மோடி இந்த முறை ஜெயித்து,பிரதமராகப் பதவியேற்கும் முன்னரே,மும்மொழித் திட்டம் என்று ஒன்றை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஹிந்தியைத் திணிக்க முயற்சித்தார்.
தமிழ்நாடு உட்பட ஒரு சில மாநிலங்கள் பொங்கியெழ,அந்தத் திட்டம் உடனடியாகக் கை விடப் பட்டது.
அரசாங்கமே கை விட்டு விட்டாலும், மோடியின் ஆதரவாளர்கள் விடுகிற மாதிரித் தெரியவில்லை.
மோடியை ஆதரிக்கிறேன் பேர்வழி என்று, தமிழையும், தமிழர்களையும், பெரியாரையும்,கருணாநிதியையும், ஸ்டாலினையும் வறுத்தெடுத்து விட்டார்கள்.
பாவம் இதில் ரொம்பவே அடி பட்டது நம்ம தமிழ்தான்.
ஹிந்தி அவசியம் வேண்டும் என்ற மேட்டுக் குடி மக்களின் சில கேள்விகளுக்குப் பதில் சொல்லவே இந்தக் கட்டுரை. இது சரித்திரம் சம்பந்தப்பட்டது என்பதால், இதை இந்த “வரலாற்றைத் தேடி” பக்கத்தில் பதிவு செய்கிறேன்.
கேள்வி எண்: 1
பணம் உள்ளவர்கள் சி பி எஸ் சி யிலும்,நவோதயாவிலும், பணம் கொடுத்து கற்றுக் கொள்ளும் உயர்தர கல்வி நிறுவங்களிலும் சேர்ந்து கற்றுக் கொள்வார்கள். ஆனால், அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் என்ன செய்வார்கள் ?????
கவலையே வேண்டாம். தேவைப்படும்போது அவர்கள் தானாகவே கற்றுக் கொள்வார்கள். உதாரணத்திற்கு நானே அப்படித்தான் கற்றுக் கொண்டேன். நான் படித்ததெல்லாம் கார்ப்பரேஷன் பள்ளிகளில்தான். அங்கு தமிழைத் தவிர ஆங்கிலம் கூட ததிகிடத்தோம் தான்.
சரி என்னை விட்டுத் தள்ளுங்கள். நிறைய பயணித்திருக்கிறேன், கற்றுக் கொண்டேன்.
ஆனால், மும்பையில் உள்ள தாராவி,மாட்டுங்கா, செம்பூர் ஏரியாக்களில் உள்ள தமிழர்களில் எத்தனை பேர் நவோதயாவிலும், சி பி எஸ் சி யிலும்,உயர்தர கல்வி நிறுவங்களிலும் படித்திருக்கிறார்கள் ? அவர்கள் பேசவில்லையா ?ஹிந்தியினால் ஏற்படும் தடைகளை கடந்து வரவில்லையா ?
நான் மும்பைக்கு அருகில் உள்ள ‘பால்கர்’என்னும் ஊரில் சிறிது நாட்கள் இருந்தேன். எனது தொழிற்சாலைக்கு அருகில் ஒரு வீடு எடுத்து சில தமிழ் தொழிலாளிகள் தங்கியிருந்தனர். அங்குள்ள யாரும் 10 ம் வகுப்பு தாண்டியதில்லை. அனைவரும் கூலித் தொழிலாளிகள்தான். அவர்கள் ஹிந்தி மட்டுமல்ல, லோக்கல் மொழியான மராட்டியிலும் பட்டையைக் கிளப்புவார்கள்.
நான் இதன் மூலம் சொல்ல வருவது, NECESSITY IS THE MOTHER OF INVENTION . தேவை என்று வரும்போது அவசியம் கற்றுக் கொள்வார்கள். மொழி தெரியாது என்பதற்காக வரும் எந்தவொரு வாய்ப்பையும் தவற விட மாட்டார்கள் தமிழர்கள்.
அது சரி, ஹிந்தியைக் கட்டாய மொழியாக்கினால் என்னதாம்பா பிரச்சினை உங்க தமிழர்களுக்கு ?
