நண்பர் பாவெல் பாரதியின் (Mohan Kumara Mangalam)) “ கண்ணகி கோவிலும் வைகைப் பெருவெளியும்” படித்ததிலிருந்தே, மதுரையிலிருந்து வண்ணாத்திப் பாறை ( விண்ணேற்றிப் பாறை) வரை கண்ணகி சென்ற தடத்தில் பயணம் செய்து அந்த இடங்களை டிஜிட்டலில் பதிவு செய்ய வேண்டும் என்ற ஆசை ( ஆமா….மனசுல பேராசிரியர் கோவிந்தராசனார் ஐயா என்ற நெனப்பு என்று நீங்கள் திட்டுவது கேக்குது மக்கா கேக்குது ).
அப்படி, மதுரை சிம்மக்கல் செல்லத்தம்மன் கோயிலில் ஆரம்பித்த எனது பயணம் பாலா பாரதி சாருடன் கண்ணகிக் கோட்டம் ( வண்ணாத்திப் பாறைக்கு சற்று மேலே ) போய் முடிவடைந்தது.
இந்தப் பயணம் முடிந்து ஒன்றரை வருடம் ஆகி விட்டது. அப்போதே “ கண்ணகியைத் தேடி” விரைவில் என்று ஜம்பமாக போஸ்ட்டிங்கும் போட்ட ஞாபகம் ( அதுதான் சூப்பரா பண்ணுவோமே).
எல்லாத்துக்கும் நேரம் காலம் வரணும்ல….
சரி….மேட்டருக்கு வருவோம்.
மதுரையை எரித்தவுடன் (உண்மையிலேயே கண்ணகி மதுரையை எரித்தாளா ? சிலப்பதிகாரம் உண்மைச் சம்பவம்தானா ? தனியே எழுதுகிறேன்) தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் பொருட்டு சித்தம் போக்கு சிவன் போக்கு என்று நடக்க ஆரம்பிக்கிறாள்.
மதுரை எல்லையை, (இன்றைய விராட்டிபத்து என்னும் ஏரியாவை) கடந்தவுடம் கொஞ்சம் நின்று தன் கணவனைப் பறி கொடுத்த “மதுரையைத் திரும்பிப் பார்த்து” ஓவென்று ஒரு முறை கதறி அழுதுவிட்டு கை வளையல்களை உடைத்து விட்டு தலையை விரித்துப் போட்டு தலை விரி கோலமாக தன் இலக்கற்ற பயணத்தைத் தொடர்கிறாள்.
எனவே, குத்து மதிப்பாக ஒரு இடத்தைத் தேர்வு செய்து, ஒரு கல்லையும் நட்டு வைத்து அன்று முதல் இன்று வரை அதை “ திரும்பிப் பார்த்த அம்மனாக” உள்ளூர் மக்கள் வழிபட்டு வருகிறார்கள்.
அந்தச் சாலையை விரிவு படுத்தும்போது கூட நமது நெடுஞ்சாலைத் துறை அந்தக் கல்லை எடுத்து சாலையின் ஒரு ஓரத்தில் நட்டு வைத்து விட்டுப் போயிருக்கிறார்கள்.
ஆனால், எனக்குத்தான் அதைக் கண்டுபிடிக்க 2 மணி நேரத்திற்கும் மேலாகி விட்டது. அந்த இடத்தை ஒரு 10 முறையாவது தாண்டிப் போயிருப்பேன். ஆனால், அந்த இடத்தில் நிறுத்தி யாரையும் கேட்க வேண்டுமென்று தோன்றவில்லை.
ரொம்ப நேரம் கழித்து அந்த இடத்திலிருந்து நாலைந்து கிமீ தூரம் தள்ளி அச்சம்பத்து என்னும் ஊரில் ஒரு பெண்மணியை கேட்க, அவர்தான் தெளிவாக இந்த இடத்திற்கு வழி சொன்னார்.
அந்த இடத்தை கண்டுபிடித்ததும் ( ஹிஹிஹி ), அப்படி ஒரு பரவசம்.
போய் வணங்கி விட்டு, அருகில் இருந்த ஒரு இளநீர் கடைக்காரரிடம் பேச்சுக் கொடுத்தேன்.
அவருக்கு இது பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்ற எண்ணத்துடன், “இந்தக் கல் என்னன்னு தெரியுமாங்க?” என்றேன்.
“ஓ..தெரியுமே. நம்ம திரும்பிப் பார்த்த அம்மன்” என்றார்.
“அப்படின்னா?” என்றேன். என் நிறத்தைப் பார்த்து விட்டு நான் யாரோ ஃபாரினர் போலிருக்கு என்று நினைத்து விட்டு ( சரி….சரி…கண்டு கொள்ளாதீர்கள்). சிலப்பதிகாரத்தின் மொத்த கதையையும் சொல்லி விட்டு, இந்த இடத்தில்தான் கண்ணகி கடைசியாக மதுரையை திரும்பிப் பார்த்து விட்டு சென்றாள் என்று முடித்தார்.
அத்துடன், தான்தான், அந்தக் கல்லுக்குக் கீழே சிமெண்ட் தளத்தைப் போட்டது என்றும், தினமும் தன்னுடைய பணத்தில் 30 ரூபாய்க்கு ஊதுபத்தி, சூடம் கொளுத்தி வழிபட்டு வருவதாகவும், என்னைப் போன்ற சுற்றுலாவாசிகள் இளநீர் குடிக்க வந்தால் அவர்களுக்கு கண்ணகியின் பெருமைகளை எடுத்துச் சொல்வதாகவும் கூறினார்.
வழக்கம்போல் முகத்தில் வழிவதை துடைத்துக் கொண்டு, குடித்த இளநீருக்கு காசைக் கொடுத்து விட்டு கிளம்பினேன்.
Learnt Lesson ( Don’t judge a book by its cover).
வெ.பாலமுரளி

