முதலில் உங்களுக்கு இரண்டு விஷயங்களைச் சொல்லியாக வேண்டும்.
1. எனக்கு வைத்த முதல் பெயர் பெரியார் தான். ஆனால் பள்ளியில் சேர்க்கும் போது பிரச்சினை வரலாம் என பயந்ததால் வைத்த பெயரே பாலமுரளி
2. எனக்கு பெரியார் என்று பெயர் வைத்த என் தந்தையோ , நானோ தி.க. காரர்கள் அல்ல. இருவருமே மீனாட்சி அம்மனின் பக்தர்கள்.
நான் அடிக்கடி என் தந்தையிடம் கேட்டதுண்டு, “நீங்களோ சாமி கும்பிடுகிறீர்கள். ஆனால், ஏம்பா பெரியார் என்று எனக்குப் பெயர் வைத்தீர்கள்” என்று.
அவர் சொன்ன பதில்தான் இந்தக் கட்டுரை.
என்னைக் கேட்டால் பெரியாரை முழுவதுமாக புரிந்து கொண்டவர்கள் இங்கு மிகவும் குறைவானவர்களே, அவர் சார்ந்த தி.க.காரர்களையும் சேர்த்தே சொல்கிறேன்.
இன்று பெரியார் மீது வைக்கப்படும் மிகப் பெரிய இரண்டு குற்றச்சாட்டுகள் :
1. அவர் இந்து மதத்தையும், இந்து கடவுள்களையும் மிகவும் தரக் குறைவாக விமர்சித்தார்
2. பிராமணர்களையும் அதேபோல் விளாசித்தள்ளினார்.
இந்த இரண்டு குற்றச்சாட்டுகளுமே சரி . அதேபோல் இந்த இரண்டு செயல்களுமே மிகவும் அநாகரிகமானவை என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.
அதேசமயம், இன்று அவரை விமர்சிக்கும் அனைவருமே இன்றுள்ள சமூக சூழ்நிலையை கருத்தில் கொண்டே அவரை விமர்சிக்கிறார்கள். அது சரியா ? கண்டிப்பாக தவறு.
காரணம், அவர் பொது வாழ்வில் நுழையும் சமயம், நம் சமூக வாழ்வியல் மிகவும் கன்றாவியாக இருந்தது. அவர் தீண்டாமையில் இருந்தே தன் பொது வாழ்வைத் தொடங்கினார் என்கிறது வரலாறு.
அந்த்கக் கால கட்டத்தில் ஜாதியின் பெயரைச் சொல்லி நிறைய பேரைத் தீண்டத் தகாதவர்களாக ஒதுக்கி வைத்திருந்தோம். கல்வி, மருத்துவம், சுகாதாரம், கோயில்களுக்குள் செல்வது, பொது இடத்தில் நடப்பது, அமர்வது, பொது இடங்களில் தேநீர் அருந்துவது, பெண்கள் மாராப்பு சேலை அணிவது போன்ற அடிப்படை உரிமைகள் கூட அவர்களுக்கு மறுக்கப்பட்டது.
இந்த அவலத்தையெல்லாம் நம் சமூகத்தில் புகுத்தியது யார் என்று ஆராயும்போது , அது பிராமணர்கள் என்று அறிந்து அவருடையை முழுக் கோபமும் பிராமண சமூகத்தின் மீது பாய்ந்தது.
ஆனால், பிராமணர்களுக்கு இணையாக ( நான் சார்ந்திருக்கும்) பிள்ளைமார் சமூகம், முதலியார், செட்டியார், தேவர், கள்ளர் என்று நிறைய ஜாதியினர் தாங்களும் மேல் ஜாதியினர் என்று சொல்லிக் கொண்டு வெறியாட்டம் ஆடினர். ஆனால், இவர்கள் யாரையும் பெரியார் பெரிதாகக் கண்டு கொள்ளாதது ஒரு தவறான செயல்தான்.
யாரோ இதையும் அவரிடம் கேட்டார்கள். அதற்கு அவர் ரொம்ப சிம்பிளாக, ஜாதி மத பேதங்களை முதன் முதலில் யார் புகுத்தினார்களோ, அவர்கள்தான் என் முதல் இலக்கு
என்று சொல்லி சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டார்.
பிராமணர் அல்லாத மற்ற ஜாதியினர் ஆடிய வெறியாட்டங்களை சிறுவனாக இருக்கும்போது நானே பலமுறை நேரில் பார்த்திருக்கிறேன்.
எங்கள் ஊருக்கு அருகில் உள்ள உஞ்சனை என்னும் ஊரில் நடந்த இனக் கலவரத்தில் கொல்லப்பட்ட நூற்றுக்கும் அதிகமான உடல்களை , உடல் வேறு தலை வேறு என்று குவித்து வைத்திருந்ததைப் பார்த்தபோது எனக்கு வயது 12. ( அங்கு வேலை செய்த மருத்துவமனை ஊழியர்கள் தலையையும் முண்டங்களையும் கோர்க்க கஷ்டப்பட்டது இன்னும் என் நினைவில் உள்ளது ).
