தமிழியைத் தேடி – 15 ஐயனார் குளம் 

ஐயனார் குளத்திற்கு செல்ல வேண்டும் என்பது என்னுடைய மூன்று வருடக் கனவு.

ஆனால், என்னுடைய நண்பர்கள் நிறைய பேருக்கு அந்த இடம் பற்றிய சரியான தெளிவு இல்லாதலால், எனக்கு அங்கு செல்வது ஒரு கனவாகவே இருந்தது – உயர்திரு. வெள் உவன் ஐயாவைப் பார்க்கும் வரை. 

வெள் உவன் ஐயாவை அறிமுகம் செய்து வைத்தது என் நண்பர் பாலா பாரதி அவர்கள்தான். 

வெள் உவன் ஐயாவைப் பற்றி சுருங்கச் சொல்வதானால் , “ மாத்தி யோசி “ இலக்கணத்தின் முழு உருவம் ( “ சாயாத கோபுரங்கள் சாதாரண கோபுரங்களாக நிற்க, சாய்ந்த பைசா கோபுரமோ உலக அதிசயமாகி விட்டது”  என்பது அவரது “ மாத்தி யோசி” க்கு ஒரு உதாரணம்).

அது மட்டுமல்ல. அவர் ஒரு சிறந்த தமிழ் ஆர்வலரும், எழுத்தாளரும் கூட. மறைந்து போன மாட்டுத் தாவணிகள்,நெல்லை வட்டார வழக்குச் சொற்கள் போன்ற நூல்களின் ஆசிரியர்.

அவரே முன்வந்து , திருநெல்வேலிக்கு வாங்க, உங்களை நான் அழைத்துச் செல்கிறேன் என்றார். ஆம். கரும்பு தின்ன கூலி.

திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரத்திற்கு அருகில்  எட்டு கி.மீ. தூரத்தில் உள்ள ஒரு சிற்றூர்தான் ஐயனார்குளம்.

தமிழிக் கல்வெட்டு இருக்கும் இராசாப்பாறை என்னும் குன்று வழக்கம்போல் ஊரை விட்டுத் தள்ளி ஒதுக்குப்புறமாக ஒரு அத்துவான காட்டில் இருக்கிறது. கொஞ்சம் சிரமப்பட்டுத்தான் அந்த இடத்தைக் கண்டுபிடித்தோம்.

இங்கு இராசாப்பாறை குன்றில் இரண்டு கற்படுக்கைகளும் ஒரு தமிழிக் கல்வெட்டும் உள்ளன. அதற்கு எதிரில் ஒரு பத்தடி தூரத்தில் இருக்கும் நிலாப்பாறையிலும் அதேபோல் இரண்டு கற்படுக்கைகளும் ஒரு தமிழிக் கல்வெட்டும் உள்ளன. 

இந்த நிலாப்பாறை ஒன்றரை ஆள் உயரத்தில் உள்ளது. ஏறுவதற்கு சற்றே சிரமமாக உள்ளது. அங்குள்ள ஒரு கூர்மையான கல்லில் கால் வைத்து ஊன்றி ஒரு ஜம்ப் பண்ணித்தான் இந்தப் பாறையின் மேற்பகுதிக்குச் செல்ல முடியும். 

இந்தக் கல்வெட்டை முதன்முதலில் கண்டுபிடித்த குற்றாலம் பராசக்தி கல்லூரி மாணவி இந்த இடத்திற்கு முதலில் வரும்போது, இந்தக் குன்றிற்கு செல்லும் வழியில் உள்ள ஒரு மரத்தில் யாரோ தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பதைப் பார்த்து அலறிப் பிடித்து ஓடி அருகில் உள்ள ஊருக்குச் சென்று மக்களை அழைத்து வந்து , அதன் பிறகே இந்தக் கல்வெட்டுக்களை கண்டறிந்தார் என்பது ஒரு நண்பர் சொல்லக் கேள்வி. 

