நான் முன்பே சொன்னது போல, இந்தத் தொடரை எழுதும்போது மனசு ரொம்பவே வலிக்கிறது.
ஏண்டா வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுகிறாய் என்று யாரேனும் கேட்டு விடுவார்களோ என்று வேறு மனம் பதை பதைக்கிறது.
இருந்தாலும் ஒரு சின்ன நப்பாசை.
ஒருவேளை…ஒருவேளை….பிரபாகரன் போல வேறு யாரேனும் முளைத்து வந்து விட மாட்டார்களா ….நம் மக்களுக்கு ஏதேனும் விடிவு காலம் பிறந்து விடாதாவென்று….
அப்போது யாரேனும், புலிகள் செய்த தவறுகளை இனம் கண்டு திருத்திக் கொண்டால், இவ்வளவு அழிவுகளையும், வேதனைகளையும், இழப்புகளையும் தவிர்க்கலாமே…
சரி விஷயத்திற்கு வரலாம்…
மற்ற இயக்கங்களை அழித்தது பற்றியும், ராஜிவ் காந்தியைக் கொன்றதனால் ஏற்பட்ட விளைவுகளைப் பற்றியும் முதல் பாகத்தில் சொல்லியிருந்தேன்.
காரணங்கள் அவ்வளவு எளிதல்ல. லிஸ்ட்டும் அவ்வளவு சிறியதல்ல.
ஒற்றுமையின்மையும் மிகப் பெரிய காரணம்.
இலங்கையில் வாழும் தமிழர்களை மூன்று முக்கியப் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
முதல் பிரிவினர், அங்கு ரொம்ப காலமாக இருப்பவர்கள். எவ்வளவு காலம் ? சரியாகத் தெரியாது.
சிலர் புராண காலம் தொட்டே, தமிழர்கள் அங்கு இருக்கிறார்கள், இலங்கை முதலில் தமிழர்கள் நிலமாகத்தான் இருந்திருக்கிறது, பின்னர்தான் சிங்களவர் குடியேறினர் என்று கூறுகின்றனர். ஆனால், சில செய்யுட்பாக்களைத் தவிர பெரிய ஆதாரம் என்று ஒன்றுமில்லை.
சிலர், நம் பாண்டியர், சோழர்களின் படையெடுப்பிற்குப் பிறகே, தமிழ் மக்கள் அங்கு குடியேற ஆரம்பித்தனர் என்கின்றனர். இதற்கு நமது பாண்டியர், சோழர்களின் படையெடுப்பே ஆதாரம்.
இன்னும் சிலர், தமிழர்களின் முறையான குடியேறல் பிரிட்டிஷாரின் காலத்திலேயே நடந்தது. அங்குள்ள தேயிலைத் தோட்டங்களைப் பராமரிக்க ஆள் தேவைப்பட, தமிழகத்தில் இருந்து கொண்டு சென்றனர் என்கின்றனர்.
நாம் அந்த ஆராய்ச்சிக்குள் செல்ல வேண்டாம். அது ஒரு தனிக் கட்டுரையில். ஆனால், இந்த வகுப்பினர்தான் முக்கியமான பிரிவு. இவர்களே, ஶ்ரீமாவோ பண்டாரநாயக ஆட்சியில் முதன்முதலில் ஒடுக்குமுறையைச் சந்தித்தவர்கள். எங்களுக்கும் சம உரிமை வேண்டும் என்றுதான் முதன் முதலில் பிரச்சினை ஆரம்பித்தது. தனி நாடு கோரிக்கை எல்லாம் ரொம்பப் பின்னால்.
அடுத்த பிரிவு, அங்கு வாழும் தமிழ் பேசும் முஸ்லிம் மக்கள். இவர்களின் வரலாறும் தெரியவில்லை. ஆனால், இவர்களும் கணிசமான அளவில் இருந்திருக்கின்றனர். இவர்கள் முதல் பிரிவினர் போல், தனி நாடு கோரிக்கையில் மிகவும் தீவிரமாக இறங்கவில்லை என்றே தெரிகிறது. பட்டும் படாமலும் இருந்திருக்கின்றனர். அதற்கு நிறைய காரணங்கள் சொல்லப்படுகிறது. அவை இங்கு தேவையில்லை. ( இந்தத் தகவல் தவறு என்றால் சொல்லவும். திருத்திக் கொள்கிறேன் ).