பரமக்குடிக்கு அருகில் உள்ள எங்கள் சொந்த ஊரில், பிள்ளைமார் தெரு என்று ஒன்று இருந்தது. அதில் தாழ்த்தப்பட்ட ஜாதியாகக் கருதப்பட்டவர்கள் சாதாரணமாக நடந்து செல்ல அனுமதியில்லை. செருப்பை கையில் எடுத்துக் கொண்டு, தோளில் உள்ள துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டோ, கக்கத்தில் வைத்துக் கொண்டோ, பேசாமல் கடந்து செல்ல வேண்டும். அறுவடைக் காலங்களில், எங்கள் வீட்டின் பின்புறத்தில் வந்துதான் உணவைப் பெற்றுச் செல்ல வேண்டும். இது தவறு என்று ஒரு முறை சொல்லி எங்கள் தாத்தாவிடம் செமத்தியாக அடி வாங்கியிருக்கிறேன். அப்போது எனக்கு வயது 10க்கும் குறைவே.
அப்படிப்பட்ட எங்கள் தாத்தா வாழ்ந்த வீட்டை, அவர் இறந்ததற்குப் பிறகு எங்கள் பண்ணையில் வேலை பார்த்த ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவருக்குத்தான் விற்றோம் ( கடவுள் இருக்கான் கொமாரு ). போன விடுமுறையின் போது எங்கள் வீட்டையும், அதை விலைக்கு வாங்கிய பண்ணையாளையும் போய்ப் பார்த்தோம். எனக்கு முன்னால் உட்கார மறுத்து விட்டார் ( உங்களையெல்லாம் நூறு பெரியார் வந்தாலும் மாற்ற முடியாதைய்யா ).
ஆனால், பெரியாரின் பார்வை பிராமணர்களின் மீது மட்டுமே விழுந்தது. அதற்கு இன்னொரு காரணம், பிராமணர்கள் மட்டுமே அந்த தீண்டாமைக்கு விளக்கம் கொடுத்தார்கள். அவர்கள் சொன்ன விளக்கம், “ எங்கள் மதம் இப்படித்தான் மனிதர்களைப் பிரிக்கிறது”.
அப்படித்தான் அவர் இந்து மதத்தையும், இந்து மதம் வழிகாட்டிய மூட நம்பிக்கைகளையும் எதிர்க்க ஆரம்பித்தார்.
பெரியாரையும் ஒரு பெரிய கூட்டம் நம்ப ஆரம்பித்தது. உடனே பிராமண சமூகம், “ இதனால் தெய்வ குற்றம் ஆகி நீங்களும் உங்கள் சந்ததியினரும் அழிந்து போகப் போகிறீர்கள்” என்று பயமுறுத்த ஆரம்பித்தது.
அப்படித்தான் அவர் இந்துக் கடவுள்களையும் விமர்சிக்க ஆரம்பித்தார்.
“ ஒரு கடவுள் உங்களைப் பழி வாங்கும் என்றால் அது எப்படி கடவுளாக இருக்க முடியும் “ என்றுதான் முதலில் ஆரம்பித்தார்.
அந்த விவாதம் வளர வளர அவருடைய அவமதிப்பும் ஏகத்தும் வளர ஆரம்பித்தது. அவரை ஏகத்துக்கும் உசுப்பி விட்டது நம் சமூகம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
அவர் ஏன் இந்து மதத்தை மட்டுமே சாடினார். அவர் கிறிஸ்துவ மதத்தையோ, முஸ்லிம் மதத்தையோ தொட்டிருந்தால் தொலைத்திருப்பார்கள் என்பதும் அவர் மீது வைக்கப்படும் விமர்சனம்.
என்னுடைய கருத்தில், மற்ற மதங்களை விமர்சிப்பதற்கான எந்தவொரு காரணமும் அவருக்கு இல்லை. மற்ற மதங்கள் தீண்டாமையையோ , பெண்களின் அடிமைத்தனத்தையோ போற்றவில்லை.
சர்ச்சுக்கும், மசூதிக்கும் எல்லோரும் சென்று வந்தனர்.
இந்தத் தீண்டாமையை ஒரு காரணமாக வைத்துத்தான் கிறிஸ்துவர்கள் தீவிரமான மத மாற்றத்தில் ஈடுபட்டார்கள். தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் ஊர்களுக்குச் சென்று அவர்களை மத மாற்றம் செய்து சர்ச்சுக்குள் அனுமத்தித்தும், அவர்களுக்கு பள்ளிக் கூடங்கள், மருத்துவமனைகள் கட்டிக் கொடுத்தும் அரவணைத்தனர்.