இருக்கு . பிரச்சினை இருக்கு. இதற்கு பதில் அடுத்த கேள்விக்கு….
கேள்வி எண் 2 :
ஹிந்தி வந்தால் உங்க ( ?????) தமிழ் அழிந்து விடுமா ? உங்க (????) தமிழ் அவ்வளவு வீக்கா ???? ( ‘உங்க, உங்க’ என்று இந்தக் கேள்வியை அதிகம் கேட்டது தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட நம் தமிழர்கள்தான்).
இந்தக் கேள்வியைக் கேட்டவுடன் நிறைய தமிழர்கள் பொங்கி விட்டார்கள். தமிழ் 10,000 வருடங்கள் பழமையானது . கல் தோன்றி மண் தோன்றா காலத்து என்று வழக்கமான வசனத்தைப் பேசி, தமிழாவது, அழிவதாவது என்று கொந்தளித்துப் போய் விட்டார்கள்.
(என்னைப் போன்ற) தமிழ்க் காதலர்கள் ஒத்துக் கொண்டாலும் சரி, ஒத்துக் கொள்ளாவிட்டாலும் சரி, கசப்பான ஒரு உண்மை என்னவென்றால், தமிழ் பலவீனமாகத்தான் போய் விட்டது.
இந்த “ரேஞ்சில்” (!!!!!!!!) போனால், இன்னும் ஒரு நூறு வருடமோ,இரு நூறோ வருடமோ, தமிழும் , சமஸ்கிருதம் மாதிரி தெய்வீக மொழியாகி விடும்.
“ஒரு காலத்தில் தமிழன் என்ற ஒரு சமூகம் இருந்தது.
அவர்கள் பேசியது தமிழ் என்ற ஒரு மொழி”
என்று வருங்காலத்தில் குழந்தைகள் இதை ஆங்கிலத்திலோ அல்லது ஹிந்தியிலோ படித்துக் கொண்டிருப்பார்கள்.
இதை மிகவும் வேதனையுடன் எழுதுகிறேன்.
இது போல தமிழின் மீதான மற்ற மொழிகளின் திணிப்பு இன்று நேற்றல்ல, இந்த மொழி யுத்தம் தொடங்கி 2000 அல்லது 3000 வருடங்களுக்கு மேலாகி விட்டது.
கொஞ்சம் ரிவர்ஸ் கியரில் போவோம்….
தமிழின் பழைய பெயர்கள், தமிழி, மூதமிழி, தமுழு. ஆம்,இவைகள்தான் தமிழின் ஆரம்ப காலப் பெயர்கள்.
கி.மு. எட்டாம் நூற்றாண்டில் செய்த ஒரு பானை ஓட்டில் தமிழியில் எழுதப்பட்டுள்ளது.
மொகஞ்சதாரோ, ஹரப்பாவில் கண்டுபிடிக்கப்பட்ட சிந்து சமவெளி நாகரிகத்தின் எழுத்துக்கள் என்ன மொழி என்று யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை என்று இந்திய தொல்பொருள் துறையால் ஒரு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, அதை மேற்கத்திய உலகமும் ஒத்துக்கொண்டு விட்டது. இது தமிழர்களுக்கு அல்லது திராவிடர்களுக்கு எதிரான வட இந்தியரின் / ஆரியரின் சதிச் செயல்.
நமது கல்வெட்டு ஆராய்ச்சியாளர் மறைந்த உயர்திரு ஐராவதம் மகாதேவன் அவர்கள், சிந்துச் சமவெளியில் கண்டுபிடித்த எழுத்துக்களில் கிட்டத்தட்ட 550 எழுத்துக்களை ஆராய்ந்து, இது தமிழியேதான் என்று நிரூபித்தார். நமது மத்திய தொல்லியல் துறை , வழக்கம்போல் அதைக் கண்டு கொள்ளவேயில்லை.
இதையே தமிழ் ஆராய்ச்சியாளர் ஆர். பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் – அவர்களும் உறுதி செய்கிறார்..
