கீழடி – பார்ட் 2

வரலாறை வரலாறாக மட்டுமே பார்க்க வேண்டும்.

அதில் அரசியலோ,மதமோ,ஜாதியோ பார்க்க ஆரம்பித்தால்,அதன் உண்மை முற்றிலுமாக மறைந்து போவதுடன்,அந்த ஆராய்ச்சியின் உள்நோக்கமும் அசிங்கப்பட்டு விடும்.

அதுபோல ஒரு அசிங்கமான பாதையில்தான் கீழடி ஆராய்ச்சியும் போய்க் கொண்டிருக்கிறதோ என்று பயமாக இருக்கிறது.

இதற்கு முன்னால் அரிக்க மேடு,ஆதிச்ச நல்லூர் ,அழகன் குளம்,கொடுமணல் என்று நிறைய இடங்களில் ஆராய்ச்சிகள் நடந்திருக்கின்றன.

ஆனால்,இன்று வரை எந்தவொரு ஆராய்ச்சி முடிவுகளும் முறையாக வெளியானது போல் தெரியவில்லை. எங்கள் உயிர் மூச்சே தமிழ்தான் என்று சொல்லிக்கொண்ட தமிழ் அரசியல்வாதிகளும் அது பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

இந்தவொரு விஷயத்தில் மட்டும் காங்கிரஸும் சரி,பிஜேபி யும் சரி ஒற்றுமையுடன் இருக்கிறார்கள். காரணம் ,மத்திய தொல்துறையில் உயர் பதவிகளில் இருக்கும் ஆரியத்தை திடமாக நம்பும் வட இந்தியர்கள். அவர்களுக்கு வேத நாகரிகம்,சமஸ்கிருதம்,இந்துமதம் தாண்டி வேறு ஒன்றும் வந்து விடக் கூடாது என்பதில் அவ்வளவு வெறி.

பேசாமல் கீழடியையும் அரிக்கமேடு, ஆதிச்ச நல்லூர் போல் கண்டு கொள்ளாமல் விட்டிருக்கலாம். பாவம்,பிஜேபி அரசு ஒன்றுக்குப் பின் ஒன்றாக சில தவறுகள் செய்ய,இப்போது தலையை பிய்த்துக் கொண்டு செய்வதறியாது முழி பிதுங்கிக் கொண்டிருக்கிறது.

முதல் இரண்டாண்டிலேயே அதிசயக்கத்தக்க வகையில் சில விஷயங்கள் வெளிப்பட,முளையிலேயே கிள்ளி எறிந்து

விடுவோம் என்று முடிவு செய்து ஆராய்ச்சியை நிறுத்தி வைத்தது முதல் தவறு.

கண்டு பிடித்த பொருட்களை மைசூருக்குக் கொண்டு போகப் போகிறோம் என்று அவசர கதியில் முடிவெடுத்தது இரண்டாவது தவறு.

அங்குள்ள மக்கள் பிரச்சினை பண்ண ஆரம்பித்தவுடன்,அமர்நாத் ராமகிருஷ்ணனை இடம் மாற்றம் செய்தது மூன்றாவது தவறு.

பிறகு கோயில்கள் பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஶ்ரீராமன் என்ற ஒருவரை ஒப்புக்குப் போட்டு ஆராய்ச்சியை தொடர்ந்தது நான்காவது தவறு.

அவருக்கு என்ன கட்டளை கொடுக்கப்பட்டிருந்ததோ தெரியவில்லை. எங்கே தோண்டினால் ஒன்றும் கிடைக்காது என்று தெளிவாகத் தெரிந்ததோ,அங்கே ஒப்புக்கு சில குழிகளைத் தோண்டி விட்டு,இங்கு உருப்படியாக ஒன்றும் கிடைக்கவில்லை. இனி இங்கு ஆராய்ச்சியை தொடர்வது வேஸ்ட் என்று ரிப்போர்ட் ஒன்றை எழுதி விட்டு ஆராய்ச்சியை முடிவுக்குக் கொண்டு வர நினைத்தது இமாலயத் தவறு.

இவ்வளவு டிராமாவுக்கு சத்தியமாக இங்கு வேலை இல்லை. தமிழகத்தை ஆள்வதோ,பிஜேபி என்ன சொன்னாலும் தலையை ஆட்டும் ஒரு டம்மி அரசாங்கம். ஆராய்ச்சியை சும்மா அதன் போக்கில் விட்டு விட்டு,எந்தவொரு அறிக்கையயும் வெளி விடாமல் செய்திருந்தால் கீழடி விவகாரம் இவ்வளவு தூரம் வந்திருக்காது.

ஒரு வகையில் இந்தத் தவறுகளுக்கெல்லாம் நாம் மோடி அரசுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்.

நாம் ஒவ்வொரு விஷயத்தையும் ,நமது அடிப்படை உரிமைகளைக் கூட போராடித்தான் பெற வேண்டும் என்பது விதி.

