தமிழகத்தில் ஆதிமனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடையாது என்றே ரொம்பக் காலம் நம்பப்பட்டு வந்தது.
அதனால்தான் எங்கிருந்தோ வந்த யார் யாரோவெல்லாம் நமக்கு நம் தமிழ் மொழியையும் , நாகரிகத்தையும் கற்றுத் தந்தனர் என்று நமக்கே பாடம் கற்பிக்கப்பட்டது.
ஒரு கால கட்டத்தில், பழைய “ ஆரிய முனி அகத்தியர்” கதையெல்லாம் மக்களிடம் கேலிப் பொருளாக மாறத் தொடங்கிய போது, நமது சமஸ்கிருத வித்தகர்களால் சமணர்கள் என்னும் ஜெயினர்கள் கதை புகுத்தப்பட்டது.
தொல்காப்பியத்தில் தொடங்கி திருக்குறள், நாலடியார், சிலப்பதிகாரம், மணிமேகலை என்று நிறைய இலக்கியங்கள் “சமணர்கள் என்ற ஜெயினர்கள் தமிழுக்குத் தந்த கொடை” என்ற கதை தீவிரமாக பரப்பப்பட்டது – பரப்பப்படுகிறது.
உண்மையில் நம் தமிழர்கள் அவ்வளவு அறிவிலிகளா என்று தேடத் தொடங்கினால் கலாச்சாரம், பண்பாடு , அதீத அறிவுத் திறன் என்று பொக்கிஷங்கள் வந்து கொண்டேயிருக்கின்றன.
நம்மிடையே வாழ்ந்து நமக்கே குழி பறிக்கும் சமஸ்கிருத வித்தகர்களில் தொடங்கி, வட இந்திய வரலாற்று ஆய்வாளர்கள் வரை நமக்குத்தான் எத்தனை “ நண்பேன்டாக்கள்”……
1860 களில் ராபர்ட் ப்ரூஸ் ப்ரூட் என்னும் ஆங்கிலேயர் சென்னைக்கு அருகில் நிறைய கற்காலக் கருவிகளைக் கண்டுபிடித்தார். அதிலும் அத்திரம்பாக்கத்தில் அவரே திடுக்கிடும் வகையில் எக்கச்சக்கமான கற்கருவிகள் கிடைக்க அதற்கு “ மெட்ராஸ் ஃபேக்டரி” என்ற பெயர் வைத்தார்.
பின்னாளில் அந்தக் கருவிகளின் காலத்தை ஆய்வு செய்த சாந்தி பப்பு என்ற ஆய்வாளர் அந்தக் கருவிகளின் காலத்தை ஏறத்தாழ 15 லட்சம் ஆண்டுகளுக்கு பின்னோக்கி கொண்டு சென்றுள்ளார்.
அதனால்தானோ என்னவோ, அவர் ஆய்வு செய்வதற்காக ஒரு கல் ஆயுதத்தை உடைத்து விட்டார் என்று சொல்லி அவர் மீது வழக்கு பாய்ந்து விட்டது என்று எங்கோ படித்தேன் ( பின்னே…தமிழகத்தில் 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மனித நடமாட்டம் இருந்தது என்று சொன்னால் கோபம் வரத்தானே செய்யும். யாருகிட்ட…. ).
ராபர்ட் ப்ரூஸ் கண்டுபிடிப்புகளில் இன்னொரு மெகா கண்டுபிடிப்பு அதே திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள குடியம் குகைகள்.
ரொம்பக் காலம் வரைக்கும் தமிழகத்தில், (ஆதி மனிதர்கள் / நம் தொல் மாந்தர்கள் வரைந்த ) பாறை ஓவியங்களே கிடையாது என்றும் நம்பப்பட்டது.
ஆனால், அடுத்தடுத்து தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பாறை ஓவியங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 200 ( சரியான எண்ணிக்கை எனக்குத் தெரியவில்லை).
இவை அனைத்திற்கும் சென்று படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்து முறையாக ஆவணப்படுத்துவதே என்னுடைய முதன்மையான நோக்கம்.
நேரம் கிடைக்கும்போதெல்லாம், அவற்றை என்னுடைய குரு மதனின் (கி.மு. கி.பி.) ஸ்டைலில் சிறு சிறு கட்டுரைகளாக எழுதி அதன் மூலம் இதைப் படிக்கும் நண்பர்களுக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தி அவர்களையும் அதாவது உங்களையும் இந்த இடங்களுக்குப் பயணிக்கச் செய்வது என்னுடைய இரண்டாவது நோக்கம்.
