தமிழியைத் தேடி – 17 தொண்டூர்

விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சியிலிருந்து 20 கிமீ தூரத்தில் உள்ளது தொண்டூர்.

நெகனூர்பட்டி செல்வதற்கு உதவி செய்த உயர்திரு. திருநாவுக்கரசு அவர்கள்தான் தொண்டூருக்கும் எங்களை ( என்னையும், பாலா பாரதி சாரையும்) அழைத்துச் சென்றார்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள குன்றுகள் அனைத்தும் கற்களை அடுக்கி வைத்தாற்போல் மிகவும் வித்தியாசமாக உள்ளன.

அப்படிப்பட்ட ஒரு குன்றின் அடிவாரத்தில்தான் இருக்கிறது பஞ்சனார்படி என்னும் குகைத்தளம். 

இந்த குகைத்தளத்திற்கு செல்வதற்கு மிகவும் அழகாக படிகள் அமைத்திருக்கிறது நமது தொல்லியல் துறை .

குகையின் நுழைந்தவுடனேயே 3 கற்படுக்கைகளும், நுழைவாசலில் படிக்கட்டின் இடதுபுறத்தில் ஒரு தமிழிக் கல்வெட்டும் உள்ளன. 

கற்படுக்கைகளின் வலதுபுறத்தில் ஒரு பெரிய பாறையில் ஜெயினர்களின் 23 ஆவது தீர்த்தங்கரரான பார்சுவநாதரின் புடைப்புச் சிற்பம் ஒன்று உள்ளது. இது கி.பி.10ம் நூற்றாண்டிற்குப் பிறகு செதுக்கப்பட்டிருக்க வேண்டும். மற்ற இடங்கள் போலவே இங்கும், ஆசீவகர்களின் (அ) தமிழ் அறிவர்களின்  கற்படுக்கைகளுக்கு ஜெயினர்கள் பின்னாளில் வந்து பட்டா போட்டது போல் உள்ளது. 

அதேசமயம், ஆசீவகர்களும் பார்சுவநாதரை தங்கள் இரண்டாவது தீர்த்தங்கரராக ஏற்றுக் கொண்டிருந்திருக்கின்றனர் என்பது ஒரு உபரித் தகவல் (முதல் தீர்த்தங்கரர் ஆதி நாதர். இரண்டாவது தீர்த்தங்கரர் பார்சுவநாதர். மூன்றாவது மற்றும் கடைசி தீர்த்தங்கரர் மற்கலி கோசாலர்).  

சமீபத்தில் பார்சுவநாதருக்கு முன்னால் விளக்கு ஏற்றுவதற்கு வசதியாக ஒரு சிமெண்ட் தளத்தைப் போட்டிருக்கின்றனர். அனேகமாக இதைச் செய்தது புனே ஜெயின் சங்கம்தான் என்று நினைக்கிறேன். 

சரி…..கல்வெட்டிற்கு வருவோம். 

“ இளங்காயிபன் ஏவ அகழ்ஊரறம்

  மோசி செயித அதிடானம்    “

இளங்காயிபன் உத்தரவிட (அ) ஆணையிட (அ) பணிக்க (அ) ஏவ அகழ் ஊர் செய்து கொடுத்த அறம் என்றும் மோசி என்பவர் செய்து கொடுத்த கற்படுக்கை என்றும் இந்தக் கல்வெட்டு இரண்டு அர்த்தங்களைக் கொடுக்கிறது என்று சொல்கிறது நமது தொல்லியல்துறை.

அது “ இளங்காயிபன் ஆணையிட அகழூரைச் சேர்ந்த மோசி என்ற அறம் சார்ந்த ஒரு அமைப்பு இந்தக் கற்படுக்கைகளை செய்து கொடுத்தது” என்றும் அர்த்தம் கொள்ளலாம். இது என்னுடைய கருத்து. இன்றும் “அகலூர்” என்னும் ஒரு ஊர் இந்தக் கல்வெட்டு இருக்கும் இடத்திலிருந்து 2 கிமீ தூரத்தில் உள்ளது. கல்வெட்டு சொல்லும் ஊர் இதுவாகத்தான் இருக்க வேண்டும்.

இங்கு அதிட்டானம் என்பதில் “ட்” என்ற மெய்யெழுத்து விடுபட்டுள்ளது. வாக்கியத்தின் இறுதியில் கிடைமட்டத்தில் மூன்று கோடுகள் செதுக்கப்பட்டுள்ளன. அது அங்குள்ள மூன்று கற்படுக்கைகளைக் குறிப்பதாக உள்ளது. 

நமது தொல்லியல் துறை இந்தக் கல்வெட்டின் காலத்தை  கி.பி. மூன்றாம் நூற்றாண்டு என்று வரையறுத்துள்ளது. அதாவது ஏறத்தாழ தமிழி எழுத்து வடிவின் இறுதிக் காலம் என்று கொள்ளலாம். தமிழி எழுத்து வடிவம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு அல்லது ஆறாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை பயன்பாட்டில் இருந்துள்ளது. 

நான் திருப்பரங்குன்றத்தில் கண்டுபிடித்த கல்வெட்டிலும் ஐந்து சாய்கோடுகள் உள்ளன. அங்கு குகைத்தளத்தின் உள்ளே ஐந்து படுக்கைகள் உள்ளன. அதன் காலம் கி.மு. இரண்டு அல்லது மூன்றாம் நூற்றாண்டாக இருக்கலாம். 

அப்படி பார்த்தால், தமிழியின் தொடக்க காலம் தொடங்கி கடைசி பயன்பாடு (கி.பி. ஆறாம் நூற்றாண்டின் தொடக்கம்) வரை 1,2,3 போன்ற எண்கள், எண்களாகவே கடைசி வரை பயன்பாட்டிற்கு வந்தது போலவே தெரியவில்லை. யோசிக்க வேண்டிய விடயம்.

அதேசமயம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டு கல்வெட்டாகக் கருதப்படும் வரிச்சியூர் கல்வெட்டில் “ …நூறு கல நெல்” என்று, “நூறு” என்ற எண் எழுத்து வடிவத்தில் குறிக்கப்பட்டுள்ளது. அதாவது, பேச்சு வழக்கில் எண்கள் புழக்கத்தில் இருந்திருக்கிறது. ஆனால், அது இந்தோ – அரேபிய எண்கள் வடிவில் கி.பி. ஐந்து அல்லது கி.பி. ஆறாம் நூற்றாண்டு பயன்பாட்டிற்கு வரை வரவில்லை என்றே தெரிகிறது. ஆச்சரியம். 

நானும் நண்பர் திருநாவுக்கரசு அவர்களும் இந்தக் குகையின் உள்ளே சென்று அங்குள்ள பாறைகளில் மஞ்ஞுமல் பாய்ஸ் மாதிரி ஏறி கொஞ்ச நேரம் தொலைந்து போனது ஒரு “ முள்றியின் டைரி” க்கான மெட்டீரியல். விரைவில் எழுதுகிறேன். 

வெ.பாலமுரளி

நன்றிகள்:

நண்பர் பாலா பாரதி அவர்கள்

நண்பர் திருநாவுக்கரசு அவர்கள் 

தமிழ்நாடு துறை வெளியிட்டுள்ள “ தமிழ்- பிராமி கல்வெட்டுக்கள்”