தூத்துக்குடி போரட்டத்தின் போது சூப்பர்ஸ்டார் பாட்டுக்கு “போராட்டம் போராட்டம் என்று எல்லாவற்றிற்கும் போராடினால் நாடு சுடுகாடாகி விடும்” என்று ஒரு தத்துவத்தை உதிர்த்து விட்டுப் போய் விட்டார். பாவம்,வெளி மாநிலத்தவரான அவருக்கு தமிழரின் வரலாறு பற்றி சரியாகத் தெரியவில்லை.

சு. வெங்கடேசன் போன்ற சில அரசியல்வாதிகள்,கனிமொழி போன்ற சில பொதுநலவாதிகளின் துணையுடன் கீழடி ஆராய்ச்சி நாலு கால் பாய்ச்சலில் மறுபடியும் ஆரம்பிக்க,நிறைய பேரின் வயிற்றில் புளி கரைக்க ஆரம்பித்து விட்டது.

காரணம் ரொம்ப சிம்பிள்.

தமிழர் வரலாறு என்பது வேறு இந்து மத வரலாறு என்பது வேறு. இந்த உண்மை பிஜேபி போன்ற இந்து மத வெறியர்களுக்கு நன்றாகவே தெரியும். எனவேதான்,தங்களை(யும்) தமிழர்கள் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு பிரிவினர்,கீழடி ஆராய்ச்சியைப் பற்றியும்,அமர்நாத் ராமகிருஷ்ணனைப் பற்றியும்,இல்லாததும் பொல்லாததுமாக நிறையத் தூற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னொரு விஷயமும் அவர்களுக்கு நன்றாகத் தெரியும். அது,இன்னும் எவ்வளவு ஆழமாக குழிகளைத் தோண்டினாலும்,பூமியின் மறு பக்கம் உள்ள அமெரிக்கா கூட வந்து விடும் ஆனால்,இந்து மதம் சம்பந்தப்பட்ட எந்தவொரு ஆதாரமும் கிடைக்காது என்பதுதான்.

( அதுசரி…நாம் பிஜேபி யைப் பற்றி எதுவும் சொன்னால், ஆண்ட்டி இந்தியன்,தேசத் துரோகி என்றெல்லாம் முத்திரை குத்தி பாகிஸ்தானுக்கு ஓடிப்போய் விடு என்று சொல்கிறார்கள். ஆனால், தமிழ் நாட்டில் இருந்து கொண்டு , தங்களை தமிழர் என்று சொல்லிக் கொண்டு, தமிழர்களின் நிஜ வரலாறுக்கு எதிராகப் பேசும் இவர்களை என்ன செய்வது ?????? )

அதனால்தான், இப்போது அவர்களுக்கே உரித்தான கிராஃபிக்ஸ் வேலையில் இறங்கி விட்டனர். கீழடியில் தோண்டிய ஒரு குழியில் சிவ லிங்கம் ஒன்று இருப்பது போல ஒரு வேலையைச் செய்து “ இந்த லிங்கம் ஒரு ஞாயிறு (????????) அன்று கிடைத்து ,அதை யாருக்கும் தெரியாமல் மறைத்து விட்டனர் “ என்று ஒரு புரளியைக் கிளப்பினர்.

இது அவர்களுக்குள் இருக்கும் பயத்தைக் காண்பிக்கிறது.

ஆர் எஸ் எஸ்,பிஜேபி யில் உள்ள இந்துமத வெறியர்களிடம் பெரிதாக வேறொன்றும் எதிர்பார்க்க முடியாது. விட்டு விடலாம்.

அமர்நாத் ராமகிருஷ்ணனும் சில சமயங்களில் பொறுப்பில்லாமல் பேசுவது வருத்தத்தை அளிக்கிறது. ஒரு நாலைந்து நாட்களுக்கு முன்னர் சென்னையில் ஒரு கூட்டத்தில் அவர் பேசிய பேச்சுக்கள் பிஜேபி ஆதரவாளர்களை கொந்தளிக்க வைத்து விட்டது.

அவர் பேசியது அனைத்தும் 100% உண்மை என்றாலும் கூட,ஒரு அரசு அதிகாரியாக அவர் அப்படிப் பேசியது தவறு.

ஒன்று, தான் எப்படியெல்லாம் பந்தாடப்பட்டேன் என்று விவரித்தது. அது முடிந்து போன விஷயம். இப்போது மறுபடியும் கிளறத் தேவையில்லை.

இரண்டு, கடவுள் வழிபாடு சம்பந்தப்பட்டது ஒன்றுமே கிடைக்கவில்லை, இனியும் கிடைக்காது என்ற ஒரு அர்த்தத்தில் பேசியது. அது சரியில்லை. ஒரு ஆராய்ச்சியாளர் அப்படிப் பேசக் கூடாது. உங்களுடைய வேலை ஆராய்ச்சி செய்து அதன் முடிவுகளை வெளியிட வேண்டுமே தவிர , உங்களுடைய சொந்தக் கருத்துக்களை வெளியிடக் கூடாது. நீங்கள் ரிட்டையர் ஆனவுடன் , “ கீழடியில் எனது அனுபவங்கள்” என்று ஒரு புத்தகம் எழுதுங்கள். அதில் , அப்போது குறிப்பிடலாம் உங்கள் சொந்தக் கருத்துக்களை . ஆனால், கண்டிப்பாக இப்போது இல்லை.

