யார் இந்த களப்பிரர்கள் ?


கி.பி. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி ஆறாம் நூற்றாண்டு வரை ஒட்டு மொத்தத் தமிழகத்தையும் மிகவும் வலிமையாக ஆண்டவர்கள்தான் இந்த களப்பிரர்கள். நமது சில இலக்கியங்களில் “ களப்பாழர்கள்” என்று குறிப்பிடப்பட்டிருப்பதும் இவர்களைப் பற்றித்தான்.

ஆனால், வரலாறு (??????) இந்த மூன்று நூற்றாண்டுகளையும் தமிழகத்தின் இருண்ட காலம் என்று குறிப்பிடுகிறது.

நான் முன்பே சில முறை குறிப்பிட்டிருப்பதுபோல்,வரலாறு என்பதே கோடிட்ட இடங்களை நிரப்புகிற ‘பம்மாத்து’வேலைதான்.

சில சமயம், நமக்குத் தகுந்த வார்த்தைகளோ , சான்றுகளோ, கற்பனைகளோ கிடைக்காத சமயத்தில் , அதை “ இருண்ட” போன்ற வார்த்தைகளைப் போட்டு நிரப்பி விட வேண்டும்.

ஒரு காலத்தில் நமக்கு ஆப்பிரிக்காவைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் இருந்தது. உடனே , “ ஆப்பிரிக்கா ஒரு இருண்ட கண்டம்” என்று பெயர் வைத்து விட்டோம் . அது இன்று வரை நிலைக்கிறது என்பது ஒரு பெரிய நகைச்சுவை . (இது பற்றி ஒரு சுவாரசியமான சம்பவம் இந்தக் கட்டுரையின் பின் குறிப்பில்).

ஒரு காலத்தில் நமக்கு சோவியத் யூனியனுக்குள் என்ன நடக்கிறது என்பது பெரிய மண்டைக் குடைச்சலாக இருந்தது. உடனே , “ சோவியத் யூனியன் ஒரு இரும்புத் திரை நாடு” என்று பெயரிட்டு விட்டோம்.

அதே போல்தான் இந்த களப்பிரர்கள் மேட்டரும். ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வரை நமக்கு இந்த களப்பிரர்கள் பற்றி ஒன்றுமே தெரியாமல் இருந்தது.

முதலில் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. ஆறாம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் என்ன நடந்தது என்றே தெரியாமல் ஒரு வெற்றிடம் மட்டுமே இருந்தது. எனவே, முதலில் அந்த மூன்று நூற்றாண்டுகளையும் வெறுமனே தமிழகத்தின் இருண்ட காலம் என்று அழைத்து வந்தோம். பின்னர் அரசல் புரசலாக சில இலக்கியங்கள் வாயிலாக களப்பிரர்கள் பற்றி தெரிய வந்தது. ஆனால், பெரிய தகவல் ஒன்றும் கிடைக்கவில்லை. உடனே, “ களப்பிரர்கள் காலம் இருண்ட காலம் “ என்ற அவர்களது அடை மொழியயும் சேர்த்துக் கொண்டோம். அவ்வளவுதான். வேறொன்றும் பெரிய காரணமெல்லாம் இருப்பது போல் தெரியவில்லை.

சரி…யார் இந்த களப்பிரர்கள் ? எங்கிருந்து வந்தனர் ? என்ன மொழி பேசினர் ? என்ன மதத்தைப் பின்பற்றினர் ? எப்படிப்பட்ட ஆட்சி நடத்தினர் ? நல்லவர்களா இல்லை தைமூர் , செங்கிஸ்கான் போல வேறியாட்டம் ஆடினரா ? எத்தனை காலம் தமிழகத்தை ஆண்டனர் ?

இது போல நிறைய கேள்விகள் வரலாற்று அறிஞர்களை ரொம்பக் காலம் சோதித்தன.

பிரிட்டிஷாரின் காலத்தில் வேள்விக்குடி, தளவாய் புரம் போன்ற செப்பேடுகள் கிடைக்க,சில முடிச்சுகள் அவிழ்ந்தன. ஆம். இதுவரை சில முடிச்சுகள் மட்டுமே அவிழ்ந்திருக்கின்றன.