இந்தக் கூற்று உண்மை என்னும் பட்சத்தில் தமிழியின் வயது கி.மு. 6000 க்கும் பின்னால் போகிறது ( இது கீழடி, ஆதிச்ச நல்லூர் முடிவுகளைக் கணக்கில் கொள்ளாமல்).
கிட்டத்தட்ட கி.மு. ஆறாவது அல்லது ஏழாவது நூற்றண்டில், தமிழி எழுத்துக்கள் தமிழ் பிராமி எழுத்தாக மாறுகிறது …..
இங்குதான் இடியாப்பச் சிக்கல் ஆரம்பிக்கிறது.
எதனால், இந்த மாற்றம் நடந்தது என்பது வரலாறு ஒளித்து வைத்திருக்கும் ஏராளமான புதிர்களில் ஒன்று.
ஐரோப்பா, ஈரான், ஈராக் மற்றும் மத்திய ஆசியாவில் இருந்து வந்த ஆரியர்களாலேயே இந்த மாற்றம் நடந்தது என்று ஒரு சாராரும், இல்லையில்லை, வட இந்தியாவில் செழித்து வளர்ந்த சமண, பௌத்த மதத்தினர் தமிழகத்தில் நுழைந்ததாலேயே இந்த எழுத்து மாற்றம் நிகழ்ந்தது என்று மற்றொரு சாராரும் கூறுகின்றனர்.
நாம் இன்று போற்றும் திருக்குறள் கூட தமிழ் பிராமியிலேயே எழுதப்பட்டது என்று நிறைய அறிஞர்கள் கருதுகின்றார்கள்.
எது எப்படியோ…நமது பழமையான தமிழி மெதுவாக அழிய ஆரம்பித்தது.
பின்னர் ஆரியர்களின் ஆதிக்கம் பெருக, சமஸ்கிருதம், பிராகிருதம், கிரந்தம், தேவநாகரி என்று புதுப் புது மொழிகள் தமிழை ஆக்கிரமிக்க ஆரம்பித்தன.
இந்த இடத்தில் ஆரியர்களின் வருகைக்கு எந்தவொரு ஆதாரமும் இன்னும் கிடைக்கவில்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
ஆனால், வட இந்தியாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் தமிழகத்திற்கு வந்திருக்க வேண்டும் என்பதை யாரும் மறுக்கவில்லை.
இதில் சமஸ்கிருதத்தோடு ஒப்பிடுகையில், பிராகிருதம் என்ற மொழிக் குடும்பமும், கிரந்தமும் , தேவநாகரியும் தமிழில் ஏற்படுத்திய தாக்கம் குறைவே.
ஆனால், சமஸ்கிருதம் கன்னா பின்னாவென்று தமிழுடன் கலந்தது. இன்று கூட நாம் பேசுவதில் எது சமஸ்கிருத வார்த்தை என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. அந்த அளவிற்கு சமஸ்கிருதம் தமிழுடன் இரண்டறக் கலந்து விட்டது .
கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் வட்டெழுத்து என்னும் எழுத்து வடிவம் வந்தது. இதிலும் தமிழ் வட்டெழுத்து, பிராமி வட்டெழுத்து, கிரந்த வட்டெழுத்து, சமஸ்கிருத வட்டெழுத்து என்று நிறைய பிரிவுகள்.
ஆக, தமிழ் தன் தனித்துவத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்தது.
இதற்கிடையில், தென்னகத்தில் நுழைந்த ஆரியர்கள், மக்களுக்கும், மன்னனுக்கும் தெரியாத சமஸ்கிருதத்தை, இது “ தேவ பாஷை” என்றும், இந்த மொழி எங்கள் இனத்தவருக்கு மட்டுமே தெரியும் என்று சொல்லியும் மன்னர்களிடம் நெருக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். மன்னர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த , அவர்கள்தான் புதுசு புதுசாக நிறைய சடங்குகளையும், யாகங்கள் , பூஜைகளையும் அறிமுகப்படுத்தியிருக்க வேண்டும் ( “இந்து மதச் சடங்குகள்” என்னும் புத்தகத்தில் கல்யாண சுந்தரம் . பதிப்பகம் ஞாபகமில்லை) .