மூன்றாவது பிரிவினர், சமீப காலங்களில் தொழில் செய்வதற்காக அங்கு சென்றவர்கள். பணக்காரர்கள். அரசியல்வாதிகளின் தொடர்பு, ராணுவத்தின் ஆசீர்வாதம் எல்லாம் இவர்களுக்கு உண்டு. இந்தப் பிரிவினரில் பெரும்பாலானோர் சிங்களமும் பேசுவார்கள். நான் கனடாவில் சந்தித்த இந்தப் பிரிவினரில் ஒருவர், நாங்கள் போராளிகள் வந்தாலும் பணம் கொடுப்போம், ராணுவம் வந்தாலும் பணம் கொடுப்போம். எங்களுக்குத் தொழில் நடக்க வேண்டுமே, என்றார் சிரித்துக் கொண்டே.
இவர்களுக்கு தமிழீழம், அரசியல் எல்லாம் பெரிதாக ஆர்வம் இல்லை. சிங்களவர்களின் நாட்டில் உட்கார்ந்து கொண்டு தனி நாடு கேட்பது அராஜகம் என்றே இவர்கள் நினைத்தார்கள். அதேபோல், மற்ற தமிழ்ப் பிரிவினரும் இவர்களை ‘வந்தேறிகள்’ என்னும் அர்த்தத்தில் வேறொரு வார்த்தையைச் சொல்லி கிண்டல் செய்வது வழக்கம் என்பதையும் தெரிந்து கொண்டேன்.
ஒவ்வொரு தமிழரது வீட்டில் இருந்தும் கண்டிப்பாக ஒருவரை விடுதலைப் புலிகள் படையில் சேர்க்க வேண்டும் என்று ஒரு சமயம் பிரபாகரன் உத்தரவிட்டபோது, இந்தப் பிரிவினர் மட்டும் , பணம் , செல்வாக்குகள் மூலம் இந்த உத்தரவில் இருந்து தப்பித்துக் கொண்டார்கள்.
இது புலிகளின் பெரும்பகுதியினருக்கு எரிச்சலையும், கோபத்தையும் வரவழைத்திருக்கிறது.
இதனால் ஏற்பட்ட ஆள்பற்றாக்குறையினாலோ என்னவோ, ஏராளமான சிறுவர்களையும், சிறுமிகளையும் வலுக்கட்டாயமாக தங்கள் படையில் சேர்த்தனர் புலிகள். அது பெரும்பாலான மக்களிடையே கடும் வெறுப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அது மட்டமல்லாமல், புலிகளுக்குள்ளாகவே வடக்கு மாநிலத்தவர், கிழக்கு மாநிலத்தவர் என்று உட்பிரிவுகள் வேறு. அதில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள், பிரபாகரனும், மற்ற பெரிய தலைவர்களும் நம்மை கண்டு கொள்வதில்லை, நமக்கு உரிய பதவிகளையும் சலுகைகளையும் தருவதில்லை என்று உள்ளூர புகைச்சலில் இருந்திருக்கின்றனர்.
சம உரிமை கேட்டுப் போராடும்போது, தாங்களே தங்கள் மக்களுக்கு சம உரிமை கொடுக்கவில்லை என்பது ஒரு வித்தியாசமான முரண்பாடு. ஏனோ, பிரபாகரன் அந்தப் முரண்பட்டைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதுபோன்ற சின்னச் சின்ன விஷயங்களைப் பிரபாகரன் அலட்சியப் படுத்திக் கொண்டே போக, எல்லாமுமாக சேர்ந்து விரைவிலேயே விஸ்வரூபம் எடுக்கப் போகிறது என்று யாருமே பிரபாகரனுக்குச் சொல்லாதது காலத்தின் கோலம்.