அந்த சில புள்ளிகளை வைத்து நிறைய பேர் ,கோடு போட்டு, ரோடு போட்டு , பஸ்கள் விட ஆரம்பித்து விட்டனர்.

அந்த சில பஸ்களில் ஒரு பஸ்தான் இந்த பஸ்ஸூம். இந்தக் கட்டுரையில் நிறைய விஷயங்கள் சில நூல்களில் இருந்து சுட்டிருக்கின்றேன். சிலவை என்னுடைய சொந்தக் கருத்துக்கள். இன்றைய நிலவரத்திற்கு என் கருத்துக்கள் தவறு என்று யாரும் ஆணித்தரமாக சொல்ல முடியாது. ஆனால், வரும் காலத்தில் இன்னும் சான்றுகள் கிடைத்தால், Bala …you were wrong that day “ என்று சொல்ல முடியும். அப்போது நானும் திருத்திக் கொள்கிறேன். சரியா ?

சரி விஷயத்திற்கு வருவோம் ….( என்ன….இன்னும் விஷயத்திற்கு வரவில்லையா ????? வெளங்குச்சு ) .

முற்காலச் சோழர்களில் ஒருவனான கல்லணையைக் கட்டிய முதலாம் கரிகாற்சோழன் கி.பி. முதல் நூற்றாண்டில் வாழ்ந்ததாகத் தெரிகிறது.

ஆம்…நமக்கு முற்காலச் சோழர்கள் பற்றி முழு விபரம் இன்னும் கிடைக்கவில்லை. சில இலக்கியங்கள் வாயிலாக சில மன்னர்களின் பெயர்கள் மட்டுமே கிடைத்துள்ளன. வரும் காலங்களில் மற்ற விபரங்கள் தெரிய வரலாம்.

முதலாம் கரிகாற்சோழனுக்குப் பிறகு அடுத்த 100 அல்லது 150 வருடங்களில் சோழ, சேர , பாண்டிய, பல்லவ அரசுகள் வலிமை குன்றியது போல் தெரிகிறது.

அதிலும் முக்கியமாக கிபி.2ம் நூற்றாண்டில் மிகவும் பிரமாதமாக ஆட்சி புரிந்த சேரன் செங்குட்டுவனுக்குப் பிறகு வந்த அரசர்கள் ரொம்பவே சொதப்பியிருக்க வேண்டும்.

அதற்கான காரணங்கள் தெரியாவிட்டாலும், பங்காளி சண்டைகள், சரியான நிர்வாகத் திறன் இல்லாதது,சிற்றின்பங்களில் திளைத்திருந்தது காரணமாக இருந்திருக்க வேண்டும்.

அதே காலகட்டத்தில், வட இந்தியாவில் குப்தப் பேரரசு வளர ஆரம்பித்தது – அசுர வேகத்தில், அசுர பலத்தில்.

குப்த வம்சத்தைத் தோற்றுவித்த ஸ்ரீகுப்தருக்கு லேசாக தென்னிந்தியா பக்கமும் கண் விழுந்தது. விளைவு – அவரது படை தென்னிந்தியா நோக்கிக் கிளம்பியது. அவர்களது முதல் டார்கெட் இன்றைய கர்நாடகா . அப்போது பெரிய அளவில் போர் எதுவும் நடந்ததா என்பது பற்றி தகவல் ஏதும் தெரியவில்லை.

ஆனால், சரவணபெலகுலாவைத் தலை நகராகக் கொண்டு ஆட்சி புரிந்த ஒரு அரச குலம், தோல்வியினாலோ அல்லது பயத்தினாலோ , தமிழகத்தை நோக்கி நகர ஆரம்பித்தார்கள்.

தமிழகத்தில் நிலவிய குழப்பங்களும், வலிமையற்ற ஆட்சிச் சூழலுமே, ஒற்றுமையின்மையுமே அதற்குக் காரணமாக இருந்திருக்க வேண்டும்.

