சமீபத்தில் பாறை ஓவியங்கள் பற்றி தம்பி நாலு மணி வாலுவிடம் பேசிக் கொண்டிருக்கும்போது, பாறை ஓவியங்களில் அதிசயமான விஷயம் ஏதேனும் பார்த்திருக்கிறீர்களா சார் என்று கேட்டார்.
நான் சற்றும் யோசிக்காமல் நான் பார்த்த ஒவ்வொரு பாறை ஓவியமுமே அதிசயம்தான் தம்பி என்றேன்.
அதற்கு முக்கியக் காரணம், நான் பார்த்த பெரும்பாலான பாறை ஓவியங்களில் காணப்படும் குறியீடுகள்.
அதில் வானவியல் தொடர்பானவைகளும், சிந்துவெளியில் காணப்படும் குறியீடுகளுமே அதிகம்.
குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் ஓரையான் உடுக்கணத்தைக் குறிப்பிடும் குறியீடு, சூரியன் மற்றும் நட்சத்திரக் குறியீடுகள், உடுக்கை போன்ற குறியீடு, மின்னல் போன்ற ஒரு குறியீடு, நங்கூரம் போன்ற குறியீடு, கேலக்ஸி என்ற பால்வெளியைக் குறிக்கும் குறியீடு, முக்கொம்பு குறியீடு, ஆங்கில எழுத்து D யைப் போட்டு அதிலிருந்து கோணலாகக் கிளம்பும் ஒரு கோடு என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
இதில் கீழ்வாலை ஓவியங்கள் ரொம்பவே சிறப்பானவை.
இங்கிருக்கும் ஓவியங்கள் அனைத்தும் காலத்தால் மிகவும் பழைமையானதாகக் கருதப்படும் செஞ்சாந்தில் வரையப்பட்டவை. எந்தவித அறிவியல் ஆய்வுகளும் செய்யாமல், தமிழகத்தில் உள்ள செஞ்சாந்து ஓவியங்களின் காலத்தை 6000 முதல் 8000 ஆண்டுகள் பழமையானவை என்று தோராயமாக வரையறை செய்துள்ளது நமது மத்திய தொல்லியல் துறை (மற்ற நாடுகளில் இருக்கும் இது போன்ற செஞ்சாந்து ஓவியங்களை அறிவியல் பூர்வமாக நிரூபித்து 20,000 ஆண்டுகள், 30,000 ஆண்டுகள் என்று பின்னுக்குத் தள்ளுகிறார்கள்) .
ஏன் இங்கு மட்டும் இவ்வளவு குறைவான மதிப்பீடு என்ற அரசியலுக்குள் தற்சமயம் நாம் போக வேண்டாம். “ஒரு பேச்சுக்கு” நம் அரசு அதிகாரிகள் சொல்வதுபோல் இவை 6000 ஆண்டுகள் பழமை என்றே எடுத்துக் கொள்வோம்.
அதாவது கீழ்வாலை ஓவியங்களின் காலத்தை கி.மு. 4000 என்றே எடுத்துக் கொள்வோம்.
இப்போது இங்கிருக்கும் ஓவியங்கள் சிலவற்றை விரிவாகப் பார்க்கலாம்.
முதலில் சில மனிதர்கள் கைதூக்கி வணங்குவது போலிருக்கும் ஒரு ஓவியத்தைக் காணலாம்.
மூன்று மனிதர்கள் தங்கள் கைகளைத் தூக்கி வணங்குவது போலவும், அவர்கள் வணங்கும் திசையில் ஒரு சூரியனின் படமும் மிகவும் தெளிவாக வரையப்பட்டுள்ளன.
அதாவது (தோராயமாக) கி.மு. 4000 த்தில் இங்கு வாழ்ந்த தொல்மாந்தர்கள் (ஆதித் தமிழர்கள்) இயற்கையையே வழிபட்டிருந்ததற்கான மிக முக்கியமான சான்று இது.
என்னைக் கவர்ந்த இரண்டாவது ஓவியம் – பறவை முகத்துடன் கூடிய மூன்று மனிதர்களின் உருவங்கள். அதில் ஒரு மனிதன் குதிரை (அ) கழுதை போன்ற ஒரு விலங்கின் மீது அமர்ந்திருப்பது போலவும், இரண்டாவது மனிதன் அந்த விலங்கை கயிறு கட்டி மூன்றாவது மனிதனிடம் அழைத்துச் செல்வது போலவும் இருக்கும் ஓவியம்.
இது, மரணத்திற்குப் பிறகு மனிதனை ஒரு உயரிய (கடவுள் ??) சக்தியிடம் அழைத்துச் செல்லும் சடங்கு என்று சொல்லப்படுகிறது.