இன்றைய அட்வான்ஸ்ட் டெக்னாலாஜிக்கல் உலகத்திலும், அர்ச்சகர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது புரியாமலேயே, நாம் பயபக்தியுடன் நிற்கும் போது, 1800 வருடங்களுக்கு முன்னர் ஆட்சி புரிந்த மன்னர்கள் அவர்களை நம்பியதில் வியப்பேதுமில்லை .( இந்த 2019 ம் ஆண்டு புது வருடப் பிறப்பன்று ஒரு பிள்ளையார் கோயில் அர்ச்சகரிடம் நான் தமிழில் அர்ச்சனை செய்யச் சொல்லிக் கேட்டு அவர் முடியாது சமஸ்கிருதம்தான் தெய்வ மொழி என்று வாதிட எனக்கும் அவருக்கும் பெரிய ரகளையாகப் போய் விட்டது ).
விளைவு, சமஸ்கிருதம் எல்லா இடங்களிலும் விளையாடியது.
கிட்டத்தட்ட 12ம் நூற்றாண்டு வரையிலும் இந்த வட்டெழுத்து முறை கோலோச்சியது. அப்போது எழுதப்பட்ட தமிழ் வட்டெழுத்துக்களிலும் கூட நிறைய சமஸ்கிருத மற்றும் கிரந்த வார்த்தைகளையும் இன்றும் கல்வெட்டுக்களில் காணலாம்.
இது பற்றிய ஆராய்ச்சிகள்இன்னும் முற்றுப்பெறவில்லை. அடுத்த வருடம் (2020) இந்தியா வந்த பிறகு, இந்தத் துறை சம்பந்தப்பட்ட திருமதி மக்ஸிம் காந்தி, திருமதி சாந்தினி பிபி போன்ற வல்லுனர்களை நேரில் பார்த்து நிறைய விபரங்களைச் சேகரித்து விட்டு இன்னும் விரிவாக இது பற்றி எழுதுகிறேன்.
அப்போதெல்லாம் ஓலைச் சுவடிகளில் எழுதுவதும் மிகப் பரவலாக இருந்தது. ஆனால், ஓலைச் சுவடிகள் சுமார் 150 வருடங்கள் மட்டுமே நிலைத்திருக்கும் என்று சொல்லப் படுகிறது .
அப்படியென்றால், அதை மறு நகல்கள் எடுத்தது யார் ?
மறு நகல்கள் எடுக்காமல் விட்ட இலக்கியப் புதையல்கள் எத்தனை ?
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, தேவாரம், திருப்பாவை, சிவபுராணம், 12ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பெரிய புராணம் போன்ற நூற்றுக் கணக்கான தமிழ்ப் பொக்கிஷங்கள் முதன் முதலில் எழுதப்பட்டது எந்தத் தமிழ் வடிவில் ? அதன் எந்த மூலமாவது இன்று எங்காவது உள்ளதா ?
என்பது போல கேள்விகள் நிறைய..
இந்த விஷயத்தில் தமிழ் அறிஞர் உ.வே. சுவாமிநாத ஐயர் தமிழுக்குச் செய்த தொண்டு,நாம் கால காலத்துக்கும் மறக்க முடியாதது. ஆனால்,மறந்து விட்டோம். அவர்தான் ஏராளமான ஓலைச் சுவடிகளைச் சேகரித்து நிறைய இலக்கியங்களைக் கண்டு பிடித்து நம்மிடம் சேர்ப்பித்தது.
யார் யாருக்கோ நினைவிடங்களும்,மணி பண்டபங்களும் கட்டிய திராவிட அரசுகள் இவரையும்,பாரதியையும் கண்டு கொள்ளவில்லை. பாழாய்ப் போன ஜாதி அரசியல்.
அதே போல்,சுப்பிரமணிய ஐயர்,கே.கே.பிள்ளை இன்னும் நிறையபேர் தமிழ் அழியக் கூடாது என்று பாடு பட்டார்கள். நாம் தமிழையே மறந்து விட்டோம். இவர்களையா ஞாபகம் வைத்துக் கொள்ளப் போகிறோம்.
சரி விஷயத்திற்கு வரலாம்.