அப்படி இங்கு வந்து மிகவும் எளிதாக தமிழகத்தில் உள்ள அரசுகளை ஒன்றன் பின் ஒன்றாக வென்று ஒட்டு மொத்த தமிழகத்தையும் தங்கள் குடைக்குக் கீழ் கொண்டு வந்தவர்களே“ களப்பிரர்கள்”.

அவர்கள் தமிழகத்தில் நுழைந்த காலம் கி.பி. 250 ( +/- 10 ஆண்டுகள்) . அன்றிலிருந்து கிட்டத்தட்ட 325 ஆண்டுகள் மிக மிக வலிமையாக எந்தவொரு இடையூறுகளும் இல்லாமல் தமிழகத்தைச் சிறப்பாக ஆண்டிருக்கிறார்கள்.

பேசிய மொழி : அன்றைய வழக்கில் இருந்த கன்னடம். அது இன்றைய கன்னடத்துடன் ஒப்பிடுகையில் எவ்வாறு மாறுபட்டிருந்தது என்பது தெரியவில்லை.

கன்னடம் மட்டுமல்லாது “ பாலி (அ) பாளி “ என்ற பிராகிருத மொழிக் குடும்பத்தில் ஒரு மொழியிலும் மிகவும் தேர்ச்சி பெற்று அதையும் அவர்கள் வளர்த்தது போல் தெரிகிறது.

இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். நந்த வம்சம், மௌரிய சாம்ராஜ்யம், குப்த சாம்ராஜ்யம் போன்ற பெரிய பெரிய வட அரசுகள் கூட தமிழகத்தை ரொம்ப சீண்டியது போலத் தெரியவில்லை.

இதற்கு சேர , சோழ, பாண்டிய, (பின்னாளில் பல்லவ) அரசுகளின் வலிமையே முக்கியமானகாரணம். ஆனால், நம் தென்னிந்தியாவுக்குள்ளேயே ரொம்ப அடித்துக் கொண்டிருந்திருக்கிறோம். மேலைச் சாளுக்கியம் , கீழைச் சாளுக்கியம், ஆந்திரப் பகுதியை ஆண்ட சில சிற்றரசர்கள் கூட நம்மிடம் ரொம்பவே வாலாட்டியிருக்கிறார்கள்.

தமிழகத்தில் இருந்த அந்த வலிமையான அரண் , சத்திரபதி சிவாஜியினால் தகர்ந்தது. பின்னர் வெள்ளையர்கள்.

ஆனால், எந்தவொரு பெரிய படையும் இல்லாமல், சாம்ராஜ்யமும் இல்லாமல், ஆரியர்கள் எப்படி தமிழகத்தில் நுழைந்து சமயம், மொழி , கலாச்சாரம் என்று எல்லா விஷயங்களிலும் நம்மை ஆட்கொண்டார்கள் என்பது வரலாறு மறைத்து வைத்திருக்கும் மிகப் பெரிய ரகசியம்.

வரும் காலங்களில் இது பற்றி தெரிய வரலாம்…

சரி… களப்பிரர் மேட்டருக்கு வருவோம்.

அந்த காலகட்டத்தில் கர்நாடகாவில் சமண மதம் ரொம்பவே பாப்புலர். எனவே, களப்பிரர்களும் சமணர்களாகவே இருந்திருக்க வேண்டும்.

சமணத்துடன், புத்த மதத்தையும் சேர்த்து அவர்கள் ஆதரித்ததற்கு நிறையவே ஆதாரங்கள் கிடைத்து விட்டன.

களப்பிரர்களில் நிறைய அரசர்களின் அடைப்பெயர் ‘அச்சுதர்’என்று இருந்திருக்கிறது. அச்சுத நரசிம்மன். அச்சுத விக்கிரமசிங்கன் என்று.

அச்சுதன் என்பது பெருமாளின் பெயர். எனவே,களப்பிரர்கள் கண்டிப்பாக வைணவ மதத்தைப் பின்பற்றியவர்கள்தான் என்பது சில வரலாற்று ஆசிரியர்களின் கருத்து.

