முதலிலேயே சொல்லி விடுகிறேன். தலைச்சங்கம் (முதற்சங்கம் ) நடந்தது , இடைச்சங்கம் நடந்தது, ராமாயணத்தில் குறிப்பிடப்படும் கபாடபுரம் , கண்ணகி எரித்ததாக நம்பப்படும் மதுரை, இவை எதுவும் இன்று உள்ள மதுரை கிடையாது. அவை குமரிக் கண்டம் என்றழைக்கப்படும் லெமுரியாக்கண்டமாக இருக்கலாம். ஆம், வரலாற்றில் பெரும்பாலான விஷயங்கள் “லாம்” தான்.
ஏறத்தாழ 2500 வருட வரலாறு கொண்டு, இன்றும் உயிர்ப்புடன் இருக்கும் ஒரு சில நகரங்களில் மதுரையும் ஒன்று.
கி.மு.ஆறாம் நூற்றாண்டில் இருந்துதான் இப்போதைய மதுரை பற்றி சரியான குறிப்புகள் கிடைத்திருக்கின்றன. அவையும் நம்ம “பாசக்கார பயலுக” யாரும் விட்டுப்போன குறிப்புகள் அல்ல. வேறு யார் யாரோ விட்டுப் போன குறிப்புகள்தான்.
முதல் குறிப்பு, இலங்கையில் உள்ள வரலாற்று நூலான மகாவம்சம் மூலம் கிடைத்துள்ளது (கி.மு.570). பிறகு சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் மூலம் (கி.மு.370-283). பின்னர், கிரேக்க தூதர் மெகஸ்தானெஸ் மூலம் (இவரும் கிட்டத்தட்ட சாணக்கியர் காலமே) .
மதுரைக்குப் பல பெயர்கள் இருந்திருக்கின்றன. மதுரை, கூடல்மாநகரம், மல்லிகை மாநகரம், திரு ஆலவாய், நான்மாடக் கூடல் ( இதில் அஞ்சா நெஞ்சனூர் கணக்கில் கிடையாது).
கி.மு. வில் இருந்த முற்காலப் பாண்டியர்கள் பற்றி நமக்கு பெரிய அளவில் தகவல்கள் ஒன்றும் கிடையாது என்பது பேரிழப்புதான்.
கடைச்சங்கம் (கி.மு.400 முதல் கி.பி.200 ) இங்கு நடந்ததற்கான நிறைய குறிப்புகள் பழைய இலக்கியங்கள் மூலம் கிடைத்துள்ளன. இதில்தான் நம் திருவள்ளுவர் தம்முடைய திருக்குறளை அரங்கேற்றியுள்ளார். அந்தக் காலத்தில் திருக்குறள் போன்ற பெரிய இலக்கியங்கள் பல, தமிழ்ச்சங்கங்களில் அரங்கேற்றப்பட்டு அந்தக் குழுவில் இருந்த பெரிய புலவர்களின் அங்கீகாரம் பெற்ற பிறகு மட்டுமே மக்களுக்காக வெளியிடப்பட்டிருக்கின்றன. சில பல அரசியல்களும் இருந்திருக்கின்றன (திருவள்ளுவர் வாழ்ந்த காலம் இன்னும் சரியாகத் தெரியவில்லை. கி.மு. 5 ம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 2 ம் நூற்றாண்டு வரை, அவர் வாழ்ந்த காலம் பற்றி நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளன).
திருவள்ளுவருக்கே ஔவையார் என்னும் ஒரு புலவர்தான் ஸ்ட்ராங்காக ரெக்கமண்டேஷன் செய்ய வேண்டியிருந்திருக்கிறது என்பது மிகப் பெரிய அவலம் (இந்த ஔவையாரும், நம்ம “பழம் நீயப்பா” ஔவையாரும் வேறு வேறு ) .
கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சமணர்கள் இங்கு வந்து அவர்கள் சமயத்தையும், தமிழையும் வளர்த்ததற்கான சான்றுகள் இந்தப் பகுதியில் நிறைய உள்ளன (சில படங்கள் இங்கு பதிவு செய்கிறேன்). அவர்கள் திருப்பெருங்குன்றம், ஆனை மலை, நாகமலை, பசுமலை, கீழக்குயில் குடி குன்று போன்ற சிறு குன்றுகளில் வசித்து தங்கள் சேவையைச் செய்திருக்கிறார்கள். இங்கு அவர்கள் செதுக்கிய சிலைகளையும், படுக்கைகளையும் இன்றும் காணலாம். பார்க்க வேண்டிய இடங்கள் ( அதில் இன்றைய இளைஞர்கள் தங்கள் காதல் காவியங்களை பொறிப்பது கொடுமை ) .