பிறகு வந்த முஸ்லிம் மன்னர்கள் மற்றும் மொகலாயர்களால் நிறைய கட்டாய மத மாற்றங்கள் நடந்தன. சைவ ,வைணவ,சமண ஆலயங்கள் இடிக்கப்பட்டன ( ஆம். அப்போது இந்து மதம் என்ற ஒன்று கிடையாது ). நம் இந்தியச் செல்வங்கள் கொள்ளையடிக்கப் பட்டன. ஆனால்,மிகவும் ஆச்சரியமாக,எந்தவொரு இந்திய மொழியையும் அழிக்க அவர்கள் முயற்சிக்கவில்லை. இதை அனைத்து வரலாற்று ஆசிரியர்களும் ஒத்துக் கொள்கிறார்கள்.
ஆனால்,அப்படி ஒரு அழிவு,17ம் நூற்றாண்டில் பிரிட்டிஷாரின் கிழக்கிந்திய கம்பெனி மூலம் நுழைந்து,இன்று வரை வெறியாட்டம் ஆடிக் கொண்டிருக்கிறது. ஆம் நம் மொழி மிகவும் தேய்ந்ததற்கு சமஸ்கிருதத்திற்கு அடுத்த படி ஆங்கிலம்தான் முக்கிய காரணம். ஆங்கிலேயர்களே இவ்வளவு பெரிய வெற்றியை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.
அதில் மெக்காலே என்பவர் விக்டோரியா மகாராணிக்கு எழுதிய கடிதம் பற்றி உங்கள் அனைவருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன்.
அவருடைய அறிவுரையின் பேரிலேயே,ஆங்கிலம் தெரியாவிட்டால் “ படிப்பறிவில்லாத முட்டாள்கள்” என்று பரப்புரை செய்தார்கள். அதை மக்களும் நம்பினார்கள். இன்று வரை அதை நம்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பது வேதனையின் உச்சக் கட்டம்.
இன்று,நம்மில் ( என்னையும் சேர்த்து ) ஆயிரத்தில் 999 பேருக்கு ஆங்கிலம் கலக்காமல் பேச வராது. அதை விடுங்கள். இன்றைய இளைஞர்களில் எத்தனை பேருக்கு தமிழில் எழுத,படிக்கத் தெரியும் ?ஆனால்,பேச மட்டும் வரும்.
நான் ஒரு புகைப் படக் குழுவில் நிர்வாகியாக இருக்கிறேன். அதில் உள்ள 60,000 உறுப்பினர்களில் ,ஒரு 100 பேருக்குத் தமிழில் எழுதத் தெரிந்தாலே அதிகம்.
இதில் கொடுமை என்னவென்றால்,பெரும்பாலான உறுப்பினர்கள்,தமிழ்க் கேள்விகளை ஆங்கிலத்திலேயே எழுதி கேட்கிரார்கள். “ Anna , oru 50,000 kkul oru nalla camera sollungal. Canon nallaayirukkumaa illai Nikon nallayirukkumaa ?”
இது போன்ற நிறைய கேள்விகளால் வெறுத்துப் போய்,நான் அந்தக் குழுவில் எழுதுவதையே நிறுத்தி விட்டேன்.
அதற்காக,நான் எல்லோரையும் செந்தமிழில் எழுத,பேசச் சொல்லவில்லை. ஆனால்,சாதாரண நடை முறை/ பேச்சு வழக்கில் இருக்கும் தமிழில் எழுதிப் பழகுங்கள் என்றுதான் சொல்கிறேன். தமிழில் எளிதாக எழுத இன்று 1008 மென்பொருள்கள் வந்து விட்டன.
இது போல மற்ற மொழிகளைக் கலந்து கலந்து நமது தமிழ் மொழியின் பாரம்பரியம் அழிந்து கொண்டே வருகிறது என்ற ஆதங்கத்தில்தான் இதை எழுதுகிறேன்.
“ யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதானது எங்கும் காணோம்” என்று சொன்ன ஆனானப்பட்ட நமது பாரதியே ஏராளமான சமஸ்கிருத வார்த்தைகளை தமது கவிதைகள் நெடுங்கிலும் பயன்படுத்தியிருக்கிறார் என்றால் தமிழின் அழிவை நீங்கள் ஊகித்துக் கொள்ளலாம்.