ஆனால், என்னுடைய தனிப்பட்ட கருத்தில் அவர்கள் உறுதியாக சமண மதத்தைச் சார்ந்தவர்களே. காரணம், இவர்களின் காலத்திற்குப் பிறகு இவர்களின் மீது இருந்த வெறுப்பின் காரணமாக,இவர்கள் வரலாற்றை இரட்டடிப்புச் செய்ததில் பாண்டிய , சேர மன்னர்களுக்கு இணையாக சைவ , வைணவ மதத்தினரின் பங்கும் மிக முக்கியமானது.

களப்பிரர்கள் மட்டும் வைணவர்களாக இருந்திருந்தால்,இந்த இருட்டடிப்பு நடந்திருக்காது எந்பது என் கருத்து. என் கணிப்பு தவறாகவும் இருக்கலாம்.

அவர்கள் கன்னடம், பிராகிருத மொழிகளின் மீது பற்று கொண்டிருந்தாலும், தமிழ் மொழியை அழிக்கும் முயற்சியில் இறங்கியது போல் தெரியவில்லை.

நாலடியார், திருக்குறள், இன்னா நாற்பது, இனியவை நாற்பது வரிசையில் எழுதப்பட்ட பதினெண் கீழ்கணக்கு நூல்களில், கிட்டத்தட்ட இரண்டாம் பாதி களப்பிரர்கள் காலத்தில் எழுதப்பட்டவைதான் என்று அனைத்து வரலாற்று அறிஞர்களுமே ஒத்துக் கொள்கிறார்கள்.

ஆனால், தமிழின் கடைச் சங்கம் இவர்கள் ஆட்சி வந்த பிறகே ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. அதன் காரணம் தெரியவில்லை.

ஆனால், களப்பிரர்கள் ஆட்சியில்,கி.பி. 470 இல் வச்சிர நந்தி என்னும் சமணத் துறவி ஒருவரின் முயற்சியால் திரமிளர் ( திராவிடர் – தமிழ்) சங்கம் ஒன்று தொடங்கப் பட்டிருப்பது தெரிகிறது. ஆனால், அது சமணத்தைப் பரப்பும் முயற்சியே.

அது மட்டுமல்லாமல், மணிமேகலை , சீவகசிந்தாமணி, போன்ற காப்பியங்களும் இவர்கள் ஆட்சியிலேயே எழுதப்பட்டிருக்கிறது ( இரண்டுமே சமணர்கள் எழுதியவை. இருந்தாலும் தமிழில் எழுதப்பட்டவை).

இவர்கள் காலத்தில்தான் நிறைய புதுப் புதுத் தமிழ் விருத்தங்களும் இயற்றப்பட்டன என்கிறார் மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் ( களப்பிரர்கள் காலத்தில் தமிழகம்).

இதையெல்லாம் வைத்துப் பார்க்கையில் , களப்பிரர்கள் தமிழுக்கு ஒன்றும் எதிரியாகவோ அல்லது தமிழை அழிக்கும் முயற்சியில் இறங்கியதாகவோ தெரியவில்லை.

இவர்கள் ஆட்சியில் சில பல சைவ, வைணவ கோயில்களும் கட்டப்பட்டிருக்க வேண்டும். காரணம், இவர்கள் வீழ்ச்சிக்குப் பின்னால் ( கி.பி. ஏழாம் நூற்றாண்டில்) வந்த திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் போன்றோர், பழைய கற்றளிகளுக்குச் சென்று நிறைய பாடல்கள் இயற்றியது அனைவரும் அறிந்ததே.

அப்படிப் பார்க்கையில் களப்பிரர்கள் ஆட்சி முடிந்தவுடன் ( தோராயமாக கி.பி. 570) , ஓவர் நைட்டில் நிறைய கற்றளிகள் உருவாகியிருக்க வாய்ப்புகளில் இல்லை.

எனவே, களப்பிரர்கள் சமண,பௌத்த மதங்களை ஆதரித்திருந்தாலும் கூட சைவ, வைணவ மதங்களுக்கும் எதிராக இருந்திருக்க வாய்ப்பில்லை.

