இன்றளவும் உலகிலேயே மிகப்பெரிய வழிபாட்டு ஸ்தலம் கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் எனப்படும் விஷ்ணு ஆலயம்தான்.
அதைக் கட்டியது யார் என்று கேட்டால், நம்மில் பல பேர், அந்த மன்னனின் பெயர் ஞாபகம் இல்லாவிட்டாலும் கூட ,உலகத்தையே வியக்க வைத்த, வியக்க வைத்துக் கொண்டிருக்கும் அந்தக் கோயிலைக் கட்டியது அது ஒரு தமிழ் மன்னன். நாமெல்லாம் யாரு….தமிழய்ங்கெ தெரியும்ல ….என்று மார் தட்டிக் கொள்ளலாம்.
வெயிட். வெயிட் .வெயிட் எ மினிட்.
“அந்தக் கோயிலைக் கட்டிய சூர்ய வர்மன் – II , ஒரு தமிழ் மன்னன் கிடையாது. அது மட்டுமல்ல, அவன் ஒரு இந்திய வம்சாவளி மன்னன் என்பதற்குக் கூட எந்த ஒரு ஆதாரமும் இல்லை” என்று சொன்னால் நம்புவீர்களா ?
சரி…..கொஞ்சூண்டு ரிவர்ஸ் கியரில் போவோம்.
அந்த நாட்டின் பழைய பெயர் காம்போஜம். பின்னாளில் கம்பூச்சியா என்றாகி இப்போது கம்போடியாவாகி நிற்கிறது.
நம்முடைய வேத காலத்தில் ( வேத காலம் என்பது கி.மு. 1500 முதல் கி.மு. 500 வரை ) இருந்தே, பாரதத்திற்கும் காம்போஜத்திற்கும் நிறைய தொடர்புகள் இருந்ததற்கான குறிப்புகள் உள்ளன. ஆனால், எந்த மாதிரியான தொடர்புகள் என்பது பற்றி எந்த ஒரு தெளிவான விளக்கங்களும் இன்று வரை கிடைக்கவில்லை. ராஜாங்கத் தொடர்பா, வணிகத் தொடர்பா என்பது யாருக்கும் தெரியவில்லை – கி.பி 6 ம் நூற்றாண்டு வரை.
கி.பி. 6 ம் நூற்றாண்டில் பல்லவர் காலத்தில் இருந்து கம்போஜத்துடன் வணிகம் சிறப்பாக நடை பெற ஆரம்பித்தற்கான ஆதாரங்கள்தான் நமக்குக் கல்வெட்டுக்கள் மூலம் கிடைத்துள்ளன. ( சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியத்தில் அது சம்பந்தமான சில விபரங்கள் கிடைக்கின்றன ).
பின்னாளில் சில பல்லவ மன்னர்களும், சோழ மன்னர்களும் டைம் பாஸூக்காக கடாரம் ( இன்றைய மலேஷியா) , காம்போஜம் ( இன்றைய கம்போடியா) , பாலி, ஜாவா, சுமத்ரா போன்ற சின்னச் சின்ன நாடுகளை 30 நாட்கள் 40 நாட்கள் என்றெல்லாம் கடலில் பயணம் செய்து போய் வெறும் 1/2 நாட்களில் ஜஸ்ட் லைக் தட் வென்று, “கடாரம் கொண்டான்” , ” காம்போஜ விஜயன்” என்றெல்லாம் பட்டங்கள் சூட்டி மகிழ்ந்திருக்கிறார்களே தவிர, யாருமே அங்கேயே அமர்ந்து ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை நிர்மாணித்தது போலத் தெரியவில்லை. அட்லீஸ்ட் அதற்கான எந்த ஒரு ஆதாரமும் இன்று வரை கிடைக்கவில்லை.
பின்னே எப்படி, அங்கே அப்படி ஒரு ஆலயம் ???????
வரலாறு இன்னும் முழுமையாக வெளிக் கொண்டு வராத சில ஆச்சரியங்களில் கம்போடியாவும் ஒன்று.
