சித்திரவரை என்றால் யாருக்கும் புரியாது. இந்த ஊரின் இன்றைய பெயர் “செத்தவரை”.
விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரத்திற்கும் திருவண்ணாமலைக்கும் இடையில் இருக்கும் ஒரு சிற்றூர்தான் செத்தவரை.
வரை என்றால் மலை. சித்திரவரை என்றால் சித்திரங்கள் (பாறை ஓவியங்கள்) இருக்கும் மலை என்று அர்த்தம். காலப்போக்கில் அது மருவி “செத்தவரை” ஆகிவிட்டது.
இங்கிருக்கும் மலையில்தான் காலத்தால் அழியாத நிறைய பாறை ஓவியங்கள் உள்ளன.
உன்னிப்பாக கவனித்தால் இங்குள்ள ஓவியங்கள் வெவ்வேறு காலகட்டத்தில் வரையப்பட்டிருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
பொதுவாக இந்தியாவில் வரையப்பட்ட பாறை ஓவியங்களை, அறிவியல் முறையில் அல்லாமல் அவற்றின் தன்மையை வைத்தே அதன் காலங்கள் ஊகிக்கப் படுகின்றன.
உதாரணமாக கருப்பு நிறம் மிகப் பழைமை என்றும், கருஞ்சிவப்பு நிறம் அதற்கு அடுத்தபடியாக பழைமை என்றும், ஓவியங்கள் மெலிதான கோடுகளில் வரைபட்டிருந்தால் மிகப் பழைமை என்றும், தடிமனான கோடுகளால் வரையப் பட்டிருந்தால் பெருங்கற்காலம் என்றும், பெரிய உருவங்களை வெளிக் கோடுகளால் ( Outline Sketch) காட்டியிருந்தால் பழைமையானது என்றும், அதன் உள்ளே ஏதேனும் ஒரு நிறத்தால் நிரப்பியிருந்தால் புதிய கற்காலம் அல்லது பெருங்கற்காலம் என்றும் சொல்லப்படுகிறது.
மிகவும் அதிசயமாக வாட்சப் இல்லாத காலத்திலேயே ஒவ்வொரு காலகட்டத்திலும், உலகின் வெவ்வேறு பகுதிகளில் ஒரே மாதிரியான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இது எப்படி நிகழ்ந்தது என்பது புரியாத புதிர்.
உதாரணமாக பறவை முகத்துடன் கூடிய மனித உருவங்கள். தமிழ்நாட்டில் அழகர்கோவில், கீழ்வாலை, (சிவகங்கை) திருமலை உட்பட உலகின் நிறைய பகுதிகளில் செஞ்சாந்து நிறத்தில் வரையப்பட்டுள்ளன. இவற்றின் காலக்கணக்கீடு ஏனைய நாடுகளில் 20,000 அல்லது 30,000 ஆண்டுகள் என்றும் இந்தியாவில் அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டில் 6,000 ஆண்டுகள் ( ????) என்றும் கணக்கிடப்பட்டுள்ளன ( இது காலக் கணக்கீடா அல்லது காலக் கொடுமையா என்று நீங்கள் கேட்பது புரிகிறது).
அதேபோல்தான் Signature Paintings அல்லது Hand Paintings அல்லது Hand Stencils எனப்படும் கை அச்சு ஓவியங்கள். அதாவது அந்தக் காலத்திலேயே அட்டெண்டென்ஸ் ரெஜிஸ்டர் போல அங்கு வசித்த சிலர் அல்லது அனைவரும் தங்கள் கைகளில் ஒன்றை சுவற்றில் வைத்து அதன் வெளிப்புறத்தை செஞ்சாந்து நிறத்தில் ( Outline Sketch ) வரைந்து வைத்துள்ளனர்.
தாய்லாந்து மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளில் உள்ள இது போன்ற ஓவியங்களின் காலத்தை கி.மு. 30,000 வரை வரையறுத்துள்ளனர் அந்நாட்டு வல்லுனர்கள்.