உடனே “ பாரதியைப் பற்றி எப்படிச் சொல்லலாம் ?” என்று வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு வராதீர்கள். பாரதியை யாராலும் பழிக்கவோ வெறுக்கவோ முடியாது. நான் அவனது பரம வெறியன். ரசிகனுக்கு பல படி மேல். ஆனால்,தமிழை நான் என் அன்னை மீனாட்சிக்குச் சமமாக வைத்திருக்கிறேன். வித்தியாசம் புரியுமென்று நினைக்கிறேன்.
சரி…..முதல் பத்தியில் கேட்ட கேள்வி…ஹிந்தி வந்தால் தமிழுக்கு என்ன ஆகி விடும் ?
இப்போது,ஃபிரெஞ்சு எடுக்கும் மாணவர்களைக் கேட்டுப் பாருங்கள். சும்மா போய் உட்கார்ந்து எதையாவது எழுதி வைத்தாலே 80 மதிப்பெண்கள் உறுதி. அதனாலேயே,தமிழைத் தவிர்த்து விட்டு ஃபிரெஞ்சு எடுக்கும் மாணவர்கள் ஆயிரக் கணக்கில்.
இதே கதை ஹிந்தியிலும் தொடரும். போதாக் குறைக்கு ,ஹிந்தி படித்தால் மற்ற மாநிலங்களில் வேலை கொட்டிக் கிடக்கின்றன என்று வேறு எஸ் வி சேகர்,எச் ராஜா,தமிழிசை மற்றும் பிஜேபி பக்தர்களால் பரப்புரை செய்யப் பட்டு வருகிறது ( அப்புறம் ஏன் வட நாட்டவர் இங்கு வந்து பானி பூரி விற்கிறர்கள் என்று குதர்க்கமாகக் கேட்கக் கூடாது . சரியா ?)
அப்படி நடந்தால்,தமிழ் எடுக்கும் மாணவர்கள் இன்னும் குறைவார்கள். மூன்று மொழிகள்தானே ?ஆங்கிலம்,ஹிந்தி,ஃபிரெஞ்சு என்று மாணவர்கள் போக ஆரம்பித்து விடுவார்கள்.
இன்று மதிப்பெண்கள்தானே எல்லா இழவையும் நிர்ணயிக்கின்றன.
இந்தக் கட்டுரையை ஏதோ ஒரு கோபத்திலும்,ஆதங்கத்திலும் எழுத ஆரம்பித்து விட்டேன். சென்ற வாரம் வரை கொஞ்சம் கூடத் திட்டமிடவில்லை. எனவே,நான் மேலே சொல்லியிருக்கும் நிறைய விஷயங்களுக்கு ஆதாரங்களைத் திரட்டவோ,மேற்கோள் காட்டவோ இயலவில்லை.
2020 க்குப் பிறகு இது போல ஆராய்ச்சிகளையே முழு நேரமாக செய்ய எண்ணியுள்ளேன். அதன் பிறகு நிறைய நிறைய ஆதாரங்களுடன் இந்தக் கட்டுரையை மறுபடியும் எழுதுகிறேன்.
நான் யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கில் இந்தக் கட்டுரையை எழுதவில்லை.
நாளுக்கு நாள் தமிழுக்கு முக்கியத்துவம் குறைந்து கொண்டே வருகிறதே என்ற ஒரே கோபமே எனக்கு மேலோங்கி நிற்கிறது.
என் வீட்டுக் கூரை ஒழுகிக் கொண்டிருக்கும்போது என்னால்,என் ஊரைப் பற்றியோ,என் நாட்டைப் பற்றியோ கவலைப் பட்டுக் கொண்டிருக்க முடியாது. நான் அந்த அளவிற்குப் பொதுநலவாதி அல்லன்.
சுயநலவாதிதான்.
என்னை ஏற்றுக் கொள்வதும், ஏசி வெறுப்பதும் உங்கள் விருப்பம் .
வெ.பாலமுரளி