நீங்கள் இதைச் சொன்னதால், “ அமர்நாத் ஒரு திமுக காரர். அமர் நாத் ஒரு தி.க. காரர். வீரமணியிடமும் சுடலையிடமும் பணம் வாங்கி விட்டார் “ என்று உங்களைக் கேவலமாகத் தூற்றுவதற்கு நீங்களே இடம் கொடுத்து விட்டீர்கள். ஒரு ப்ரொஃபஷனல் செய்யும் வேலை கண்டிப்பாக இது இல்லை.

இனி, இந்த ஆராய்ச்சியில்,உண்மையிலேயே இந்து மதக் கடவுள் வழிபாடு சம்பந்தப்பட்ட பொருள் ஒன்றுமே கிடைக்காவிட்டாலும் கூட, அந்த கோஷ்டி உங்களை உண்டு இல்லை என்று செய்து விடும். உங்கள் நேர்மையான உழைப்பு சந்தேகிக்கப்படும். தவிர்த்திருந்திருக்கலாம்.

வட இந்தியாவில் மகாபாரத ஆராய்ச்சி செய்கிறார்கள். கண்டிப்பாக அங்கு ஒன்றுமே கிடைக்காது என்று நீங்கள் எகத்தாளமாக சூளுரைத்திருக்கத் தேவையில்லை.

நீங்கள் சொன்னது 100% உண்மை. ஆனால், அதை ஒரு பொது மனிதனாக நான் சொல்லலாம். ஆனால், ஒரு ஆராய்ச்சியாளனாக நீங்கள் சொல்லக் கூடாது.

ஒரு ஆராய்ச்சியாளனுக்குத் தனிப்பட்ட கருத்து என ஒன்று இருக்கலாம். ஆனால், அதை அவன் வெளிப்படையாகப் பேசினால், அவன் செய்யும் ஆராய்ச்சியில் மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய் விடும். நீங்கள் அந்தப் பாதையில்தான் போய்க் கொண்டிருக்கிறீர்கள்.

நான் மட்டும் உங்கள் இடத்தில் இருந்தால், இது போல பேட்டி எதுவும் கொடுக்காமல், ஆராய்ச்சியை முழுவதுமாக முடித்து விட்டு இந்துக் கடவுள் வழிபாடு சம்பந்தப்பட்ட எதுவும் கிடைக்கவில்லை என்பதை முற்றிலுமாக நிரூபித்து விட்டு “ Therefore…தமிழர் வரலாற்றுக்கும் இந்து மதத்திற்கும் ஒரு புண்ணாக்கு சம்பந்தமுமில்லை. போய் எல்லோரும் புள்ளை குட்டிகளை ஒழுங்காகப் படிக்க வையுங்கள்” என்று சொல்லியிருப்பேன்.

ஆனால், நீங்கள் தேவையில்லாத ஒரு காண்ட்ரவர்சியை தெரிந்தோ தெரியாமலோ கிளப்பி விட்டு விட்டீர்கள். அதுமட்டுமல்லாமல்,நீங்கள் வேலை செய்யும் துறைக்கு ஒரு தலைவர், செயலர், அமைச்சர், அரசாங்கம் என்று உங்களுக்கு மேல் நிறையப் பேர் இருக்கின்றனர். அவர்கள் மூலம் முறையான அறிக்கை வெளிவருமுன்னரே, இது போல் நீங்கள் பேட்டிகள் கொடுப்பது,மேடைப்பேச்சு பேசுவது எல்லாம் சரி என்று தோன்றவில்லை.

ஆனால், நீங்கள் ஒரு இரண்டு வருடத்திற்கு முன்னால் இது போல ஒரு பேட்டி ஒன்று கொடுத்ததனால்தான், கீழடி இவ்வளவு தூரம் பாப்புலரானது . அதையும் ஒத்துக் கொள்ள வேண்டும்.

இல்லாவிட்டால், அரிக்கமேடு, ஆதிச்ச நல்லூர் போல இதுவும் ஒரு வெத்து வேட்டு ஆராய்ச்சியாகவே போயிருக்கும்.

தமிழக தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன்,கீழடி அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று அறிவித்து விட்டு,ஓரிரு நாளிலேயே, “ கீழடியில் கிடைத்தது தமிழர்கள் நாகரிகம் இல்லை. இது பாரத நாகரிகம்” என்று ஒரு அந்தர் பல்டி அடித்தது அசிங்கம்.

பாவம். அவர் என்ன செய்வார். தங்கள் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள எதை எதையோ அடகு வைத்துக் கொண்டிருக்கிறார்கள். நமது தமிழர்களின் வரலாறை அடகு வைப்பது ஒரு பெரிய விஷயமா என்ன ?

பார்ப்போம்…..இன்னும் என்னென்ன நாடகங்கள் அரங்கேறப் போகிறது என்று.

வெ.பாலமுரளி.