நிலாப்பாறையின் மேலுள்ள முதல் கல்வெட்டு : 

“குணாவின் ளங்கோ

செய்பித பளிஇ”

இதில் உள்ள ளங்கோ என்னும் சொல் இளவரசன் என்ற பொருளாகச் சொல்லப்படுகிறது. 

புகளூர் கல்வெட்டிலும் “பெருங்கடுங்கோ மகன் ளங்கடுங்கோ ளங்கோ “ என்ற சொல் வருகிறது. எனவே புகளூர் கல்வெட்டும், இந்த ஐயனார்குளம் கல்வெட்டும் சேர மன்னர்களோடு தொடர்புடையதாக இருக்கலாம் என்கிறது நமது தொல்லியல் துறை. 

அதுமட்டுமல்லாது, அருகில் உள்ள அம்பாசமுத்திரத்தில் உள்ள ஒரு கோயில் கல்வெட்டில் இந்த ஊரின் பழைய பெயர் “ ளங்கோய்க் குடி” என்று உள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

எனவே, இந்தக் கல்வெட்டை “ குணா என்னும் ஊரைச் சேர்ந்த இளவரசன் செய்து கொடுத்த பாளி” என்று அர்த்தம் கொள்ளலாம்.

நெடுஞ்செழியன் அவர்களின் ஆய்வுப்படி பாளி என்னும் சொல் ஆசீவகர்கள் வாழும் என்பதாலும், நிலாப்பாறையில் படுத்திருந்து  வானியல் செய்யும் கான்செப்ட் ஆசீவகர்களுடையது என்பதாலும், இந்தக் கல்வெட்டே முதலில் செதுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து. இந்தக் கல்வெட்டின் காலத்தையும் நமது தொல்லியல் துறை கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்றே சொல்கிறது. ஆனால், சில எழுத்துக்களில் உள்ள சிறு சிறு வித்தியாசங்களைப் பார்க்கையில் இந்தக் கல்வெட்டு இரண்டாவது கல்வெட்டோடு ஒப்பிடுகையில் ஒரு ஐம்பது அல்லது நூறு வருடங்கள் பழைமையானதாக இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. இது என் சொந்தக் கருத்து. இது தவறாகவும் இருக்கலாம்.

குகையின் மேற்கூரையில்  உள்ள இரண்டாவது கல்வெட்டு:

பள்ளி செய்வித்தான்

கடிகை ….வின் மகன் 

பெருங்கூற்றன் 

என்பது கல்வெட்டின் வாசகங்கள். 

இதில் உள்ள “கடிகைக்கு” பாடசாலை, பட்டைக் கழகம், ஊர்ச்சபை, நாழிகை என்று பல பொருள்கள் சொல்லப்படுகின்றன. ஆனால், இந்த இடத்தில் “ ஊர்ச்சபை” என்ற பொருள் பொருத்தமாகத் தோன்றுகிறது. அதேபோல் “ கடிகை ….வின் மகன்” என்றுதான் கல்வெட்டு வாசகம் உள்ளது. இதில் “வி” என்ற எழுத்துக்கு முன்னால் ஏதோ ஒரு எழுத்து இருந்து அழிந்ததற்கான தடயம் உள்ளது. நமது தொல்லியல் துறை அது அந்த இடத்தில் “ கோ” என்ற எழுத்தே பொருத்தமாக இருக்கிறது என்பதால் அந்த வாக்கியத்தை “ கடிகை கோவின் மகன்” என்றே ஆவணப்படுத்தியுள்ளது. அதாவது :

பள்ளி செய்வித்தான்

கடிகை கோவின் மகன் 

பெருங்கூற்றன். 

ஊர் நாட்டாமையின் (நம்ம சரத்குமார் இல்லீங்கோ)  மகன்  பெருங்கூற்றன் என்பவர் இங்குள்ள (அறிவர்கள் வசிக்கும்) பள்ளியை செய்து கொடுத்தார் என்பது இந்தக் கல்வெட்டின் அர்த்தம். 

