வேர்களைத் தேடி – 7 திருமயத்தில் ஒரு ஆதாம் ஏவாள் ஜோடி….

புதுக்கோட்டையிலிருந்து  18 கிமீ தூரத்தில் உள்ள இந்த ஊரின் ஆரம்ப காலப் பெயர் திருமெய்யம். 

இங்குள்ள குன்றின் அடிவாரத்தில் சிவனுக்கு ஒன்றும், பெருமாளுக்கு ஒன்றுமாக இரண்டு குடைவரைக் கோயில்கள் உள்ளன. கோயிலுக்குப் பின்னால் குன்றின் கீழே ஒரு எண்கோண வடிவில் ஒரு குளம் உள்ளது. அட்டகாசமான அழகு.

குன்றின் மேற்புறத்தில் அந்தரத்தில் பாறையைக் குடைந்து அதில் ஒரு லிங்கத்தை வைத்து அதையும் வழிபட்டு வந்துள்ளனர். சமீபத்தில் அந்த இடத்திற்கு இரும்பில் ஒரு ஏணிப்படி வைத்து மக்கள் ஏறிப் போய் வழிபட வசதி செய்து வைத்துள்ளனர் . ஆனால் ஏணிப்படி ரொம்பவும் கோக்கு மாக்கான டிசைனில் உள்ளது. ரொம்ப ஜாக்கிரதையாக ஏற வேண்டும். கொஞ்சம் அசந்தாலும் கால் கைகளை உடைத்துக் கொள்வது உறுதி.

இங்கு ஓரிரு கிரந்த கல்வெட்டுக்கள் உள்ளன. அதனை வைத்து இந்த மூன்று கோயில்களின் காலத்தை கி.பி 8 -9 ம் நூற்றாண்டு என்று வரையறுத்துள்ளது நமது அரசாங்கம். 

இந்த ஊர் ஆரம்பத்தில் முத்தரையர் வசத்திலும் , பின்னர் பாண்டியர் வசத்திலும் இருந்தது தெரிய வருகிறது.

கி.பி.1687 -இல் ராமநாதபுரம் அரசர் கிழவன் சேதுபதி என்ற விஜய ரகுநாத சேதுபதி இங்கு மிகப் பிரமாண்டமான கோட்டையை கட்டி அதனைச் சுற்றிலும் பாதுகாப்பிற்காக ஒரு பெரிய அகழிகையைக் கட்டி பாதுகாப்பிற்காக அதில் முதலைகளை வளர்த்திருக்கிறார்.

பின்னால் வந்த அவர் மகன், ஒரு போரில் தனக்கு உதவிய புதுக்கோட்டையை ஆண்ட தொண்டைமான் மன்னருக்கு இந்த கோட்டையை பரிசளித்திருக்கிறார். அதற்குப் பிறகு இந்தக் கோட்டை தொண்டைமான் அரசர்களிடமே இருந்துள்ளது.

இங்கு கட்டபொம்மனும், அவன் தம்பி ஊமைத்துறையும் வந்து தங்கியிருக்கின்றனர்.

இன்று அந்த கோட்டையின் பாதி மட்டுமே உள்ளது. மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் , ஓரளவு நன்றாகவே உள்ளது.

இதில் ரொம்பப் பேருக்குத் தெரியாத ஒரு விஷயம், இங்குள்ள செங்காவியில் வரையப்பட்டிருக்கும் பாறை ஓவியங்களும் சில பாறைக் கீறல்களும். கண்டிப்பாக 5000 (அ) 6000 வருடங்களுக்கும் முந்தையதாக இருக்க வேண்டும். 

கோட்டைக்குச் செல்ல அழகான படிக்கட்டுகளை போட்டு வைத்துள்ளது நமது தொல்லியல் துறை. கோட்டையில் உச்சியில் மேடை ஒன்றை அமைத்து அதில் அந்தக் கால பீரங்கி ஒன்றை வைத்துள்ளனர். நிறைய காதல் ஜோடிகள் அங்கு நின்று செல்ஃபி எடுத்துக் கொள்கின்றனர் ( வாழ்க்கையே போராட்டமாக அமையப் போகிறது என்பதன் குறியீடோ ?).