அந்த வகையில் இந்த முதல் கட்டுரை “குடியம்” குகைகள் மற்றும் அத்திரப்பாக்கம் கல் ஆயுதங்கள் பற்றி.
சென்னையிலிருந்து 60 கி.மீ. தூரத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய கிராமம்தான் குடியம். அங்கிருந்து காட்டுக்குள் ஒரு நான்கு அல்லது ஐந்து கி.மீ. தூரம் நடந்தால் ஒரு பெரிய சைஸ் குகை வரும்.
அங்கு 1960 களில் நடந்த அகழ்வாராய்ச்சியில், ஹோமோ எரக்டஸ் என்ற தொல்மாந்தர்கள் 1.8 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு வாழ்ந்தது உறுதிப்படுத்தப்பட்டது. அது மட்டுமல்ல. குடியத்திலிருந்து ஒரு 15 கி.மீ. தூரத்தில் உள்ள அத்திரப்பாக்கத்தில் ஏராளமான பழங்கற்காலக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதற்குத்தான் ஆங்கிலேயர்கள் மெட்ராஸ் ஃபேக்டரி என்ற பெயர் வைத்தனர். அந்த அளவிற்கு ஏராளமான கற்காலக் கருவிகள்.
இதில் நிறைய கருவிகளை குடியத்திற்கு அருகில் உள்ள பூண்டி என்ற ஒரு சிறிய ஊரில் உள்ள அருங்காட்சியகத்தில் வைத்துள்ளனர்.
அவற்றின் காலம் சுமார் 15 லட்சம் ஆண்டுகள். இந்த இரண்டு தகவல்களும் உலகம் முழுதும் இருக்கின்ற மானுடவியல் அறிஞர்கள் அனைவரையும் மிகப் பெரிய ஆச்சரியத்தில் ஆழ்த்தின.
காரணம், அது நாள் வரையில், ஆப்பிரிக்காவில் இருந்து நமது மூதாதையர்களான ஹோமே செப்பியன்ஸ் 65,000 ஆண்டுகளுக்கு முன்னர் நம் நாட்டிற்கு வரும் வரையில், இங்கு மனித நடமாட்டமே கிடையாது என்றுதான் அனைவரும் நம்பி வந்தார்கள்.
அப்படியென்றால், இங்கிருந்த ஹோமோ எரக்டஸ் என்ற மக்கள் எங்கு சென்றார்கள் என்று இயல்பாக ஒரு கேள்வி எழும்.
நம்ம பாட்டன்மார்களான ஹோமோ செப்பியன்ஸ்தான் டெர்ரராகி அவர்களை போட்டுத் தள்ளியிருக்க வேண்டும் என்று அறிஞர்கள் நம்புகிறார்கள். இந்தத் தியரி இன்று வரை ஒரு ஊகம் மட்டுமே. காரணம் அதை நிருபிக்கும் வகையில் ஹோமோ எரக்டஸின் எலும்புக் கூடுகள் ஒன்று கூட நமக்குக் கிடைக்கவில்லை. அப்படியென்றால் அந்த எலும்புக்கூடுகள் எல்லாம் எங்கே என்று யோசித்தால், நண்பர் பாலா பாரதி அவர்கள் ஒரு காரணம் சொல்கிறார்.
நமது மண்ணில் இருக்கும் மினரல்ஸ், குறிப்பாக இரும்பு போன்ற தாதுப் பொருட்கள் எலும்புகளை மிக எளிதாக அரித்து விடக் கூடியவை. அதனால்தான் நமக்கு பழங்கற்கால எலும்புக் கூடுகள் ஒன்றும் கிடைப்பதில்லை என்கிறார். சோகம்.
ஆங்கிலேயர்கள் காலத்தில் குடியத்தில் 13 குகைகள் இருந்ததாகவும், தற்சமயம் அவற்றில் நிறைய (புதர்கள் மண்டி) மறைந்து போய் இரண்டே இரண்டுதான் பார்க்கும் நிலையில் உள்ளன என்றும் நமது அரசு ஆவணப்படுத்தியுள்ளது.