கி.பி. மூன்றாம் நூற்றாண்டு முதல் ஐந்தாம் நூற்றண்டு வரை ஃபுன்னன் , சென்லா என்ற இரண்டு இந்திய அரசர்களின் கட்டுப்பாடில் கம்போடியா இருந்தது என்று ஒரு சாரார் கூறினாலும் அதற்கான போதிய ஆதாரங்கள் இல்லை என்பதே உண்மை . அவர்கள் சீனர்களாக இருந்திருப்பதற்கான வாய்ப்புக்களே அதிகம் உள்ளது.
6ம் நூற்றாண்டில் வணிகர்கள் மூலமாக இந்து மதம் கம்போடிவிற்குள் நுழைந்திருக்க வேண்டும். அப்போதிருந்த ஃபுன்னன் ராஜ்ஜியம் நமது இந்திய வணிகர்களையும் , இந்து மதத்தையும் இரு கை நீட்டி கட்டியணைத்து அரவணைத்தது போல்தான் தெரிகிறது. அப்போதுதான் இந்துமதம் அங்கே வேர் ஊன்றியிருக்க வேண்டும்.
பின்னர் கி.பி. 802 – இல் ஜெயவர்மன் II என்பவன் மன்னனாகி “கமெர்” சாம்ராஜ்யத்தைத் தோற்றுவிக்க, இந்துக் கோயிகள் மள மளவென்று தோன்ற ஆரம்பித்து விட்டன . ஆம், அங்கோர்வாட் ஆலயம் 12 ம் நூற்றாண்டில் வருவதற்கு முன்னரே அங்கே நூற்றுக் கணக்கில் இந்து ஆலயங்கள் கட்டப் பட்டு விட்டன. ஆனால், அவை எல்லாமே சைவத்தைத் துதிக்கும் சிவாலயங்கள்.
அப்போதுள்ள கம்போடியாவில், ராமாயணமும் , மகாபாரதமும் நம் தமிழகத்தில் இருந்ததைக் காட்டிலும் ரொம்பவே பாப்புலர். சமஸ்கிருதம் கிட்டத்தட்ட அங்கிருந்த ஆட்சி மொழிக்கு சரிக்குச் சமமாக உலா வந்திருக்கின்றது. ஆனால், சமஸ்கிருதத்தை அவர்களுடைய சொந்த மொழியான “கமெர்” எழுத்துக்களிலேயே எழுதியிருக்கிறார்கள் ( அங்கு எடுத்த கல்வெட்டு புகைப்படத்தை இங்கே பதிவிட்டிருக்கிறேன்). அங்கு தமிழ் இருந்ததற்கான எந்த ஒரு சாட்சியமும் கண்டெடுக்கப் படவில்லை.
சோழர்கள் காலத்தில், இங்கிருந்து பட்டுத் துணி , குறுமிளகு, மஞ்சள் போன்ற பொருட்களுடன் வைணவமும் அங்கே ஏற்றுமதியாயிருக்கிறது.
1113 – இல் சூர்யவர்மன் II என்பவன் தன் பெரியப்பாவைக் கொன்று விட்டு கமெர் ராஜியத்தின் மன்னனாக முடி சூட்டிக் கொண்டான். ரத்தத்தின் பாதையில் தன் பயணத்தைத் தொடங்கியதாலோ என்னவோ, தன் வாழ்நாள் முழுவதும் போராடிக் கொண்டேயிருந்திருக்கிறான் சூர்யவர்மன்- II ( இது சமஸ்கிருதப் பெயர். தமிழ்ப் பெயர் அல்ல).