உச்சிக்கு செல்லும் வழியில் இடது புறத்தில் ஒரு பெரிய பாறை ஒன்றை பார்ப்பீர்கள். அந்தப் பாறையின் முன்புறத்திலும், பின்புறத்திலும் செங்காவி நிறத்தில் நிறைய பாறை ஓவியங்கள் உள்ளன. 

இதில் என்னை ரொம்பவே கவர்ந்தது பறவை முகத்துடன் கூடிய டூயட் பாடும்  ஒரு ஆதாம் ஏவாள் ஜோடி. அதுவும் இரண்டு, மூன்று இடங்களில். 

அனேகமாக நம் ஊரில் ஆவணப்படுத்தப்பட்ட முதல் காதல் ஜோடி இவர்கள்தான் என்று நினைக்கிறேன். (ஒன்றுமில்லாத காலத்திலேயே இவ்வளவு அழகாக வரைந்து வரைத்துள்ளனர் என்றால், அவர்களிடத்தில் செல் ஃபோன் மட்டும் இருந்திருந்தால், ஒரே செல்ஃபி புள்ளதான். வளைச்சு வளைச்சு எடுத்திருப்பாய்ங்கெ).

அத்துடன் உயரமான ஒரு உருவத்தையும் காண முடிகிறது. அது அந்த ஊர் நாட்டாமையா இல்லை கடவுள் போன்ற ஒரு உயரிய சக்தியை வரைந்து வைத்துள்ளனரா என்று தெரியவில்லை.

ஏதோ ஒரு பெரிய விலங்கின் மீது ஏறி நிற்கும் ஒரு பறவை முகம் கொண்ட மனிதன் வித்தியாசமாகத் தெரிகிறான்.

மிகவும் வித்தியாசமான வடிவில் ஒரு ஓவியம் உள்ளது. அதன் மேல் புறம் இன்று பெண்கள் அணியும் மாங்கல்ய வடிவில் உள்ளது ஆச்சரியம் ( இது ஒரு குறியீடாகவும் இருக்கலாம்). 

என்னுடைய பார்வையில் இங்குள்ள ஓவியங்கள் இரண்டு வெவ்வேறு காலகட்டத்தில் வரையப்பட்டிருக்க வேண்டும். சில ஓவியங்கள் கரும் செஞ்சாந்து நிறத்திலும் (காலத்தால் ரொம்பப் பழைமையானதாய் இருக்கலாம்), மற்ற ஓவியங்கள் சிவப்பு நிறத்திலும் உள்ளன (மேலூருக்கு அருகில் உள்ள புலிப்பட்டி, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருமலைமற்றும் கீழ்வாலை  ஓவியங்களில் காணப்படும் உருவங்கள் போல் உள்ளன).   

அதேபோல் பாறைக் கீறல்களும் வெவ்வேறு காலகட்டத்தில் கீறப்பட்டிருக்க வேண்டும். தாயம், ஆடுபுலிஆட்டம் போன்ற நிறைய விளையாட்டுகள், வஜ்ராயுதம் எனப்படும் இருபுற முத்தலைக்கோல், அழகான ஒரு பூ, சிந்துவெளியில் காணப்படுவது போல் சீப்பு வடிவில் ஒரு குறியீடு என்று அனைத்தும் அருமை. 

அறிவர்கள் வசித்ததன் அடையாளமாக ஒரு மருந்து அரைக்கும் குழியும் காணப்படுகிறது.   

மொத்தத்தில் திருமயம் கற்காலத்தில் தொடங்கி பிரிட்டாஷார் காலம் வரை ஒரு நீண்ட நெடிய வரலாற்றையும்,ஆன்மீகத்தையும் தன்னகத்தே சுமந்து கொண்டு ஜம்மென்று நின்று கொண்டிருக்கிறது.

இங்கிருந்து ஆவுடையார் கோயில், சித்தன்ன வாசல், குடுமியான் மலை, கொடும்பாளூர் போன்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள் ரொம்பப் பக்கம். 

முடிந்தால் இரண்டு நாள் பிளான் போட்டு வாங்க மக்கா. சேர்ந்து சுற்றலாம்.

வெ.பாலமுரளி

பி.கு: By the way, இணைக்கப்பட்டிருக்கும் அனைத்துப் படங்களையும் பார்க்கவும்