ஒரு வருடத்திற்கு முன்பு நானும் நண்பர் பாலா பாரதியும், திருச்சி செந்திலும் அங்கு சென்றது மறக்க முடியாத அனுபவம். மிக பிரமாண்டமான குகை. ஒரே நேரத்தில் நூறு பேர் உறங்கலாம். அங்கு போய் நிற்கும்போது உடலெல்லாம் சிலிர்த்து விட்டது. அந்த இடத்தில் சும்மா நின்று கொண்டிருக்கும்போது, யாரோ என் கையை தட்டி விட்டது போல் என் கைக் கடிகாரம் அறுந்து போய் ஒரு பத்தடி தூரம் தள்ளி விழுந்தது எப்படி என்பது இன்று வரை எனக்கு விளங்காத புதிர் ( அந்த லெதர் ஸ்ட்ராப் வாங்கி இரண்டு அல்லது மூன்று மாதங்கள் கூட ஆகியிருக்காது ).
அங்கிருந்த புதர்களையெல்லாம் விலக்கிக் கொண்டு அருகில் உள்ள மலையில் நானும், பாலா பாரதி அவர்களும் ஏறினோம். உச்சியில் நின்று பார்த்தால், நமது அரசாங்கம் சொன்ன “ காணவில்லை குகைகள்” சிலவற்றைக் காண முடிகிறது. ஆனால், வழியெங்கும் புதர்கள். நிறைய படங்கள் எடுத்து விட்டு வந்தோம்.
அந்த மலையில் ஓரளவு எளிதாக ஏறி விட்டோம். ஆனால் கடைசியில் ஒரு பாறை இருக்கிறது. ஒரு பத்து அல்லது பதினைந்து அடி உயரம்தான் இருக்கும். அதில் ஏறி இறங்குவதுதான் மிகப் பெரிய சவால். அதில் வழுக்கி விழுந்தால் கால்கள் உடைவது உறுதி.
ரொம்பக் கஷ்டப்பட்டு, எப்படியோ ஏறி படங்களும் வீடியோக்களும் எடுத்து விட்டு இறங்கியும் விட்டோம்.
அப்போதுதான் பாலா பாரதி சார் மெதுவாக ஒரு குண்டைப் போட்டார்.
“பாலமுரளி சார் என்னுடைய செல் ஃபோனை மேலேயே விட்டு விட்டு வந்து விட்டேன். என்ன செய்யலாம்?”.
என்னுடைய கைக்கடிகாரம் எப்படி அறுந்து துள்ளிப் போய் விழுந்தது என்ற அதிர்ச்சியை தூக்கி சாப்பிடும் அதிர்ச்சியாய் இருந்தது இந்த செல் ஃபோன் மேட்டர்.
நான் முன்பு ஒரு கட்டுரையில் சொன்ன மாதிரி பாலா பாரதி சாருடன் செல்லும் ஒவ்வொரு பயணத்திலும் நமக்கு சொர்க்கம், நரகம் இரண்டையும் காண்பித்து விடுவார். பொதுவாக நரகம்தான் ஃபர்ஸ்ட் காண்பிப்பார். அப்புறம்தான் சொர்க்கம் வரும்.
ஒரு சேஞ்சுக்காக இந்த முறை மாற்றிக் காண்பித்தார். சொர்க்கமெல்லாம் பார்த்து விட்டு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் தருணத்தில், “ நோ… நோ…. நாட் யெட் மை ஃபிரெண்ட்“ என்று செல் ஃபோன் மேட்டரை கொண்டு வந்தார்.
தலை கிர்ரென்று சுற்ற, மீனாட்சியை மனதில் வேண்டிக் கொண்டு தத்தக்கா புத்தக்கா என்று சில்வஸ்டர் ஸ்டாலோன் மாதிரி மறுபடியும் மேலே ஏறி அந்த வரலாற்று சிறப்புமிக்க செல் ஃபோனை எடுத்து விட்டு வெற்றிகரமாய் கீழே இறங்கியது வாழ்க்கையில் மறக்க முடியாது.
வெ.பாலமுரளி
பி.கு: அங்கு செல்லும் வழியில் ஏதோ எரிமலை நடந்தது போல சிறு சிறு கற்களெல்லாம் இணைந்து கடலை உருண்டை போல் ஒன்றாக சேர்ந்து பாறைகளாக உருப் பெற்றிருப்பது அழகு.
நன்றிகள் : உயர்திரு. பாலா பாரதி
ஆதாரங்கள் : டோனி ஜோசஃப் எழுதிய “ ஆதி இந்தியர்கள்”.