இவ்வளவு வலிமையாக 300 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்டவர்கள் எப்படி வீழ்ச்சியுற்றார்கள் ? எதனால் அவர்கள் வரலாறு இருட்டடிப்பு செய்யப்பட்டது ? யாரால் அவ்வாறு செய்யப்பட்டது ?????

இவர்களால் ஒடுக்கப்பட்டவர்களைத் தவிர வேறு யாராலும் அப்படி செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

இவர்களுடைய 300 வருட ஆட்சிக் காலத்தில் சோழ,சேர , பாண்டிய மற்றும் பல்லவ அரசர்கள் களப்பிரர்களுக்குக் கீழ் கப்பம் கட்டி சிற்றரசர்களாக இருந்திருக்கிறார்கள். பெரிய சக்கரவர்த்திகளாக இருந்த பரம்பரை, கப்பம் கட்டும் அவலத்திற்கு தள்ளப்பட்டதில் கடும் கோபத்திலும், தீராத வெறுப்பிலும் இருந்திருப்பதில் ஆச்சரியமில்லை.

கடுங்கோன் பாண்டியன் என்னும் மன்னனின் தலைமையில் ,பல்லவ, மற்றும் சேரர் குறு (??????) மன்னர்களின் உதவியால், களப்பிரர்கள் ஆட்சி ஒரு முடிவுக்கு வந்தது – கிட்டத்தட்ட கி.பி. 570 இல்.

அதற்காக அவர்கள் உடனே கர்நாடகாவிற்குத் திரும்பி ஓடவில்லை. தமிழகத்திலேயே ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கும்,அங்கிருந்து மற்றொரு இடத்திற்கும் நகர்ந்து கொண்டேயிருந்திருக்கிறர்கள்.

இந்த ஓட்டம் அவர்களை கொங்கு நாட்டில் கொண்டு போய் சேர்த்தது. பின்னர் அவர்கள் வலுவெல்லாம் இழந்து சிற்ரரசர்களாகவும்,பின்னால் அதையும் இழந்து அரசாங்கங்களில் உயர் அதிகாரிகளாகவும்,கிராம அதிகாரிகளாகவும் மாறி நம்மில் முழுமையாக கலந்து விட்டிருக்கின்றனர்.

இவர்களே பின்னர் முத்தரையர்களாக மாறியிருக்க வேண்டும் என்பதும் ஒரு சாராரின் கருத்து.

இவர்களைப் பற்றி “ கள்வர் கள்ளர்” என்ற பட்டப் பெயரில் நிறைய கல்வெட்டுக் குறிப்புகள் உள்ளதை வைத்து, இவர்களே இன்றைய “ கள்ளர்” இனத்தவராக இருக்கக் கூடும் என்றும் சிலர் கருதுகின்றனர்.

ஒரு கால கட்டத்தில் கொடும்பாளூர் இருக்குவேளிர் பரம்பரை இவர்களுக்கு கட்டுப் பட்டு இருந்திருக்கிறது.

இவர்கள் பாண்டியர் காலத்தில் தங்கள் பிடியை இழந்திருந்தாலும், பின்னால் தலையெடுத்த பிற்காலச் சோழர்கள் மற்றும் பல்லவர்களால் ஓட ஓட விரட்டப் பட்டிருக்கிறார்கள்.

என்னதான், களப்பிரர்களை ஆட்சியில் இருந்து விரட்டினாலும், பாண்டியர்களுக்கும், பல்லவர்களுக்கும், தங்கள் மூதாதையார் களப்பிரர்களிடம் மணிமகுடம் இழந்தது பெரும் கோபத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அதன் காரணமாகவே களப்பிரர்கள் ஆட்சியில் ஏற்படுத்திய அருமை பெருமைகளை அழித்திருக்க வேண்டும்.

களப்பிரர்களுக்குப் பிறகு, சைவ,வைணவ மதங்கள் தழைத்தோங்க ஆரம்பித்தவுடம், ஆயிரக்கணக்கான சமணர்களை கழுவில் ஏற்றினார்கள். கி.பி. ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் ஆரம்பித்த இந்த வெறிச் செயல், ஏழாம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது. இது போன்ற வெறிச் செயல் எதுவும் களப்பிரர்கள் ஆட்சியில் நடந்த மாதிரி எந்த சான்றுகளும் இல்லை.

