புத்தூர் மலை ரகசியங்கள்……

காவல் துறை அதிகாரியான கண்ணன் அவர்களின் தொடர்பு முதன் முதலில் 2020 இறுதியில்தான் கிடைத்தது. 

அரை குறை புரிதலுடன் நான் எழுதிய ஆசீவகம் பற்றிய ஒரு கட்டுரையை படித்து விட்டுத்தான் அவர் என்னுடைய தொடர்பில் வந்ததாக ஞாபகம்.

மறைந்த பேராசிரியர் நெடுஞ்செழியன் ஐயாவையும் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்ததுதான் கண்ணன் சார்தான். அப்போது பேசிக் கொண்டிருக்கையில் உசிலம்பட்டிக்கு அருகில் புத்தூர் மலையில் சில புடைப்புச் சிற்பங்கள் இருப்பதாகவும், அவை தீர்த்தங்கரர் சிற்பங்கள் என்று அறியப்பட்டாலும் அந்தச் சிற்பங்கள் நான்கும் மீசையுடன் இருப்பதால் அவை ஆசீவகத்துடன் தொடர்புடையதாக இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன என்றும் சொல்லி அந்தப் படத்தை எனக்கு அனுப்பி வைத்தார். அவரும் அந்த சிற்பங்களைப் பார்த்ததில்லை. 

அப்போதிருந்தே எங்கள் இருவருக்கும் புத்தூர் மலைக்குச் சென்று அந்தச் சிற்பங்களைக் காண வேண்டும் என்பது மிகப் பெரிய கனவாக இருந்தது. 

ஒவ்வொரு முறையும் கண்ணனுடன் பேசும்பொழுது புத்தூர் மலையைப் பற்றி பேசாமல் எங்கள் பேச்சு முடிந்ததேயில்லை. 

அங்கு சென்று வந்த சிலரும் அந்த இடத்தைக் கண்டு பிடிப்பது சிரமம் என்று சொல்லி என்னை சோர்வடைய வைத்து விட்டனர். 

வழக்கம்போல் பாலா பாரதி சாரிடம் அது பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போது, “ புத்தூர் மலையா ? நான் இரண்டு முறை போயிருக்கிறேனே. அந்த இடம் அப்படி ஒன்றும் சிரமமில்லை. ஒரு நாள் கூட்டிச் செல்கிறேன்” என்றார். ஆகா….கையில் Butter ஐ வைத்துக் கொண்டா இத்தனை நாட்களாக   Ghee க்கு அலைந்து கொண்டிருக்கிறோம் என்று (வழக்கம்போல்) என்னை நானே நொந்து கொண்டேன். 

அதைச் சொல்லி விட்டு “கண்ணா இன்னொரு லட்டு திங்க ஆசையா ?” என்ற தொணியில் “ அதே இடத்தில் நிறைய வெண்சாந்து ஓவியங்களும் உள்ளன. தெரியுமா ?” என்றார். “சும்மா இருந்த சங்கை… “ என்று ஏதோ ஒரு பழமொழி சொல்வார்களே, அந்தக் கதையாகி விட்டது அவருக்கு. அதிலிருந்து அவரை சும்மா சும்மா நச்சரிக்கத் தொடங்கி விட்டேன். 

சென்ற வாரம் அவரிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு. “ சமீபத்தில் காந்திராஜன் அவர்கள் கண்டுபிடித்த “நரிப்பள்ளிக்கூடம்” வெண்சாந்து ஓவியங்களைப் பார்க்கப் போகிறோம். வருகிறீர்களா ? புத்தூர் மலைக்கு அருகில்தான் உள்ளது. நாம் இரண்டையும் கம்பைன் பண்ணி விடலாம்”  என்றார்.

உடனே சந்தோஷத்துடன் கிளம்பி விட்டோம். புத்தூர் மலை ஒரு அதிசயம் என்றால் , நரிப்பள்ளிக்கூட ஓவியங்கள் வேறு வகை அதிசயம். என்னுடைய “ வேர்களைத் தேடி” தொடரில் அந்த இரண்டு இடத்து பாறை ஓவியங்களைப் பற்றியும் விரிவாக எழுதுகிறேன். 

புத்தூர் மலை, பெரிய மலை இல்லை என்றாலும் கூட, செல்வதற்கு முறையான பாதைகள் இல்லை என்பதால், கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது. எல்லா இடங்களிலும் கன்னா பின்னாவென்று முட்செடிகள். நான் வேறு ஸ்டைலாக அரைக்கை சட்டை போட்டு விட்டுப் போயிருந்தேனா “ ஆறு” பட சூர்யா போல உடம்பெல்லாம் ரத்தக் கோடுகள் போட்டு விட்டன அந்தச் செடிகள். இரண்டு மூன்று முறை தவறான பாதையில் சென்று, மலையில் ஏறி ஏறி இறங்கியதால், வியர்வையால் உடம்பெல்லாம் தொப்பலாக நனைந்து விட்டது. 

அந்த வியர்வையால் “சூர்யா கோடுகள்” இப்போது உலக மகா எரிச்சலைக் கொடுத்தன. 

அப்போதுதான் எங்களுடன் வந்த நண்பர் கருப்பையா அவர்கள் “ சார் கண்டுபிச்சிட்டேன்” என்று சத்தம் கொடுத்தார். அவருடைய சப்தம் மட்டும்தான் வந்ததே தவிர, ஆளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. 

