வரலாறு மறைத்த ஹீரோக்கள் : 2


உங்களுக்கு ராஜா தீன் தயாள் என்றால் யார் என்று தெரியுமா ?

19 – ம் நூற்றாண்டில் இந்தியாவை மட்டுமல்லாது இங்க்கிலாந்தையும் சேர்த்து கலக்கோ கலக்கு என்று கலக்கிய ஒரு புகைப்படக் கலைஞன்.
இவர்தான் இந்தியாவின் முதல் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞன் (இப்போ சில பேர் கென்யாவில் இருந்து கொண்டு கலக்குகிறார்கள். ஹி…ஹி..ஹி…)

மிகவும் குறுகிய காலத்தில் புகைப்படக் கலையைக் கற்றுக் கொண்டு பட்டையைக் கிளப்பியவர். இவருடைய திறமையைப் பார்த்து ஹைதராபத் நிஜாம் இவரை தன்னுடைய ஆஸ்தான புகைப்படக் கலைஞனாக ஆக்கிக் கொண்டார்.
இவரிடம் புகைப்படம் எடுத்துக் கொள்ள பெரிய பெரிய பணக்காரர்கள் க்யூவில் நின்றிருந்திருக்கிறார்கள். இதில் நிறைய வெள்ளையர்களும் அடக்கம். சம்பளம் அந்த கால கட்டத்திலேயே ஆயிரக் கணக்கில்.

இவரிடம் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்காக இவருக்கு கப்பலில் முதல் வகுப்பு டிக்கெட் எடுத்துக் கொடுத்து இங்கிலாந்திற்கு வரவழைத்த வெள்ளையர்கள் ஏராளம். அதில் விக்டோரியா மகாராணியும் ஒருவர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 

ஒரு முறை இவர் ஒரு கொள்ளைக் கும்பலிடம் மாட்டிக் கொண்டார். அவர் தன்னுடைய உயிரைப் பற்றிக் கூடக் கவலைப் படவில்லை , ஆனால், தன்னுடைய கேமரா கிட்டிற்கு என்ன ஆகி விடுமோ என்று பயந்து விட்டார் ( எல்லா ஃபோட்டோகிராஃபர்களும் ஒரே ஜாதிதான் போலிருக்கு. எனக்கும் இது போல ஒரு அனுபவம் உண்டு. பின்னொரு சமயம் என்னுடைய முள்றியின் டைரியில் அது பற்றி எழுதுகிறேன்). அவரைப் பற்றித் தெரிந்தவுடன், அந்தக் கொள்ளைக் கூட்டத்தின் தலைவன் தங்களை ஒரு க்ரூப் ஃபோட்டோ எடுத்துக் கொடுத்தால், விட்டு விடுகிறேன் என்று சொல்ல, அவரும் அழகாக ஒரு படம் எடுத்துக் கொடுத்து விட்டுத் தப்பித்திருக்கிறார்.

பின்னால் அதைப் பற்றி ஆங்கில அரசாங்கத்திடம் சொல்ல, அவர்கள் “ அட…இதுவும் நல்ல ஐடியாவாக இருக்கிறதே. இனிமேல் பிடிபடும் ஒவ்வொரு கிரிமினலையும் ஃபோட்டோ எடுத்து மக்களிடம் வெளியிட்டு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தலாமே” என்று சொல்ல , அதிலிருந்து தொடங்கியதுதான் கிரிமினல்களை ஃபோட்டோ எடுத்து ஆவணமாக்கும் நடைமுறை.

லாலா தீன் தயாள் அண்ட் சன்ஸ் என்ற பெயரில் ஒரு ஸ்டுடியோவை ஏற்படுத்தி அதில் 50 பேர்களை வேலைக்கு வைத்து ஒரு பெரிய இன்டஸ்ட்ரி போல அந்தக் காலத்திலேயே நடத்தியிருக்கிறார். அதில் ஏழெட்டு வெள்ளையர்களும் அடக்கம். வெள்ளையர்களிடம் நாம் அடிமையாய் இருந்த காலத்தில் அவர்களையே வேலைக்கு வைக்க முடிந்ததென்றால் அவர் திறமை எப்படி இருந்திருக்கும் என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

அந்தக் காலத்திலேயே அவர் நிஜமான ராஜா போல படு பந்தாவாக வாழ்ந்திருக்கிறார். அரண்மனை போல வீடு, இரண்டு மூன்று கார்கள், நிறைய சாரட் வண்டிகள், ஏராளமான மாட்டு வண்டிகள் என்று பிரமாண்டமான வாழ்க்கை.

பின்னே…19 ம் நூற்றாண்டிலேயே ஆயிரக்கணக்கில் சம்பளம் என்றால் சும்மாவா ?

எனக்கு , 21ம் நூற்றாண்டில் ஒரு ஃபோட்டோவிற்கு 2 டாலர் ( ரூ. 130/-) கிடைத்தது – Getty Images என்னும் ஒரு Website- இல் இருந்து. அதுதான் நான் அதிகபட்சமாக புகைப்படத்திலிருந்து சம்பாதித்தது.
எல்லாவற்றிற்கும் ஒரு மச்சம் வேண்டும்.

வெ.பாலமுரளி

பி.கு: இந்தக் கட்டுரையின் மூலம் எஸ் ராமகிருஷ்ணன் எழுதிய மறைக்கப்பட்ட இந்தியாவிலிருந்து எடுக்கப்பட்டது