அப்படிப் பார்த்தால், அது போன்ற மதமாற்றங்களுக்கு நம் மக்களைத் தள்ளியது நம் இந்து மதத்தின் பெயரைச் சொல்லி வெறியாட்டம் ஆடிய உயர் வகுப்பினர்தான். இன்று கிறிஸ்துவர்களைச் சாடும் பிஜேபியினர் இதை ஒத்துக் கொள்வார்களா ?
அது மட்டுமல்லாது , அன்றைக்கும் இன்றைக்கும் மற்ற மதத்தினர் நம் ஊரில் சிறுபான்மையினர்தான். அவர்களிடம் இருக்கும் மூட நம்பிக்கைகள் நம் சமூகத்தை பெரிதாக பாதிக்காது என்று நம்பியிருக்கலாம். யார் கண்டது .
தீண்டாமைக்கு அடுத்து அவர் எடுத்த பிரச்சினை “ பெண் விடுதலை”. ஆண்களுக்கு எந்த ஒரு கட்டுப்பாடும் விதிக்காத நம் இந்து மதம் , பெண்களுக்கு மட்டும் ஏகத்துக்கும் கட்டுப்பாடுகளை விதித்தது.
அதை எதிர்த்தும் அவர் தீவிரமாகப் போராடினார். ரொம்பப் பேருக்குத் தெரியாத ஒரு விஷயம், அது போல அவர் பெண்கள் விடுதலைக்குப் போரடியதைப் பாராட்டி ஒரு பெண்கள் மாநாட்டில் , பெண்களாக ஒன்று சேர்ந்து அவருக்கு கொடுத்த பட்டம்தான் “ பெரியார்”. அன்றுதான் ஈவெ ராமசாமி , பெரியாராக மறு அவதாரம் எடுத்தார்.
அவருடைய தள்ளாத காலத்தில் மணியம்மையை மறுமணம் செய்து கொண்டதும் இன்று கேவலமாக விமர்சிக்கப் படுகிறது.
கூத்தியாள் வைத்திருக்கும் கலாச்சாரத்தை பெருமையாக பேசும் மக்களுக்கு நடுவில் தான் வெளிப்படையாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டது ஒன்றும் கொலைக் குற்றம் இல்லை என்று சொல்லி அதற்கும் அன்றே முற்றுப் புள்ளி வைத்து விட்டார்.
அவர் எந்த சமூகத்தை உயர்த்த வேண்டும் என்று பாடுபட்டாரோ, அந்த சமூகம் அதை ஓவர் டோஸாக எடுத்துக் கொண்டு, தீண்டாமைச் சட்டத்தைத் ( Untouchability Law) தவறாகப் பயன்படுத்துவதும், இந்த ஜாதிப் பெண்ணை காதலித்து கூட்டிக் கொண்டு வந்தால் 5 லட்சம் , அந்த ஜாதிப் பெண்ணை கூட்டி வந்தால் 2 லட்சம் என்று ஒரு கட்சியின் தலைவரே அறிவிப்பு விடுவதும் அநாகரிகத்தின் உச்சம். பெரியார் மட்டும் இப்போது உயிரோடு இருந்தால் “ இதற்குத்தான் ஆசைப்பட்டாயா பெரியார் ?” என்று நொந்து போய் தற்கொலை செய்திருப்பார்.
சரி அவர் கண்ட கனவுக்கு என்னதான் தீர்வு ?
நகர்ப்புறங்கள், கிராமப் புறங்கள் , மலைப் பகுதிகள் என்று எல்லா இடங்களிலும் வசிக்கும் மக்களுக்கும் ஒரே மாதிரியான கல்வி, சுகாதாரம் மற்றும் வாழ்வியல் வசதிகளை செய்து கொடுத்து, அனைத்து வகை சமுதாயத்தினரையும் ஒரே தட்டில் கொண்டு வந்து விட்டு, ஜாதியை முற்றிலுமாக ஒழிப்பது ஒன்றே வழி.
ஆனால், ஜாதியையும், மதத்தையும் மட்டுமே வைத்து அரசியல் செய்யும் பிஜேபி, திராவிடக் கட்சிகள், மாயாவதி , பகுஜமன் சமாஜ் வாதி, மற்றும் இதர ஜாதிக் கட்சிகள் இருக்கும் வரை இது சாத்தியமில்லை.
எது எப்படியோ, பெரியாரை வாழ்த்தியோ , தூற்றியோ அவரை இன்று வரை முழு உயிர்ப்புடன் வைத்திருக்கிறது நமது சமூகம். அதுவே, அவருடைய மாபெரும் வெற்றி.
பெரியார் (எ) பாலமுரளி.