“சார் திரும்பத் திரும்ப சத்தம் போட்டுக் கொண்டேயிருங்கள். உங்கள் சத்தத்தை வைத்து வந்து விடுகிறோம்” என்றோம். அவரும், “அன்புள்ள ரஜினிகாந்த்” படத்தில் வரும் மீனா “ரஜினி அங்கிள் நான் இங்க. இருக்கேன்… இங்க…இங்க….”: என்று சொல்வது போல  “ பாலா சார் நான் இங்கே இருக்கேன். பாலா சார் இங்கே” என்று தொடர்ந்து சத்தம் போட்டுக் கொண்டேயிருந்தார். 

அவர் போட்ட சத்தத்தில், இந்த பாலா சாரைப் பார்க்க ஊரே திரண்டு வந்து விடுமோ என்று பயந்து விட்டேன் ( ஹி…ஹி…ஹி ). 

அப்புறம்தான் தெரிந்தது அவர் பாலா சார் பாலா சார் என்று உயிரைக் கொடுத்து சத்தம் போட்டது பாலா பாரதி சாரைப் பார்த்தாம். பாலமுரளி சாரைப் பார்த்து  இல்லையாம் ( பல்பு…பல்பு…).

ஒரு வழியாகக் கண்டு பிடித்து விட்டோம். 

அங்கு போய் நின்றதும் வார்த்தையால் விவரிக்க இயலாத ஒரு பரவசமான  அனுபவம். 

உட்கார்ந்த நிலையில் மூன்று சிற்பங்களும், நின்ற நிலையில் ஒரு சிறிய சிற்பமுமாக  மொத்தம் நான்கு புடைப்புச் சிற்பங்கள் இங்கு உள்ளன. 

இவற்றில் உட்கார்ந்த நிலையில் உள்ள சிற்பங்களில் நடுவில் உள்ளது 23ம் தீர்த்தங்கரரான  பார்சுவத நாதரின் சிற்பம் என்பது பார்த்தவுடனேயே  தெளிவாகத் தெரிகிறது. முக்குடையும், ஐந்து தலை நாகமும் அதை உறுதிப் படுத்துகின்றன.

உட்கார்ந்த நிலையில் இருகுடையுடன் இருக்கும் இரண்டு சிற்பங்களும், நின்ற நிலையில் இருக்கும் சிறிய சிற்பமுமே குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. 

ஆசீவகர்களும் பார்சுவநாதரை தங்களது குருவாக ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். 

ஆசீவகத்தில் மற்கலி கோசாலருக்கும், பூரணருக்கும் இருகுடை சிறப்பு உண்டு என்கிறார் மறைந்த பேராசிரியர் நெடுஞ்செழியன் அவர்கள். அவருடைய கூற்றின் படி, நடுவில் இருப்பது  பார்சுவ நாதர், இடது கைப் பக்கம் இருப்பவர் மற்கலி, வலது கைப்பக்கம் இருப்பவர் பூரண காயபர், , நின்ற நிலையில் இருப்பது கணி நந்தாசிரியன். 

இந்த நான்கு சிற்பங்களும் இடையில் துணியுடனும், மீசையுடனும் இருப்பதும், மலையின் அடிவாரத்தில் ஐயனார் கோயில் ஒன்று இருப்பதும், ஐயா நெடுஞ்செழியனின் கருத்துக்கு வலு சேர்க்கிறது. 

ஒருமுறை, புதுக்கோட்டை பேராசிரியர் சுப. முத்தழகன் அவர்களுடன் இது பற்றி பேசிக் கொண்டிருந்தபோது, தமிழ் நாட்டில் பிற்கால ஜெயினர் சிற்பங்களில் மீசை காணப்படுகிறது என்று சொன்னது மேலும் குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. 

ஆனால், இங்கு இடுப்பில் ஆடையுடன் நின்ற நிலையில் உள்ள ( கணி நந்தன்) சிற்பம், ஜெயினர்களின் அடையாளம் ஏதுமின்றி தனித்த அடையாளங்களுடன் இருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. 

என்னுடைய தனிப்பட்ட கருத்தில் நெடுஞ்செழியன் ஐயா சொல்வதே ஏற்புடையதாக உள்ளது. 

எது எப்படியோ, தொல்காப்பியர் சொல்லும் “அறிவர்கள்” இங்கு இருந்தனர் என்பது மட்டும் உறுதி. அதை மேலும் உறுதிப்படுத்துவதாக உள்ளன இங்குள்ள வெண்சாந்து ஓவியங்களும், குகைக்கு வெளியில் மேற்புறத்தில் உள்ள நீர் வடி விளிம்பும்.

தமிழ்நாடு தொல்லியல்துறை முயற்சி செய்தால், இங்கு கற்படுக்கைகளும், தமிழி கல்வெட்டுக்களும் கிடைப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. 

செய்வார்களா ?

இன்று ஐயா நெடுஞ்செழியனின் நினைவு நாள். அவருக்கு என் பணிவான புகழ் அஞ்சலி.

வெ.பாலமுரளி.

பி.கு: சமீபத்தில் யாரோ இங்குள்ள சிற்பங்கள் சிவன், விஷ்ணு, பிரம்மா என்று கல்வெட்டில் செதுக்கி வைத்து சிற்பங்களுக்கு முன்னால் ஒரு விளக்குத் தூணையும் நிறுவி வைத்து விட்டுப் போயிருக்கிறார்கள். 

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே…..இந்த நாட்டிலே.