தமிழியைத் தேடி – 12 

திருப்பரங்குன்றத்தில் நான்காவது தமிழிக் கல்வெட்டு

அக்டோபர் மாத இறுதியில் கனடாவிலிருந்து நண்பர் ஹேமந்த் திரு வந்திருந்தார். அவருக்கு ஒரு தமிழிக் கல்வெட்டைக் காண்பிப்பதற்காக திருப்பரங்குன்றம் சென்றோம்.

திருப்பரங்குன்றத்தில் கோயிலுக்கு நேர் பின்னால் மலையில் மீது இரண்டு குகைகள் உள்ளன. அதில் ஒரு குகை மலையின் உச்சிக்கு அருகிலும், இரண்டாவது குகை அதற்கு நேர் கீழே முதல் குகையின் உயரத்தில் முக்கால் வாசி உயரத்திலும் உள்ளது. 

மேலே உள்ள குகையில் நிறைய கற்படுக்கைகளும், நீர் வடிகால்களும், நீர் வடி விளிம்பும், மூன்று தமிழிக் கல்வெட்டுக்களும் உள்ளன. இந்தக் கல்வெட்டுக்களை 70 வருடங்களுக்கு முன்னரே நமது அரசாங்கம் கண்டு பிடித்து ஆவணப்படுத்தி விட்டது. இதில் இரண்டு கல்வெட்டுக்கள் கி.மு. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்றும், மூன்றாவது கல்வெட்டு கி.பி. முதலாவது நூற்றாண்டு என்றும் நமது மத்திய தொல்லியல் துறை அறிவித்துள்ளது. 

இந்தக் குகைக்குச் செல்லும் வழியில் உள்ள முதல் குகையில் ஐந்து கற் படுக்கைகளும், ஒரு சிறிய தண்ணீர்த் தேக்கமும் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலே உள்ள குகைக்கு செல்லும் அனைவருமே இந்த முதல் குகையையும், அந்தக் கற்படுக்கைகளையும் பார்த்திருப்பர். நானும் நிறைய முறை போயிருக்கிறேன். 

கடந்த அக்டோபரில் நண்பர் ஹேமந்துடன் செல்லும்போதுதான் முதல் முறையாக குகையின் உள்ளே நுழைந்ததும் இடது புற விதானத்தை தற்செயலாக உற்று நோக்க நேர்ந்தது. 

முதல் பார்வையில் “ய” “த” என்ற எழுத்துக்கள் மட்டும் தெளிவாகத் தெரிந்தது. 

நான் மறு நாள் கென்யா செல்லும் அவசரத்தில் இருந்ததால், உடனே கிளம்பி விட்டோம். கென்யாவிலிருந்து திரும்பி வந்து, டிசம்பர் மாதம் மறுபடியும் அங்கு சென்று , அரிசி மாவு, மைதா மாவு , மாக் கட்டி எல்லாம் போட்டுப் பார்த்ததில் , “யரஅதிற” மற்றும் “ வதர” என்ற எழுத்துக்களையும் இரண்டிற்கும் நடுவில் சாய்ந்த நிலையில் ஐந்து கோடுகளையும் தெளிவாகப் பார்க்க முடிந்தது. அப்போதுதான் தற்செயலாக அங்கிருந்த கற்படுக்கைகளை எண்ணினால், முற்றுப் பெற்ற கற்படுக்கைகள் ஐந்தைக் காண முடிந்தது. 

தொண்டூர் மற்றும் அரிட்டாபட்டி கல்வெட்டுக்களிலும் இதே போன்ற கோடுகள் அங்கிருந்த கற்படுக்கைகளின் எண்ணிகையைச் சொல்லுகின்றன. 

எண் ஐந்தை தமிழியில் “r” போன்ற எழுத்தில் குறிப்பதகாச் சொல்லப் படுகிறது. ஆனால், இங்கே ஐந்து நேர் கோடுகள் செதுக்கப்பட்டுள்ளன.

எனவே “r” குறியீட்டிற்கு வருவதற்கு முன்னதாகவே இது செதுக்கப்பட்டிருக்க வாய்ய்புகள் உள்ளன.

உடனே இராமநாதபுரம் தொல்லியல் கழகத் தலைவர்  நண்பர் இராஜகுருவை அழைத்து விஷயத்தை விளக்கினேன். அவரும் உடனே வந்து முறைப்படி படி எடுத்தார். அதில் இன்னும் சில எழுத்துகள் தெரிய வந்தன. கூடுதலாக இரண்டாவது வரியின் இறுதியில் “ ….தி..டான (ம்)” என்பதை மிகவும் கஷ்டப்பட்டு வாசிக்க முடிந்தது. ஆனால் அவை கோர்வையாக இல்லாதலால், தொல்லியல் அறிஞர் முனைவர் சாந்தலிங்கம் அவர்களைப் போய்ப் பார்த்தோம். 

அவர், படியெடுத்த காகிதங்களையும் , நான் எடுத்த படங்களையும் நன்றாக ஆராய்ந்து விட்டு இது கண்டிப்பாக தமிழிக் கல்வெட்டுத்தான் என்று உறுதியளித்தார். பின்னர், அவருடைய அலுவலகத்தில் உள்ள தம்பி உதயகுமாரை அனுப்பி மறுபடியும் படியெடுக்க வைத்தார். 

அதிலும் நாங்கள் சொன்ன விஷயங்கள் உறுதிப்படுத்தப்பட்டன. 

இந்தக் குகை உயரத்தில் குறைவாக இருப்பதனால், இதில்தான் முதலில்  கற்படுக்கைகள் செதுக்கப்பட்டிருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் என்றும் இதில் உள்ள “ அ” “ர” போன்ற எழுத்தமைதியை வைத்தும், இந்தக் கல்வெட்டு குகையின் உட்புறம் இருந்தாலும் அது சிதைந்திருக்கும் நிலையை வைத்தும் இது முதல் குகையில் உள்ள கல்வெட்டுக்களை விட காலத்தால் முற்பட்டது என்ற முடிவுக்கு வந்தோம்.   

தற்சமயம் சொல்லும் 2200 வருடங்கள் (கி.மு.இரண்டாம் நூற்றாண்டு) என்பது முழுக்க முழுக்க அனுமானம் மட்டுமே. நமது தொல்லியல் துறையும், ASI யும் முழுமையாக இறங்கி ஆராய்ந்தால் இதன் காலத்தை இன்னும் பின்னால் கொண்டு செல்ல இயலும் என்பது எங்கள் நம்பிக்கை. 

இந்தச் செய்தியை வெளிக் கொணர உதவிய நண்பர் வே. இராஜகுரு அவர்களுக்கும், முனைவர். சாந்தலிங்கம் அவர்களுக்கும், தம்பி உதயகுமாருக்கும் , என்னுடைய கனடா நண்பர் ஹேமந்த் திருவிற்கும், அனைத்து ஊடக நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். 

வெ.பாலமுரளி.