ஒரு கால கட்டத்தில் உலகின் பெரும்பான்மையான பகுதிகளில் இது போன்ற பறவை முகத்துடன் கூடிய மனிதர்களின் உருவங்கள் வரையப்பட்டுள்ளன. எப்படி ஒரே சமயத்தில் ஒரே மாதிரியான உருவங்கள் உலகின் வெவ்வேறு பகுதிகளில் வரையப்பட்டன என்ற கேள்விக்கான விடை யாரிடமும் இல்லை.
ஆனால், சொல்லி வைத்தாற்போல் அவற்றின் காலத்தை 15,000 அல்லது 20,000 வருடங்கள் அதாவது அவை அனைத்தும் இடைக் கற்காலத்தைச் சேர்ந்தவை என்கின்றன ஏனைய நாடுகள்.
ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் 6000 வருடங்கள் என்று சொல்லப்படுகிறது. 500 , 1000 என்று சொல்லாமல் 6000 வருடங்கள் என்றாவது சொன்னார்களே என்று சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.
மூன்றாவது ஓவியம், மூன்று மனிதர்கள் ஒரு படகில் பயணிப்பது போன்று இருக்கும் ஓவியம். இங்கிருந்த தொல்மாந்தர்கள் தண்ணீரைக் கண்டு பயப்படவில்லை என்பதையும், கி.மு. 4000 வாக்கிலேயே படகு அல்லது ஓடம் உபயோகத்திலிருந்தது என்பதையும் ஆதார பூர்வமாக நிரூபிக்கும் ஓவியம்.
நான்காவது ஓவியம்தான் மிக மிக முக்கியமான ஓவியம். அடுத்தடுத்து ஐந்து குறியீடுகள் உள்ள ஒரு ஓவியம். இந்தக் குறியீடுகள் சிந்து வெளியில் கிடைத்த குறியீடுகளை ஒத்திருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்தக் குறியீடுகள் அடுத்தடுத்து வரையப்பட்டிருப்பதை வைத்துப் பார்க்கும்போது, இதை வரைந்தவர் ஒரு முழு வாக்கியத்தையும் குறியீடுகள் மூலம் எழுதியிருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அதன் அர்த்தம்தான் புரியவில்லை – சிந்துவெளிக் குறியீடுகள் போலவே.
அரசின் கணக்கின் படி குறைந்தபட்சமாகவே எடுத்துக் கொண்டாலுமே கி.மு. 4000 த்திலேயே இந்தக் குறீயீடுகள் தமிழ் நாட்டில் புழக்கத்தில் இருந்திருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
தமிழ் நாட்டிலிருக்கும் 6 பாறை ஓவியங்களை (கார்பன் டெஸ்ட் போன்ற ஏதோ ஒரு) விஞ்ஞான முறையில் ஆராய்ந்து அதன் காலத்தைக் கணிக்க நமது அரசு (மாநில அரசா அல்லது ஒன்றிய அரசா என்று தெரியவில்லை) முடிவு செய்திருப்பதாகவும், கீழ்வாலையும் அதில் ஒன்று என்றும் நண்பர் ஒருவர் கூறுகிறார்.
அந்த ஆய்வு நேர்மையான முறையில் நடந்து, அதன் முடிவும் நேர்மையான முறையில் வெளிவந்தால், இந்தக் குறியீடுகள் சிந்து வெளியிலிருந்து இங்கு வந்ததா அல்லது இங்கிருந்து சிந்து வெளி சென்றதா என்ற மகத்தான உண்மை வெளி வரும். அது நம் தமிழர்களின் தொன்மையை உலகமெங்கும் பறை சாற்றும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
எது எப்படியோ, 6000 வருடங்களுக்கு முன்னரே ஹரப்பா நாகரிக மக்களுக்கும் நம் தமிழக மக்களுக்கும் 2000 கி.மீ. தூரத்தையும் தாண்டி நிறைய தொடர்புகள் இருந்தது ஒரு அற்புதமான விஷயம்.
அதை வைத்துப் பார்க்கையில் இன்றைக்கு 2600 வருடங்களுக்கு முன்னர் பிராகிருதம் தமிழ்நாட்டிற்குள் நுழைந்து நம் தமிழுடன் கலந்தது பெரிய ஆச்சரியம் இல்லை என்றே தோன்றுகிறது.
கடைசியில் ஒரு முக்கியமான விஷயம். மற்ற பாறை ஓவிய சைட்டுகள் போலவே, கீழ்வாலை சைட்டும் மிகவும் அழிவுறும் நிலையில் உள்ளது.
இதனைப் பார்க்க விரும்பும் நண்பர்கள் உடனே சென்று பார்த்து விடவும்.
கீழ்வாலை, விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலை செல்லும் வழியில் 25 கி.மீ. தூரத்தில் இருக்கிறது.
வேர்களைத் தேடும் பயணம் தொடரும்.
வெ.பாலமுரளி.