சில காலம் சமணராக இருந்த திருநாவுக்கரசரே என் வாழ்க்கையின் இருண்ட காலம் நான் சமணராக இருந்த காலம் என்று வருத்ததுடன் குறிப்பிட்டுப் பாடியிருக்கிறார் என்றால் அப்போது சமணர்கள் மீது இருந்த வெறுப்பை நாம் ஊகிக்க முடிகிறது.

களப்பிரர்கள் இங்கு வருவதற்கு ரொம்பக் காலத்திற்கு முன்னரே ஆரியர் வந்திருந்தாலும், அவர்களையும், அவர்கள் தமிழகத்திற்குக் கொண்டு வந்த சமஸ்கிருதத்தையும் களப்பிரர்கள் பெரிதாகக் கண்டு கொண்டது போல் தெரியவில்லை.

எனவே, அவர்களது வீழ்ச்சிக்குப் பிறகு,பாண்டிய , பல்லவ , சோழ மன்னர்களது ஆட்சியில் நிறைய ஆளுமை செலுத்திய ஆரியர்கள், களப்பிரர்கள் காலத்தில் பிராகிருத மொழியில் இயற்றப்பட்ட சில பல இலக்கியங்களையும் அழித்திருக்க வேண்டும்.

ஆனால், தமிழ் வட்டெழுத்தில் எழுதப்பட்ட (சில) பதினெண்கீழ்க் கணக்கு நூல்கள் மற்றும் மணிமேகலை, சீவக சிந்தாமணி போன்ற நூல்கள் பாண்டிய மன்னர்களின் தலையீட்டால் தப்பித்திருக்க வேண்டும்.

வேள்விக்குடி, தளவாய்ப்புரம் மற்றும் சில பாண்டிய மன்னர்களின் செப்பேடுகள் கிடைத்திருக்காவிட்டால் , களப்பிரர்கள் காலம் இன்னும் இருண்டுதான் இருந்திருக்கும்.

இந்தக் கட்டுரை எழுதுவதற்கு ஆதாரங்கள் :

களப்பிரர்கள் காலத்தில் தமிழகம் – மயிலை சீனி வேங்கடசாமி

களப்பிரர் காலம் – டி.கே.ரவீந்திரன்

களப்பிரர் – விக்கிப்பீடியா

வேள்விக்குடி செப்பேடு – விக்கிப்பீடியா

பாண்டியர் செப்பேடு – விக்கிப்பீடியா

மதன் கேள்வி பதில்கள் – மதன்

பாண்டியர் வரலாறு – ம.ராசசேகர தங்கமணி

தமிழர்கள் வரலாறும் பண்பாடும் – நீலகண்ட சாஸ்திரி

அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்

வெ.பாலமுரளி

பி.கு :

சில வருடங்களுக்கு முன்னர், ஒரு விடுமுறைக்கு இந்தியா சென்றிருந்தோம். அப்போது கலைஞர்தான் முதல்வர். அவருடைய புண்ணியத்தில்,தமிழகத்தில் எக்குத்தப்பாக மின்வெட்டு இருந்தது.

அப்போது என் பெண் கென்யாவில் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாள்.

நம்ம ஊரில் இருந்த மின் வெட்டு தாங்க முடியாமல், என்னைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டாள்.

“ அப்பா, நம்ம இந்தியாவில் காலையில் 8 மணியிலிருந்து இரவு 8 மணி வரை கரெண்ட் இருப்பதில்லை. ஊரே இருட்டாகத்தான் இருக்கிறது.

நைரோபியில் மின்வெட்டு என்பது அறவே இருப்பதில்லை.

ஆனால், இங்கே (இந்தியாவில்) ஆப்பிரிக்காவைப் பார்த்து ஏம்ப்பா “ இருண்ட கண்டம்” என்று சொல்கிறார்கள்? ” என்றாள் மிகவும் அப்பாவியாக.

எனக்கு பதில் தெரியாதலால், நம்ம ராஜேந்திரகுமார் பாணியில் “ஙே” என்று விழித்தேன்.