஆரம்பிப்பார் என்று கண்ணை மூடிக் கொண்டு சொல்லலாம்.

ஆனால்,இவரால் இவர் சார்ந்த சமூகத்திற்கு ஏதேனும் நன்மை ஏதும் கிடைக்குமா என்றால்,சந்தேகமே.

அவசியமில்லாத காண்ட்ரவர்ஷியல் விஷயங்களை,ஆதாரங்களின்றிப் பேசி,கூட்டத்தை கவர்ந்தவர்களில் நிறையப் பேர்,அனேகமாக எல்லோருமே காலச் சக்கரத்தில் காணாமல் போயிருக்கிறார்கள் என்பதுதான் வரலாறு.

ரஞ்சித்தும் அந்த இலக்கை நோக்கித்தான் போய்க் கொண்டிருக்கிறார் என்பது என் யூகம்.

ரஞ்சித் பேசியதை கூடப் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால்,அதற்குப் பிறகு பொங்கியெழுந்தார்கள் பாருங்கள் நம்ம ஊர் மக்கள் அதைத்தான் கொஞ்சம் கூட சகித்துக் கொள்ள முடியவில்லை.

அதற்கும் மேலே , அவர் மீது கேஸ் போட்டதெல்லாம் ரொம்பவே ஓவர்.

சரித்திரம் தெரிந்த அறிஞர்கள் கோபப்பட்டால் அதில் ஒரு அர்த்தம் இருக்கிறது.

ஆனால், சரித்திரத்திற்கு சம்பந்தமேயில்லாத பிராமணச் சங்கத் தலைவர், தமிழ்நாடு வெள்ளாளர் சங்கத்தின் தலைவர், முக்குலத்தோர் ஜாதிச் சங்கங்கள் போன்று இன்னும் சில ஜாதிச் சங்கத்தின் தலைவர்கள் கண்டனச் செய்திகள் வெளியிட்டது , இந்தப் பிரச்சினையை ஜாதிப் பிரச்சினையாக மாற்றத் துடிப்பது உள்ளங்கை நெல்லிக் கனியாகத் தெரிகிறது.

இதை விடக் கொடுமை, ராஜ ராஜச் சோழன் எங்கள் ஜாதிதான் என்று கிட்டத்தட்ட 10 ஜாதிகள் உரிமை கொண்டாடுகின்றன.

ரஞ்சித்தும், “ ராஜ ராஜன் எங்கள் ஜாதியாக இருக்க வேண்டுமென்ற அவசியம் எங்களுக்கு (????????)இல்லை” என்று உணர்ச்சி பொங்க முழங்கினார்.

இது அசிங்கம் மட்டுமல்ல. கேவலம்.

அப்பேற்பட்ட ஒரு மாபெரும் மன்னனை எப்படி ஒரு ஜாதி வட்டத்துக்குள் சுருக்க முடியும் ?அவருடைய உண்மையான பெயர் அருள்மொழித் தேவர். இதில் உள்ள “தேவர்” பெயர் கூட ஒரு பட்டப் பெயர்தான். அந்தக் காலத்தில் நிறைய சமூகத்து மன்னர்கள் தங்கள் அடைப் பெயராக “தேவர்” என்று வைத்திருக்கிறார்கள் என்பதற்கு நிறைய வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.

நம் தமிழர்களுக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான வரலாறு இருந்தும், அதை உலக அரங்கிற்குக் கொண்டு செல்ல முடியாமைக்கு இந்த கேடு கெட்ட ஜாதி அரசியலும், வட இந்தியா தென்னிந்தியா அரசியலுமே காரணம்.

நமது தமிழர்களின் வரலாறும், தொன்மையும் வெளியில் சென்று விடக் கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும், வட இந்திய வரலாற்று ஆராய்ச்சியாளர்கள், தொல்லியல் துறை அதிகாரிகள் , சில அரசியல்வாதிகள் முன்னிலையில் நாம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டாமா ?

“ஜாதிகள் இல்லையடி பாப்பா” என்று முழங்கிய பாரதியின் ஜாதிப் பெயரை தன் பின்னால் வைத்துக் கொண்டு ஒருவர் “ என்ன, ரஞ்சித் இப்படிப் பேசுகிறார். தமிழ் தமிழ் என்று போராடும் ( ?????)உங்களைப் போன்ற தமிழ்ப் போராளிகள் ஒன்றுமே சொல்ல மாட்டேன் என்கிறீர்கள் “ என்று என்னுடன் சண்டைக்கு வருகிறார்.