கி.பி. 300 முதல் 600 வரை களப்பிரர்கள் மதுரையைக் கைப்பற்றி ஆண்டிருக்கிறார்கள். வரலாறு, இவர்கள் ஆண்ட காலத்தை “இருண்ட காலம்” என்று குறிப்பிடுகிறது. காரணம் அந்த மூன்று நூற்றாண்டுகளில் என்ன நடந்தது, களப்பிரர்கள் யார், அவர்களுடைய பூர்வீகம் என்ன, அவர்கள் எப்படி ஆண்டார்கள் போன்ற எந்த தகவல்களும் நமக்குக் கிடைக்கவில்லை.
அதன் பின்னர் பாண்டியர் சில காலமும், பல்லவர் சில காலமும் , சோழர் சில காலமும், மறுபடியும் பாண்டியர், பின்னர் மாலிக்காஃபூர், பின்னர் துக்ளக் வம்சம், நாயக்கர் வம்சம், ஆங்கிலேயர் என்று மாறி மாறி ஆண்டதில் மதுரை கொஞ்சம் கலகலத்துத்தான் போயிருக்கிறது ( அப்போதிருந்து ஆரம்பித்த கடுப்பினால்தானோ என்னவோ , இன்று வரை எங்க ஊர் பாசக்காரப் பயலுக , ‘உம்மு’ ன்னாலே அருவாளைத் தூக்கிறாய்ங்கெ ).
1300 களில் முஸ்லீம் மன்னர்களின் படையெடுப்பில் மதுரை ரொம்பவே அடி பட்டது. அதுவும் மாலிக்காஃபூர் என்னும் திருநங்கை ஆடியது ரொம்பவே ஓவர்.
அவனுக்குப் பயந்தே மீனாட்சியம்மன் கோயிலில் இருந்த சிவன் சிலையை மறைத்துத் தடுப்புச் சுவர் எழுப்பி , அதற்கு முன்புறம் ஒரு டம்மி சிலையை நிறுவியிருக்கிறார்கள். அங்கு வந்து அதுதான் உண்மையான சிலை என்று நம்பிய மாலிக்காஃபூர் கும்பல் அதை சேதப்படுத்தி விட்டுப் போயிருக்கிறார்கள். சேதமடைந்த அந்தச் சிலை இன்னும் அங்கு பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. சிவனாவது பரவாயில்லை. அந்த இடத்தை விட்டு நகலவில்லை. ஆனால், மீனாட்சியம்மன் சிலையை மொத்தமாக அங்கிருந்து எடுத்துப் போய் அருகில் உள்ள கிராமங்களுக்குக் கொண்டு போய் விட்டார்கள். கிட்டத்தட்ட 200 வருடங்களுக்குப் பிறகே அன்னை மீண்டும் மதுரை வந்திருக்கிறாள். அதை கிட்டத்தட்ட 30 நாட்களுக்கு மதுரை மக்கள் அந்த விழாவை மிகவும் விமரிசையாகக் கொண்டாடியிருக்கிறார்கள் ( By the way , நாம் மீனாட்சியம்மன் கோயில் என்றழைக்கும் கோயில் உண்மையில் சிவன் கோயில்தான் என்பது தெரியுமா ?).
அதேபோல் , இப்போதிருக்கும் கோயில் புதிய கோயில்தான். இதுவும் சரியாக எப்போது கட்டப்பட்டது என்ற விபரம் தெரியவில்லை. பழைய (ஒரிஜினல்) சொக்கநாதர் கோயில் சிம்மக் கல்லில் இன்றும் உள்ளது.
கிட்டத்தட்ட இதே காலத்தில்தான் “கள்ளர்” என்னும் வகுப்பினர் மதுரையில் நிறைய வர ஆரம்பித்திருக்கின்றனர். ஆரம்பத்தில் காவல் காக்கும் வேலையை மட்டும் செய்த அவர்கள் , பின்னர் திருட்டு வேலைகளிலும் இறங்கியுள்ளனர். ஆரம்பத்தில் அவர்கள் தலைவர் கருப்பன். ஒரு இடத்தில் திருடப்போகும்போது, அந்த வீட்டுக்காரருக்கு விஷயம் லீக் ஆகி, பொறி வைத்து கருப்பனைக் கொன்று விட்டார்கள்.