இதற்கிடையில் சைவைத்தை விட வைணவமே சிறந்தது என்று நம்பிய அவன், அன்றைய நாளில் “யசோதாபுரம்” என்று அழைக்கப்பட்ட, பின்னாளில் “அங்கோர் தாம்” என்று மாறி இன்று “சியம் ரீப்” என்று அழைக்கப்படும் நகரத்தில் ” அங்கோர்வாட்” என்னும் மிகப் பிரமாண்டமான விஷ்ணு ஆலயத்தை நிறுவினான். அப்படிக் கட்டும்போது , இதை விடப் பெரிய ஆலயம் இன்னும் 1000 வருடங்கள் ஆனாலும் யாராலும் கட்ட முடியாது என்பது பற்றி அவனுக்குத் தெரிந்ததா என்பது பற்றிய தகவல் ஏதும் இல்லை.
கிட்டத்தட்ட 500 ஏக்கர் நிலப் பரப்பில் அந்த ஆலயத்தைக் கட்டி முடிக்க அவனுக்கு 32 ஆண்டுகளும் , 50,000 ஆட்களும் தேவைப்பட்டிருக்கின்றன. அதற்குப் பின்னர் ஐரோப்பாவில் கட்டப் பட்ட கிறிஸ்துவ தேவாலயங்களுக்கு 200, 300 ஆண்டுகள் தேவைப்பட்ட போது அவனால் மட்டும் எப்படி வெறும் 32 ஆண்டுகளில் கட்ட முடிந்தது என்பது மிகவும் வியப்புக்குரிய விஷயம்தான் . அதற்கும் அங்குள்ள சிற்பங்களில் விடை கிடைத்தது. அங்குள்ள சிற்பங்கள் எப்படி செதுக்கப்பட்டன, அந்தக் கோயில் எப்படிக் கடடப்பட்டது என்பதை விவரிக்கும் சில சிற்பங்கள் அந்த மர்ம முடிச்சுகளை அவிழ்த்தன. இது போல, சிற்பக் கலையை மிகவும் நுண்ணிப்பாக விளக்கும் எந்த சிற்பமும் தமிழகத்தில் இருப்பது போல எனக்குத் தெரியவில்லை.
ரத்தத்தால் ஆரம்பித்த அவன் பயணம் ரத்தத்தாலேயே முடிந்தது. அவனை, அவன் ஒன்று விட்ட சகோதரன் கொன்று விட்டு தன்னை புது மன்னனாக அறிவித்துக் கொண்டான். அவனும் வைணவத்தைப் பின்பற்றி ஓரிரு கோயில்கள் கட்டினான்.
14-ம் நூற்றாண்டில் இந்து மதம் அழிந்து புத்த மதம் துளிர் விடத் தொடங்கியது. உலகில் எந்த ஒரு புது மதம் தோன்றினாலும், அவர்கள் செய்யும் முதல் வேலை, பழைய மதத்தின் சின்னங்களை அழிப்பதாகவே இருந்திருகின்றது. இது வளர்ந்து வரும் நாகரிகத்தின் கோர முகம். எகிப்து, கிரீஸ் போலவே கம்போடியாவிலும் அது நடந்தேறியிருக்கின்றது. அங்கோர்வாட் ஆலயத்தில் நுழைந்து அங்கிருந்த விஷ்ணு தலையைக் கொய்து விட்டு (???) புத்தர் தலையைப் பொருத்தியிருக்கிறார்கள். உலகத்தில், கம்போடியாவில் மட்டுமே , கையில் விஷ்ணுச் சக்கரம் ஏந்தி நிற்கும் புத்த சிலைகளைக் காண முடியும்.
அங்கோர்வாட் பற்றியும் கம்போடியா பற்றியும் இன்னும் சில ஆச்சரியங்கள்.
அந்தக் காலத்திலேயே நீர்ப்பாசன முறையை மிகவும் சிறப்பாக கையாண்டிருக்கிறார்கள். 50 மில்லியன் கன அடி ( 5 கோடி லிட்டர் ) கொண்ட நீர்த்தேக்கமும் , கல்லணை ஸ்டைலில் நிறைய கல் அணைகளும் அவர்கள் தொழில் நுட்ப அறிவை இன்றும் பறை சாட்டுகின்றன. இன்று போலவே அன்றும் அடிக்கடி வெள்ளம் வந்து நிறைய அழிவை உண்டு பண்ணியிருப்பது ஒரு தனி சோகக் கதை.