ராஜராஜன் ஒரு மிகப் பெரிய சக்கரவர்த்தி. காரணமேயில்லாமல் அவனை ஒருவர் பழித்துப் பேசினால், அந்த ஆளைக் கண்டு கொள்ளாமல் ஒதுக்கி விட்டுப் போவது நல்லதா, இல்லை ஆளாளுக்கு கண்டனம் செய்கிறேன் பேர்வழி என்று அவரை ஒரு பெரிய ஹீரோ ஆக்குவது நல்லதா ? நீங்களே சொல்லுங்கள்.

சரி விஷயத்திற்கு வருவோம்.

ரஞ்சித் சொன்னது ஒன்றும் புதிய விஷயமில்லை. இதே விஷயத்தை இதற்கு முன்னரே வேறு சிலர் சொல்லியும், எழுதியும் இருக்கிறார்கள். அது என்ன புத்தகம் , யார் எழுதியது என்று இங்கே சொல்லி அந்தப் புத்தகத்தின் விற்பனையை கூட்டுவதில் எனக்கு உடன்பாடில்லை.

ஆனால், ஒரு விஷயம்.

ரஞ்சித் சொல்லியதில் அனைத்துமே தவறான தகவல்கள் கிடையாது.

புகார் நம்பர் 1. எங்கள் நிலத்தை ராஜ ராஜன் பறித்துக் கொண்டார்.

அந்தக் காலத்தில் ராஜாவாக இருந்தவர்கள்,ஏதேனும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள், தனது தலைமைக்கோ அல்லது தங்கள் ஆட்சிக்கோ எதிராக இருக்கிறார்கள் என்று தெரிந்தாலோ, அல்லது தனது நாட்டு மக்களுக்கு எதிராக மன்னிக்க முடியாத ஏதேனும் ஒரு குற்றத்தை புரிந்திருக்கிறார்கள் என்று நிரூபிக்கப் பட்டாலோ, அல்லது தனக்கு நெருங்கிய அமைச்சர்களின் சிபாரிசினாலோ, சம்பந்தப்பட்ட சமூகத்தினரின் சொத்துக்களை பறி முதல் செய்து, நாடு கடத்தியிருக்கிறார்கள்.

ராஜ ராஜன் கூட, தனது அண்ணன் ஆதித்த கரிகாலனின் கொலையில் சம்பந்தப்பட்டவர்களை அது போல நாடு கடத்தினான் என்று ஒரு குறிப்பு உள்ளது ( அந்தக் குறிப்பில் ரஞ்சித்தின் தாத்தா , பாட்டனார் பற்றி ஒன்றும் குறிப்பிடப்படவில்லை).

எழுத்தாளர் பாலகுமாரன் கூட தன்னுடைய “ உடையார்” நாவலில் அதைப் பற்றி விலாவாரியாக எழுதியிருக்கிறார் ( அந்த நாவலில் வரும் அனைத்தும் உண்மை கிடையாது. அவரும் அதை வரலாற்று நாவல் என்றே கூறியிருந்தார்).

புகார் நம்பர் 2. ராஜ ராஜன் கோயில் கட்டும்போது 400 குடும்பப் பெண்களை தேவதாசி ஆக்கினார்.

இதில் ஒரு உண்மையான செய்தியும், ஒரு தவறான செய்தியும் உள்ளன.

உண்மையான செய்தி. கோயில் கட்டுமான வேலை நடந்து கொண்டிருக்கும்போது , அந்த வேலையில் ஈடுபட்டிருந்தவர்களை ஆடிப் பாடி மகிழ்விக்க தனது நாட்டின் அனைத்துப் பகுதியிலும் இருந்து நானூற்றுக்கும் மேற்பட்ட தேவரடியார்கள தருவித்து கோயிலுக்கு அருகிலேயே தளிர்சேரி ஒன்றை உருவாக்கிய குறிப்பு இருக்கிறது. உண்மை.