இந்த நிகழ்விலிருந்து நிறைய பாடங்களைக் கற்றுக் கொண்ட அந்த வகுப்பினர், கருப்பனைத் தங்கள் தெய்வமாக ஏற்றுக் கொண்டு இன்னும் மூர்க்கமாகவும் உக்கிரமாகவும் கொள்ளைத் தொழிலில் ஈடுபடத் தொடங்கியிருக்கின்றனர். அதிலிருந்துதான் கருப்பணசாமி காவல் தெய்வமாகியது.
அவர்கள் கிட்டத்தட்ட 500 ஆண்டுகளுக்கு, மதுரையைத் தங்கள் கைப்பிடியில் வைத்திருந்திருக்கின்றனர். மதுரையை ஆண்ட எந்த அரசனாலும் அவர்களை ஒன்றுமே செய்ய முடியவில்லை. இந்த அவலம் பிரிட்டிஷ் ஆட்சி வரைத் தொடர்ந்திருக்கிறது . அவர்கள் வந்து சாட்டையைச் சுழற்ற அந்தக் கும்பல் கொஞ்சம் கொஞ்சமாக கண்ட்ரோலுக்கு வந்திருக்கிறது. அவர்களால்தான் “குற்றப் பரம்பரை” சட்டமும் வந்தது ( ஆதாரம்: சு. வெங்கடேசன் எழுதிய “காவல் கோட்டம்”. இதை வைத்து ‘அரவான்’ என்ற படமும் வெளி வந்தது ).
1500 களின் மத்தியில் , மதுரை, கிருஷ்ணதேவராயர் ஆட்சியின் கீழ் வந்தது. மதுரை லேசாக மூச்சு விடத் தொடங்கியது. அவர் உத்தரவின் பேரில் வந்த விசுவநாத நாயக்கன் மதுரையை ஒழுங்கு படுத்தத் தொடங்கினான். மதுரையில் ஏகப்பட்ட சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தது அவன்தான் – கள்ளர்கள் பிரச்சினையைத் தவிர .
அவன் வழியில் வந்த திருமலை நாயக்கர் அவர்கள் வம்சத்திற்கு இன்னும் மெருகூட்டினார்.
அவருடைய கொள்ளுப் பேரன் முத்து வீரப்ப நாயக்கரின் மனைவி மங்கம்மாள். பின்னாளில் ராணி மங்கம்மாள். ஆண்கள் மட்டுமல்ல பெண்களாலும் மிகவும் திறமையாக நாடாள முடியும் என்று நிரூபித்தவர் (இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையை ஒப்பிட வேண்டாம் …ப்ளீஸ்)
இவருடைய காலத்தில் மதுரை மிகப் பெரிய வறட்சியையம் பஞ்சத்தையும் சந்தித்தது. அதைச் சமாளிக்கும் பொருட்டு 108 அன்னச் சாத்திரங்கள் அமைத்தார். அதில் ஒன்றுதான் இன்று ரயில்வே நிலையத்திற்கு எதிரில் உள்ள மங்கம்மாள் சத்திரம்.
அதுமட்டுமல்ல. அவர்தான் தமிழத்தின் முதல் ஹைவேயை உருவாக்கியது. அது மதுரையிலிருந்து கன்னியாகுமரி வரை சென்றது. அதுதான் மங்கம்மாள் சாலை. வழியெங்கும் குளங்கள் , ஏரிகள் , கோயில்கள் என்று பட்டையைக் கிளப்பினார். அந்தச் சாலைகளில் கள்வர்கள் (கள்ளர்கள் ) வந்து தொந்தரவு செய்யக் கூடாது என்பதற்காக Special Security Force ஒன்றை உருவாக்கி இரவும் பகலும் அந்தச் சாலையைப் பாதுகாத்தார். ” Hi folks…please use our highway without any fear ” என்று ஓப்பனாக விளம்பரம் வேறு செய்தார் (தமிழில்தான்).
அவர் கோடை காலத்தில், தான் சென்று ஓய்வெடுக்கக் கட்டியதுதான் இன்று காந்தி மியூசியம் இருக்கும் வெள்ளை மாளிகை.
இவர் ஒன்றும் பதவி ஆசைக்காக ராணி ஆகவில்லை. கணவன் மறைந்த பிறகு, பிள்ளையும் சிறுவனாக இருக்கின்றானே என்று வேறு வழியில்லாமல்தான் அரசாட்சியை மேற்கொண்டார்.
ஆனால், அவரையும் அவர் மந்திரியையும் இணைத்து நிறைய கிசு கிசுக்கள். அதிலும், அவருடைய பேரனே அவரை சிறையில் அடைத்த கொடுமையும் நடந்தது. அனைத்துத் தடைகளையும் மீறி அவர் சாதித்தது இன்றைய பெண்களுக்கு ஒரு முன்மாதிரி ( நோ….உள்குத்துஸ்) .