செத்தவரை ஓவியங்களில் சிறப்பானவையே இந்த கை அச்சு ஓவியங்கள்தான். ஒன்றல்ல, ஏராளமான கை அச்சு ஓவியங்கள் இங்குள்ளன.
இவற்றின் காலத்தை கி.மு. 1500 என்று வரையறுத்துள்ளது நமது அரசும் விக்கிப்பீடியாவும் (நல்லவேளை மெக்காலேதான் இவற்றை வரைந்தது என்று பதியவில்லை. நன்றி மக்காஸ்).
இந்த கை அச்சு ஓவியங்கள் ஒன்றில் ஒருவருக்கு ஆட்காட்டி (சுட்டு) விரல் இல்லாமலிருப்பது காட்டப்பட்டுள்ளது. மற்ற நாடுகளின் கணக்குப்படி ஏறத்தாழ 30,000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த ஒருவருக்கு ஒரு விரல் துண்டிக்கப்படிருப்பதை இன்றும் நாம் பார்க்க முடிவது எப்பேற்பட்ட ஒரு அற்புதம். An amazing record.
அது மட்டுமல்ல. செஞ்சாந்து நிறத்தில் ஒரு இடத்தில் “சின் முத்திரை” வரையப்பட்டுள்ளது. அறிவின் உயர்நிலையை அல்லது ஞானத்தின் அடையாளமே சின் முத்திரை என்று சொல்லப்படுகிறது. இது செஞ்சாந்து நிறத்தில் வரையப்பட்டிருப்பதால், காலத்தால் மிகவும் பழைமையானது என்பதை கவனத்தில் கொண்டு அப்போதே இங்குள்ள மக்கள் அறிவின் உயர் நிலையில் இருந்திருப்பது நமக்கெல்லாம் ஆச்சரியம் கலந்த பெருமை.
மான், மீன் போன்ற உருவங்கள் முதலில் செஞ்சாந்து நிறத்தில் மெல்லிய கோடுகளால் வரையப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கழித்து பின்னால் வந்த மக்கள் அதன் மையப் பகுதியை வெள்ளை நிறத்தால் நிரப்பியுள்ளனர். இதன் மூலம் இந்த மலையில் தொடர்ச்சியாக மக்கள் வந்து போயிருப்பதும், அந்த கும்பல்களில் கலை நயம் கொண்ட கலைஞர்களும் இருந்திருந்தனர் என்பதும் தெளிவு. அபூர்வமான மற்றும் அதிசயமான ஒரு வரலாற்று ஆவணம்.
ஒரு மாட்டையும் அதன் உள்ளிருக்கும் பாகங்களையும் காண்பித்திருக்கும் எக்ஸ் ரே ஓவியம், எறும்பு திண்ணியின் அற்புதமான ஓவியம், ஏணி போன்ற ஒரு ஓவியம், சில பல குறியீடுகள் என்று செத்தவரையின் ஓவியங்கள் அனைத்தும் அதிசயத்தின் குவியல்.
மலை ஏறுவதற்கான பாதை எடக்கு மடக்காக இருந்தாலும், நமது தொல்லியல் துறை ஆங்காங்கே இரும்பு ஏணிகள் போட்டு நமது சிரமத்தைக் குறைத்திருப்பது ரொம்பவே ஆறுதலான விஷயம்.
மலையின் அடிவாரத்தில் உள்ள செத்தவரை கிராமத்தில் இறங்கியவுடனேயே சில சிறுவர்களும் சில பெரியவர்களும் நாம் அழைக்காமலேயே நம்மை பாறை ஓவியங்கள் இருக்கும் இடத்திற்கு அழைத்துப் போக வந்துவிடுகின்றனர்.
மொத்தத்தில் செத்தவரை ஒரு அற்புதமான இடம் மட்டுமல்ல அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு வரலாற்று ஆவணம்.
கிளம்பிட்டீங்களா ? இருங்க இருங்க…நானும் திரும்ப ஒருமுறை வருகிறேன்.
வெ.பாலமுரளி.