இங்குள்ள சிற்பங்களும் , கோயில் கோபுர டிசைனும் எந்த ஒரு தமிழக கோயிலுடனும் ஒத்துப் போகாமல் மிகவும் வித்தியாசமான முறையில் இருக்கின்றன. ஆனால், மிகவும் ஆச்சரியமாக, இன்றைய கர்நாடாகாவில் உள்ள, அன்றைய சாளுக்கிய சிற்பக் கலைகளும், கோயில் வடிவமைப்பும் , கோயில் தாழ்வார வடிவமைப்பும் , ஜன்னல் மற்றும் கதவுகளின் வடிவமைப்புக்களும் கம்போடியாவில் உள்ள கோயில்களுடன் கன்னா பின்னாவென்று ஒத்துப் போகின்றன.
அது மட்டுமல்லாமல், கர்நாடகாவில் உள்ள ஹம்பேயில், பம்பா (துங்கபத்ரா) நதி புகுந்து ஓடும் சில பாறைகளுக்கிடையில் ஆயிரம் லிங்கம்களை செதுக்கி வைத்து அவற்றை புனித ஸ்தலமாகப் போற்றியிருக்கிறார்கள் அன்றைய மக்கள். அதை அப்படியே ஜெராக்ஸ் காப்பி எடுத்தது போல, கம்போடியாவில் உள்ள கூலன் மலைப்பகுதியில் 1000 லிங்கம்களை செதுக்கி வைத்து, அதில் ஓடும் தண்ணிரை புனித நீராக கம்போடியர்கள் போற்றி வணங்கியிருக்கிறார்கள். அந்த லிங்கம்களை செதுக்கியிருக்கும் முறை 100%, ஹம்பேயில் உள்ளது போலவே இருக்கிறது. ஆச்சரியம்.
நான் இது பற்றி நிறைய ஒப்பீடுகள் செய்து சில புகைப்படங்களும், சில கட்டுரைகளும் சில வருடங்களுக்கு முன்னால் வெளியிட்டிருக்கிறேன்.
கம்போடியாவிற்கும், சாளுக்கியர்களுக்கும் இருந்த உறவு பற்றி எந்த ஒரு குறிப்பும் இன்று வரை கிடைக்கவில்லை. இவர்கள் அங்கே போனார்களா, இல்லை அவர்கள் இங்கே வந்தார்களா, இல்லை இரு நாடுகளுக்கிடையில் கலைஞர்கள் பரிமாற்றம் நடந்ததா என்பது பற்றி எல்லாம் அறிந்த சிற்பங்களும், கோயில்களும் ஏனோ மௌனம் காக்கின்றன.
நான் கம்போடியாவில் வெறும் 5 நாட்கள் மட்டுமே தங்கியிருந்தேன். அங்கிருந்து திரும்பி வரவே மனமில்லை. அவ்வளவு அற்புதங்கள். எனக்கு கம்போடியாவிற்குத் திரும்ப ஒரு முறை சென்று சில மாதங்களாவது தங்கியிருந்து சில ஆராய்ச்சிகள் மேற்கொள்ள மிகவும் ஆசை.
ஆனால், டப்பு லேதண்டி …டப்பு லேது. யாராவது ஸ்பான்சர் செய்தால் நன்றாயிருக்கும்.
வெ.பாலமுரளி
பி.கு: இவ்வளவு கலை அதிசயங்கள் இருக்கும் அந்த அழகிய நாட்டில், ஹிட்லருக்கு இணையாக போல்பாட் என்னும் சர்வாதிகாரி போட்ட ஆட்டங்கள் பற்றியும் கொன்று குவித்த எண்ணற்ற அப்பாவி மக்கள் பற்றியும் , கம்போடியா பார்ட் – II வில்.