எனக்கு ரொம்ப நாளா சில கேள்விகள் மனதை அரித்துக் கொண்டே இருந்தன.
இந்த AI யுகத்திலும், மலைவாழ் குடிகளும், நம்மைப் போன்ற சாதாரண நிலத்தில் வாழும் மக்களும் ஏன் ஒரு சமுதாயமாக இணைந்து வாழ்வதில்லை ? அவர்கள் எப்போதும் தனித்தே இருப்பது போல் இருக்கிறதே ? தமிழ் நாட்டுக்குள் இருந்தாலும் அவர்கள் பேசும் மொழி வித்தியாசமாக உள்ளதே ?
அவர்கள் கலாச்சாரம், சடங்கு முறைகள் முற்றிலும் வேறாக இருக்கின்றனவே ? ஒருவேளை , அறிவியல் சொல்லும் 65,000 வருடங்களுக்கு முன்னர் இந்திய நிலப்பரப்புக்குள் வந்த ஹோமோ சேப்பியன்ஸ் இந்த ஆதி இந்தியர்கள்தானோ ? அவர்களைத் தவிர்த்த நாம் “எல்லோருமே” வந்தேறிகள்தானோ ? பிஜேபி சொல்லும் இந்துக்களில் இவர்கள் வர மாட்டார்களா ? இது போல நிறைய.
நான் 2020 இல் இந்தியா வந்தபோது சில ப்ராஜக்ட்டுகளை மனதில் வைத்துக் கொண்டு வந்தேன். அதில் ஒரு முக்கியமான ப்ராஜக்ட், இந்த “ ஆதி மனிதனைத் தேடும்” ப்ராஜக்ட்.
நிறைய (வெவ்வேறு) மலைவாழ் குடிகளை சந்தித்து, அவர்களின் இன்றைய வாழ்க்கை முறையையும், அவர்கள் சொல்லும் அவர்களின் வரலாற்றையும் முறையாக அறிந்து அதை “குடிகள்” வாரியாக டாக்குமெண்ட்ரி எடுக்க வேண்டும். அதன் மூலமாக அவர்களுக்கு இருக்கும் பிரச்சினைகளையும் வெளிக் கொணர வேண்டும் என்பதே இந்த ப்ராஜக்ட்டின் முக்கிய நோக்கம்.
அதைத் தொடங்கும் முன்னரே “ தமிழி” யும், குடைவரைக் கோயில்களும், பாறை ஓவியங்களும் என்னை கொஞ்சம் திசை மாற்றி விட்டன. பற்றாக்குறைக்கு “ மசை மாரா “ வேறு அவ்வப்போது மனதுக்குள் வந்து ஒரு இனம் புரியாத சோகத்தை கிளறி விட்டு விடும்.
சமீபத்தில்தான், கொஞ்சம் சுதாரித்து எழுந்தேன்.
சரி…நமக்கு அருகில் கொடைக்கானலில் உள்ள பளியர்களை சந்திப்போம் என்று ஒரு நாள் கிளம்பினேன். தாண்டிக்குடிக்கு செல்லும் வழியில் ஒரு பளியர் குடியிருப்பைப் பார்த்து காரை நிப்பாட்டினேன். ஒரு பத்து வீடுகள் இருக்கும். அதில் ஒரு மேடான பாறையில் இருக்கும் வீடுதான் அவர்களின் தலைவியின் வீடாம்.
வீடு என்றால் செங்கல், சிமெண்ட் வைத்துக் கட்டும் வீடுகளில்லை. சும்மா, கம்புகளை வைத்து ஒரு ஃபிரேம் பண்ணி அதை தகரம், சாக்கு, பாலிதீன் ஷீட் என்று எது கிடைக்கிறதோ அவற்றை வைத்து மூடி குடும்பம் நடத்துகின்றனர்.
உள்ளே தரை, சாணியால் மெழுகுவது கூட கிடையாது. புழுதி படியும் சாதாரண மண் தரைதான்.
அங்கு 30 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞரை சந்தித்தேன். பெயர் வேடியப்பன் என்றார். மற்ற ஆண்கள் எல்லோரும் வேலைக்கு போயிருக்க, இவர் மட்டும் உடல் நலம் சரியில்லை என்று வீட்டில் இருந்தார்.
முன்று குழந்தைகள். வறுமையின் அர்த்தம் புரியாமல் அந்தப் புழுதித் தரையில் கட்டியிருந்த தூளியில் செம ஆட்டம் போட்டன.
வேடியப்பனின் மனைவி விறகு அடுப்பில் கஞ்சி காய்ச்சிக் கொண்டிருந்தார். இருந்து சாப்பிட்டு விட்டுத்தான் போக வேண்டும் என்று உள்ளன்போடு கூறியது நிகிழ்ச்சியாக இருந்தது.