அடுத்ததாக வந்தது வெள்ளையர்கள். பயங்கர வரி வசூல். வெறுத்துப் போன மதுரையன்ஸ் ஓரிரு வெள்ளையர்களை போட்டுத் தள்ளியதும் நடந்தது. அவர்களில் மிகவும் நல்ல சில அதிகாரிகளும் இருந்தனர்- மாரட் போல. கெட்டவர்களை எப்படிப் போட்டுத் தள்ளினார்களோ , அதேபோல நல்ல அதிகாரிகளையும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடியிருக்கிறார்கள் ( பாசக் காரப் பயலுக).
அந்தக் காலத்தில் கோயிலையும் மதுரை முக்கிய தெருக்களையும் சுற்றி ஒரு பெரிய கோட்டைச் சுவர் இருந்திருக்கிறது. கள்வர்களுக்கு அது மிகவும் வசதியாக இருந்திருக்கிறது என்பதால், அதை ஒரு கலெக்ட்டர் இடிக்கச் சொல்ல, அதை எதிர்த்து ஒரு பெரிய பூகம்பமே நடந்திருக்கிறது ( அந்த வேகம் ஏனோ இந்த ஜல்லிக் கட்டு விஷயத்தில் இன்னும் வரவில்லை. வரும்…வரும்…வரும்…ரும்..ரும் …ம்…ம்… ).
அந்தக் கோட்டைச் சுவரில் நிறைய காவல் தெய்வங்கள் குடியிருந்ததாக நம்பிய மக்கள் அவை அனைத்தையும் நிறைய பூஜை, பலிகள் இட்டு வழியனுப்பி வைத்திருக்கிறார்கள். அதில் ஒன்றுதான் மொட்டைக் கோபுர வாசலில் இன்றும் இருக்கும் முனி ஐயா என்று ஒரு தெய்வம்.
இடிந்து போன அந்தக் கோட்டைச் சுவற்றின் மிச்சம் மீதியை புது மண்டபம் ஏரியாக்களில் இன்னும் காணலாம்.
இதுபோல நிறைய நிறைய விஷயங்கள் நடந்துள்ளன.
1921 – இல் இங்கு வந்த காந்தியடிகள், மேலுக்கு சட்டை எதுவும் அணியாமல் வறுமையால், கொளுத்தும் வெயிலில் வெந்து கொண்டிருந்த நெசவுத் தொழிலாளர்களைப் பார்த்த பிறகுதான் தன் ஆடம்பர ஆடைகளைத் துறந்து மேல் சட்டை எதுவும் அணியாமல் முழு மூச்சில் சுதந்திர போராட்டத்தில் இறங்கியது. மேலமாசி வீதியில் நடந்த ஒரு காங்கிரஸ் மாநாட்டில் அதை வெளிப்படையாகவும் அறிவித்திருக்கிறார். மாநாடு நடந்த அந்தக் கட்டடம் இன்றும் உள்ளது . புகைப்படம் கீழே உள்ளது.
இதன் காரணமாகவே , அவர் இறந்த பிறகு, அவருடைய கண்ணாடி மற்றும் கடைசியில் உடுத்தியிருந்த வேஷ்டி , செருப்பு அனைத்தும் மதுரை காந்தி மியூசியத்திற்கு கொண்டு வரப்பட்டு பாதுகாக்கப் படுகின்றன.
அந்தக் காலத்தில் மதுரையைச் சுற்றி அய்யனார் சாமி , கருப்பு சாமி போன்ற காவல் தெய்வங்கள் இருந்து மதுரை மக்களை காவல் காத்தன என்று சொல்கிறது வரலாறு.
அதே போல், இன்று நமது அஞ்சா நெஞ்சன் மதுரையில் வீற்றிருந்து
நமது மக்களை மன்னார்குடி சக்தியிடமிருந்து காக்கட்டும்.
ஆமென்.
வெ.பாலமுரளி.
குறிப்பு : இந்தக் கட்டுரைக்கான தகவல்கள் சு. வெங்கடேசன் எழுதிய காவல் கோட்டம், எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய மறைக்கப்பட்ட இந்தியா, அகிலன் எழுதிய வெற்றித் திருநகர், சமணர் வரலாறு, (ஆசிரியர் பெயர் மறந்து விட்டது), விக்கிப்பீடியா மற்றும் பெயர்கள் மறந்து போன சில பல புத்தகங்களில் இருந்து எடுக்கப்பட்டன. அவர்கள் அனைவருக்கும் நன்றிகள்.