பள்ளி என்பது ஜெயினர்கள் உறங்கும்/ வசிக்கும் இடம் என்றும் பாளி என்பது ஆசீவகர்கள் உறங்கும் / வசிக்கும் இடம் என்றும் மறைந்த பேராசான் க. நெடுஞ்செழியன் அவர்கள் தன்னுடைய “ ஆசீவகமும் ஐயனார் வரலாறும் “ புத்தகத்தில் குறிப்பிடுகின்றார். 

அதை வைத்துப் பார்க்கையிலும், இந்தக் கல்வெட்டின் காலத்தை கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என நமது தொல்லியல் துறை காலக் கணக்கீடு செய்திருப்பதை வைத்துப் பார்க்கையிலும், இந்தக் குகையில் முதலில் வசித்த ஆசீவகர்கள் ஏதோவொரு காரணத்தினால் இந்த இடத்தை விட்டுச் சென்ற பிறகு இங்கு ஜெயினர்கள் வந்திருக்க வேண்டும் அல்லது “ பள்ளி “ என்ற சொல் “ பாளி” என்பதற்குப் பதிலாக பிழையாக செதுக்கப்பட்டிருக்கலாம். 

இது தொடக்கத்தில் ஆசீவகர்களின் குகையே என்ற கருத்திற்கு வலு சேர்க்கும் வகையில் ஒரு யானையின் கோட்டுருவம் மிகவும் தெளிவாக, குகையில் உள்ள கற்படுக்கைக்கு அருகில் செதுக்கப்பட்டுள்ளது.  

அது மட்டுமல்லாது இந்தக் குகையில் மருந்தரைக்கும் சில குழிகளும் உள்ளன. அந்தக் காலத்தில் மருத்துவத் தொண்டு என்பது ஆசீவகர்களுக்கே உரித்தான ஒரு விடயம். கி.பி. மூன்று அல்லது நான்காம் நூற்றாண்டிற்குப் பிறகே ஜெயினர்களும் மருத்துவத் துறையில் நுழைந்திருக்கின்றனர். அதை வைத்துப் பார்க்கையிலும் இங்கு வசித்தவர்கள் ஆசீவகர்களாக இருப்பதற்கே வாய்ப்புகள் அதிகள். 

இங்கு வசித்த துறவிகள் ஜெயினர்களா , ஆசீவகர்களா என்ற விவாதம் ஒரு புறமிருக்க, அவர்கள் கண்டிப்பாக தொல்காப்பியரும், ஐயன் வள்ளுவனும் சொன்ன “ தமிழ் அறிவர்கள்” தான் என்பது மட்டும் உறுதி. 

வெ. பாலமுரளி

பி.கு: இராசாப்பாறையின் நெற்றியின் முகப்பில் நல்ல உயரத்தில் சில தமிழி எழுத்துக்கள் தெளிவாகவே தெரிகின்றன. அநேகமாக முதலில் அந்த இடத்தைத்தான் தேர்வு செய்து முயற்சித்திருக்க வேண்டும். அது மிகவும் கடினமான இடம் என்பதாலோ அல்லது அந்த இடத்தில் பாறையின் தரத்தினாலோ, அந்த முயற்சியை கை விட்டு விட்டு குகையின் உட்புறத்தில் விதானத்தில் செதுக்கியிருக்க வேண்டும். 

நன்றிகள்

ஐயா வெள் உவன் அவர்கள்

நண்பர் பாலா பாரதி அவர்கள்

மறைந்த பேராசிரியர் க. நெடுஞ்செழியன் அவர்கள் 

தமிழ் நாடு தொல்லியல் துறை வெளியிட்டுள்ள “ தமிழ்- பிராமி” கல்வெட்டுக்கள்.