அப்படி யாரேனும் சொல்லியிருந்தால், கருணாகரன் பிரச்சினை வந்திருக்காதோ என்னவோ. யார் கண்டது.
கருணாகரன் தான் தலைமை தாங்கிய பிரிவினருடன், மேற்கூறிய காரணக்களால் வெறுத்துப் போய், நாமே ஏன் ஒரு இயக்கத்தைத் தொடங்கக் கூடாது என்று நினைத்தாரோ அல்லது நாம் ஏன் ராணுவத்திடம் போய் சரணடைந்து விடக் கூடாது என்று நினைத்தாரோ தெரியவில்லை. ஆனால், பெரிய குழப்பம் ஒன்று நடந்திருக்கிறது. பிரபாகரன் பாஷையில் அந்தச் செயலுக்குப் பெயர் “துரோகம்”. அவர் அகராதியில் அது ஒரு மன்னிக்க முடியாத குற்றம்.
மாத்தையாவைக் கூப்பிட்டது போல கருணாவைக் கூப்பிட முடியாது. கூப்பிட்டாலும் , என்ன நடக்கும் என்று தெரிந்து வர மறுத்து விடுவார் என்பது பிரபாகரனுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.
எனவே, தங்கள் சொந்தப் படையினருடனேயே போரிடும் ஒரு கேவலமான சூழ்நிலை உருவானது. இமாலயத் தவறு. ஆனால், பிரபாகரன் அந்தத் தவறையும் செய்தார்.
விளைவு…..கருணாகரன் தப்பித்து அரசிடம் புகலிடம் தேடிக் கொண்டார். ராஜபக்ஷே கெக்கலி போட்டு சிரிக்க ஆரம்பித்தது இந்தத் தருணத்தில்தான்.
இந்த நிகழ்ச்சியை எப்படிப் பார்ப்பது ?
சக போராளிகளின் பிரச்சினையைப் பொறுமையாக காது கொடுத்து கேட்காதலால் , ஒரு நல்ல போராளியை பிரபாகரன் இழந்து விட்டார் என்று சொல்வதா ?
இல்லை, கருணா ஒரு துரோகி என்று சொல்வதா ?
நம் ஈழத் தமிழ்ச் சமூகம் மிகவும் எளிதாக, இரண்டாவது சாய்ஸைத் தேர்ந்தெடுத்துக் கொண்டது.
அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகளில், தமிழ்ச் சமூகம் தன்னை மதிப்பிட்டது சரிதான் என்று கருணாகரனும் நிரூபித்தார். புலிகளின் அனைத்து போர்த் தந்திரங்களையும், சில பல ரகசியங்களையும் ராஜபக்ஷேவுக்குத் தெரிவிக்க , புலிகள் அழிவுப் பாதையை நோக்கிப் பயணிக்க , கருணாகரன் தனது வெற்றிப் பாதையை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தார். உலகம் என்ன சொன்னால் என்ன , தான் தன் சுகம் என்று அவர் வாழ்க்கையில் செட்டில் ஆகி விட்டார்.
தலைமையிடத்தில் உட்கார்ந்து இருக்கும் யாருக்கும் தேவையான ஒரு குணம் ‘ காது கொடுத்து கேட்பதும், தீர விசாரிப்பதுமே’.
பிரபாகரனுக்கு அது அவ்வளவாக இல்லை என்பது பெரும்பாலான சம்பவங்களில் நிரூபணமாகியது.
அதற்கு விலை ?????
ஆயிரக்கனக்கான போராளிகளுடன் , லட்சக்கணக்கான அப்பாவி மக்களும் பலியாக நேரிட்டது.
அது மட்டுமல்லாது, தமிழர்களின் எதிர்காலம் ?????????
சரி…..இவைதான் காரணங்களா ?
இல்லை. எல்லாவற்றிற்கும் மேலான ஒன்று இருந்தது.
அதுதான் துரோக வரலாறு……அதுவும் நம் தமிழக மண்ணில் இருந்து.
அடுத்த பாகத்தில் சந்திக்கிறேன்.
வெ.பாலமுரளி.