ஐந்தருவியில் அறிவர்கள்…..

குற்றாலத்திற்கு செல்பவர்கள் அங்குள்ள ஐந்தருவியில் குளிக்காமல் திரும்புவதில்லை. 

ஆனால், நம்மில் எத்தனை பேர் அந்த ஐந்தருவிக்கு மிக எதிரில் ( ஒரு இருபதடி தூரத்தில் ) உள்ள இந்தப் பொடவை கவனித்திருக்கிறோம் ?

இந்தப் பொடவின் அமைப்பை உற்று நோக்கினால், தமிழிக் கல்வெட்டுக்கள் மற்றும் பாறை ஓவியங்கள் கிடைக்கும் நிறைய இடங்களுடன் ஒத்துப் போகின்றது இந்த இடம்.

இந்த இடத்தில் கண்டிப்பாக சில கற்படுக்கைகளும் இருந்திருக்க வேண்டும். 

இந்த இடத்தின் அருமை புரியாத யாரோ ஒரு பிரகஸ்பதி, இதன் தளத்தை சிமெண்ட் போட்டு மூடியிருக்கிறார்கள். 

நல்வாய்ப்பாக, இங்கு இருந்த மருந்து அரைக்கும் குழிகளையும், நீர் வடிகால் காடிகளையும் மூடாமல் விட்டு வைத்திருக்கின்றனர். 

மேட்டுப்பட்டி போல இங்கிருந்த கற்படுக்கைகளிலும் தமிழிக் கல்வெட்டு இருந்திருந்தால், இந்தக் கொடுமையை எங்கே போய்ச் சொல்வது. ஊழ். 

இந்தப் பொடவின் அமைப்பையும், மருந்தரைக்கும் குழிகளையும், நீர் வடிகால் காடிகளையும் பார்க்கையில் ஆசீவகர்கள் (அ) (பின்னாட்களில் சித்தர்களாக மாற்றப்பட்ட)   தமிழ் அறிவர்கள் இந்த இடத்தில் இருந்து மருத்துவ சேவை அல்லது மருதுவ ஆராய்ச்சி செய்திருப்பது நூற்றுக்கு நூறு உறுதி.

நமது இலக்கியங்கள், அகத்தியர் போன்ற சித்தர்கள் பொதிகை மலையில் (இன்றைய குற்றாலம் ஏரியாவில் )  தவம் இருந்ததை குறிப்பிட்டிருப்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும் ( “சன்னாசிப் பொடவு” பற்றி மிகவும் விரிவாக இன்னொரு சமயம் எழுதுகிறேன்).  

ஐந்தருவிக்கு இவ்வளவு அருகில், இயற்கை சூழ்ந்த ஒரு அற்புதமான  இடத்தில், ஆசை தீர அல்லது அழுக்கு தீர குளித்துக் கொண்டே தன் சேவையைத் தொடரும் ஆசையுள்ள சிலரால்தான் இங்கு தங்கி தங்கள் சேவையைச் செய்ய இயலும். 

அந்த கோணத்தில் பார்த்தால், தண்ணீர் என்றாலே அலர்ஜியாகப்  பார்க்கும் ஜெயினத் துறவிகள் (அவர்களுக்குத் தெரியாத ) தமிழையும், ( அவர்களுக்குத் தெரியாத ) மருத்துவத்தையும் இங்கு வைத்து வளர்த்திருப்பார்களா என்பது சந்தேகமே ( தொடக்கத்தில் ஜெயினர்கள் மருத்துவம் பக்கமே போகவில்லை என்பது நிறைய அறிஞர்களின் கருத்து. கி.பி. மூன்று அல்லது கி.பி. நான்காம் நூற்றாண்டிற்குப் பிறகுதான் ஜெயினர்களும் மருத்துவத் துறையில் நுழைந்திருக்கின்றனர். ஆதாரம்: உயர்திரு. சொ. ந. கந்தசாமி எழுதிய இந்தியாவின் தத்துவக் களஞ்சியங்கள் ). 

அதுவரைக்கும் மருத்துவத்தில் ஆசீவகர்கள் (அ) தமிழ் அறிவர்களே கோலோச்சியிருக்கின்றனர்.

எங்கெல்லாம் இதுபோன்ற கற்படுக்கைகளும், மருந்தரைக்கும் குழிகளும், (சில இடங்களில் ) தமிழிக் கல்வெட்டுக்களும் இருக்கின்றனவோ, அங்கெல்லாம் ஒரு ஐயனார் கோயிலும் இருப்பது, நான் என்னுடைய கள ஆய்வில் கண்ட ஒரு உண்மை ( என்னுடைய “தமிழிக் கல்வெட்டுக்களும் சில பொதுவான கூறுகளும் “ என்ற கட்டுரையிலும் இதைப் பற்றி  குறிப்பிட்டிருக்கிறேன் ).

அந்த இலக்கணம் இங்கும் பொருந்துகிறது. இந்தப் பொடவிற்கு மிக அருகிலேயே (ஒரு ஐம்பதடி தோலைவில்) “ சாஸ்தா கோயில்” என்ற பெயரில் ஒரு ஐயனார் கோயிலும் இருக்கிறது. கேரளா நெருங்க நெருங்க நிறைய “சாஸ்தா “ கோயில்களை காண முடிகிறது. ஆனால், அங்குள்ள கிராமத்து மக்கள் அவற்றை ஐயனாராகத்தான் இன்றும் வழிபடுகிறார்கள். 

இந்த ஐந்தருவியிலிருந்து சிறு தூரத்திலேயே “ ஏழு கன்னியர்” வழிபாட்டு தளம் ஒன்றும் உள்ளது, மேலே சொன்ன எல்லா கூறுகளையும் இணைத்துப் பார்த்தால் ஏதோ ஒரு கனெக்‌ஷன் இருப்பது உறுதியாகிறது. 

எப்படிப் பார்த்தாலும், இந்த இடத்தில் 2000 அல்லது 3000 ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு அறிவு சார்ந்த பள்ளி அல்லது ஆய்வுக் கூடம் அல்லது மருத்துவக் கூடம் இருந்திருப்பது யாராலும் மறுக்க இயலாத ஒரு உண்மை.

அப்படிப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க, கலாச்சார சிறப்பு மிக்க ஒரு அதி அற்புதமான இடம் இன்று பனியன், ஜட்டி காயப் போடும் இடமாகவும், ஆடைகள் மாற்றிக் கொள்ளும் இடமாகவும் இருப்பது வேதனையிலும் வேதனையான விஷயம். 

வெ.பாலமுரளி

பி.கு: அச்சு அசலாக இதே போன்ற ஒரு இடத்தை உடுமலைப் பேட்டைக்கு அருகில் பார்த்தேன். அங்கும்,கற்படுக்கைகளை சிமெண்டால் மூடி அந்த இடத்தை “ பிரம்மன், சிவன், விஷ்ணு” என்று மும்மூர்த்தி “ஸ்தலமாக” மாற்றியிருக்கிறார்கள். சரி , எங்கேடா முமூர்த்தி சிலைகள் என்று கேட்டால் “ அவர்கள் அரூபமாக” இருக்கிறார்கள் என்று இன்னொரு கதையையும் சொல்கிறார் அர்ச்சகர். ஆச்சரியமாக அந்த மும்மூர்த்திகள் அரூபமாக குடி கொண்டிருக்கும் கோயிலில் வாகனம், ஐயனாரின் யானை.