வேடியப்பனிடம் பேச்சுக் கொடுத்தேன். மலைப் பகுதி என்பதால் பாம்பு, ரத்த அட்டைகள் எங்கள் வாழ்வின் ஒரு அங்கம் என்றார் சோகமாக சிரித்தபடியே. அவர்கள் இயற்கையோடு ஒன்றி வாழ்வதால் பாம்புகளை அடிக்க மாட்டார்களாம். அது நம்மை ஒண்ணும் செய்யாதுங்க. நாம ஒதுங்கிப் போனா அதுவும் ஒதுங்கிப் போயிரும்ங்க என்றார்.
அரசாங்கம் ரொம்பவே உதவி செய்யுதுங்க என்றார். சமீபத்தில் சிமெண்ட் வீடு கட்டிக் கொடுப்பதற்காக செங்கல், மணல் எல்லாம் வந்து இறங்கியிருக்கின்றன. அதன் தொடக்க வேலையாக அந்தக் குடியிருப்புக்கு மட்டும் மின்சாரம் கொண்டு வருவதற்கான வேலையும் நடக்கிறது.
பக்கத்தில் உள்ள ஒரு ஊரில் இருக்கும் பள்ளிக் கூடத்திற்கு குழந்தைகள் போகின்றன. குழந்தைகளுக்கு பள்ளியிலேயே நல்ல சாப்பாடு கிடைக்கிறது என்றார்.
அவர்கள் வழிபடும் இடம் என்று அருகில் உள்ள ஒரு கோவிலுக்கு அழைத்துச் சென்றார். சிமெண்டில் ஒரு மேடை அமைத்து , அதற்கு தகரத்தில் ஒரு கூரை போட்டு நான்கு கற்களை வைத்து வழிபடுகின்றனர். கடவுளின் பெயர் “பளியம்மன்”.
நன்றாக தமிழில் சரளமாகப் பேசுகிறார். பளியர்கள் ரொம்ப காலமாக தமிழில்தான் பேசுவதாக சொன்னார்.
இந்த இடத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை குறிப்பிட்டாக வேண்டும். ஆங்கிலத்தால், ஹிந்தியால், சமஸ்கிருதத்தால் தமிழ் அழிந்து விடும் என்று நாம் பயப்படுகிறோம். ஆனால், தமிழ் மொழியால் சில பழக்குடியினரின் சொந்த மொழி அழிந்து, தமிழ் மொழியே அவர்களின் தாய்மொழி போல் ஆகி விட்டது காலத்தின் கொடுமை.
பேச்சு, வழிபாடு, சடங்குகள் என்று திரும்பியது. அவர்கள் கொண்டாடும் பண்டிகைகள், சடங்குகள் பெருங்கற்காலத்தையும் சங்க காலத்தையும் என் கண்முன்னே நிறுத்தின. அதாவது (குறைந்தபட்சம்) 4000 வருடப் பண்பாட்டை மிகவும் சாதாரணமாக விளக்கிக் கொண்டிருந்தார்.
பளியர் கதையே இப்படியென்றால், நாகர், இருளர், காடர் முதுவர், தோடர், என்று இன்னும் 30 க்கும் மேற்பட்ட குடியினரின் கதையைக் கேட்டால் 65,000 வருட வரலாற்றிற்கு மிகவும் எளிதாக நம்மை அழைத்துச் சென்று விடுவர் என்று தோன்றியது.
மகிழ்ச்சியிலும், உற்சாகத்திலும் லேசாக தலை கிறு கிறுத்தது (பழங்குடி மக்களைப் பார்க்கப் போய் இவனும் “குடி” மகனாக ஆகி விட்டானோ என்று நினைத்து விடாதீர்கள். இது வேறு கிறு கிறுப்பு).
எல்லாம் நன்றாகப் போய்க் கொண்டிருந்தது. வீடியோ ஷூட்டிங் செய்வதற்கு தயாராக போகவில்லையாதலால், டாகுமெண்ட்ரி போல் எடுக்காமல், சாதாரணமாக அவர் சொன்ன விஷயங்களை மட்டும் சில வீடியோக்கள் எடுத்து விட்டு கிளம்பத் தயாரானேன்.
அப்பதாங்க அவர் அந்த குண்டைப் போட்டார்.
“சார், உங்களோடு சேர்ந்து ஒரு செல்ஃபி (???) எடுத்துக் கொள்ளலாமா ?” என்றார். “சரி, எடுத்துக் கொள்வோம். ஆமா, செல்ஃபி எதுக்குங்க ?” என்றேன்.
ஃபேஸ்புக்கையும், இன்ஸ்டாகிராமையும் அப்டேட் பண்ணனும்ங்க என்றார்.
என்னுடைய பெருங்கற்கால சிந்தனை சர சரவென்று சரிந்து தலை நிஜமாகவே கிறு கிறுவென்று சுற்றி விட்டது.
நான் சுதாரித்து நிகழ் உலகத்திற்கு வருவதற்குள் வேடியப்பனின் வாட்சப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் எல்லாம் அப்டேட் ஆகி விட்டது.
இப்படியாக என்னுடைய முதல் ஆதி மனிதனைத் தேடும் பயணம் டைம் மெஷினில் 4000 வருடத்திற்கு முன் பயணித்து இன்ஸ்டாகிராமில் வந்து முடிவடைந்தது.
வெ.பாலமுரளி