அவர்கள் அனைவரும் ஒரு சமூகத்தில் இருந்து கட்டாயப் படுத்தப்பட்டவர்கள், தவறான பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டவர்கள் என்ற அர்த்தத்தில் இவர் குறிப்பிட்டிருப்பது மிகவும் தவறான தகவல். அதற்கான ஆதாரம் அவரிடம் கண்டிப்பாக இருக்காது.

அது மட்டுமல்லாமல், ராஜ ராஜன் காலத்தில் தேவரடியார்கள் என்பவர்கள் கடவுளுக்காக தங்களையே அர்ப்பணித்துக் கொண்ட மிகவும் உன்னதமான பெண்மணிகள்.

ராஜராஜனின் மனைவியர்களில் ஒருவரான பஞ்சவன் மாதேவியே ஒரு தேவரடியார்தான்.

அவர் மகனான ராஜேந்திரனின் அனுக்கிகளில் ஒருவரும் தேவரடியார்தான்.

ரொம்பப் பிற்காலத்தில்தான், குறிப்பாகச் சொன்னால் நாயக்கர்களின் ஆட்சியில்தான் தேவரடியார்கள் என்றாலே தவறான தொழிலில் ஈடுபடுபவர்கள் என்ற அர்த்தத்தில் “தேவடியா “ “ தேவதாசி” என்றெல்லாம் திரிக்கப் பட்டது.

இதைப் பற்றி நிறையப் புத்தகங்கள் ஆதாரத்துடன் வெளி வந்து விட்டன.

புகழ் பெற்ற பாடகி எம் எஸ் சுப்புலட்சுமி அம்மாவே தேவதாசி குலத்தைச் சார்ந்தவர்தான்.

எது எப்படியோ….இந்த விவாதமே தேவையில்லாதது என்பது என் ஆணித்தரமான கருத்து.

இன்னொரு கசப்பான உண்மை என்னவென்றால்,தமிழ் வரலாற்றைப் பொறுத்த வரையில், நமக்கு முறையான, விரிவான வரலாற்றுச் சான்றுகளே கிடையாது. அதாவது, பாபர் நாமா, அக்பர் நாமா போல யாருமே நமது வரலாற்று நிகழ்ச்சிகளை ஆவணப்படுத்தியிருக்கவில்லை.

நமக்கு இன்று தெரிந்திருக்கும் வரலாறு அனைத்துமே,நமக்குக் கிடைத்துள்ள இலக்கியங்கள் வாயிலாகவும், துண்டு துண்டாகக் கிடைத்துள்ள கல்வெட்டு, தாமிரச் செப்பேடுகள் வழியாகவும் கோர்க்கப் பட்ட செய்திகள் மட்டுமே. எழுத்தாளர் மதனின் மொழியில் சொல்வதானால், “ நமக்குத் தெரிந்திருக்கும் வரலாறு அனைத்துமே கோடிட்ட இடங்களை நிரப்பிய விஷயங்கள்தான்.

அதனால், ராஜராஜச் சோழன் என் தாத்தா நிலத்தை அபகரித்துக் கொண்டான் , சேரன் செங்குட்டுவன் என் சிலேட்டைப் பறித்துக் கொண்டான், பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் எங்கள் பரம்பரை வீட்டை இடித்தான் என்று யாரேனும் புரளி கிளப்பினால், அவர்களை புறந்தள்ளி விட்டு உங்கள் வேலையைப் பார்த்து போய்க் கொண்டேயிருங்கள்.

இதே கதைதான் அயோத்தியிலும்.

ராமர் உண்மையிலேயே வாழ்ந்த ஒரு கதா பாத்திரமா இல்லை வெறும் இதிகாச நாயகனா என்ற விவாதமே இன்னும் முடிந்த பாடில்லை.

அதற்குள் அயோத்தியில்தான் ராமர் பிறந்தார் என்று ஒருவர் கிளப்பி விட , அதை இக்னோர் பண்னாமல் மக்கள் உணர்ச்சி வசப் பட்டதன் விளைவு என்னென்ன அனர்த்தங்கள்…..என்னென்ன நாச வேலைகள்….

அதனால்தான், “ நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாந்தரை நினைந்து விட்டால்” என்று பாரதி பாடினானோ ?

தயவு செய்து அது போன்ற ஒரு அழிவு வேலை நமது தமிழ் மண்ணில் வேண்டாம். வேண்டவே வேண்டாம்.

வெ.பாலமுரளி